சனி, 24 செப்டம்பர், 2011


(ثـلاثـون سـبـبـا للسـعـادة)
வளமான வாழ்வுக்கு
முப்பது வழிகள்

தொடர் - 1

அரபியில்: டாக்டர், ஆயிழ் அப்துல்லாஹ் அல்கர்னீ
தமிழில்: சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி


1 - فــكّـر واشـكـر
1 - கவனித்துப் பார், நன்றி செலுத்து


உன்மீது அல்லாஹ்வின் அருட்கொடைகளைக் கவனித்துப் பார். அவை உனக்கு மேலிருந்தும் உன் கால்களுக்குக் கீழிருந்தும் உன்னை முழுமையாகச் சூழ்ந்திருப்பதை நீ தெரிந்துகொள்வாய்.

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் கணக்கிட்டால், அதை உங்களால் எண்ணி முடிக்க முடியாது. (அல்குர்ஆன், 14:34)

உடலில் ஆரோக்கியம், நாட்டில் அமைதி, உண்ண உணவு, உடுத்த உடை, சுவாசிக்கக் காற்று, அருந்தத் தண்ணீர், இன்னும் பல பல...

உலகமே உன்னிடம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நீ அதை உணர்ந்தாய் இல்லை. வாழ்க்கை முழுவதும் உன் வசமே உள்ளது. ஆனால், அதை நீ புரிந்தாய் இல்லை.

உங்கள்மீது அல்லாஹ் தன்னுடைய அருட்கொடைகளை வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் முழுமைப்படுத்தியுள்ளான். (அல்குர்ஆன், 31:20)

கண்கள், நாவு, உதடுகள், கைகள், கால்கள் என்று எல்லாமே உன்னிடம் இருக்கின்றன.

எனவே, உங்களுடைய இறைவனின் அருட்கொடைகளில் எதையெல்லாம் மறுப்பீர்கள்? (அல்குர்ஆன், 55:14)

எத்தனையோ பாதங்கள் துண்டிக்கப்பட்டிருக்க நீ இரு பாதங்கள்மீது நடப்பதும் எத்தனையோ கால்கள் எடுக்கப்பட்டிருக்க நீ இரு கால்களில் ஊன்றி நிற்பதும் சாதாரண விஷயங்களா?

எத்தனையோ பேரின் உறக்கம் வலியாலும் வேதனையாலும் காவு கொள்ளப்பட்டிருக்க, நீ கண்ணயர்ந்து தூங்குவது சாமானியமான ஒன்றா?

பிடித்த உணவை வயிறாற நீ உண்பதும் குளிர்ந்த குடிநீரை வயிறு முட்ட நீ குடிப்பதும் அற்பமான விஷயங்களா? இங்கே சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உண்ணவோ அருந்தவோ முடியாமல் தொண்டை அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

உனது செவிப் புலனைக் கொஞ்சம் கவனித்துப் பார். காது கேளாமையிலிருந்து நீ காப்பாற்றப்பட்டுள்ளாய். உனது கண்பார்வையைக் கொஞ்சம் கவனி. நீ பார்வைக் கோளாறிலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளாய்.

உனது சருமத்தைச் சற்று உற்றுப் பார். தொழுநோயிலிருந்து நீ விமோசனம் பெற்றிருக்கின்றாய். உனது அறிவைக் கவனி. நினைத்த நேரத்தில் அறிவைப் பயன்படுத்துகின்ற பாக்கியம் வழங்கப்பட்டுள்ளாய். மனச்சிதைவாலோ மூளைக் குழப்பத்தாலோ நீ அவதியுறவில்லை.

உஹுத் மலையளவிற்கு சொக்கத் தங்கமே விலையாகக் கிடைத்தாலும் உனது கண்பார்வை ஒன்றை மட்டும் நீ இழப்பதற்குச் சம்மதிப்பாயா? ஸஹ்லான் குன்றின் எடையளவு வெள்ளிக்குப் பதிலாக உனது செவியை விற்றுவிட விரும்புவாயா?

வெண்பளிங்கு மாளிகைகளை விலையாகப் பெற்று உனது நாவை மட்டும் இழந்து வாய்பேச முடியாத ஊமையாக ஆவதற்கு ஒப்புவாயா? விலை மதிப்பற்ற வெண்முத்துக்களையும் மாணிக்கக் கற்களையும் பெற்றுக்கொண்டு உன் கைகளை மட்டும் வெட்டிக் கொடுத்துவிட்டு முடமாக நிற்பாயா?

எண்ணிலடங்காத அருட்கொடைகளும் மாபெரும் அருட்பேறுகளும் உன்னில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நீதான் அவற்றைக் கவனிப்பதில்லை. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதவனைப் போன்று கவலையோடும் துக்கத்தோடும் வேதனையோடும் வருத்தத்தோடும் வாழ்க்கையைக் கழிக்கின்றாய்.

உன்னிடம் உண்பதற்குச் சூடான ரொட்டியும் அருந்துவதற்குக் குளிர்ந்த குடிநீரும் உள்ளது. நிம்மதியான உறக்கமும் உடல் முழுக்க ஆரோக்கியமும் உனக்கு வாய்த்திருக்கிறது. நீயோ உள்ளவற்றுக்காக நன்றி செலுத்தாமல் இல்லாதவற்றைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கின்றாய்.

பொருளாதார இழப்புக்காக நிலைகுலைந்து நிற்கின்றாய். ஆனால், உன்னிடம் எண்ணிடலங்காத நன்மைகளும் அருட்கொடைகளும் அருட்பேறுகளும் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. நல்வாழ்வின் திறவுகோலே உன்னிடம்தான் இருக்கின்றது. எனவே, எல்லாவற்றையும் கவனித்துப் பார். அனைத்திற்கும் நன்றி செலுத்து.

உங்களுக்கு உள்ளேயும் (ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை) நீங்கள் கவனிக்கமாட்டீர்களா? (அல்குர்ஆன், 51:21)

உன்னைப் பற்றி யோசித்துப் பார். உன் குடும்பம், உனது வீடு, உனது இல்லம், உன்னுடைய நண்பர்கள், உன்னைச் சுற்றியிருக்கும் உலகம் ஆகிய அனைத்தையும் சிந்தித்துப் பார்.

அல்லாஹ்வின் அருட்கொடையை அவர்கள் நன்கு அறிகின்றனர். பின்னர், அதை அவர்கள் மறுக்கவும் செய்கின்றனர். (அல்குர்ஆன், 16:83)

தொடரும்...

இந்த ஆக்கம் தொடர்பான கருத்துக்களை உங்களிடமிருந்து வரவேற்கிறேன். அவை இன்னும் கூடுதலாக இந்த ஆக்கத்தைப் பட்டை தீட்ட உதவும் என்று கருதுகிறேன்.

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...