வியாழன், 16 மே, 2013


முன்மாதிரி முஸ்லிம்கள்-1

சயீத் பின் ஆமிர் அல்ஜுமஹீ (ரலி)
அரபியில்: டாக்டர், அப்துர் ரஹ்மான் ரஉஃபத் அல்பாஷா
தமிழில்: சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்கள், இம்மைக்குப் பதிலாக மறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வர். மற்ற யாரையும்விட அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முதலிடம் அளித்தவர். (வரலாற்று ஆசிரியர்கள்)
மக்காவுக்கு வெளியே தன்ஈம்என்றொரு திறந்தவெளி. அங்கு வந்து குழுமுமாறு மக்காவுக்குள் பொதுஅறிவிப்பு செய்யப்படுகிறது. ஆளும் வர்க்கமாகிய குறைஷிக் குலப் பிரமுகர்களால் விடுக்கப்பட்ட அறிவிப்பு அல்லவா? உடனே தன்ஈம்நோக்கி ஆயிரக்கணக்கானோர் வந்து குழுகின்றனர்.

நபித்தோழர் குபைப் (ரலி) அவர்கள் எவ்வாறு மடியப்போகிறார் என்பதை ஒளிவு மறைவின்றி எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டவே அந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தது அதிகார வர்க்கம். முன்னதாக குபைப் (ரலி) அவர்கள் குறைஷியரால் வஞ்சகமாகப் பிடித்துச் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இஸ்லாத்திற்கு வெளியே சயீத்

திரண்டு நின்ற அந்தக் கூட்டத்தில் சயீத் பின் ஆமிர் அல்ஜுமஹீயும் ஒருவர். அது அவர் இஸ்லாத்தை ஏற்றிராத காலகட்டம். துள்ளும் இளமையும் திடகாத்திரமான வாலிபமும் வாய்க்கப்பெற்றிருந்த அவர் தம் தோள்களால் மக்கள் கூட்டத்தை நெருக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறி வந்தார்.

கூட்டத்தின் மத்தியில் நடுநாயகமாக வாகனத்தில் நின்றுகொண்டிருந்த அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஸஃப்வான் பின் உமய்யா போன்ற உயர்மட்ட குறைஷிக் குலப் பிரமுகர்களுக்கு நேராக வந்து நின்றுகொண்டார். குறைஷியரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த குபைப் (ரலி) அவர்களை மிகத் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பு இப்போது சயீதுக்குக் கிடைத்தது. குபைப் (ரலி) அவர்கள் விலங்கு மற்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்.

அங்கு வேடிக்கை பார்ப்பதற்காகத் திரண்டிருந்த பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கைகள், குபைப் (ரலி) அவர்களைக் கொலைக்களம் நோக்கித் தள்ளிக்கொண்டிருந்தது. அவரைக் கொல்வதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற வேகமும், பத்ர் போரில் கொல்லப்பட்ட தம் உறவுக்காரர்களின் இரத்தத்திற்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியும் அத்தனை பேரின் முகங்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தன.

ஒருவழியாக அந்தக் கூட்டம் குபைப் (ரலி) அவர்களைக் கொலைக்களம் கொண்டுவந்து நிறுத்தியது. அப்போது இளைஞர் சயீத் பின் ஆமிர் தமது நுனிக்காலில் நின்றுகொண்டு மக்கள் கூட்டத்திற்கிடையே இருந்து குபைப் (ரலி) அவர்களை எக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது குபைப் (ரலி) அவர்கள் சிலுவையில் அறையப்படுவதற்காக முன்னால் கொண்டுசெல்லப் பட்டுக் கொண்டிருந்தார். பெண்கள், சிறுவர்கள் போன்றோரிள் கூச்சல்கள் மிகுந்திருந்த அந்தத் தருணத்தில், கூச்சலின் ஊடாக குபைப் (ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள். அன்னாரின் குரல் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக அதே சமயத்தில் அழுத்தமாக இருந்தது.

அவர், ‘‘நான் மரணத்தின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் வெட்டி வீழ்த்தப்படுவேன். உங்களுக்கு முடிந்தால் எனக்கொரு அனுமதி கொடுங்கள். நான் இறுதியாக இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழுதுகொள்கிறேன்’’ என்றார். ‘’கடைசி ஆசை; தொலையட்டும்’’ என்று குறைஷிகள் விட்டுவிட்டனர்.

இதைச் செவியுற்ற சயீத் பின் ஆமிர், குபைப் (ரலி) அவர்களையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். உடனே குபைப் (ரலி) அவர்கள் கஅபாவை முன்னோக்கி அழகாகவும் முழுமையாகவும் இரண்டு ரக்அத்கள் தொழுது முடித்தார். தொடர்ந்து சயீத் பின் ஆமிர் வைத்த கண் வாங்காமல் குபைப் (ரலி) அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது குபைப் (ரலி) அவர்கள் குறைஷிப் பிரமுகர்களை நோக்கி, ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! சாவுக்கு அஞ்சியே நான் தொழுகையை நீட்டினேன் என்று மட்டும் நீங்கள் கருதமாட்டீர்கள் என்றால், இன்னும் சற்றுக் கூடுதலாக தொழுதிருப்பேன்’’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

கொள்கைக் குன்றாக குபைபைக் கண்ட சயீத்

அதன் பின்னர் சயீத், தம் சமூக மக்கள் குபைப் (ரலி) அவர்களைச் சிலுவையில் அறைந்து உயிருடன் வதை செய்ததைத் தம் கண்முன்னே கண்டார். குபைப் (ரலி) அவர்களின் உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டிச் சிதைத்துக்கொண்டிருந்ததை நேரடியாகப் பார்த்தார். கொலைவெறி தலைக்கேறிய குறைஷிகள், குபைப் (ரலி) அவர்களிடம், ‘‘குபைபே! இப்போது உமக்கு உயிர் பிச்சை தருகிறோம்; அதற்குப் பதிலாக நீர் நிற்கும் இந்த இடத்தில் முஹம்மத் நிறுத்தப்பட்டால் உமக்குப் பிடிக்குமா?’’ என்று கேட்டனர்.

குபைப் (ரலி) அவர்களின் மேனியிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அதனால் ஒருவித சோர்வு நிலைக்கு அன்னார் ஆட்பட்டார்கள். பலம் குன்றிய அந்தத் தருணத்திலும்கூட அவர், ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் என் மனைவி மக்களோடு நிம்மதியோடும் பாதுகாப்போடும் இருப்பதற்காக, முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஒரு முள் சிராய்ப்பு ஏற்படுவதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’’ என்று கூறியது சயீத் பின் ஆமிரின் செவியில் நன்கு விழுந்தது.

உடனே அங்கு கூடியிருந்த மக்கள், கோபம் கொப்பளிக்கத் தம் கைகளை உயர்த்தி, ``குபைபைக் கொல்லுங்கள்; விடாதீர்கள்; கொல்லுங்கள்’’ என்று கூச்சல் போட்டனர். அப்போது சிலுவையில் அறையப்பட்டிருந்த குபைப் (ரலி) அவர்கள் தமது பார்வையை வானத்தை நோக்கி மெல்ல உயர்த்தி,

இறைவா!
இவர்களையெல்லாம்
நீ துல்லியமாகக்
கணக்கெடுத்துக்கொள்.

இவர்களை
ஒவ்வொருவராக
நீ கொல்.

இவர்களில் யாரையும்
நீ விட்டுவைக்காதே!

என்று கூறியதை சயீத் பின் ஆமிர் கவனிக்கத் தவறவில்லை.

கூடிநின்ற மக்களின் கோபாவேசம் தலையுச்சிக்கு ஏற, அனைவரும் தம்மிடமிருந்த ஆயுதங்களால் குபைப் (ரலி) அவர்களைத் துளைத்தெடுத்தனர். குபைப் (ரலி) அவர்களின் இறுதி மூச்சு மெல்ல மெல்ல அடங்கிற்று. அன்னாரின் உடலில் வெட்டுக் காயங்களும் விழுப்புண்களும் ஏராளமாக இருந்தன. எல்லாம் நினைத்தவாறு கச்சிதமாக முடிந்த குதூகலத்தில் குறைஷியர் மக்கா திரும்பினர். அதையடுத்து நேர்ந்த பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளில் குறைஷியர், குபைப் (ரலி) அவர்களை மறந்தேவிட்டனர்.

ஆனால், வளரிளம் பருவத்து வாலிபரான சயீத் பின் ஆமிரின் சிந்தனையிலிருந்து மட்டும் குபைப் (ரலி) அவர்களின் நினைவு ஒருபோதும் அகலவில்லை. உறங்கினால் கனவிலும் அவரே கண்முன் தோன்றினார். விழித்திருந்தால் கற்பனையிலும் குபைபின் உருவமே நிழலாடியது. சிலுவைக்கு முன்னால் நின்றுகொண்டு எவ்வித நடுக்கமும் இன்றி குபைப் (ரலி) அவர்கள் தொழுத தோற்றம், சயீத் பின் ஆமிருக்கு முன்னால் எப்போதும் தென்பட்டுக்கொண்டே இருந்தது.

குறைஷியருக்கு எதிராக அவர் செய்த பிரார்த்தனை சயீதின் செவிகளில் ஒலியெழுப்பிக்கொண்டே இருந்தது. அதன் விளைவாக, ஒரு பேரிடி வந்து தம்மைத் தாக்கலாம் என்றும் வானத்தின் ஒரு துண்டு பெயர்ந்து வந்து தம்மீது விழலாம் என்றும் சயீத் அச்சத்தில் இருந்தார். குபைப் (ரலி) அவர்களைப் பற்றிய நினைவு தோன்றினாலே சயீதிடம் இந்தப் படபடப்பு தானாகவே வந்து தொற்றிக்கொள்ளத் தொடங்கியது. அதனால் சயீதிடம் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன.

குபைப் (ரலி) ஏற்படுத்திய பாதிப்புகள்

கொள்கைக்காக உயிர் துறந்த குபைப் (ரலி)அவர்கள், சயீத் பின் ஆமிரிடம் பல்வேறு ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தார்கள். சயீதுக்கு அதுவரை தெரியாத பல விஷயங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். உண்மையில் வாழ்க்கை என்பது, ஈடு இணையற்ற கொள்கையும் அந்தக் கொள்கைக்காக இறுதி மூச்சுவரை விட்டுக்கொடுக்காமல் போராடுவதுமே ஆகும் எனும் பாடத்தை குபைப் (ரலி) அவர்களின் நிலைகுலையாமையில் இருந்தே சயீத் கற்றுக்கொண்டார்.

மனதின் அடிஆழத்தில் இறைவன்மீதான நம்பிக்கை வேரூன்றிவிட்டால் அது, எண்ணற்ற அற்புதங்களையும் வினோதங்களையும் நிகழ்த்தும் வல்லமை பெற்றுவிடும் என்ற பாடத்தையும் சயீத் அவரிடமிருந்தே பெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்வளவு ஆழமாக முஸ்லிம்களால் நேசிக்கப்படும் முஹம்மத் (ஸல்) அவர்கள், ஒரு சாமானிய மனிதராக இருக்க முடியாது; நிச்சயமாக அவர் வானத்திலிருந்து இறைவனால் வலுவூட்டப்பெறும் ஓர் இறைத்தூதர்தான் என்பதே குபைப் (ரலி) அவர்களிடமிருந்து சயீத் கற்ற முதன்மைப் பாடம் ஆகும்.

குபைபிடமிருந்து இத்தனை பாதிப்புகளை சயீத் பின் ஆமிர் பெற்ற இந்தச் சூழலில்தான், அவரது உள்ளம் இஸ்லாத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டது. உடனே சயீத் பின் ஆமிர், மக்கள் திரள் ஒன்றுக்கு முன்னால் வந்து நின்றார். குபைப் (ரலி) அவர்களுக்கு குறைஷியர் இழைத்த குற்றங்களிலிருந்தும் கொடுமைகளிலிருந்தும் தாம் விலகிக்கொள்வதாகப் பகிரங்கமாக அறிவித்தார்.

இனிமேல் தாம் சிலைகளையும் உருவங்களையும் வழிபடப்போவதில்லை என்றும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் தாம் முழுமையாக நுழைந்துவிட்டதாகவும் பொது அறிவிப்புச் செய்தார். பின்னர், சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார். புலப்பெயர்வுக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலேயே தங்கிவிட்டார். நபியவர்களுடன் இணைந்து கைபர் போரிலும் அதற்குப் பிந்தைய போர்களிலும் தவறாமல் பங்கெடுத்துக்கொண்டார்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரிந்து சென்ற பின்னர், கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னர் கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கும் உற்று துணையாகத் திகழ்ந்தார். அவர்களுக்காக ஒரு போர்வாளைப் போன்று சுழன்று சுழன்று சூறாவளியாய் பணியாற்றினார். இம்மைக்குப் பதிலாக மறுமைக்கே அவர் முதலிடம் தந்தார். தம் உளவியல் விருப்பங்களையும் உடலியல் ஆசைகளையும்விட அல்லாஹ்வின் உவப்பும் வெகுமதியுமே பெரிதென்று கருதினார்.

நல்லதோர் இறைநம்பிக்கையாளருக்கு இலக்கணமாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தூய்மையான முன்மாதிரியாகத் தமது வாழ்க்கையை வகுத்துக்கொண்டார். சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்களின் இறையச்ச உணர்வையும் உண்மைத் தன்மையையும் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களும் கலீஃபா உமர் (ரலி) அவர்களும் நன்கறிந்திருந்தனர். அதனால் அவர் கூறும் அறிவுரைகளுக்கு அவ்விருவரும் பெரும்பாலும் செவி சாய்ப்பர். அவரின் கருத்துகளுக்கு மரியாதை அளிப்பர்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் உமர் (ரலி) அவர்களிடம் வந்து பின்வரும் அறிவுரைகளை சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்கள் வழங்கினார்கள்:

‘’உமரே! நீர் மக்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுவீராக. அல்லாஹ் விஷயத்தில் மக்களை நீர் அஞ்ச வேண்டாம். உமது சொல், உம் செயலுக்கு முரண்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். செயலில் நிரூபிக்கப்படும் சொல்லே மிகச் சிறந்த சொல்லாகும். அல்லாஹ் உம்மை யாருக்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளானோ அந்த முஸ்லிம்களில், நெருக்கமானவர்மீதும் தூரமானவர்மீதும் உமது கவனம் எப்போதும் இருந்துகொண்டிருக்கட்டும்.

உமக்கும் உம் குடும்பத்தாருக்கும் எதை விரும்புவீரோ அதையே முஸ்லிம்கள் அனைவருக்கும் நீர் விரும்ப வேண்டும். உமக்கும் உம் குடும்பத்தாருக்கும் எதை வெறுப்பீரோ அதை முஸ்லிம்களுக்கும் நீர் வெறுக்க வேண்டும். சத்தியம் எங்கிருந்தாலும் அதன் அடிஆழம்வரை நீர் போய்ச் சேர சேண்டும். அல்லாஹ்வின் விஷயத்தில் யாருடைய நிந்தனைக்கும் நீர் அஞ்சக் கூடாது.

இந்த அறிவுகளைச் செவியுற்ற உமர் (ரலி) அவர்கள், ‘‘சயீதே! இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள யாரால் முடியும்?’’ என்று கேட்டார்கள். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், ‘‘முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தாரை ஆள்கின்ற பொறுப்பு வழங்கப்பெற்ற, அல்லாஹ்வுக்கும் தமக்கும் இடையே (கேள்வி கேட்பதற்கு) வேறு யாருமே இல்லாத உம்மைப் போன்ற ஆட்சியாளருக்கு நிச்சயம் அது முடியும்’’ என்றார்கள்.

ஹிம்ஸின் ஆட்சியாளராக...

அப்போதுதான் உமர் (ரலி) அவர்கள் தமது அமைச்சரவையில் பங்கேற்றுப் பணிபுரிய வருமாறு சயீத் (ரலி) அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ‘‘சயீதே! உம்மை நாம் ஹிம்ஸ் (சிரியா) நகர மக்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கிறோம்’’ என்றார்கள். இதைக் கேட்ட சயீத் (ரலி) அவர்கள், ‘உமரே! அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன்; அருள் கூர்ந்து என்னை நீர் சோதனைக்கு ஆளாக்கிவிடாதீர்’’ என்றார்கள். இதைக் கேட்டுக் கோபமடைந்த உமர் (ரலி) அவர்கள், ‘‘நாசமாய்ப் போக! எல்லாருமாகச் சேர்ந்து இந்தப் பொறுப்பை என் தலையில் கட்டிவிட்டு, நீங்கள் ஒதுங்கிக்கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உம்மை விடுவதாக இல்லை’’  என்று தெரிவித்தார்கள்.

பின்னர் சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்களை ஹிம்ஸ் பகுதிக்கு ஆளுநராகத் தாம் நியமித்திருப்பதாக உமர் (ரலி) அவர்கள் அரசாணை வெளியிட்டார்கள். பணி நியமணம் செய்த கையோடு, உமக்கு அரசு சார்பில் நாம் ஏதேனும் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டுமல்லவா? என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்த ஊதியத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்; பொதுநிதியிலிருந்து எனக்கு வரும் தொகையே தேவைக்குமேல் உள்ளது’’ என்றார்கள். பின்னர் சயீத் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள்.

ஆட்சிக் கட்டிலில் உலகப் பற்றற்றவராய்...

அன்னார் போய் சிறிது காலம்கூட கழிந்திருக்காது. அதற்கிடையிலேயே கலீஃபா உமர் (ரலி) அவர்களைச் சந்திக்க, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஹிம்ஸ்வாசிகள் சிலர் ஒரு குழுவாக மதீனாவுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்கள் ஹிம்ஸிலுள்ள வறியவர்களின் பெயர்களை என்னிடம் பட்டியலிட்டுக் கொடுங்கள்; அவர்களுடைய தேவைகளுக்கு நிவாரணம் வழங்க ஆவன செய்கிறேன்’’ என்றார்கள். வந்தவர்கள் ஒரு பட்டியலை நீட்டினர். அதில், பல பெயர்களுக்கு நடுவே சயீத் பின் ஆமிர் என்றும் ஒரு பெயர் இடம்பெற்றிருந்தது. அதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், ‘‘யார் இந்த சயீத் பின் ஆமிர்?’’ என்று கேட்டார்கள்.

வந்தவர்கள், ‘‘எங்களை ஆள்கின்ற தலைவர்தான்’’ என்றனர். உமர் (ரலி) அவர்கள், ‘‘என்ன? உங்களை ஆள்பவர் வறிய நிலையில் இருக்கிறாரா?’’ எனக் கேட்டார்கள். வந்தவர்கள், ‘‘ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் வீட்டில் அடுப்பெரிந்தே நீண்ட நாட்களாகிவிட்டன’’ என்றனர். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது தாடி நனையும் அளவிற்குக் கண்ணீர் வடித்தார்கள்.

பின்னர் ஓராயிரம் பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு வந்தவர்களிடம் கொடுத்தார்கள். ‘‘நீங்கள் ஹிம்ஸ் சென்று சயீத் (ரலி) அவர்களுக்கு என் சலாமைச் சொல்லுங்கள்; பின்னர், கலீஃபா உம்மிடம் இந்தப் பணத்தைத் தரச் சொன்னார்கள்; இதன் மூலம் உமது தேவையை நீர் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது அவர் விருப்பம் என்றும் சொல்லுங்கள்’’ என்று கூறி வந்தவர்களை வழியனுப்பிவைத்தார்கள்.

குழுவினர் ஹிம்ஸ் திரும்பியதும் அந்தப் பையை எடுத்துக்கொண்டு சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அதைக் கையில் வாங்கிய சயீத் (ரலி) அவர்கள், அதையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்கள். அதில் இருப்பது பொற்காசுகள் என்பது தெரியவந்ததும் அதைத் தமக்கு வந்த சோதனை என்றும் ஆபத்து என்றும் கருதினார்கள். அதனால், ‘‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாம் திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) என்று கூறினார்கள்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சயீத் (ரலி) அவர்களின் துணைவியார் வீட்டுக்குள்ளேயிருந்து பதறியடித்து வெளியே வந்து, ‘‘ஏன்? உங்களுக்கு என்ன ஆயிற்று; கலீஃபா இறந்துவிட்டாரா?’’ என்று கேட்டார். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், ‘‘இல்லை அதைவிடப் பேரபாயம் ஒன்று நேர்ந்துள்ளது’’ என்றார். துணைவியார், ‘‘முஸ்லிம்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டார்களா?’’ என்று கேட்டார். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், ‘‘இல்லை, இல்லை; அதையும்விட மிகப் பெரிய அபாயம் ஒன்று நேர்ந்துள்ளது’’ என்றார். ‘‘அப்படியென்ன பேரபாயம்?’’ என்று துணைவியார் கேட்க, ‘‘எனது மறுமைப் பெருவாழ்வைச் சீரழிக்க இவ்வுலகம் என்னைத் தேடி வந்துள்ளது; அதுவும் என் வீட்டுக்கே வந்துவிட்டது’’ என்றார்கள் சயீத் (ரலி) அவர்கள்.

அந்தச் சோதனை பொற்காசுகள்தான் என்பதை அறியாத அவருடைய துணைவியார், ‘‘அப்படியாயின் அந்தச் சோதனையிலிருந்து நீங்களே விடுபட்டு வெளியில் வந்துவிடலாமே’’ என்று தெரிவித்தார். உடனே சயீத் (ரலி) அவர்கள், ‘‘அதற்கு உன் உதவி தேவைப்படும்; உதவுவாயா?’’ என்று கேட்டார்கள். துணைவியார், ‘‘சரி, உதவுகிறேன்’’ என்றார். உடனே அந்தப் பொற்காசுகளை எடுத்துப் பல பைகளில் போட்டு வறிய முஸ்லிம்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்.

ஜனாதிபதியின் விசாரணையில்...

பின்னர் சிறிது காலம் கழிந்தது. அப்போது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் சிரியா நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு, நிலவரங்களை நேரில் ஆய்வு செய்ய அரசுமுறைப் பயணமாக வந்திருந்தார்கள். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஹிம்ஸுக்கும் வந்திருந்தார்கள். அந்நாளில் ஹிம்ஸ் நகரம், குவைஃபா (சிறிய கூஃபா) என்று மக்களால் அழைக்கப்பட்டுவந்தது.

குவைஃபா என்பது இராக்கின் கூஃபாவிலிருந்து மருவிய பெயராகும். கூஃபா நகர ஆட்சியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்மீது பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது ஏராளமான புகார்கள் கலீஃபாவுக்கு வந்து குவியும். அதைப் போன்றே ஹிம்ஸ்வாசிகளும் தம் ஆட்சியாளர்கள்மீது அடிக்கடி புகார்கள் தெரிவித்துவந்ததால் சிறிய கூஃபா (குவைஃபா) என்ற காரணப்பெயரால் ஹிம்ஸ் நகரம் அழைக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஹிம்ஸில் தங்கியிருந்தபோது ஹிம்ஸ்வாசிகள் சிலர் கலீஃபாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து சலாம் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் பதில் சலாம் சொல்லிவிட்டு, ‘‘உங்கள் தலைவர் உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்? என்று விசாரணை நடத்தினார்கள். வந்தவர்கள் தம் தலைவரைப் பற்றி உமர் (ரலி) அவர்களிடம் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரில் நான்கு விஷயங்களைக் குறிப்பிட்டனர். அவை ஒவ்வொன்றுமே மற்றதைவிட மோசமானதாக இருந்தது.

அவ்வாறு புகார் வந்தபோது உமர் (ரலி) அவர்கள், ‘‘சயீத் பின் ஆமிரையும் இவர்களையும் ஒன்றாக வைத்துக்கொண்டுதான் நான் விசாரிக்க வேண்டும். அவர் விஷயத்தில் நான் கொண்டிருந்த நம்பிக்கை பொய்ததுப்போகாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். அவர்மீது நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்?’’ என்று தமக்குத் தாமே கூறிக்கொண்டார்கள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. புகார் அளித்தவர்களும் அவர்களுடைய ஆட்சியாளர் சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்களும் கலீஃபாவுக்கு முன்னால் வந்தனர். அப்போது கலீஃபா உமர் (ரலி) அவர்கள், ‘‘இப்போது உங்கள் ஆட்சியாளர் குறித்த புகார்களை நீங்கள் தெரிவிக்கலாம்’’ என்றார்கள். வந்தவர்கள், ‘‘அவர் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கே முற்பகல் (ளுஹா) நேரமாகிவிடுகிறது’’ என்றனர்.

உமர் (ரலி) அவர்கள் சயீத் (ரலி) அவர்களிடம், ‘‘சயீதே! இதற்கு நீர் என்ன விளக்கம் கூறப்போகிறீர்? என்றார்கள். சயீத் (ரலி) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர், ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதை வெளிப்படுத்துவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. இருப்பினும் சொல்ல வேண்டிய தேவை உள்ளதால் சொல்கிறேன். என்னுடைய இல்லத்தில் வீட்டுவேலை செய்வதற்குப் பணியாளர் யாருமில்லை. எனவே, தினமும் காலை வேளையில் என் குடும்பத்தாரின் உணவுக்காக நானே மாவைக் குழைப்பேன். பின்னர் மாவு மிருதுவாகும்வரை சற்று காத்திருந்து பின்னர் ரொட்டி சுட்டுக் கொடுப்பேன். எல்லாம் முடிந்தபின் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு வெளியே புறப்பட்டு வந்து மக்களைச் சந்திப்பேன்’’ என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்களுடைய அடுத்த புகார் என்ன?’’ என்று வந்தவர்களிடம் கேட்டார்கள். வந்தவர்கள், ‘‘இரவு நேரம் வந்துவிட்டால் அவர் யாருடைய அழைப்பையும் ஏற்பதில்லை’’ என்றனர். உமர் (ரலி) அவர்கள் சயீத் (ரலி) அவர்களைப் பார்த்து, ‘‘சயீதே! இதற்கு உமது விளக்கம் என்ன?’’ என்று கேட்டார்கள். சயீத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதையும் நான் அம்பலப்படுத்த விரும்பவில்லை. இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் நேர்ந்ததால் சொல்கிறேன். நான் பகலை மக்க(ள் நலப்பணிக)ளுக்காகவும் இரவை அல்லாஹ்வுக்காகவும் ஒதுக்கீடு செய்துள்ளேன்’’ என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்களின் அடுத்த புகார் என்ன?’’ என்று வந்தவர்களிடம் கேட்டார்கள். வந்தவர்கள், ‘‘அவர் மாதத்தில் ஒரு நாள் எங்களிடம் வருவதே இல்லை’’ என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் சயீத் (ரலி) அவர்களிடம், ‘‘சயீதே! என்ன காரணம்? என்று கேட்டார்கள். அதற்கு, ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கெனப் பணியாளர்கள் யாரும் இல்லை. நான் உடுத்தியிருக்கும் இந்த உடை தவிர என்னிடம் உடுத்துவதற்கு வேறு உடைகளும் கிடையாது. எனவே, மாதத்தில் ஒருமுறை நானே அதைத் துவைக்கிறேன். பின்னர், அது உலரும்வரை காத்திருந்து நன்கு உலர்ந்தபின் அதை அணிந்துகொண்டு மக்களிடம் வந்து சேர்வதற்குள் மாலை நேரமாகிவிடுகிறது’’ என்று பதிலளித்தார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், ‘‘அடுத்த புகாரைச் சொல்லுங்கள்’’ என்று வந்தவர்களிடம் கூறினார்கள். வந்தவர்கள், ‘‘அவர் சில நேரத்தில் ஒருவித மயக்கத்திற்கு ஆளாகிறார். அந்தச் சமயங்களில் அவர் அவையில் இருப்பதே இல்லை’’ என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் சயீத் (ரலி) அவர்களிடம், ‘‘சயீதே! என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். சயீத் (ரலி) அவர்கள் அதற்குப் பின்வருமாறு பதில் தந்தார்கள்:

ஒரு காலத்தில் நான் இணைவைப்பாளனாக இருந்தேன். அப்போது குபைப் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை என் கண்முன்னே கண்டேன். அப்போது குறைஷியர், ‘‘குபைபே! இப்போது உமக்கு உயிர் பிச்சை தருகிறோம்; அதற்குப் பதிலாக நீர் நிற்கும் இந்த இடத்தில் முஹம்மத் நிறுத்தப்பட்டால் உமக்குப் பிடிக்குமா?’’ என்று கேட்டவாறு அவரைக் கண்டம் துண்டமாக வெட்டினர்.

அப்போதும் அவர், ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் என் மனைவி மக்களோடு நிம்மதியோடும் பாதுகாப்போடும் இருப்பதற்காக, முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஒரு முள் சிராய்ப்பு ஏற்படுவதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’’ என்று கூறினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த நாள் என் நினைவுக்கு வருகிறது. அந்தச் சமயத்தில் நான் குபைப் (ரலி) அவர்களுக்கு உதவி ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்ததை நினைக்கும்போது அல்லாஹ் என்னை மன்னிக்கமாட்டானோ என்ற அச்சம் தோன்றுகிறது. உடனே ஒருவித மயக்கம் என்னை ஆட்கொண்டுவிடுகிறது.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், ‘‘சயீதின் மீது நான் வைத்திருந்த நல்லெண்ணத்தை வீணாக்காமல் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ என்று கூறினார்கள். பின்னர் சயீத் (ரலி) அவர்களின் தேவைகளுக்கு உதவியாக ஓராயிரம் பொற்காசுகளை உமர் (ரலி) அவர்கள் அவருடைய இல்லத்திற்குக் கொடுத்து அனுப்பினார்கள்.

மக்கள் நலனே முக்கியம்

அதைக் கண்டதும் சயீத் (ரலி) அவர்களுடைய துணைவியார், ‘‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இனிமேல் நீங்கள் குடும்ப வேலையைக் கவனிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்தப் பணத்தை வைத்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப்போடுங்கள். அப்படியே வீட்டுவேலைக்கு ஒரு பணியாளரையும் நியமியுங்கள்’’ என்று தம் கணவரிடம் கூறினார்.

அதைக் கேட்ட சயீத் (ரலி) அவர்கள் தம் துணைவியாரிடம், ‘‘அதைவிட மிகச் சிறந்ததை அடைய உனக்கு விருப்பமில்லையா? என்று கேட்டார்கள். ‘‘அது என்ன?’’ என்று துணைவியார் கேட்டார். ‘‘மிகச் சிறந்த அந்த ஒன்றை யார் நமக்குத் தர வேண்டுமோ அவனிடமே அந்தப் பணத்தை வழங்கிவிடுவோம். அதுதான் நமக்கு மிகவும் நல்லது’’ என்று சயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் துணைவியார், ‘‘தெளிவாகச் சொல்லுங்கள்’’ என்று கேட்க, சயீத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக அதைச் செலுத்திவிடுவோம்’’ என்றார்கள். அவருடைய துணைவியார், ‘‘சரி, அப்படியே செய்வோம்; அல்லாஹ் உமக்கு நல்ல பிரதிபலன் வழங்கட்டுமாக’’ என்றார்.

அந்த அவையிலிருந்து சயீத் (ரலி) அவர்கள் புறப்படக்கூட இல்லை; அதற்குள்ளேயே அந்தப் பொற்காசுகளைப் பல பைகளில் போட்டார்கள். பின்னர் தம்முடைய குடும்ப உறவினர்களில் ஒருவரிடம் அவற்றைக் கொடுத்து, ‘‘இவற்றை இன்னின்ன விதவைகளிடமும் இன்னின்ன அநாதைகளிடமும் இன்னின்ன ஏழைகளிடமும் வறியவர்களிடமும் கொடுத்துவிடுங்கள்’’ என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.

தாம் வறுமையில் வாடியபோதும் தம்மைவிடப் பிறருக்கே முன்னுரிமை அளித்தார்கள் சயீத் பின் ஆமிர் (ரலி) அவர்கள். அன்னாரின் பெருந்தன்மையும் உலகப் பற்றற்ற வாழ்வும் அனைவருக்கும் மிகப் பெரும் முன்மாதிரியாகும்.

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...