திங்கள், 27 ஜனவரி, 2014

முன்மாதிரி முஸ்லிம்கள் - 3

அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி)


அரபியில்: டாக்டர், அப்துர் ரஹ்மான் ரஉஃபத் அல்பாஷா
தமிழில்: சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களின் தலையை முத்தமிடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அதை நானே முன்நின்று தொடங்கி வைக்கிறேன். (கலீஃபா உமர் பின் அல்கத்தாப் - ரலி)
நாம் காணவிருக்கும் இந்த வரலாற்றின் நாயகர் ஒரு முக்கியமான நபித்தோழர். அவர் பெயர் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி).

இஸ்லாமிய வரலாற்றின் நீண்டநெடிய பக்கங்களில் எண்ணற்ற பல சான்றோர்களின் வரலாறுகளுக்கிடையே ஒருகனம் கவனத்தை ஈர்க்கும் மிக முக்கியமான வரலாறுகளில் இவருடையதும் ஒன்று.

தமது வாழ்நாளில் இந்த உலகத்தின் இருபெரும் வல்லரசுகளைக் கட்டியாண்ட மாமன்னர்கள் இருவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை இஸ்லாம் இவருக்கு வழங்கியது. அவ்விருவர், பாரசீகச் சக்கரவர்த்தி கிஸ்ராவும் (குஸ்ரு) ரோமப் பைசாந்தியச் சக்கரவர்த்தி கைஸரும் (சீசர்) ஆவர்.

இவ்விரு சக்கரவர்த்திகளுடன் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களுக்கு மிக முக்கியமான வரலாறு உண்டு. காலமெனும் நெஞ்சத்தில் அது பதியப்பெற்று வரலாற்று நாவால் அது இன்றும் மொழியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இறைத்தூதரின் அயல்நாட்டுத் தூதுவர்கள்

ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு. அரபு மண்ணுக்குப் அப்பால், பிற மொழி பேசும் அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுக்கத் திட்டமிட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அழைப்பு மடலை அந்தந்த நாட்டு அரசர்களிடம் எடுத்துச்செல்லும் தூதுவர்களாகத் தம் தோழர்களில் சிலரைத் தேர்வு செய்தார்கள்.

அந்நிய தேசத்து சர்வாதிகாரிகளிடம் இஸ்லாமிய அழைப்பை முன்னெடுத்துச்  செல்லுகிற இந்தப் பணி அவ்வளவு எளிதல்ல. அபாயமும் ஆபத்தும் நிறைந்த பணி அது. எனினும், முக்கியத்துவம் வாய்ந்த பணி. இதை  நபி (ஸல்) அவர்கள் துல்லியமாகவே மதிப்பிட்டிருந்தார்கள்.

இப்பணிக்கு யார் தேர்வு ஆவார்களோ அவர்களைப் பொறுத்தமட்டில் அந்த நாடுகள் அவர்களுக்கு மிகவும் தூரமானவை. முன்பின் அறிமுகமில்லாத அந்நாடுகளின் பேச்சுமொழியும் அவற்றை ஆளும் மன்னர்களின் இயல்புகளும் அவர்களுக்கு அறவே பரிச்சயமற்றவை.

இந்நிலையில், அந்த மன்னர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுப்பதன் மூலம் அவர்களிடம், அவர்களின் பழைய மதத்தைத் துறக்குமாறும் பழைய கௌரவத்தையும் அதிகாரத்தையும் கைவிடுமாறும் கோர வேண்டியது வரும். நேற்றுவரை ஒருசில நூறு பேர் மட்டுமே பின்பற்றிவந்த ஒரு சமயத்தைத் தழுவுமாறு கேட்க வேண்டியதும் வரும்.

நிச்சயமாக இது கழுத்தில் கத்தி தொங்குகிற திகில் பயணம்தான் என்பதில் சந்தேகமில்லை. இதில் பயணம் மேற்கொள்பவரின் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம். இதிலிருந்து ஒருவேளை அவர் திரும்பிவந்தால், அவரை ஒரு புதுப்பிறவி என்றுதான் சொல்ல வேண்டும்.

அதனாலேயே முன்னதாக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை ஒன்றுதிரட்டி, அவர்களிடையே ஓர் உரை நிகழ்த்தினார்கள். அந்த உரையில் வழக்கமான இறைப்புகழ், ஓரிறை உறுதிமொழி ஆகியவற்றை எடுத்துரைத்தார்கள். பின்னர், ‘‘நான் உங்களில் சிலரை அயல்நாட்டு அரசர்களிடம் இஸ்லாமிய அழைப்புப் பணியின் தூதுவர்களாக அனுப்பிவைக்க விரும்புகிறேன். இஸ்ரவேலர்கள் ஈசா (அலை) அவர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டதைப் போன்று நீங்கள் என்னிடம் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டார்கள்.

தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்கள் விருப்பத்தை உங்கள் சார்பில் நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். உங்களுக்கு விருப்பமான பகுதிக்கு நீங்கள் எங்களைத் தாராளமாக அனுப்பிவைக்கலாம்’’ என்றனர்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், இஸ்லாமிய அழைப்பு மடலை அரசர்களிடம் எடுத்துச்செல்லும் பொறுப்பினைத் தம் தோழர்களில் அறுவரிடம் ஒப்படைத்தார்கள். அந்த அறுவரில் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களும் ஒருவர். அன்னார் இறைத்தூதரின் இஸ்லாமிய அழைப்பு மடலைப் பாரசீக மன்னர் கிஸ்ராவிடம் (குஸ்ரு) எடுத்துச்செல்லும் பொறுப்புக்குத் தேர்வாகியிருந்தார்.

பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவரகள் தமது வாகனத்தைத் தயார் செய்துவிட்டு, மனைவி மக்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார். பின்னர், இறையுதவியோடு தன்னந்தனியாக இலக்கை நோக்கி முன்னேறினார். வழிநெடுகிலும் எண்ணற்ற மேடு பள்ளங்களைக் கடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதியில் பாரசீகத்தை அடைந்து, தாம் கொண்டுவந்துள்ள மடலின் முக்கியத்துவத்தை அரசரின் உதவியாளர்களுக்கு உணர்த்தி, அரசரைச் சந்திக்க அனுமதி பெற்றுத் தருமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
மடலைக் கண்ணுற்ற உதவியாளர்கள் ஒருகனம் ஆடிப்போய்விட்டனர். அவர்கள் அது குறித்து அரசரிடம் தகவல் சொல்ல, அரசர் கிஸ்ரா ஒரு திட்டத்துடன் பாரசீக நாட்டின் கோட்டை கொத்தளத்தை அலங்கரிக்குமாறும் அதில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டார்.

அரசவைக் கூட்டத்தில் பங்குகொள்ள வருமாறு பாரசீக நாட்டின் பிரமுகர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் தவறாமல் வந்து குழுமினர். பின்னர் அரசரைச் சந்திக்க அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கிஸ்ராவின் அரசவையில்...

உடனே அரசரிடம் சென்ற அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ஒரு கிராமவாசியைப் போன்று எளிமையான தோற்றத்தில் இருந்தார். மெல்லிய உள்ளாடை ஒன்றைத் தமது மேனியில் சுற்றி அதற்குமேல் கெட்டியான வெளிப்புற நீளங்கியை அணிந்திருந்தார். பார்ப்பதற்குத்தான் எளிமையே அன்றி, உடலமைப்பில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் உயரமாகவும் வாட்டசாட்டமாகவும் இருந்தார். அவரது நெஞ்சக்கூட்டில் இஸ்லாத்தின் உன்னதமும் ஈமானின் பெருமிதமும் கனன்றுகொண்டிருந்தன.

ஈமானிய மிடுக்குடன் அப்படியே அரசரை நோக்கி நடந்துவந்தார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள். அப்போது அவர் கையிலிருந்து கடிதத்தை வாங்கித் தருமாறு வேலையாள் ஒருவருக்கு அரசர் கண்சாடை காட்டினார். அதற்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘முடியாது; கடிதத்தை அரசர் கையில் நானே நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இறைத்தூதரின் கட்டளை. அதை என்னால் மீற இயலாது’’ என்று கூறி மறுத்துவிட்டார்.

அதற்கு அரசர், ‘‘விடுங்கள்; அவர் என்னருகில் வரட்டும்’’ என்றார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அரசரை நெருங்க, அன்னாரின் கையிலிருந்து அரசரே நேரடியாக கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் அரசர் கிஸ்ரா, ‘அல்ஹீராபகுதியைச் சேர்ந்த அரபிமொழி தெரிந்த எழுத்தர் ஒருவரை அழைத்து அவரிடம் கடிதத்தைக் கொடுத்து தமக்கு முன்னாலேயே அதை உடைத்துப் படிக்குமாறு உத்தரவிட்டார். அதில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்:

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து பாரசீக அதிபர் கிஸ்ராவுக்கு (வரையப்பட்ட மடல்): நல்வழியைப் பின்பற்றியவர்மீது (இறைச்)சாந்தி நிலவட்டும்...

இஸ்லாமிய அழைப்பு சார்ந்த செய்திகள் சிலவற்றைச் சுமந்துவந்த அக்கடிதத்தில் இந்த அளவை மட்டுமே அரசர் செவியுற்றார். அதற்குமேல் ஓர் எழுத்தைக்கூட அவர் வாசிக்க அனுமதிக்கவில்லை. அதற்குள் அவரது இதயத்தில் கோபம் நெருப்பாய் தகித்தது. முகமெல்லாம் சிவந்தது. நரம்புகள் புடைத்தன. காரணம், நபி (ஸல்) அவர்கள் கடிதத்தில் தமது பெயரை முதலிலும் அரசர் பெயரை அடுத்தும் குறிப்பிட்டுவிட்டார்கள் என்பதுதான்.

உடனே எழுத்தரின் கையிலிருந்து கடிதத்தைப் பறித்த அரசர், அதில் எழுதப்பட்டிருந்த மற்ற செய்திகள் என்ன என்பதைக்கூட அறியாமல் அதைக் கிழித்தெறியலானார். அப்போது, ‘’முஹம்மத் என் அடிமை; எனக்கு அடிமையாக இருந்துகொண்டு எனக்கே இப்படியொரு கடிதம் எழுத எப்படி அவருக்குத் தைரியம் வந்தது? என்று அலறினார். பின்னர் கடிதம் கொண்டுவந்த தூதுவர் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களை அரசவையிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். அவ்வாறே அன்னார் வெளியேற்றப்பட்டார்கள்.

அவையிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு, அடுத்து தமக்கு என்ன நடக்கும்? தாம் கொல்லப்படுவோமா? அல்லது உயிர்பிச்சை அளிக்கப்படுவோமா? என்று தெரியவில்லை. இருப்பினும் சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழைப்பு மடலைச் சேர்க்க வேண்டிய இடத்தில் முறைப்படி சேர்த்துவிட்ட பின்னர் இனிமேல் எனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை’’ என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்.

சிறிது நேரத்தில் கோபம் தணிந்ததும் அரசர் கிஸ்ரா, ‘‘எங்கே அப்துல்லாஹ்? தூக்கிவாருங்கள் அவரை என்னிடம்’’ என்று கட்டளையிட்டார். ஆனால், அப்போது அவர் அங்கு இருக்கவில்லை. அரசரின் ஆட்கள் அவரைத் தேடினர். அவர் வந்துபோன சுவடுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. பின்னர், அரபு நாட்டுக்குச் செல்லும் பாதையில் அவரைத் தேடிப்போனார்கள். அவர் அந்த வழியில் ஏற்கெனவே சென்றுவிட்டதை அவர்கள் கண்டனர். அவர்கள் கையில் அவர் சிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் நல்ல முறையில் வந்துசேர்ந்த அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், பாரசீக மன்னர் கிஸ்ராவின் அரசவையில் நடந்ததையும் கடிதத்தை அரசர் கிழித்தெறிந்ததையும் தெரிவித்தார். இதைக் கேட்ட நபியவர்கள், ‘‘கிஸ்ராவின் ஆட்சியை அல்லாஹ் கிழித்தெறிவானாக’’ என்று மட்டும் சொன்னார்கள். கூடுதலாக ஒரு வார்த்தைகூட அவர்கள் பேசவில்லை.

கிஸ்ராவின் பிரதிநிதி பாதான்

கடிதம் கொண்டுவந்த தூதுவர் தலைமறைவாகிவிட்டார் என்பதை அறிந்த அரசர் கிஸ்ரா, யமன் தேசத்திற்கான தம் பிரதிநிதி, ஆளுநர் பாதான் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘ஹிஜாஸ் பகுதியில் புதிதாகத் தோன்றியிருக்கும் அந்த ஆளிடம் (முஹம்மதிடம்) வலிமை மிக்க இராணுவ வீரர்கள் இருவரை அனுப்பி, அவரை என்னிடம் கொண்டுவரச் சொல்லி உத்தரவிடுவீராக’’ என்று எழுதியிருந்தார்.

உடனே பாதான் தமது இராணுவத்தில் தனிச்சிறப்புப் பிரிவில் பணியாற்றும் இருவரைத் தேர்வு செய்து, அவர்களிடம் நபியவர்களுக்குக் கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பினார். அதில், ‘‘கடிதம் கொண்டுவரும் இந்த இரு வீரர்களோடு உடனே பேரரசர் கிஸ்ராவைச் சந்திக்கப் புறப்படுங்கள்; காலம் தாழ்த்த வேண்டாம்’’ என்று எழுதியிருந்தார். அத்துடன் அந்த வீரர்களிடம், ‘‘போகின்ற இடத்தில் முஹம்மதின் நிலவரங்களை நிதானமாக ஆய்ந்தறிந்து கிடைக்கும் தகவல்களத் திரட்டி என்னிடம் கொண்டுவாருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.

வீரர்கள் இருவரும் இடைவழியில் எங்கும் நில்லாமல் அதிவேகப் பயணம் மேற்கொண்டு, தாயிஃப் நகரை அடைந்தனர். அங்கு குறைஷிக் குலத்தைச் சேர்ந்த வணிகர்கள் சிலரைச் சந்தித்து, அவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்தனர். வணிகர்கள், ‘‘அவர் தற்போது மக்காவில் இல்லை; யஸ்ரிப் (மதீனா) போய்விட்டார்’’ என்றனர்.

பின்னர் மிகுந்த மகிழ்ச்சியோடும் குதூகலத்தோடும் மக்கா திரும்பிய அந்த குறைஷிய வணிகர்கள், மக்கா குறைஷியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ‘‘குறைஷிய பெருமக்களே! உங்கள் கண்கள் குளிரட்டும். உங்களைப் பீடித்திருந்த முஹம்மதின் தொல்லை ஒழிந்தது. காரணம், முஹம்மதின் வழியில் பாரசீக மன்னர் கிஸ்ரா எதிர்ப்பட்டுவிட்டார். இனிமேல் முஹம்மதை அவர் உண்டுஇல்லை என்றாக்கிவிடுவார்’’ எனக் கூறினர்.

ஆளுநர் பாதான் அனுப்பிய அந்த வீரர்கள் இருவரும் தாயிஃபிலிருந்து மதீனாவை நோக்கித் தம் வாகனங்களைச் செலுத்தினர். மதீனாவை அடைந்ததும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து அன்னாரிடம் பாதானின் கடிதத்தை ஒப்படைத்தனர்.

அவ்விருவரும், ‘‘எங்கள் பாரசீகப் பேரரசர் கிஸ்ரா, எங்கள் யமன் தேசத்து ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். அதில், உம்மிடம் ஆட்களை அனுப்பி உம்மை ஆட்கொணர்வு செய்து தம்மிடம் சேர்க்குமாறு குறிப்பிட்டிருந்தார். உம்மை கிஸ்ராவிடம் அழைத்துச் செல்லத்தான் இதோ நாங்கள் வந்துள்ளோம். நீர் பிரச்சினை எதுவும் செய்யாமல் வந்துவிட்டால் உமக்காக நாங்கள் கிஸ்ராவிடம் பேசி, அவரிடமிருந்து உமக்குத் தீங்கேதும் நேராமல் பார்த்துக்கொள்வோம். சலுகை கிடைக்கவும் வழிசெய்வோம். நீர் வர மறுத்தால் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. கிஸ்ராவின் அதிகாரம் என்ன என்பதும் அவரது அடக்குமுறையும் தண்டனையும் எப்படி இருக்கும் என்பதும் உமக்கே தெரியும். அவர் உம்மை மட்டுமல்ல, உம் சமூகத்தையும் சிதைத்துவிடுவார்’’ என்று நபியவர்களிடம் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நபியவர்கள் இலேசாகப் புன்முறுவல் பூத்துவிட்டு, ‘‘இப்போது நீங்கள் உங்கள் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டு நாளைய தினம் என்னை வந்து பாருங்கள்’’ என்று அவ்விருவரிடமும் கூறினார்கள். அவ்வாறே மறுநாள் நபியவர்களிடம் வந்த அவ்விருவரும், ‘‘என்ன, பேரரசர் கிஸ்ராவைச் சந்திக்க எங்களுடன் புறப்படுவதற்கு நீர் தயாராகிவிட்டீரா? எனக் கேட்டனர்.

அதற்கு நபியவர்கள், ‘‘இனிமேல் நான் என்ன, நீங்கள்கூட கிஸ்ராவைப் பார்க்க இயலாது. ஏனெனில், அவரது உயிரை அல்லாஹ் பறித்துவிட்டான். அவருடைய மகன் ஷீரவைஹியே (பதவிக்கு ஆசைப்பட்டு) இன்ன நாள் இரவு நேரத்தில் அவரைக் கொன்றுவிட்டார்’’ என்று அவ்விருவரிடமும் தெரிவித்தார்கள்.

அவ்விருவரும் நபியவர்களின் முகத்தை ஆழமாகக் கவனித்தனர். அவ்விருவர் முகத்திலும் பதற்றம் தொற்றிக்கொண்டது. நபியவர்களைப் பார்த்து, ‘‘என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்துதான் பேசுகிறீரா? இதை ஆளுநர் பாதானுக்கு நாங்கள் எழுதியனுப்பட்டுமா?’’ என்று கேட்டனர்.

நபியவர்கள், ‘‘ஆம்! தாராளமாக எழுதுங்கள். அத்தோடு நான் கொண்டுவந்துள்ள இஸ்லாம் மார்க்கம், கிஸ்ராவின் அரசாட்சி பரவியுள்ள இடம்வரை சென்றுசேரும். எனவே, அவர் இஸ்லாத்தைத் தழுவினால் அவரது அதிகாரத்தில் உள்ள பகுதியை அவரிடமே நான் வழங்குகிறேன். அவரது சமூகத்திற்கு அவரையே அரசராக்குகிறேன் என்றும் அவரிடம் சொல்லுங்கள்’’ என்றார்கள்.

இஸ்லாத்தைத் தழுவிய யமன் தேச ஆளுநர்

பின்னர் வீரர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தம் ஆளுநர் பாதானிடம் சென்று நடந்த தகவலை எடுத்துரைத்தனர். அதற்கு பாதான், ‘‘முஹம்மத் கூறியபடி நடந்தால் அவர் நபிதான். நடக்காவிட்டால் அவர் விஷயத்தில் வேறு முடிவை நாம் பிறகு யோசிக்கலாம்’’ என்று கூறினார். இவ்வாறு சொல்லி சற்று நேரம்கூட கழியவில்லை. அதற்குள் ஷீரவைஹியிடமிருந்து ஆளுநர் பாதானுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

இறைவாழ்த்துக்குப்பின்... நான் கிஸ்ராவைக் கொன்றுவிட்டேன். நம் சமூக மக்களின் இரத்தத்திற்குப் பழிவாங்குவதற்காகத்தான் நான் அவரைக் கொல்ல நேர்ந்தது. அவர் நமது சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கும் பெண்கள் சிறைபிடிக்கப்படுவதற்கும் செல்வங்கள் சூறையாடப்படுவதற்கும் அனுமதியளித்தார். எனவே, இக்கடிதம் கிடைத்ததும் உமது அதிகாரத்தில் இருக்கும் குடிமக்களிடமிருந்து, எனக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக விசுவாசப் பிரமாணம்  பெற்றுத் தருவீராக.

புதிய மன்னர் ஷீரவைஹியின் கடிதத்தை ஆளுநர் பாதான் படித்ததுதான் தாமதம். உடனே, கடிதத்தை மூலையில் தூக்கியெறிந்துவிட்டு, தாம் இஸ்லாத்தைத் தழுவியதாகப் பொது அறிவிப்புச் செய்தார். அவருடன் யமன் தேசத்தைச் சேர்ந்த பாரசீகர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினர். இதுவே, பாரசீகப் பேரரசர் கிஸ்ராவை அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சியாகும்.

ரோமாபுரி மன்னருக்கு முன்னால்...

ரோமப் பைசாந்திய மன்னர் கைஸரையும் (சீசர்) அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் தமது வாழ்நாளில் சந்தித்துள்ளார்கள் என்று ஏற்கெனவே கண்டோம். அந்த வரலாற்றை இனி காண்போம்:
ரோமானிய மன்னர் கைஸரை, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. அதுவொரு சுவையான வரலாற்று நிகழ்ச்சியாகும்.

ஹிஜ்ரீ பத்தொன்பதாம் ஆண்டில் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ரோமானியப் படையை எதிர்த்துச் சண்டையிடுவதற்காகப் படையொன்றை அனுப்பினார்கள். அதில் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களும் ஒருவர்.

ரோமாபுரியை நோக்கி படைநடத்திவரும் முஸ்லிம் இராணுவத்தைப் பற்றிய தகவல்கள் அதிபர் கைஸருக்கு வந்துகொண்டிருந்தன. மேலும், முஸ்லிம்களிடம் இருந்த உண்மையான இறைநம்பிக்கை, ஆழமான கொள்கைப் பிடிப்பு, அல்லாஹ்வின் பாதையிலும் அவனுடைய தூதரின் பாதையிலும் உயிரைத் துச்சமாக மதிக்கும் மனோபாவம் ஆகிய பண்புகளைப் பற்றியும் அவரிடம் தகவல்கள் வந்தன.

எனவே, முஸ்லிம்களைப் போர்க் கைதிகளாகப் பிடிக்க முடிந்தால் அவர்களில் ஒருவரையேனும் தம்மிடம் உயிருடன் கொண்டுவருமாறு தம்முடைய ஆட்களுக்கு கைஸர் உத்தரவிட்டார். அல்லாஹ்வின் நாட்டம், அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களே ரோமானியரின் கைகளில் கைதியாகச் சிக்கினார்கள்.

அன்னாரைத் தம்முடைய அரசரிடம் இழுத்துச் சென்ற ரோமானிய வீரர்கள், ‘‘இதோ இவர் முஹம்மதின் தோழர்களில் ஒருவர். அவரது மார்க்கத்தில் இணைந்த ஆரம்பக்கட்ட மனிதர்களில் இவரும் ஒருவர். நம் கைகளில் கைதியாகச் சிக்கினார். அவரை உம்மிடம் சிறைப்பிடித்துக் கொண்டுவந்துள்ளோம்’’ என்றனர்.

ரோமாபுரி மன்னர், அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களை நீண்ட நேரம் வெறித்துப் பார்த்தார். பின்னர் திடீரென்று, ‘‘நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்’’ என்றார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார்கள்.

மன்னர், ‘‘நீ கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொள். நான் உன் வழியில் குறுக்கிடமாட்டேன். உனக்குக் கண்ணியமான முறையில் இடமளித்துக் கௌரவிக்கின்றேன்’’ என்றார். அதற்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘ஒருபோதும் நடக்காது. அப்படிச் செய்வதைவிட நான் செத்துப்போவதே ஆயிரம் மடங்கு எனக்கு விருப்பமானது’’ என்று தன்மான உணர்வுடன் உறுதிபடத் தெரிவித்தார்கள்.

மன்னர், ‘‘உன்னைப் பார்த்தால் வீராதிவீரானாகத் தெரிகிறாய். நான் சொன்னபடி கேட்டால் அரசாட்சியில் உனக்குப் பங்கு தருகிறேன். எனது அதிகாரத்தை உனக்கும் பகிர்ந்தளிக்கிறேன்’’ என்று கூறினார்.

அப்போது விலங்குளால் பிணைக்கப்பட்டிருந்த அந்தக் கைதி மெலிதாக முறுவலித்தவாறு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் இமைப்பொழுதேனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காக, நீர் உமக்குச் சொந்தமானவற்றை மட்டுமல்ல, அரபியருக்குச் சொந்தமான அனைத்தையும்கூட எனக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அதற்கு நான் தயாரில்லை’’ என்றார்.

‘’அவ்வாறாயின் உன்னைக் கொல்ல நேரிடும்’’ என்று அரசர் அச்சமூட்டினார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘அது உமது விருப்பம்’’ எனக் கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்களைச் சிலுவையில் அறையுமாறு அரசர் உத்தரவிட அன்னார் சிலுவையில் அறையப்பட்டார்கள்.

பின்னர் அரசர் அம்பெறி வீரர்களைப் பார்த்து, ‘‘அப்துல்லாஹ்வின் கைகளுக்கு அருகில் அம்பெய்யுங்கள்’’ என்று ரோமானிய மொழியில் கட்டளையிட்டார். வீரர்கள் அம்பெய்துகொண்டிருக்கும்போது அரசர் கிறித்தவத்தைத் தழுவுமாறு அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க, அன்னார் அதை மறுத்துக்கொண்டே இருந்தார்கள்.

பின்னர் அரசர், ‘‘அவருடைய கால்களுக்கு அருகில் அம்பெய்யுங்கள்’’ என்று தம் வீரர்களுக்குச் சொன்னார். அவ்வாறே வீரர்கள் அம்பெய்ய, அரசர் இஸ்லாத்தை துறக்குமாறு அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க, அன்னார் முடியாது என்று மறுத்துக்கொண்டே வந்தார்கள். அப்போது அரசர், ‘‘போதும் நிறுத்துங்கள். அவரைச் சிலுவையிலிருந்து கீழே இறக்குங்கள்’’ என்று வீரர்களுக்கு உத்தரவிட்டார். வீரர்கள் அவ்வாறே செய்தனர். பின்னர் பெரிய செம்புச் சட்டி ஒன்றைக் கொண்டுவந்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொதிக்கவிடுமாறு சொன்னார்.

பின்னர், இரு முஸ்லிம் கைதிகளை அழைத்துவந்து, அவர்களில் ஒருவரைக் கொதிக்கும் எண்ணெய்யில் தூக்கி வீசுமாறு உத்தரவிட்டார். அவ்வாறே வீரர்கள் செய்தனர். அந்த முஸ்லிம் கைதி அப்படியே வதங்கிப்போனார். அவருடைய தசைகள் தனித்தனியாகப் பிய்ந்துபோக வெறும் எலும்புக்கூடு மட்டுமே தெரிந்தது.

இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் மறுபடியும் அரசர் கிறித்தவத்தை ஏற்குமாறு நெருக்கடி தந்தார். ஆனால், அப்துல்லாஹ் (ரலி) அவர்களோ முன்பைவிடக் கடுமையாக அதை மறுத்துவிட்டார். எனவே, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் விஷயத்தில் அரசர் முழுவதுமாக நம்பிக்கையிழந்தார்.

எனவே, ‘’ஏற்கெனவே ஒருவரைக் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் வீசியதைப் போன்று இவரையும் வீசியெறியுங்கள்’’ என்று கட்டளையிட்டார். அதற்காக அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கொண்டுசெல்லப்பட்டபோது அன்னாரின் கண்கள் கண்ணீர் சொரிந்தன.

உடனே அரசரின் ஆட்கள் அரசரிடம், ‘‘அப்துல்லாஹ் அழுகிறார்’’ என்றனர். எனவே, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் பயந்து நடுங்கிவிட்டதாக அரசர் எண்ணிக்கொண்டு, ‘‘அவரை என்னிடம் கொண்டுவாருங்கள்’’ என்றார். அவ்வாறே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அரசருக்கு முன்னால் கொண்டுவரப்பட்டதும் கிறித்தவ மார்க்கத்தை ஏற்குமாறு அன்னாரிடம் அரசர் மறுபடியும் எடுத்துரைத்தார். அப்போதும் அன்னார் மறுத்துவிட்டார்கள். அதற்கு அரசர், ‘‘அட நாசமாய்ப் போக; பின் எதற்காக அழுகின்றீர்?’’ என்று கேட்டார்.

அதற்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘நான் ஏன் அழுதேன் தெரியுமா? ‘இப்போது நீ இந்தச் சட்டிக்குள் தூக்கியெறியப்படப் போகிறாய். உனது உயிர் பிரியப்போகிறதுஎன்று என் மனம் என்னிடம் சொல்கிறது. ஆனால், அல்லாஹ்வின் வழியில் இந்தச் சட்டிக்குள் (மீண்டும் மீண்டும்) தூக்கிவீசப்படுதற்கு ஏதுவாக என் உடலிலுள்ள ரோமங்களின் எண்ணிக்கையளவு நிறைய உயிர்கள் எனக்கு வேண்டும் என்று விரும்பினேன். அது நடக்கவில்லையே என்று நினைத்து அழுதேன்’’ எனக் கூறினார்கள்.

அப்போது அந்த வம்பரசன், ‘‘நீர் எனது தலையை முத்தமிட்டு மரியாதை செலுத்தினால் நான் உம்மை விடுவிக்கிறேன்’’ என்றான். அதற்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘என்னுடன் முஸ்லிம் கைதிகள் அனைவரையும் சேர்த்து விடுவிப்பீரா?’’ எனக் கேட்டார்கள். அரசர், ‘‘அனைவரையும் விடுவிக்கிறேன்’’ என்றார்.

அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் எதிரி ஒருவனின் தலையை நான் முத்தமிடுவதால் என்னையும் சக முஸ்லிம் கைதிகள் அனைவரையும் அவன் கொடுமையிலிருந்து விடுவிப்பதாக இருந்தால் அவன் தலையை நான் முத்தமிடுவதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை’’ என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, அரசருக்கு அருகில் சென்று அவர் தலையை முத்தமிட்டார்.

உடனே, ரோமாபுரி மன்னர் முஸ்லிம் கைதிகள் அனைவரையும் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட, அவ்வாறே அவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் மதீனாவில் கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்த அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், ரோமானிய மன்னரிடம் நடந்த தகவலை கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.


பின்னர், அன்னார் அழைத்துவந்த அந்தக் கைதிகளைக் கண்டதும், ‘‘அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களின் தலையை முத்தமிடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அதை நானே முன்நின்று தொடங்கிவைக்கிறேன்’’ என்று கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அன்னார் எழுந்து வந்து அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் தலையை முத்தமிட்டார்கள்.

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...