- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
திருமணம் என்றால் என்ன?
திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெரும்பாலும் ஆளப்படுகிறது. இதற்குச் Ôசேர்க்கைÕ என்பது சொற்பொருள். மரங்கள் காற்றின் வேகத்தில் ஒன்றோடொன்று ஒட்டி உரசும்போது, ÔÔதநாக்கஹத்தில் அஷ்ஜாருÕÕ என்று அரபியில் கூறுவர். Ôஒட்டி உரசுகின்றனÕ என்பதைச் சுட்டும் Ôதநாக்கஹத்Õ என்பதன் வேர்ச்சொல்லே Ôநிகாஹ்Õ ஆகும். திருமணத்தின் மூலம் மணமக்கள் உள்ளத்தாலும் உடலாலும் ஒட்டி உறவாடுகின்றனர் என்பதால் திருமணத்திற்கு இச்சொல் வழங்கப்படுகிறது.
Ôஸிவாஜ்Õ எனும் சொல்லும் ஆளப்படுகிறது. ஸவ்ஜ் எனும் சொல்லிலிருந்து பிறந்து இச்சொல் வெவ்வேறான இரு பொருட்களின் சங்கமத்தை இச்சொல் குறிக்கும். (செருப்பு வாங்கிட்டு வா என்று சொன்னால் இரண்டு காலுக்குமான செருப்பு என்றே பொருள். 2 சட்டை வாங்கி வா என்றுதான் சொல்ல முடியும்)
சொல் வழக்கில் Ôநிகாஹ்Õ என்பது திருமண ஒப்பந்தத்தையும் (அக்த்) தாம்பத்திய உறவையும் (ஜிமாஉ) ஒருசேரக் குறிக்கும். இஸ்லாமிய வழக்கில், தாம்பத்திய உறவுக்கான அனுமதியுடன்கூடிய வாழ்வியல் ஒப்பந்தமே நிகாஹ் (திருமணம்) எனப்படுகிறது.
திருமணம் ஏன்?
திருமணம் ஏன் செய்ய வேண்டும் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை தனிமனிதக் காரணங்கள் என்றும் சமூகக் காரணங்கள் என்றும் இருவகைப்படுத்தலாம்:
1. தனிமனிதக் காரணங்கள்
அ. கற்பொழுக்கப் பாதுகாப்பு
கற்பொழுக்கம் என்பது ஒருவரின் ஆளுமைப் பண்பில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தும் ஓர் அம்சமாகும். கற்பொழுக்கம் காக்கத் தவறினால் ஆளுமைப் பண்பில் சிதைவும் சேதாரமும் ஏற்படும். (கர்நாடகா ஆளுநர் பாலியல் குற்றச்சாட்டில்: விக்கிலீக்ஸ் ஜுலியன் அசாஞ்சே) ஒருவர் மணமுடிப்பதன் மூலம் தமது கற்பொழுக்கத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவரகள் கூறினார்கள்: இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்தச் சக்தி பெற்றவர் மணமுடித்துக்கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பொழுக்கம் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில், நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் - 1905, 5065, 5066)
ஒருவர் தகாத நடத்தையிலிருந்து விலகியிருக்கும்போதுதான் அவரது சமய இறையாண்மை காப்பாற்றப்படுகிறது. அதற்கு நோன்பு நோற்பதுகூட ஒரு தாற்காலிக நிவாரணம்தான். மணமுடித்தலே அதற்கான நீடித்த வழி என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறது.
ஆ. உடல்நலப் பாதுகாப்பு
முறைகேடான பாலுறவுகளும் பண்பாடு மீறிய சேர்க்கைகளும் பண்பாட்டு வீழ்ச்சிக்கு மட்டுமன்றி, பல்வேறு பெருநோய்களுக்கும் வழிவகுக்கின்றன. அவை சமூகத்தில் மோசமான பாதிப்புகளை உருவாக்குகின்றன. உளவியல் நோய்களுக்கும் அவை காரணமாகின்றன. அனுமதிக்கப்பட்ட வழியில் திருமணம் முடித்து அதன் மூலம் பாலுணர்வுத் தேவைக்குத் தீர்வு தேடிக்கொள்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கொடிய நோய்களுக்குப் பலியாவதில்லை.
தவிரவும், உடலில் தேங்கியிருந்துகொண்டு உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கின்ற நீர்மங்கள், சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட பாலுறவின் மூலம் வெளியேறுவதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனாலேயே, பாலுறவு என்பது உடல்நலம் காக்கும் காரணிகளில் மிக முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
(அத்திப்புந் நபவிய்யு)
இ. மனஅமைதியும் ஆத்மார்த்தமான திருப்தியும்
யாரோ எவரோ என்றிருந்த இருவர் திருமணத்தின் மூலம் ஒன்றிணைந்து, ஒருவர் மற்றவருக்காக விட்டுக்கொடுக்கும்போது அங்கு அன்பு, பாசம், பிணைப்பு ஆகியவை துளிர்க்கின்றன. பகல் முழுக்க உழைத்துக் களைத்து, கருக்கலில் வீடு திரும்பும் ஓர் ஆண், வீட்டில் மனைவியைக் கண்டதும் பகலில் அவர் பட்ட பாடெல்லாம் பகலவனைப் பார்த்த பனியாய் பறந்தோடிவிடுகிறது. மனைவியும் அந்த உணர்வை அனுபவிக்கவே செய்கிறாள்.
அத்துடன், திருமணத்தின் மூலம் கிடைக்கும் சட்டப்படியான பாலுறவின்மூலம் தம்பதியர் மனஅமைதி பெறுகின்றனர். பாலுணர்வுக்கு வடிகால் கிடைக்காதோர் அந்த அமைதியை இழந்து ஒருவித தடுமாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் தத்தம் வாழ்க்கைத் துணையிடமிருந்து கிடைக்கின்ற மனஅமைதியைப் பற்றிப் பின்வரும் இறைவசனம் இவ்வாறு கூறுகிறது:
நீங்கள் (உங்கள்) துணைவியரிடம் மன அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவர்களை உங்களுக்காக அவன் படைத்து, உங்களிடையே பாசத்தையும் பரிவையும் அவன் ஏற்படுத்தியிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன், 30:21)
ஈ. இறையுதவி கிடைக்கப்பெறல்
தனியொரு மனிதராகத் தமக்குக் கிடைக்கும் வாழ்வாதாரத்தைத் தாம் மட்டுமே அனுபவித்துவந்த ஒருவர், மணமுடிப்பதன் மூலம் தம்மைப் போன்ற மற்றோர் உயிருக்கான வாழ்வாதாரத்திற்கும் சேர்த்துப் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது. எனவே, பிரம்மச்சாரியைவிட ஒரு குடும்பஸ்தர் இறைவனின் உதவிக்குப் பெரிய அளவில் தகுதி பெறுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் பொறுப்பாகும்: 1. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர். 2. (விடுதலைக்கான விலையை) முழுமையாகச் செலுத்த வேண்டும் என்று நினைக்கின்ற பின்தேதியிட்டு விடுதலைப் பத்திரம் வழங்கப்பட்ட அடிமை. 3. கற்பொழுக்கம் காக்கும் நோக்கில் மணமுடித்துக்கொள்பவர்.
(நூல்: ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் - 1579)
உ. கண்மூடிய பிறகும் வந்துசேரும் நன்மை
தாம்பத்திய உறவின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்று குழந்தைகளை நன்கு வளர்த்து நன்னடத்தையுள்ளவர்களாக விட்டுச்செல்லும்போது அவர்கள் செய்யும் நன்மைகளும் பிரார்த்தனைகளும் இறப்புக்குப் பிறகும் பெற்றோரைப் போய்ச் சேர்ந்துகொண்டிருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன: 1. நிலையான அறக்கொடை. 2. பயன் பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் - 3358)
2, சமூகக் காரணங்கள்
அ. மனித இனத்தின் பாதுகாப்பு
உலக முடிவு நாள்வரை மனித சமூகம் இந்த உலத்தில் இடைவிடாமல் தொடர்ந்து வாழ்ந்துவர வேண்டும் என்பது படைத்த இறைவன் வகுத்த உலகியல் நியதியாகும்.
நம் பிள்ளைகளின் வாழ்க்கை நமது வாழ்க்கையுடன் தொடர்புடையது. நமது வாழ்க்கை நம் பெற்றோரின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. நம் பெற்றோர் வாழ்க்கை அவர்களுடைய பெற்றோரின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. இப்படியே முதல் மனிதர்வரை இந்தச் சங்கிலித்தொடர் நீண்டுகொண்டே செல்லும்.
மனித சமூகத்தின் இந்த உற்பத்திச் சங்கிலி இடையில் எங்கேனும் அறுந்துபோயிருந்தால் நாம் உருவாகியிருக்கமாட்டோம். உதாரணமாக, நமது முந்தைய தலைமுறைகளில் ஒருவர் குழந்தைப் பேறற்றவராகவோ மணமுடிக்காதவராகவோ இருந்திருந்தால் நாம் எங்ஙனம் உருவாகியிருப்போம்? எனவே, திருமணத்தின் மூலம்தான் சட்ட ரீதியிலான மனித இனத்தின் இருப்பு தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது.
ÔÔமனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சி (நடந்து)கொள்ளுங்கள். அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்ÕÕ (அல்குர்ஆன், 4:1) எனும் இறைவசனம் இதையே தெளிவுபடுத்துகிறது.
இதையே மற்றொரு வசனம், ÔÔஅல்லாஹ் உங்களி(ன் இனத்தி)லிருந்தே உங்களுக்குத் துணைகளை ஏற்படுத்தியுள்ளான். உங்கள் துணைகள் மூலம் உங்களுக்குப் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் ஏற்படுத்தியுள்ளான்ÕÕ (அல்குர்ஆன், 16:72) எனக் குறிப்பிடுகிறது.
ஆ. குடும்பப் பாரம்பரியம் காக்கப்படுவதும் உறவுகள் உருவாவதும்
ஒருவரின் குடும்பமும் அதில் அவரது உறவு முறையும் பாரம்பரியமும் அறியப்படுவதற்குத் திருமணமே அடிப்படையாக உள்ளது.
நான் இந்தக் குடும்பத்தினன்; அவர் அந்தக் குடும்பத்தினர் என்பது முறையான திருமண உறவின் மூலம் பிறக்கும்போதே நிர்ணயிக்க இயலும். மணமுடிக்காமல் வேறுவகை உறவுகளில் பிறக்கின்ற குழந்தைகள் சமூகத்தில் மதிப்பிழந்து ஒதுக்கப்படுகின்ற அபாயம் உள்ளது. (கீப்பின் பெண் பிள்ளையை பெண் கேட்கவோ கீப்பின் ஆண்பிள்ளைக்குப் பெண் கொடுக்கவோ மாட்டார்கள்.)
அவ்வாறே தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood), சகோதர உணர்வு (Brotherhood) ஆகியவை உருவாக திருமணமே வழி செய்கிறது. இந்த உணர்வுகளும் உறவுகளும் இல்லாத வாழ்க்கை பட்ட மரம் போன்று வெறுமையானது.
இ. பண்பியல் வீழ்ச்சியிலிருந்து சமூகம் பாதுகாக்கப்படல்
உலகம் உள்ளளவும் மனித இனம் நீடித்து நிலைப்பதற்கு இறைவன் வகுத்த நியதிகளில், பாலுணர்வை மனிதனுக்குள் விதைத்ததும் ஒரு நியதியாகும். மனித இனத்தின் இயற்கையான உணர்ச்சிகளில் பாலுணர்ச்சியே மிகவும் வீரியமானது. பாலுணர்வை அடக்குவது சாத்தியமில்லை. அவ்வாறு அடக்குவோர் மறைவிலாவது தவறு செய்யாமல் இருப்பது மிகவும் அரிது. (எங்கள் தேசத்து இனிய துறவிகள் வெளியிலே காவியைக் கட்டிக்கொள்கிறார்கள். புத்தம் சரணம் முத்தம் தரணும்) அல்லது அவர் ஆண்மை அற்றவராக இருப்பர்.
பாலுணர்வு குற்றமானது அல்ல. அதனைப் பயன்படுத்தும் விதத்திலேயே குற்றம் உள்ளது. பாலுணர்வை முறையான வழியில் தீர்க்க முயலும்போது அதுவே நலம் பயக்கிறது. அந்த உணர்வுக்கு, அனுமதிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் ஒரு கௌரவமான வடிகால் கிடைக்கிறது. எனவே, ஒவ்வொரு தனிமனிதரும் திருமணத்தின் மூலம் சிறப்புப் பெறுகின்றனர். சமூகம் தூய்மையாகவும் பண்பாடு மிக்கதாகவும் அமைகிறது.
பண்பியல் ரீதியில் திருமணம் ஏற்படுத்துகிற நன்மை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், ÔÔஇளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்தச் சக்தி பெற்றவர் மணமுடித்துக்கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பொழுக்கம் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில், நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்ÕÕ என்று கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் - 1905, 5065, 5066)
ஒருமுறை உமர் (ரலி) அவர்கள், மணமுடிக்க மறுப்பு தெரிவித்த அபுஸ் ஸவாயித் என்பாரைப் பார்த்து, ÔÔமணமுடிப்பதற்கு உமக்குத் தடையாக இருப்பது பலவீனம் (இயலாமை) அல்லது பாவம் (கற்பொழுக்கம் பேணாமை) ஆகும்ÕÕ என்று குறிப்பிட்டார்கள்.
(நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா - 16158)
இதையே வேறொரு வார்த்தையில் வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும்போது, ÔÔ(உரிய பருவம் வந்த பின்பும்) திருமணம் முடிக்காதவர் வெட்டவெளியில் நிற்கும் ஒற்றை மரம் போன்றவர். அந்த மரத்தைக் காற்று அந்தப் பக்கமும் சாய்க்கும்; இந்தப் பக்கமும் சாய்க்கும்ÕÕ என்று தெரிவித்தார்கள்.
(நூல்: முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக்)
ஈ. குடும்ப உருவாக்கம்
இஸ்லாம் என்பது குடும்பக் கட்டமைப்போடு தொடர்புடைய ஒரு சமயம் (Family Oriented Religion) ஆகும். இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பத்திற்குப் பிரதான இடம் உண்டு. சர்வதேசச் சமூகக் கட்டமைப்பை முதன்மை இலக்காகக் கொண்ட இஸ்லாம், அதற்குக் குடும்ப அமைப்பையே அடிப்படை அலகாகக் கருதுகிறது.
ஏனெனில், சமூகம் என்பது பல்வேறு குடும்பங்களின் தொகுப்பு. சமூக விருட்சத்தின் தொடக்க வித்து ஒரு குடும்பமே. சமூகம் ஒரு பெரிய குடும்பம் (large Family) என்றால், குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) ஆகும். அந்தக் குடும்ப உருவாக்கத்திற்குத் திருமணமே அடிப்படையாகும்.
ஆக, திருமணம் என்பது மனிதனின் இயற்கைத் தேட்டத்திற்கு வடிகாலாகும். அதன் மூலம் மனிதன் தூய்மையான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மனித இனப்பெருக்கத்திற்கும், ஆண், பெண் இருவரின் அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் திருமணம் வழிவகுக்கும்.
நபிமார்களின் அழுத்தமான சுன்னத்
வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் நோக்கமும் ஏற்பட திருமணம் ஒரு காரணமாக அமைகிறது. மனித இதயங்களில் முகிழ்க்கும் அன்பு, பாசம், நேசம், பரிவு ஆகிய இயல்பான உணர்வுகளுக்குத் திருமணமே சிறந்த வடிகால். அத்துடன் அது நபிமார்களின் வழிமுறையும் நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ‘சுன்னாÕவும் (நபிவழி) ஆகும்.
இதனாலேயே நபித்தோழர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ÔÔஎனது ஆயுளில் எஞ்சியிருப்பவை பத்து நாட்கள்தான் என்றாலும், நான் மணமுடித்துக்கொள்ளவே விரும்புவேன். ஏனெனில், நான் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது பிரம்மச்சாரியாக இருக்கலாகாதுÕÕ எனக் கூறினார்கள்.
(நூல்: இஹ்யாஉ உலூமித்தீன், முஸன்னஃப் இப்னு அபீஷைபா - 16160)
நபித்தோழர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் இரண்டு மனைவியர் காலரா நோய்க்குப் பலியாகி உயிரிழந்தனர். அது காலரா வியாதியால் உயிரிழப்பு அதிகமாக நேர்ந்த ஒரு காலக்கட்டம். ஏற்கெனவே, காலரா வியாதியில் இரு மனைவியரையும் பறிகொடுத்துவிட்டுப் பட்டமரமாக நின்றிருந்த முஆத் (ரலி) அவர்களையும் காலரா நோய் தாக்கியது.
ஆட்கொல்லி நோய்க்கு ஆளான அந்தத் தருணத்திலும் முஆத் (ரலி) அவர்கள், ÔÔஎனக்கு மணமுடித்துவையுங்கள். நான் அல்லாஹ்வைப் பிரம்மச்சாரியாகச் சந்திக்க விரும்பவில்லைÕÕ என்று கூறினார்கள்.
(நூல்: இஹ்யாஉ உலூமித்தீன், முஸன்னஃப் இப்னு அபீஷைபா - 16157)
கண்பார்வையற்ற நபித்தோழர் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள், ÔÔஎனக்கு மணமுடித்துவையுங்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது பிரம்மச்சாரியாக இருக்கலாகாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்ÕÕ என்று கூறினார்கள்.
(நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா - 16156)