வகுப்பறையே வாழ்க்கையாக...
சா.
யூசுப் சித்தீக் மிஸ்பாஹி, M.A., M.Phil.,
தமிழகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் பேராசிரியராகப் பணி புரிந்து தொண்ணூறுகளில் சில ஆண்டுகள் அதன் முதல்வராகவும் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி பல்லாயிரக் கணக்கான மார்க்க அறிஞர்களை உருவாக்கிச் சாதனை புரிந்த முன்மாதிரி ஆலிம் பெருந்தகை ஒருவரின் ஆசிரியப் பணி குறித்த கட்டுரை இது.
அன்னார் இன்றைய பிரபலமான மார்க்க அறிஞர்கள் பலரின் ஆசிரியர் என்பது மட்டுமல்ல. இன்றைய மார்க்க அறிஞர்கள் அனைவரும் அவர்களின் மாணவர்கள் அல்லது மாணவர்களின் மாணவர்கள் அல்லது மாணவர்களின் மாணவர்களின் மாணவர்கள்... ஆவர். அன்னாரைப் பற்றிய அறிமுகம் நமக்கும் வேண்டும். மார்க்க அறிஞர்கள் பற்றிய பதிவு நம்மிடம் அறவே இல்லை. எதிர்காலப் பதிவுக்கு ஒரு சோற்று பதமாக அமையலாம். அடிப்படையில் இதுவொரு நூலுக்கான மதிப்பாய்வுரை ஆகும்.
மௌலானா, கமாலுத்தீன் ஃபாஸில் பாகவி ஹள்ரத் பெருந்தகை, ரஹ்மத் பதிப்பகத்தின் ஸஹீஹ் முஸ்லிம் வெளியீட்டு விழாவில் நடுவில் நின்று நூலை வெளியிட்டுச் சிறப்பிக்கிறார்கள். |
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த பேரறிஞர், வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் கமாலுத்தீன் ஃபாஸில் பாகவி அவர்களின் வாழ்க்கை வரலாறு “வாழ்க்கை ஒரு வகுப்பறை“ எனும் பெயரில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.
இதைத் தொகுத்து வெளியிடும் பயனுள்ள பணியை “லஜ்னத்துல்
இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கமம்“ (லிபாஸ்) செய்துள்ளது. முன்னோரின் நடைமுறை அடுத்த
தலைமுறையினருக்குப் பாடம் எனும் அடிப்படையில், இந்நூலை யார் படித்தாலும் அவருக்கு
இதில் ஒரு பாடம் இல்லாமலில்லை. அதிலும் குறிப்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்
சமுதாயத்திற்கு இந்நூல் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம்.
கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் தமது வாழ்நாளில் அரை நூற்றாண்டுக் காலத்தைப்
போதனைப் பணிக்காகவே செலவிட்டுள்ளார்கள். ஆரம்பம் முதல் கடைசிவரை அந்தப் பணி
நீங்கலாக வேறெதையும் அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நல்ல ஆசிரியர் எனும்
அடைமொழிக்கு கமாலுத்தீன் ஹஜ்ரத் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை இந்த நூலை
வாசிக்கும் எவரும் எளிதில் உணரலாம்.
நல்ல ஆசிரியர் என்று யாரைச் சொல்லலாம்? அவரிடம் இருக்க வேண்டிய அருங்குணங்கள்
யாவை? என்பது மிக முக்கியமான கேள்வி.
முதலாவதாக, மாணவர்கள் நலனுக்காகப் பாடுபடுபவர் யாரோ அவரே நல்ல ஆசிரியர்.
வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியிலும் மாணவர்களின் நலன் சார்ந்த பிரக்ஞையும்
அதற்காகப் போராடும் பண்பும் மிகவும் அவசியம். தாம் எடுக்கும் எந்தவொரு முடிவும்
மாணவர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் என்பதை விழிப்புடன் அவதானித்து, அவர்களின்
உயர்வுக்குச் சாதகமான முடிவுகளை மட்டுமே எடுக்கும் திறனாய்வுச் சிந்தனை வேண்டும்.
இயல்பிலேயே தன்னலமற்றவராகவும் மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்குபவராகவும் இருக்க
வேண்டும்.
இரண்டாவது, மாணவர்களை மதிக்கும் பண்பு வேண்டும். நல்ல ஆசிரியர் எப்போதுமே
தம்முடைய மாணவர்களை மதிப்பார். மாணவர்களிடம் இருக்கும் திறமைகளையும்
செயலூக்கங்களையும் மனம் திறந்து பாராட்டுவார். அதன் மூலம் மாணவர்களின் வெற்றிக்கு
உந்து சக்தியாகத் திகழ்வார்.
மூன்றாவது, ஒரு நல்ல ஆசிரியர் தாம் தொடர்ந்து கற்பவராக நீடிக்க வேண்டும்.
பொதுவாக, தம்மைச் சுற்றி நடைபெறும் துறைகளில் ஓரளவு அறிவு ஞானம் பெறுவதற்கு முனைய
வேண்டும். தமது துறை சார்ந்த நூல்களில் புதிய வரவுகளையும் சேர்த்து வாசித்து
காலத்துக்கேற்ற வகையில் தம்மைப் புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும்.
நான்காவது, மிகவும் அரிதாக மாணவர்களுடன் பிரச்சினை ஏற்படும்போது அதைக் கனிவோடு
அணுகி, மாணவர்கள் தரப்பு நியாயங்களையும் விருப்பு வெறுப்பின்றி உள்வாங்கிக்கொண்டு,
சமயோசிதமான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்ட வேண்டும். எந்த வகையிலும்
மாணவர்களை மட்டம் தட்டவோ உதாசீனம் செய்யவோ கூடாது.
எல்லாவற்றையும்விட, மாணவர்கள் கல்வியைத் திறம்படக் கற்பதற்கு தேவையான
உத்திகளையும் அந்த ஆசிரியர் பின்பற்ற வேண்டும். திறம்படக் கற்றல் (Mastery Learning) என்பது
கற்பித்தல் தொடர்பான ஒரு கோட்பாடு ஆகும். மாணவர்கள் கற்றலுக்கு எந்த அளவு
ஊக்குவிக்கப்பட்டனர் என்பதைப் பொறுத்தும், கல்வி கற்கும் காலங்களில் சிக்கல்
ஏற்படும்போது அந்தச் சிக்கல் தீர எவ்வளவு தூரம் வழிகாட்டப்பட்டனர் என்பதைப்
பொறுத்துமே இந்தக் கோட்பாட்டின் வெற்றி தோல்வி அமையும்.
நல்லாசிரியருக்கான இந்த அருங்குணங்கள் அனைத்திலும் கமாலுத்தீன் ஹஜ்ரத் தனி
முத்திரைப் பதித்தவர்கள் என்பதை இந்தத் திரட்டு ஓரளவுக்கு உணர்த்தி நிற்கிறது.
வகுப்பெடுப்பதையே தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டுச்
செயல்பட்டவர்கள் கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் என்று இந்த நூலில் பலரும்
குறிப்பிட்டுள்ளனர். அதனால்தான் பாகியாத்திலிருந்து வெளியேறும் கட்டம் வந்தபோது ஹஜ்ரத் அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமது எண்ணம் ஈடேறவில்லை என்பதை நினைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள் (பக்கம் 61) எனும்
தகவல் நமது கண்களைக் குளமாக்குகிறது.
ஒன்று மட்டும் நமக்குப் புரியவே இல்லை. வடநாட்டு மத்ரசாக்களில் மிகவும் வயது
முதிர்ந்த மூதறிஞர்கள் முக்கியமான ஒன்றிரண்டு பாடங்களை மட்டும்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே அந்தந்த மத்ரசா நிர்வாகம் வயது முதிர்ந்த
காலத்தில் பணி ஓய்வு பெறும் வயதுக்குப் பின்பும்கூட அவர்களைப் பெருமையோடு பணியில்
வைத்து உரிய மரியாதை அளித்து வருகிறது. அனுபவ அறிவு நிரம்பப் பெற்றுள்ளார்கள்
என்பதுதான் இதற்குக் காரணம். போதனைப் பணிக்குப் படிப்பறிவுடன் பட்டறிவும் அவசியம்.
அத்தகைய மூதறிஞர்களிடம் பாடம் படிக்கும் வாய்ப்புக்காவே நமது தமிழகம் உட்பட
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் சென்று படிக்கின்றனர் என்று
கேள்விப்படுகிறோம்.
அதே தரமிக்கவர்கள்தான் கமாலுத்தீன் ஹஜ்ரத்தும். அப்படியிருக்கையில் வடநாட்டுப்
பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் பாகியாத் நிர்வாகம் கமாலுத்தீன் ஹஜ்ரத்
அவர்களை, அவர்களது விருப்பத்திற்கு மாறாகப் பணி ஓய்வு பெறவைத்தது ஏன்? அதற்கு
யார் அல்லது எது காரணம்? என்பது யாருக்கும் புரியவில்லை.
இது அவர்களுடைய
மாணவர்களிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக ஆலிம் சமூகத்திடமும் மிகப் பெரும் வருத்தத்தை
ஏற்படுத்தியது. அந்த மனக் காயம் இன்றளவும் ஆறவில்லை என்பதுதான் எதார்த்தம்.
தமிழகத்தின் தாய்க் கல்லூரியாக மதிக்கப்படுகின்ற பாகியாத்தில் தமிழ் மாணவர்களின்
எண்ணிக்கை அருகிவருவதுகூட இதன் பக்கவிளைவாகவே படுகிறது.
கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் ஆளுமை, அறிவு, எளிமை உள்ளிட்டவற்றை
உணர்ந்துகொள்வதற்கு இந்நூலில் தகவல்கள் உள்ளன. “மானிடராய் பிறப்பதரிது“ என்பதைப்
போன்று மானிடராய் வாழ்வதும் அரிதாகிப்போன இக்காலத்தில், உன்னதமான ஒரு தகுதியை
அடைந்த பிறகும் மனிதராக - எளிமையாக வாழ்ந்து
காட்டியது நமக்கெல்லாம் படிப்பினையாகும்.
1991ஆம் ஆண்டில் அண்ணல் அஃலா ஹஜ்ரத் நினைவு விழாவில் பங்கு கொள்ள பாகியாத் சென்றிருந்தேன். அப்போது நான் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன். நான் பாகியாத்தில் தங்கியிருந்த அந்த ஓரிரு நாட்களில் அப்போது முதல்வர் பொறுப்பு
வகித்துவந்த கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் ஈர நெஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
பாகியாத்தில் தொடக்க நிலை வகுப்பு மாணவர் ஒருவர் அன்றைய தினம் ஃபஜ்ர் தொழுகைக்கு ஆப்சண்ட். அதனால் காலை உணவுக்கான டோக்கன் அவருக்குச்
சட்டப்படி மறுக்கப்பட்டது. ஆனாலும் அந்த மாணவர் ஒரு டோக்கன் கொடுத்து காலை உணவு உண்டுவிட்டார் என்று கமாலுத்தீன் ஹஜ்ரத்திடம் புகார் வந்தது.
சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து கமாலுத்தீன் ஹஜ்ரத் விசாரணை செய்தார்கள். ஃபஜ்ர் தொழுகையில் கலந்துகொள்ளத் தவறியதற்காக டோக்கனை இழந்த உனக்கு இந்த டோக்கன் எவ்வாறு கிடைத்த்து? என்று கேட்டார்கள். அந்த மாணவர், “பாடநூலில் பொறிக்கப்பட்டிருந்த மதரசாவின் முத்திரையைப் பிரித்தெடுத்து அதற்குத் தகுந்தவாறு அட்டையை வெட்டி
அதில் ஒட்டி டோக்கன் தயார் செய்தேன் என்று தாம்
செய்த குற்றத்தை ஏற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். (மதரசா முத்திரை பதிக்கப்பட்ட அட்டைதான் டோக்கனாக அன்று
நடைமுறையில் இருந்த்து.)
இது போன்ற குறும்புத்தனம் எவருக்கும் எரிச்சலை வரவழைக்கும். அந்த வகையில் அந்த மாணவரை ஹஜ்ரத் அவர்கள் கண்டிக்கத் தவறவில்லை. அதே
நேரத்தில் அவர் விஷயத்தில் கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாகவும் இருந்தது. அவரது பசியுணர்வை நினைத்து அவர்மீது கழிவிரக்கம் கொண்ட ஹஜ்ரத் அவர்கள், போலியாக டோக்கன் தயாரிக்க அவர் மூளையில் உதித்த சிந்தனையை நினைத்து வியப்புத் தெரிவித்தார்கள். மற்ற மாணவர்களிடமும் அதை வியப்போடு சொல்லிக்காட்ட அவர்கள் தயங்கவில்லை.
உள்ளபடியே ஈர நெஞ்சமும் பரந்த மனப்பாங்கும் திறமையைப் போற்றும் அருங்குணமும் உள்ளவருக்கு மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில் கமாலுத்தீன் ஹஜ்ரத் மனிதத் தன்மையின் சிகரமாகத் திகழ்ந்தார்கள்.
விரல் விட்டு எண்ணிவிடுகின்ற அளவுக்குச் சில தடவை மட்டுமே சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற என் போன்றவர்களிடமே இது போன்ற தகவல் இருக்கும்போது பல காலம் மண்டியிட்டுப் பயிலும் அரிய வாய்ப்புப் பெற்ற அவர்களின் நேரடி மாணவர்களிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கத்தான்
வேண்டும். அவையும் சேர்த்து
இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தால் ஹஜ்ரத் அவர்களின் ஆளுமை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் உணரப்பட
வாய்ப்புண்டு.
ஹஜ்ரத் அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல் வைத்திருப்பவர்கள் அவற்றை இங்கே தாராளமாகப் பின்னூட்டமிடலாம். இதுவொரு நிறைவான வரலாற்றுப் பதிவாக அமைய உங்கள் பங்களிப்பை நல்குங்கள். நிறைகுறைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அது எதிர்காலக் கூர்மைப்படுத்தலுக்கு வகை செய்யும்.