திங்கள், 9 அக்டோபர், 2017

முன்மாதிரி முஸ்லிம்கள் - 5


பராஉ பின் மாலிக் அல்அன்ஸாரீ (ரலி)


அரபியில்: டாக்டர், அப்துர் ரஹ்மான் ரஉஃபத் அல்பாஷா
தமிழில்: சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
இஸ்லாமிய இராணுவத்தின் எந்தவொரு படைக்கும் பராஉ (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்க வேண்டாம். தமது துடுத்தனமான துணிச்சல் காரணமாக தமது படையை அவர் மாய்த்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன். (ஆட்சித் தலைவர் உமர் (ரலி) அவர்கள் ஆளுநர்களுக்கு அனுப்பிய அரசாணை)
அவர் பரட்டைத் தலையோடும் புழுதி படிந்த மேனியோடும் இருந்தார். மெல்லிய தேகம். எலும்பும் தோலுமான ஓர் உருவம். அவரை ஏறெடுத்துப் பார்ப்பதானால், பார்ப்பவரின் கண்கள் சங்கடப்படும். உடனே பார்வை அவரைவிட்டு வேறு பக்கம் திரும்பிவிடும். அந்த அளவிற்குத்தான் அவரது புறத்தோற்றம் இருந்தது.
ஆயினும், அவர், தன்னந்தனியாக தாம் மட்டுமே ஈடுபட்ட எதிரிகளுடனான களமோதலில் நூறு பேரை வீழ்த்தியுள்ளார். போர்க்களத்தின் ஒட்டுமொத்த மோதலில் மற்ற போராளிகளுடன் இணைந்து அவர் வீழ்த்திய எதிரிகளின் எண்ணிக்கையோ எண்ணிடலங்காதது.

அவரது துணிவும் தைரியமும் துடுக்குத்தனமானது. பின்விளைவுகளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத அசாத்தியமான துணிச்சல்காரர் அவர். அதனாலேயே, ‘’இஸ்லாமிய இராணுவத்தின் எந்தவொரு படைக்கும் அவரைத் தளபதியாக நியமிக்க வேண்டாம்; ஏனெனில், அவர் தமது துடுக்குத்தனமான துணிச்சலின் காரணத்தால் தம் வசமுள்ள படையினரை மாய்த்துவிடக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்’’ என இஸ்லாமியப் பிரதேசங்களின் ஆளுநர்களுக்கு ஆட்சித் தலைவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் ஆணை பிறப்பித்துக் கடிதம் எழுதினார்கள்.

அவர்தான் பராஉ பின் மாலிக் அல்அன்ஸாரீ (ரலி) ஆவார்கள். அவர் நபி (ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். அவரது வீரதீரச் செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வதானால், அதற்கு இந்தக் கட்டுரை இடம் தராது. அவ்வளவு நீண்ட நெடிய வரலாறு அவற்றுக்கு உண்டு. இருப்பினும் அவரது அசாத்திய துணிச்சலுக்கு, ஒரு சோற்றுப் பதம் போல் பின்வரும் வரலாற்றுக் குறிப்பைக் காணலாம்.

மதம் மாறித் துரோகம் இழைத்தோர்

அவரின் வீரதீர வரலாறு, நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்த ஆரம்பத் தருணங்களிலிருந்தே தொடங்குகிறது. அப்போது பல்வேறு அரபுக் குலங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தன. ஒரு காலத்தில் அவர்கள் அனைவரும் அதே அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாக வந்தவர்கள்தான்.  ஆனால், இப்போதோ, மக்கா, மதீனா, தாயிஃப் ஆகிய ஊர்வாசிகளையும் மற்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாருடைய உள்ளங்களை அல்லாஹ் இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்தியிருந்தானோ அத்தகைய சிற்சில குழுக்களையும் தவிர வேறு யாரும் இஸ்லாத்தில் நிலைக்கவில்லை. அந்த அளவுக்கு மதமாற்றத் துரோகம் பரவலாக இருந்தது.

கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் பேரழிவு தரும் இந்தக் கண்மூடித்தனமான அதர்மத்திற்கு எதிராக மலை போன்று திடமான முடிவை எடுத்தார்கள். முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிலிருந்து பதினொரு படைகளைத் தயார் செய்தார்கள். ஒவ்வொரு படையின் தளபதிக்கும் ஒரு கொடி வீதம் பதினொரு கொடிகளைக் கட்டிக்கொடுத்தார்கள். பின்னர்  அந்தப் படையினரை அரேபிய தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்கள். இஸ்லாத்திலிருந்து வெளியேறியோரை நல்வழிக்கு மீட்க வேண்டும் என்பதும் துரோகம் புரிந்தவர்களை ஆயுத முனையில் வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுமே இதற்குக் காரணம்.

அவ்வாறு மதம் மாறித் துரோகம் இழைத்தவர்களில் பனூ ஹனீஃபா குலத்தாரும் அடங்குவர். அவர்கள், தன்னை நபியென்று வாதிட்ட மகா பொய்யன் முசைலிமாவின் ஆட்களாவர். உள்ளதிலேயே அவர்கள்தான் அதிகமான ஆட்பலமும் இராணுவ வலிமையும் பெற்றிருந்தனர். முசைலிமாவுக்கு ஆதரவாக அவனுடைய சமூகத்திலிருந்தும் நட்புறவு ஒப்பந்தக்காரர்களிலிருந்தும் நாற்பதாயிரம் பேர் ஒன்றுதிரண்டனர். அவர்கள் அனைவரும் கடுமையான போர்வீரர்களாக இருந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர், முசைலிமாவுக்குப் பின்னால் அணிவகுத்தது இனவெறியின் அடிப்படையில்தானே தவிர, அவன்மீதான நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், அவர்களில் சிலர், ÔÔநிச்சயமாக முசைலிமா மாபெரும் பொய்யன்; முஹம்மத் தான் உண்மையாளர் என்று நான் உறுதிபடக் கூறுகிறேன். ஆயினும், முளர் குலத்து உண்மையாளரை (முஹம்மதை)விட ரபீஆ குலத்துப் பொய்யனையே (அதாவது எங்கள் குலத்து முசைலிமாவையே) எங்களுக்கு மிகவும் பிடிக்கும்ÕÕ என்று கூறினர்.

தொடக்கத்தில் தோல்வியைச் சந்தித்த முஸ்லிம்கள்

முசைலிமாவை ஒடுக்குவதற்காக நபித்தோழர் இக்ரிமா பின் அபீஜஹ்ல் (ரலி) அவர்கள் தலைமையில் முதன்முதலில் ஒரு படை புறப்பட்டுச் சென்றது. ஆனால், அந்தப் படையை முசைலிமா தோற்கடித்து, புறமுதுகிட்டு ஓடச்செய்தான். எனவே, கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் நபித்தோழர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் இரண்டாவது படையை அனுப்பிவைத்தார்கள். அந்தப் படையில் முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிலுள்ள முக்கியமான நபித்தோழர்களை இடம்பெறச் செய்திருந்தார்கள். அந்த நபித்தோழர்களின் முன்னணியில் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களும் துணிச்சல் மிக்க மற்ற முஸ்லிம்கள் சிலரும் இடம்பெற்றிருந்தனர்.

நஜ்த் பகுதியிலுள்ள யமாமா எனும் ஊரில் இரு படைகளும் மோதின. மோதல் தொடங்கி சற்று நேரம்தான் ஆகியிருக்கும். அதற்குள் முசைலிமாவுடைய படையின் கை ஓங்கியது. முஸ்லிம் படையினர் நிலைகுலைந்துபோயினர். தமக்குரிய இடங்களிலிருந்து பின்வாங்கலாயினர். இறுதியில் முசைலிமாவின் ஆட்கள் முஸ்லிம் இராணுவத் தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களின் முகாமைச் சூழ்ந்துகொண்டு அதை அடியோடு பெயர்த்தெடுத்தனர். அதில் தங்கியிருந்த காலித் (ரலி) அவர்களின் துணைவியாரைக் கொல்லப்போகின்ற அளவுக்கு நிலைமை கைமீறிப்போனது. ஆயினும், அவர்களில் ஒருவரே அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்கியதால் நல்வாய்ப்பாக அவர் தப்பித்தார்.

அப்போதுதான் முஸ்லிம்கள் திடீரென நிகழ்ந்துவிட்ட இந்தப் பேரபாயத்தை உணர்ந்தனர். முசைலிமாவுக்கு முன்னால், தாம் வீழ்ந்துவிட்டால் அதற்குப்பின் இஸ்லாம் நிலைப்பதற்கு வழியே இல்லை என்றும் பின்னர் அரேபிய தீபகற்பத்தில் இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை வழிபடுவதற்கு ஆளே இருக்காது என்றும் புரிந்துகொண்டனர்.

தோல்வியைத் தவிர்க்க மாற்று வியூகம்

உடனே தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தம் படையை நோக்கிக் காற்றின் வேகத்தில் விரைந்து வந்தார்கள். அதனை வேறு விதமாக மறுஒழுங்கமைப்பு செய்தார்கள். படையில் இடம்பெற்ற முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளைத் தனித்தனியாகப் பிரித்தார்கள். அவ்வாறே கிராமப் புறத்தாரை இந்த இரு குழுவினரிடமிருந்தும் தனியாக்கினார்கள். ஒவ்வொரு குலத்தாரையும் அந்தந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரின் தலைமையில் ஒரு கொடிக்குக்கீழ் ஒன்றுபடுத்தினார்கள். போர்க்களத்தில் ஒவ்வொரு சாராருக்கும் என்னென்ன சோதனைகள் ஏற்படுகின்றன? முஸ்லிம்கள் எங்கிருந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்? என்றெல்லாம் உடனடியாகத் தெரிய வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும்.

வீரதீரங்களுக்குப் பெயர்போன மதமாற்றப் போர்

பின்னர் அவ்விரு பிரிவினரிடையே உக்கிரமான போர் நடந்தது. போர்க்கள வரலாற்றில் அதற்குமுன் அப்படியொரு போரை முஸ்லிம்கள் சந்தித்ததில்லை. முசைலிமாவின் சமூகத்தார் அமளிகளும் ஓலங்களும் நிறைந்த அந்தக் களங்களில் மலைகளைப் போன்று உறுதியாக நிலைத்திருந்தார்கள். அவர்களிடையே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்துகிற நிலையில் அவர்கள் இல்லை. இந்தப் போரைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் தம்முடைய அதிஅற்புதமான சாகசங்களையும் வீரதீரங்களையும் வெளிப்படுத்தினார்கள். அவை யாவும் ஒன்றுதிரட்டப்பட்டால் அதுவே எழுச்சி மிகுந்த போர்க் காவியமாக இருந்திருக்கும்.

இதோ ஸாபித் பின் கைஸ் (ரலி) என்றொரு நபித்தோழர். யமாமா போர்க்களத்தில் அன்ஸாரிகளின் கொடியைச் சுமந்திருந்தார். அவர் தமக்குத் தாமே வாசனைத் திரவியம் பூசி, பிரேத ஆடையும் (கஃபன்) அணிந்துகொண்டார். தமக்கான அடக்கத்தலத்தைத் தாமே தோண்டி, அதனுள் தமது கணைக்காலின் பாதியளவுக்கு இறங்கி நின்றார். அந்த இடத்திலிருந்து கொஞ்சமும் நகராமல் உறுதியாக நின்றுகொண்டு தமது சமூகத்தின் கொடியைக் காக்க தீரத்துடன் களமாடிக்கொண்டிருந்தார். இறுதியில் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி அவர் வெட்டிய அதே குழியில் விழுந்து உயிர் நீத்தார்.

அவ்வாறே ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) என்றொரு நபித்தோழர். அவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சகோதரர். அவர் உரத்த குரலில் முஸ்லிம்களை நோக்கி, மக்களே! உங்களின் கடைவாய்ப் பற்களைக் இறுக்கமாகக் கடித்துக்கொள்ளுங்கள். எதிரிகள்மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டே முன்னேறிச் செல்லுங்கள். மக்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குமேல் நான் ஒரு வார்த்தைகூடப் பேசப்போவதில்லை. ஒன்று முசைலிமா வீழ்த்தப்பட வேண்டும். அல்லது நான் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும். அப்போது அவனிடம் எனது சான்றைச் சமர்ப்பித்துக்கொள்வேன் என்று அறிவிப்புக் கொடுத்தார். பின்னர் எதிரிகளை நோக்கி மறுபடியும் சென்று தமது போராட்டத்தைத் தீவிரமாகத் தொடர்ந்தார். இறுதியில் அவரும் கொல்லப்பட்டு உயிர் நீத்தார்.

அதைப் போன்றே சாலிம் (ரலி) என்றொரு நபித்தோழர். அபூஹுதைஃபா (ரலி) அவர்களால் விடுதலையளிக்கப்பட்ட முன்னாள் அடியாக இருந்தவர். இவர் முஹாஜிர்களின் கொடியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் தளர்ந்துபோகலாம் அல்லது நிலைகுலைந்துவிடலாம் என்று அவருடைய சமுதாயத்தார் அஞ்சினர். எனவே, அவர்கள் சாலிம் (ரலி) அவர்களிடம், சாலிம் அவர்களே! உமக்கு முன்புறத்திலிருந்தே நாங்கள் எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகிவிடுவோம் என நாங்கள் அஞ்சுகிறோம் என்று கூறினர்.

அதற்கு அவர், எனக்கு முன்புறத்திலிருந்து நீங்கள் தாக்குதலுக்கு ஆளானீர்களாயின் குர்ஆனைச் சுமந்திருப்பவர்களில் நானே மிக மோசமானவன் ஆகிவிடுவேன் என்று கூறினார். பின்னர் அல்லாஹ்வின் விரோதிகள்மீது தைரியமாகத் தொடர்ந்து சராமாரியாகத் தாக்குதல் நடத்தினார். இறுதியில் அவரும் தாக்குதலுக்குப் பலியாகி வீரமரணம் எய்தினார்.

இப்படி எத்தனை எத்தனையோ வீரதீரங்களும் சாகசங்களும் வரலாற்றுப் பதிவில் நிறைந்து காணப்படுகின்றன. இருப்பினும், இந்த அனைவரின் வீரதீரங்களும் சாகசங்களும் மாவீரர் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் வீரதீரங்களுக்கு முன்னால் மிகவும் சாதாரணமானவையே. பின்வரும் நிகழ்ச்சி இதற்குச் சான்றாகும்:

அதிரடி வீரர் பராஉ (ரலி)

யமாமா போர்க்களம் நன்றாகச் சூடேறிக் கொதிப்படைந்திருந்தது. இதைக் கண்ட தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களை நோக்கி, ‘’அன்ஸாரி இளைஞரே! எதிரிகளிடையே ஊடுறுவிச் சென்று ஏதேனும் செய்வீராக’’ என்றார்கள். உடனே பராஉ (ரலி) அவர்கள் தம் சமூகத்தாரை நோக்கித் திரும்பி, ‘’அன்ஸாரிப் பெருமக்களே! நீங்கள் யாரும் மதீனா திரும்புவது குறித்துக் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டாம். இனிமேல் உங்களுக்கு மதீனா கிடையாது. உங்களுக்கு இருப்பதெல்லாம் ஏக இறைவன் அல்லாஹ்வும் பின்னர் சொர்க்கமும்தான்...’’ என்று கூறினார்.

பின்னர் பராஉ (ரலி) அவர்கள், கொடூராமான தாக்குதலில் ஈடுபட்டிருந்த இணைவைப்பாளர்கள்மீது எதிர் தாக்குதல் தொடுத்தார்கள். அன்னாருடன் அன்ஸாரிகளும் தாக்குதலில் இணைந்துகொண்டனர். எதிரிகளின் அணிகளைக் கிழித்துக்கொண்டு அவர்களிடையே ஊடுறுவிய பராஉ (ரலி) அவர்கள், அல்லாஹ்வுடைய பகைவர்களின் பிடரிகளில் வாளைச் செலுத்தினார்கள். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் முசைலிமாவும் அவனுடைய ஆட்களும் நிலைகுலைந்தனர்.

எனவே, அவர்கள் ஓடிப்போய் ஒரு தோட்டத்தில் தஞ்சமடைந்தனர். அந்தத் தோட்டம் வரலாற்றின் பக்கங்களில் Ôமரணத் தோட்டம்Õ (ஹதீகத்துல் மவ்த்) என்று அறியப்படுகிறது. ஏனெனில், அன்றைய தினம் அத்தோட்டத்தில் முசைலிமாவின் படை கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை முன்னிட்டே அதற்கு இப்பெயர் வழங்கப்படலாயிற்று.

மரணத் தோட்டத்தில் மரணத்திற்கு அஞ்சாதவர்

இந்த மரணத் தோட்டம், நாலாபுறங்களிலும் பரந்து விரிந்தது. அதற்கு உயரமான சுற்றுச்சுவர்களும் இருந்தன. எனவே, தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கிய முசைலிமாவும் அவனுடைய படையினரும் ஆயிரக்கணக்கில் அதனுள் நுழைந்து அதன் வாசல்கள் அனைத்தையும் தாழிட்டுக்கொண்டனர். அதன் உயரமான சுவர்களின் உதவியால் பாதுகாப்பாக இருந்துகொண்டு, உள்ளுக்குள்ளிருந்தே முஸ்லிம்கள்மீது அம்பு மழை பொழிந்து தள்ளினர். அம்புகள் ஒவ்வொன்றும் முஸ்லிம்களைத் துளைத்தெடுக்க ஆரம்பித்தன.

இப்படியொரு எதிர்பாராத தாக்குதலால் முஸ்லிம்கள் திணறிப்போனார்கள். அப்போதுதான் துணிச்சல் மிக்க அதிரடி வீரர் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்கள் எதிரிகளை முறியடிக்க யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய வியூகத்தோடு முன்னால் வந்தார்கள். வந்தவர் தமது வியூகத்தை தம் சமூகத்தாரிடம் இப்படி விளக்கினார்:

‘’என் சமூகத்தாரே! நான் ஒரு கேடயத்தில் அமர்ந்துகொள்கிறேன். அந்தக் கேடயத்தை அப்படியே ஈட்டிகள் கொண்டு மேலே தூக்குங்கள். பின்னர் என்னை அந்தத் தோட்டத்தினுள் சரியாக அதன் வாசலுக்கருகே தூக்கி எறிந்துவிடுங்கள். ஒன்று நான் உயிர்த் தியாகியாக வீரமரணம் அடைய வேண்டும். அல்லது உங்களுக்காகத் தோட்டத்தின் வாசல் கதவை நான் திறந்துவிட வேண்டும்’’ என்று கூறினார்.

பின்னர் பராஉ (ரலி) அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஒரு கேடயத்தில் அமர்ந்தார்கள். அன்னார் உடல் மெலிந்தவராகவும் ஒல்லியான தேகம் கொண்டவராகவும் இருந்தார். பல ஈட்டிகள் சேர்ந்து கேடயத்தில் வீற்றிருந்த அவரை மேலே தூக்கி, மரணத் தோட்டத்திற்குள் முசைலிமாவின் படையினருக்கு நடுவே வீசியெறிந்தன. அவர் முசைலிமாவின் படையினர்மீது பேரிடியாக இறங்கினார்.

 மரணத் தோட்டத்தின் வாசலுக்கு முன்னால் நின்றுகொண்டு அவர்கள்மீது விடாமல் தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்தார். அவர்களின் பிடரிகளில் வாளைச் செலுத்தினார். இறுதியில் அவர்களில் பத்துப் பேரைக் கொன்று, வாசல் கதவைத் திறந்து விட்டார். அப்போது அவரது உடலில் அம்பெய்யப்பட்டும் வாளால் தாக்கப்பட்டும் எண்பதுக்கும் அதிகமான காயங்கள் இருந்தன.

வாசல் கதவு திறக்கப்பட்டதும் முஸ்லிம் வீரர்கள் தோட்டத்திற்குள் அதன் வாசல்கள் வழியாகவும் சுவரேறிக் குறித்தும் திடுதிப்பென நுழைந்தனர். உள்ளே உயரமான சுவர்களின் உபயத்தால் பாதுகாப்பு கருதித் தஞ்சமடைந்திருந்த மதம் மாறிய கலகக்காரர்களின் பிடரிகளில் வாட்களைச் செலுத்தினர். இறுதியாக அவர்களில் சுமார் இருபதாயிரம் பேரைக் கொன்றனர். முசைலிமாவையும் விட்டுவிடாமல் அவனையும் தேடிக் கண்டுபிடித்து அடித்து வீழ்த்தினார்கள்.

எல்லாம் முடிந்ததும் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்காக அவர்களது முகாமுக்குத் தூக்கிவரப்பட்டார்கள். அவருக்கருகில் தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) ஒருமாத காலம் தங்கியிருந்து அவரது காயங்களுக்கு மருந்திட்டுச் சிகிச்சை செய்தார்கள். இறுதியில் அன்னாருக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்தான். அன்னாரின் கைங்கர்யத்தாலேயே முஸ்லிம் படையினருக்கு இந்தப் போரில் வெற்றி கைவசமானது.

அடைந்தால் வெற்றி; அன்றேல் வீரமரணம்

மரணத் தோட்டத்தில் அன்றைய தினம் தமக்குக் கைகூடாமல் போன வீரமரணத்தை பராஉ (ரலி) அவர்கள் ஆசையோடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். தமது பெருங்கனவு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலும் தம்முடைய நபியோடு போய்ச்சேர வேண்டும் என்ற அவாவிலும் ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு போர்க்களங்களில் அன்னார் பங்கெடுக்கலானார்கள். இறுதியில் பாரசீக நாட்டில் துஸ்த்தர்’ (shushtar, ஈரான்) நகரம் வெற்றிக்கொள்ளப்பட்ட தினம் வந்தது.

அப்போது பாரசீகர்கள் உயரமான பளிங்குக் கோட்டை ஒன்றினுள் பாதுகாப்பாகப் பதுங்கியிருந்தனர். அவர்களை இஸ்லாமிய இராணுவம், மணிக்கட்டைச் சுற்றிவளைக்கும் கைகாப்பு போன்று சுற்றிவளைத்து முற்றுகையிட்டது. முற்றுகை ஒரு முடிவுக்கு வராமல் நாட்கணக்கில் இழுத்துக்கொண்டே சென்றதால் பாரசீகர்கள் கடுமையான சோதனைகளுக்கும் அவதிகளுக்கும் ஆளாயினர். எனவே, முஸ்லிம்களை அங்கிருந்து விரட்ட ஒரு வியூகம் வகுத்தனர்.

அவர்கள் கோட்டைச் சுவர்களுக்கு மேலிருந்து முஸ்லிம்கள் பக்கமாக இரும்புக் கொக்கிகள் மாட்டப்பட்ட சங்கிலிகளை விடலாயினர். அந்தக் கொக்கிகள் பழுக்கக் காய்ச்சப்பட்டு நெருப்புக் கங்கைப் போன்று கனன்றுகொண்டிருக்கும். அவை முஸ்லிம்கள்மீது படும்போது அவர்களின் உடலைத் துளைத்து அதில் மாட்டிக்கொள்ளும். உடனே கொக்கிகளில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களைப் பாரசீகர்கள் தம்பால் தூக்குவார்கள். அப்போது அந்த முஸ்லிம்களின் உடல், ஒன்று உயிரை இழந்திருக்கும். அல்லது உயிர் ஊசலாடும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும்.

அத்தகைய இரும்புக் கொக்கிகளில் ஒன்று, பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் உடலில் மாட்ட, அவர்கள் அப்படியே தூக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார்கள். இதை பராஉ (ரலி) அவர்கள் பார்த்ததுதான் தாமதம், உடனே கோட்டைச் சுவற்றின் மீது பாய்ந்தேறித் தம் சகோதரர் மாட்டியிருந்த சங்கிலியைப் பலமாகப் பிடித்திழுத்து, அவரது உடலில் மாட்டியிருந்த பழுத்த கொக்கியை அகற்றுவதற்குப் போராடினார்.

அந்த முயற்சியில் அவரது கை கரிந்துபோய் புகைய ஆரம்பித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாத பராஉ (ரலி) அவர்கள் பெரும் பாடுபட்டுத் தம் சகோதரரை அதிலிருந்து விடுவித்துக் காப்பாற்றினார்கள். அதன் பின்னரே கோட்டைச் சுவற்றிலிருந்து அன்னார் கீழே இறங்கினார்கள். அப்போது அன்னாரின் கைகள் சதையை இழந்து வெறும் எலும்பாக மாறியிருந்தன.

ஜீவ மரணப் போராட்டமாக மாறிப்போயிருந்த இந்த துஸ்த்தர்போர்க்களத்தில் வைத்தே தமக்கு வீரமரணத்திற்கான பேறு கிடைக்க வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர் இரு கரமேந்திப் பிரார்த்தித்தார். அன்னாரின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்தான். எனவே, அல்லாஹ்வைத் தரிசிக்கப் போகிறோம் என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கில் அவர் இறுதிவரை அந்தக் களத்தில் நின்று கடுமையாகப் போராடி வீரமரணமடைந்து உயிர்த் தியாகியானார்.


நபித்தோழர் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் முகத்தை அல்லாஹ் சொர்க்கத்தில் மலரச் செய்வானாக! நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுடனான சகவாசத்தால் அவருக்குக் கண்குளிர்ச்சியைத் தருவானாக! அவரைத் தானும் தன்னை அவரும் உவந்துகொள்ளும் பேற்றை அல்லாஹ் வழங்குவானாக!

வியாழன், 13 மார்ச், 2014

முன்மாதிரி முஸ்லிம்கள் - 4
உமைர் பின் வஹ்ப் (ரலி)

அரபியில்: டாக்டர், அப்துர் ரஹ்மான் ரஉஃபத் அல்பாஷா
தமிழில்: சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்கள், நான் பெற்றெடுத்த பிள்ளைகளைவிட எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார். (உமர் - ரலி)
பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு எதிராகக் களம் கண்டு படுதோல்வியுற்று, உயிர் தப்பி மக்காவுக்கு ஓடிவந்த குறைஷியரில் உமைர் பின் வஹ்பும் ஒருவர். போருக்குப் போனபோது தந்தையும் மகனுமாகச் சேர்ந்து போனவர்கள், உயிர் பிழைத்து ஓடிவரும்போது அவரின் புதல்வர் வஹ்ப் முஸ்லிம்களின் கையில் கைதியாகப் பிடிபட்டுவிட, உமைர் மட்டும் ஒற்றையாக ஓடிவந்துவிட்டார்.

உமைருக்கு உள்ளூர ஓர் அச்சம். எங்கே தான் செய்த குற்றங்களுக்காக முஸ்லிம்கள் தன் பிள்ளையைப் பழிதீர்த்துவிடுவார்களோ, அவனைக் கடுமையாகத் தண்டித்துவிடுவார்களோ என்பதே அந்த அச்சம். ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும்போது அன்னாருக்கும் அன்னாரின் தோழர்களுக்கும் உமைர் இழைத்த இன்னல்களும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

ஸஃப்வானைச் சந்தித்த உமைர்

ஒருநாள் முற்பகல் நேரத்தில் உமைர், கஅபாவை தவாஃப் சுற்றுவதற்காகவும் அங்கிருந்த சிலைகளிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காகவும் வந்தார். அப்போது கஅபாவின் அரைவட்டச் சுவருக்கு (ஹிஜ்ரு இஸ்மாயீல்) அருகில் ஸஃப்வான் பின் உமய்யா அமர்ந்திருந்தார்.
உமைர், ஸஃப்வானுக்கு அருகில் வந்து, ‘’குறைஷிக் குலத் தலைவரே! உமக்குக் காலை வந்தனம்!’’ என்று முகமன் கூறினார். இதைக் கேட்ட ஸஃப்வான், ‘’அபூவஹ்ப்! உமக்கும் காலை வந்தனம்; அருகில் வந்து அமரும்; சற்று நேரம் பேசிக்கொண்டிருக்கலாம்; மனம்விட்டுப் பேசும்போதுதான் கவலைகளால் கனத்துப்போன பொழுதுகளைத் தள்ள முடிகிறது’’ என்றார்.

பின்னர் ஸஃப்வானும் உமைரும் நேருக்குநேர் அமர்ந்து பத்ர் போர் பற்றியும் அதில் ஏற்பட்ட தாங்கமுடியாத சோகம் பற்றியும் இழப்புகள் பற்றியும் உரையாடலாயினர்.

தம் ஆட்களில் யாரெல்லாம் முஸ்லிம்களிடம் கைதிகளாகச் சிக்கிக்கொண்டவர்கள் என்று கணக்கெடுத்தனர். முஸ்லிம்களின் வாட்களுக்குப் பலியாகி பத்ர் பாழுங்கிணற்றில் வீசியெறியப்பட்ட குறைஷிய பிரமுகர்களை நினைத்து வேதனையை வெளிப்படுத்தினர்.

அப்போது ஸஃப்வான் சரியான தருணம் பார்த்து, ‘’அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தப் பெரிய மனிதர்களெல்லாம் போய்ச் சேர்ந்தபின் வாழ்வில் நமக்கேது நன்மை’’ என்று பெருமூச்செறிந்தார். உமைர், ‘’அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் சொன்னது முற்றிலும் உண்மை’’ என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாயிருந்தார்.

பின்னர், ‘’கஅபாவின் இறைவன் மீதாணையாக! நான் அடைக்க வேண்டிய கடன்கள் சில உள்ளன. அவற்றுக்கான பொருள்வசதி என்னிடம் இல்லை. என்னை நம்பி ஒரு குடும்பம் உள்ளது. அவர்கள் எனக்குப் பிறகு நாதியற்றுப்போய்விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். இந்தப் பிரச்சினைகளெல்லாம் இல்லையாயின், முஹம்மதிடம் சென்று அவரைக் கொல்வேன். அவரது விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன். அவரின் தீமைக்கு முடிவு கட்டுவேன்’’ என்றும் உமைர் கூறினார்.

பின்னர் தொடர்ந்து அவரே மெல்லிய குரலில், ‘’என் மகன் வஹ்ப், யஸ்ரிபில் முஸ்லிம்களிடம் கைதியாகச் சிக்கியிருப்பதில் நமக்கொரு லாபம் உள்ளது. நான் யஸ்ரிபுக்குச் சென்றால், யாருக்கும் அது குறித்துச் சந்தேகங்கள் எழ வாய்ப்பில்லை’’ என்றும் கூறினார்.

சதித்திட்டம் தீட்டிய ஸஃப்வானும் உமைரும்

உமைரின் இந்த வார்த்தைகள் ஸஃப்வானுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாகத் தெரிந்தது. இப்படியொரு அரிய வாய்ப்பைத் தவறவிட ஸஃப்வானுக்கு மனமில்லை. எனவே, அவர் உமைரிடம், ‘’உமைரே! உமது மொத்த கடனுக்கும் நான் பொறுப்பு. எவ்வளவு தொகையானாலும் அடைத்துவிடுகின்றேன். இனி உமது குடும்பத்தை என் குடும்பத்தோடு சேர்த்துப் பராமரித்துக்கொள்கிறேன். உயிருள்ளவரை அவர்களை நான் காப்பாற்றுகிறேன். நம்மிரு குடும்பங்களின் வளமான வாழ்வுக்குத் தேவையான வசதிகள் யாவும் என்னிடம் கொட்டிக் கிடக்கின்றன’’ என்று கூறினார்.

அதற்கு உமைர், ‘’அவ்வாறாயின், நாம் பேசிக்கொண்ட இந்தச் செய்தி நமக்குள் மட்டுமே இரகசியமாக இருக்கட்டும். யாரிடமும் இதைத் தெரிவித்துவிட வேண்டாம்’’ என்றார். ஸஃப்வான், ‘’சரி; அப்படியே செய்கிறேன்’’ என்று ஏற்றுக்கொண்டார்.

மதீனா பயணத்தின் முன்னேற்பாடு

பின்னர் உமைர், புனித கஅபா அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலிலிருந்து எழுந்தார். அவரது உள்ளத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிரான காழ்ப்புத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தமது திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான முன்னேற்பாடுகளில் மும்முரமாக இறங்கலானார்.

மதீனாவை நோக்கிய தமது பயணம் குறித்து முஸ்லிம்களுக்குச் சந்தேகம் ஏதும் எழலாம் என்ற அச்சம் அவருக்கு வரவில்லை. ஏனெனில், அப்போது பத்ர் போர்க்கைதிகளின் உறவுக்கார குறைஷியர்கள் தம் கைதிகளுக்காகப் பிணைத்தொகை செலுத்தி, அவர்களை மீட்டுச் செல்லும் பின்னணியில் மதீனாவுக்கு வேகவேகமாக வருவதும் போவதுமாக இருந்துவந்தனர்.

உமைர் தமது வாளை நன்கு கூர்தீட்டி நஞ்சு தடவித் தருமாறு கேட்டார். பின்னர் தமது வாகனப் பிராணியைக் கொண்டுவரச் சொன்னார். அவ்வாறே வாகனம் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. நஞ்சு தடவிய அந்த வாளை எடுத்துக்கொண்டு வாகனத்தின் மீது ஏறினார்.

மதீனாவில் உமைர் பின் வஹ்ப்

உள்ளம் முழுக்க வெறுப்பும் வஞ்சகமும் நிறைந்திருக்க உமைர் மதீனாவை நோக்கி வாகனத்தைச் செலுத்தினார். மதீனா போய்ச் சேர்ந்தபின் நபியவர்களை மனதில் வைத்து பள்ளிவாசலை நோக்கிப் போனார். பள்ளிவாசலின் தலைவாசலுக்கு அருகில் வந்ததும் தமது ஒட்டகத்தைத் தரையில் படுக்கவைத்து அதிலிருந்து இறங்கிக்கொண்டார்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்கள் சிலருடன் மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலின் தலைவாசலுக்கு அருகில் அமர்ந்து, பத்ர் போர் பற்றியும் அதன் பின்விளைவாக எதிரணியில் கொல்லப்பட்ட மற்றும் சிறைபிடிக்கப்பட்ட குறைஷிய பிரமுகர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.

முஹாஜிர்கள் மற்றும் அன்ஸார்கள் ஆகிய இரு தரப்பிலும் இருந்த வீராதிவீரர்களின் சாகசச் செயல்களைத் திரும்பத் திரும்ப நினைவுகூர்ந்தவாறு இருந்தனர்.

தம் அணியினருக்கு அல்லாஹ் வழங்கிச் சிறப்பித்த வெற்றியையும் எதிரணிக்கு அல்லாஹ் ஏற்படுத்திய உயிர்ச்சேதம், இழப்பு, தோல்வி ஆகியவற்றையும் நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்ந்த வண்ணம் இருந்தனர்.

உமைரைக் கண்டு உஷாரான உமர் (ரலி)

இந்நிலையில் திடீரென்று உமர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்க்க, அங்கே உமைர் பின் வஹ்ப் தமது வாகனத்திலிருந்து இறங்கி, வாளைத் தொங்கவிட்டுக்கொண்டு மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலை நோக்கி நடந்துகொண்டிருந்ததைக் கண்டார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் பதறியடித்து எழுந்து, ‘’இதோ! இந்த நாய்தான் அல்லாஹ்வின் எதிரியாகிய உமைர் பின் வஹ்ப். அல்லாஹ்வின் மீதாணையாக! இவன் ஒரு சதிச் சிந்தனையோடுதான் இங்கு வந்துள்ளான். முன்னதாக, மக்காவில் நமக்கெதிராக எதிரிகளை ஒன்றுதிரட்டியவனும் இவன்தான். பத்ர் போர் நடைபெறுவதற்குச் சற்று முன்புவரை நமக்கெதிராக மக்காவாசிகளுக்கு உளவு வேலை பார்த்தவனும்கூட’’ என்று சொன்னார்கள்.

முன்பொரு முறை நபியவர்களை நோக்கி உருவிய வாளோடு சென்றவர்தானே உமர் (ரலி) அவர்கள். அதனால் உமைரின் திட்டத்தை உமர் (ரலி) அவர்களால் துல்லியமாக மதிப்பிட முடிந்தது. பாம்பின் கால் பாம்பறியாதா என்ன?

பின்னர், உமர் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த தோழர்களை நோக்கி, ‘’நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களைச் சுற்றிப் பாதுகாப்பு வளையமிட்டுக்கொள்ளுங்கள். அழுக்குச் சிந்தனையுள்ள இந்தச் சூழ்ச்சிக்காரன் நபி (ஸல்) அவர்களை நம்பவைத்துக் கழுத்தறுத்துவிடப்போகிறான்; எச்சரிக்கையாயிருங்கள்’’ என்று சொன்னார்கள்.

பின்னர் நபியவர்களிடம் விரைந்து சென்ற உமர் (ரலி) அவர்கள், ‘’அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி உமைர் பின் வஹ்ப், வாளோடு புறப்பட்டு வந்துள்ளான். அவனைப் பார்த்தால், ஒரு நல்ல நோக்கத்திற்கு வந்தவனாக எனக்குப் படவில்லை’’ என்றார்கள். அதற்கு நபியவர்கள், ‘’அவரை என்னிடம் வரச்சொல்லுங்கள் உமரே’’ என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், உமைரிடம் சென்று அவரது வாளுறையை அவரின் கழுத்தில் சுற்றி, நெஞ்சுச் சட்டையைப் பிடித்து நபியவர்களிடம் அவரை இழுத்துக் கொண்டுவந்தார்கள்.

நபியின் அருகில் கொலைவெறியர்

ஒரு கைதியின் தோற்றத்தில் உமைரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘’அவரை விட்டுவிடுங்கள் உமரே’’ என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது பிடியைத் தளர்த்தி அவரை விடுவித்தார்கள். பின்னர் நபியவர்கள், ‘’சற்று தள்ளி நில்லுங்கள் உமரே’’ என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் உமைரின் அருகிலிருந்து சற்று தள்ளி நின்றார்கள்.

பின்னர், நபி (ஸல்) அவர்கள் உமைர் பின் வஹ்பை நோக்கி, ‘’உமைரே! அருகில் வாரும்’’ என்றார்கள். அருகில் வந்த உமைர், ‘’உமக்குக் காலை வந்தனங்கள்’’ என்றார். அறியாமைக் காலத்தில் அரபுகள் முகமன் தெரிவிக்கும் முறை இது.

அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘’உமைரே! நீர் தெரிவித்த முகமனைவிடச் சிறந்த முகமன் முறையை அல்லாஹ் எங்களுக்கு வழங்கிக் கௌரவப்படுத்தியுள்ளான். சாந்தி நிலவட்டும் (அஸ்ஸலாம்) என்பதையே அவன் எங்களுக்குக் கௌரவமாக ஆக்கியுள்ளான். அது சொர்க்கவாசிகளின் முகமனும்கூட’’ என்றார்கள்.

உமைர், ‘’(முஹம்மதே!) நீர் ஒன்றும் எங்கள் முகமனுக்கு பரிச்சயம் அல்லாதவர் இல்லை. நேற்றுவரைக்கும் அது உமக்குப் பரிச்சயமானதுதான்’’ என்றார். அவரிடம் நபியவர்கள், ‘’உமைரே! என்ன நோக்கத்திற்காக வந்துள்ளீர்?’’ என்று கேட்டார்கள்.

உமைர், ‘’உங்கள் வசம் சிக்கியிருக்கும் இந்தக் கைதியை – அதாவது என் மகனை மீட்டுச் செல்லும் நம்பிக்கையில் வந்துள்ளேன். எனவே, என் மகன் விஷயத்தில் எனக்கு உபகாரம் செய்யுங்கள்’’ என்றார்.

‘’அப்படியானால், உமது கழுத்தில் தொங்குகின்ற இந்த வாள் எதற்காக?’’ என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு உமைர், ‘’அல்லாஹ் அந்த வாட்களுக்கு இழிவைத் தரட்டும். அவை எங்களுக்கு பத்ர் போரின்போது எள்ளளவாவது பயன் தந்தனவா என்ன?’’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.

நபியவர்கள் உமைரிடம், ‘’உமைரே! உண்மையைச் சொல்லும்; எதற்காக இங்கு வந்தீர்?’’ என்று கேட்டார்கள். உமைர், ‘’என் மகனை மீட்டுச்செல்லவே வந்தேன்; வேறெதற்காகவும் வரவில்லை’’ என்று அடித்துச் சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘’இல்லை; (நீர் பொய் சொல்கிறீர்.) நீரும் ஸஃப்வான் பின் உமய்யாவும் கஅபா அருகில் ஹிஜ்ர் பகுதியில் அமர்ந்து, பத்ரின் பாழுங்கிணற்றில் வீசியெறிப்பட்ட குறைஷிய பிரமுகர்களின் சடலங்களைப் பற்றி ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தீர்கள். முடிவாக நீர், நான் மட்டும் கடன்காரனாகவும் குடும்பஸ்தனாகவும் இல்லையெனில், நானே முஹம்மதிடம் சென்று அவரைக் கொல்வேன்என்றீர். உடனே, நீர் என்னைக் கொல்ல வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் உமது கடனுக்கும் குடும்பத்திற்கும் ஸஃப்வான் பின் உமய்யா பொறுப்பேற்றுக்கொண்டார். ஆயினும், உமது திட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட்டான்’’ என்றார்கள்.

நல்ல பாம்பு நல்ல மனிதரானது

இதைக் கேட்ட உமைர் ஒருகனம் திகைத்துப்போனார். சற்று நேரம்கூட கழிந்திருக்காது. அதற்குள் உமைர் நபியவர்களைப் பார்த்து, ‘’நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நான் உறுதிமொழிகிறேன்’’ என்றார். மேலும், அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்:

‘’அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடம் கொண்டுவந்துகொண்டிருந்த விண்ணுலகச் செய்திகளை நாங்கள் ஏற்க மறுத்துவந்தோம். உமக்கு வந்த வேதஅறிவிப்புகளையும் நாங்கள் மறுத்தோம். ஆனால், ஸஃப்வான் பின் உமய்யாவுடன் நான் பேசிக்கொண்டிருந்த அந்த இரகசியம், என்னையும் அவரையும் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தத் தகவலை உமக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தந்திருக்க வாய்ப்பில்லை என்று இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இஸ்லாமிய நல்வழியை நான் பெற வேண்டும் எனும் நோக்கில் என்னை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’.

பின்னர், ‘’லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்) என்று உறுதிமொழிந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

நபியவர்கள் தம் தோழர்களிடம், ‘’உங்கள் சகோதரர் உமைருக்கு மார்க்க அறிவைப் புகட்டுங்கள். குர்ஆனைக் கற்றுக்கொடுங்கள். அவருடைய கைதியை – அதாவது அவருடைய மகனை விடுவியுங்கள்’’ என்றார்கள்.

உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதில் முஸ்லிம்களுக்கு ஆனந்தம் என்றால் அப்படியொரு ஆனந்தம். எந்த அளவிற்கெனில், ‘’அல்லாஹ்வின் தூதருக்கெதிராகப் புறப்பட்டு வரும்போது உமைர் பின் வஹ்ப், ஒரு பன்றியைவிட மிகவும் கேவலமாக எனக்குத் தெரிந்தார். ஆனால், இன்றோ அவர், நான் பெற்றெடுத்த பிள்ளைகளைவிட எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார்’’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அதையடுத்து உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்கள், இஸ்லாமிய போதனைகளால் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக்கொள்வதிலும் இதயத்தில் இஸ்லாமிய ஒளியை இட்டு நிரப்புவதிலும் முனைப்பு காட்டினார். அவரது வாழ்வில் அந்தக் காலம் ஒரு பொற்காலம் எனச் சொல்லும் அளவுக்கு தன்னிறைவானதொரு வாழ்க்கை வாழ்ந்ததில் அவருக்கு மக்காவோ மக்காவாசிகளோ நினைவுக்கு வரவில்லை.

எதிர்பார்த்து ஏமாந்த ஸஃப்வான்

அதே நேரத்தில் ஸஃப்வான் பின் உமய்யாவோ மக்காவில் என்னென்னவெல்லாமோ மனக்கோட்டை கட்டியிருந்தார். குறைஷியர்கள் ஒன்றுகூடும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் சென்று, ‘’உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி. வெகு விரைவில் உங்கள் காதுகளுக்கு மகத்தானதொரு தகவல் வரவிருக்கிறது. பத்ர் போரில் நமக்கேற்பட்ட மனக்காயங்களுக்கு மருந்திட்டு மறக்கவைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் அது’’ என்று கூறிக்கொண்டிருந்தார்.

அந்தத் தகவல் எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார். அவர் காத்திருந்து காத்திருந்து காலம் போனதுதான் மிச்சம். எனவே, அவரது உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கவலைக் குடிகொள்ளத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் அவர் நெருப்பில் புரளும் புழுவாகத் துடித்தார். மக்காவுக்கு வருகின்ற பயணக் குழுக்களில் ஒவ்வொருவரிடமும் சென்று உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்களைப் பற்றி விசாரிக்கலானார். ஆனால், யாரிடமிருந்தும் அவருக்கு மனநிறைவான பதில் கிடைக்கவில்லை.

இறுதியில் ஒரு பயணி வந்து, ‘’நிச்சயமாக உமைர் இஸ்லாத்தைத் தழுவிவிட்டார்’’ எனக் கூறினார். அவரைப் பொறுத்தமட்டில் அதிர்ச்சிகரமான இத்தகவல், அவர் தலையில் பேரிடியாக விழுந்தது. ஏனெனில், உமைர் இருந்த இருப்பைப் பார்த்து, இந்த உலகமே இஸ்லாத்தைத் தழுவினாலும் உமைர் இஸ்லாத்தைத் தழுவவேமாட்டார் என்று நம்பிக்கொண்டிருந்தவர் அவர்.

ஆனால், உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்களோ, மார்க்க அறிவைத் தேடுவதிலும் திருக்குர்ஆனில் தமக்கு முடிந்த அளவை மனனம் செய்வதிலும் இடையறாமல் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

மக்காவில் புதுமனிதராய் உமைர் (ரலி)

இந்நிலையில் உமைர் (ரலி) அவர்கள் ஒருநாள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்:

‘’அல்லாஹ்வின் தூதரே! என் ஆயுளில் ஒரு கணிசமான காலம், அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்கும் முயற்சியிலும் இஸ்லாமியர்களுக்குக் கடுமையாகத் துன்பம் விளைவிக்கும் முனைப்பிலும் கழிந்துவிட்டது. ஆனால், இப்போது எனக்கொரு விருப்பம்.
நான் மக்கா சென்று குறைஷியருக்கு அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய தூதர் பற்றியும் பரப்புரை செய்வதற்கு என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவர்கள் என் கருத்தை ஏற்றால் நல்லது. இல்லையேல், முன்னதாக நபித்தோழர்களுக்கு நான் கொடுத்த துன்பத்தைப் போன்று குறைஷியருக்குச் சமய ரீதியில் தொல்லை கொடுப்பேன்.’’

இவ்வாறு கூறிய உமைர் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். உடனே மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்ற உமைர் (ரலி) அவர்கள், ஸஃப்வான் பின் உமய்யாவிடம் சென்றார்கள்.

சென்றவர், ‘’ஸஃப்வானே! நீர் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும் குறைஷிய அறிவுஜீவிகளில் ஒருவராகவும் திகழ்கின்றீர். நீங்கள் பக்தி சிரத்தையோடு கடைப்பிடித்துவரும் சிலைவழிபாடும் சிலைக்கான பலியிடலும் உங்கள் அறிவுக்குச் சரியெனப்படுகிறதா? அது உண்மையில் மார்க்கமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’’ என்றெல்லாம் கேட்டார்கள்.

பின்னர், ‘’நான், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவாகள் என்றும் உறுதிமொழிகிறேன்’’  எனக் கூறினார்கள்.

பின்னர் உமைர் (ரலி) அவர்கள் மக்காவில் அல்லாஹ்வை நோக்கி வருமாறு மக்களுக்குப் பரப்புரை செய்தார்கள். அவரது கையால் ஒரு பெரும் கூட்டமே இஸ்லாத்தைத் தழுவியது.


அல்லாஹ், நபித்தோழர் உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்களுக்கு வெகுவாக வெகுமதி அளிப்பானாக. அவரது அடக்கத்தலத்தை ஒளிமயமாக்குவானாக.

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...