வளமான வாழ்வுக்கு முப்பது வழிகள்
2. கடந்த காலத்தைக் கிளறாதே!
அரபியில்: டாக்டர் ஆயிழ் அல்கர்னீ
தமிழில்: சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி
கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டிருப்பதும் அதன் கனத்த சிந்தனைகளைச் சுமந்து திரிவதும் கடந்த கால வேதனைகளை எண்ணியெண்ணிக் கவலையுறுவதும் புத்திசாலித்தனம் அல்ல. அது ஒரு மனச்சிதைவு நிலை. நமது மனத்திண்மையை அது அழித்துவிடும். நமது நிகழ்கால வாழ்க்கையை அது நிர்மூலமாக்கிவிடும்.
அறிவாளிகள், கடந்த காலத்தின் பதிவேடுகளைச் சுருட்டியே வைத்திருப்பர். அவற்றை விரித்துவைத்துப் புலம்பிக்கொண்டிருக்கமாட்டார்கள். அவற்றை மறதிச் சுரங்கத்தில் போட்டுப் பூட்டிவைத்திருப்பார்கள். கண்டுகொள்ளாமைச் சிறையில் தள்ளி பலமான கயிற்றால் அவற்றைப் பிணைத்துவைத்திருப்பார்கள். ஒருபோதும் அவற்றை வெளியில் விடமாட்டார்கள்.
காரணம், அவை நடந்து முடிந்தவை. கவலை, கடந்த காலத்தை மறுபடியும் கொண்டுவரப் போவதில்லை. துக்கமும் வருத்தமும், கடந்த காலக் கீறலைச் சரிசெய்துவிடப் போவதில்லை. கலக்கம், கடந்த காலத்திற்கு மறுபடியும் உயிர் கொடுத்துவிடப் போவதில்லை.
கடந்த காலம் என்பது இல்லாமல் போய்விட்ட ஒன்று. கடந்த காலச் சிறையில் நீ குடியிருக்காதே. இல்லாமல் போய்விட்ட நிழலின் கீழ் நின்று நீ இளைப்பாற முடியாது. கடந்த காலம் என்பது ஒரு பிரமை. அதிலிருந்து உன்னை நீ காத்துக்கொள்.
நதி, அது பிறந்த மலையுச்சிக்கு எப்படி திரும்பிச் செல்லும்? கதிரவன் கிழக்கு நோக்கியே மீண்டுசெல்வது எங்ஙனம்? பிறந்த குழந்தை மறுபடியும் தாயின் கருவறைக்கு மீள முடியுமா? கறந்த பால்தான் மடுவேறுமா? வடித்த கண்ணீர் மறுபடியும் கண்ணேறுமா?
கடந்த காலத்தின் சுழலில் சிக்கிச் சுழன்றுவருவதும் அதை முன்னிட்டு தொடர்ந்து கலக்கமுறுவதும் அதன் நெருப்பில் எரிந்து உருகுவதும் அதன் வாசல்களில் வீழ்ந்துகிடப்பதும் கவலைக்கிடமான ஆபத்து ஆகும்.
உனது வாசிப்பும் சிந்தனையும் கடந்த காலத்தின் கோப்புகளிலேயே நிலைகொள்ளுமானால் அது உன் நிகழ்காலத்தை நாசமாக்கிவிடும். உன் தற்போதைய உழைப்பை அது சிதைத்துவிடும். பொன்னான உனது நேரத்தை அது நசித்துவிடும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் முந்தைய சமூகங்கள் பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் கூறுகின்றான். ஆனால், “அவர்கள் வாழ்ந்து மறைந்த சமுதாயத்தார் ஆவர்” (2:134) என்றும் குறிப்பிட்டுவிடுகின்றான். அதாவது எல்லாம் நடந்து முடிந்தாகிவிட்டது.
இனி இறந்துபோன கடந்த காலத்தை வைத்துப் பிரேதப் பரிசோதனை நடத்திக்கொண்டிருப்பதில் பலனில்லை. வரலாற்றின் சக்கரத்தைத் திருப்பிச் சுழலவிடுவதில் யாருக்கு என்ன பயன்?
எப்போதும் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டிருப்பது, அரைத்த மாவையே அரைப்பதற்குச் சமம். மர அறுப்புத் தூளைக் குவித்துவைத்து மறுபடியும் அறுத்துக்கொண்டிருப்பதற்கு நிகரான வெட்டி வேலை.
கடந்த காலத்தை நினைத்து யாரேனும் அழுதுகொண்டே இருந்தால், “புதைக்கப்பட்ட பிணங்களை புதைகுழிகளிலிருந்து தோண்டி எடுக்காதே” என்று பழங்காலத்தில் சொல்வது வழக்கம்.
மிருகமொழி தெரிந்த ஒருவர் சொன்ன செய்தி: மக்கள் கழுதையிடம், “நீ ஏன் அசைபோடுவதில்லை” என்று கேட்டனர். அதற்குக் கழுதை, “ஏற்கெனவே மென்று விழுங்கப்பட்ட உணவுக்கூழை வெளியே கொண்டுவந்து மறுபடியும் மென்று விழுங்குவது எனக்குப் பிடிக்கவில்லை” என்றது.
நம்மைப் பீடித்துள்ள மிகப் பெரிய அவலம் எது தெரியுமா? நமது நிகழ்காலத்தின் விஷயத்தில் நாம் செயலிழந்து நின்றுவிட்டு, கடந்த காலத்திலேயே கவனம் செலுத்திவருவதுதான்.
அழகான அரண்மனைகளை அப்படியே வீணாக விட்டுவைத்திருக்கிறோம். ஆனால், சிதைந்துபோய்விட்ட சிதிலங்களை எண்ணி உருகிக்கொண்டிருக்கிறோம்.
கடந்துபோன ஒன்றை மீளக் கொண்டுவருவதற்கு ஒட்டுமொத்த உலகமே ஒன்றுதிரண்டு வந்தாலும் அது ஆகப்போவதில்லை. அது இயலாத காரியம்.
மக்கள் பின்னோக்கியே பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள். முகத்தைப் பின்புறமாகத் திருப்பியே வைத்திருப்பது இயல்பு அல்லவே. காற்று முன்னோக்கியே வீசுகிறது. தண்ணீர் முன்னோக்கியே பாய்கிறது. பயண வாகனம் முன்னோக்கியே செல்கிறது.
எனவே, வாழ்க்கையின் இயல்பான போக்குக்கு நாம் மட்டும் ஏன் மாறுபட வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக