வியாழன், 7 பிப்ரவரி, 2013

பொதுக் கருத்தை நோக்கி...


                                                     - சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,



(ஷஹீத் ஹசன் அல்பன்னா (ரஹ்) அவர்கள் (இறப்பு - கி.பி. 1949) தொகுத்த இருபது அடிப்படைகளை (உஸூலுல் இஷ்ரீன்) விரிவாக விளக்கும் நூல் ஃபஹ்முல் இஸ்லாம் ஃபீ ழிலாலில் உஸூலில் இஷ்ரீன் ஆகும். இருபது அடிப்படைகளின் ஒளியில் இஸ்லாம் பற்றிய புரிதல் என்பது இதன் பொருள். அஷ்ஷைக் ஜுமுஆ அமீன் அப்துல் அஸீஸ் அவர்கள் தொகுத்துள்ள அந்த நூலின் முகவுரையின் தமிழ் பெயர்ப்பே இந்தக் கட்டுரை (சிறு மாற்றங்களுடன்.)



இன்றைக்கு இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லிம்களுக்குச் செய்ய முடியாத பல காரியங்களை நாமே நமக்கிடையில் செய்துவருகின்றோம். அவர்கள் நமக்கு எதிராக எட்ட இயலாத இலக்குகள் பலவற்றை அவர்களுக்காக நாமே நம் கரங்களால் இலகுவாக்கிவருகிறோம்.

இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனையைவிட, பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேலின் சிந்தனையைவிட, வட ஆப்ரிக்கா விஷயத்தில் ஃபிரான்ஸின் சிந்தனையைவிட, தென் சூடான் விஷயத்தில் சிலுவைக்கார கிறித்தவர்களின் சிந்தனையைவிட நம்மில் ஒருவரின் சிந்தனைதான் மற்றவருக்கு மிகவும் அபாயகரமானதாகவும் பேராபத்தாகவும் தோன்றுகிறது.






நம்மில் ஒருவரின் கருத்தை மற்றவர் முறியடிப்பதற்காக வும் அவரைத் தாக்கிப் பரப் புரை செய்வதற்காகவும் செலவழிக்கப்பட்ட சமூகத் தின் செல்வமும் உழைப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. அவற் றை ஆப்ரிக்காவில் இஸ் லாம் பற்றிய நற்செய்தி ஊழியத்திற்கோ, பெஷா வரில் முஸ்லிம் பிள்ளைக ளின் கல்வி முன்னேற்றத் திற்கோ, உலகெங்கும் இஸ் லாத்திற்காகக் களமாடிவரும் முஸ்லிம் போராளிகளின் அவசியத் தேவைக்கோ, குறைந்தபட்சம் இழந்த மண்ணை மீட்கப் போராடும் பாலஸ் தீனப் போராளிச் சிறுவர்களுக்குத் தேவையான கற்களுக்கோ செலவழிக்கப் பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதற்கெல்லாம் ஏது நமக்கு நேரம்? இவையா நம் பிரச்சினைகள்? நம்மில் ஒருவருக்கு மற்றவரின் சிந்தனைப்போக்குதானே பெரும் அபாயமாகவும் பிரச்சினையாகவும் தோன்றுகிறது. அல்லாஹ்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

இன்றைக்கு நாம் எந்தெந்த விஷயங்களுக்காக முட்டி மோதிக்கொள்கிறோமோ அவை நமது சமூகத்தின் சிதறலுக்கும் சிதைவுக்குமே வழிவகுத்துள்ளது. சமுதாயக் கட்டமைப்பின் அடித்தளத்தை வேரோடு பெயர்த்தெறிந்துள்ளது. இது முற்றிலும் மழித்துவிடக்கூடியதாகும்; முடியை அல்ல, மார்க்கத்தை. (ஜாமிஉத் திர்மிதீ - 3432-3434)

நமது உயிரினும் மேலான இஸ்லாம் விஷயத்தில் நாம் எப்போது அல்லாஹ்வை அஞ்சப்போகிறோம்? அல்லாஹ்வுக்காக நாம் எப்போது ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளப்போகிறோம்? நம்முடைய பிரச்சினைகளை மார்க்க ரீதியாக எடைபோட்டுப் பார்ப்பதற்கு முற்காலச் சான்றோர்களின் (சலஃபுஸ் ஸாலிஹீன்) துலாக்கோலை எப்போது நாம் பயன்படுத்தப்போகிறோம்?

நமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைப் பற்றி நாம் பேச அல்லது விவாதிக்க முற்படும்போது பின்வரும் அடிப்படையான விஷயங்களில் நாம் ஒருமித்த கருத்திற்கு முதலில் வர வேண்டும். மார்க்கத்தின் மூல ஆதாரங்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ள இந்த அடிப்படைகள்தான் நம் கருத்து வேறுபாடுகளை அகற்றவோ குறைக்கவோ முடியும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்:





அடிப்படை - 1


ஆதரவாளர்களைத் திரட்டும் வழியில் அல்லது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வழியில் ஒரு கருத்தை வெறித்தனமாகப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு கருத்தின் மீது வெறித்தனமாக இருப்பதற்கும் உண்மையை உறுதியுடன் பின்பற்றுவதற்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஒரு கருத்தில் வெறித்தனமாக இருப்பது, மாற்றுக் கருத்தாளர்களை வழிகெட்டவர்கள், கொள்கை தடுமாறியவர்கள் என்று குறை கூறுவதற்கும் அழைப்பாளர்களைத் தவறாக விமர்சிப்பதற்கும் காயப்படுத்துவதற்கும் ஒருவரைத் தூண்டும். இறுதியில், மாற்றுக் கருத்தாளர்களைப் பற்றிக் கோள் மூட்டுதல், புறம் பேசுதல், அவதூறு பரப்புதல் ஆகிய இழிசெயல்களில் இறங்கவும் அவர் தயங்கமாட்டார்.

அதே நேரத்தில் உண்மையை உறுதியுடன் பின்பற்றுதல் என்பது, சம்பந்தப்பட்டவரை சங்கைக்குரிய பண்பாளராக உருமாற்றும். ஒழுக்கம் தவறாத வார்த்தைகளையும் அழகிய அறிவுரைகளையும் வழங்கக்கூடிய அறிவார்ந்த அழைப்பாளராகவும் அழகான முறையில் வாதிடுபவராகவும் அவரை வார்க்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, மோதல் வரும்போது எல்லா விஷயத்திலும் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்ப வேண்டும் என்ற உள்ளுணர்வை அவருக்கு ஊட்டும்.


அடிப்படை - 2


ஒரு தனிமனிதரோ கூட்டமைப்போ, (பல கருத்துள்ள விஷயங்களில்) தாம் கூறுவதுதான் அப்பழுக்கற்றது; தமது கருத்தே சரியானது; பிற கருத்துகள் யாவும் அசத்தியமானவை என்று வாதிடுவது சரியல்ல. கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் இறுதிக் கருத்து வெளியிடும் உரிமை தமக்கே உண்டு; அந்தக் கருத்திலிருந்து வெளியேறுவது  இஸ்லாத்திலிருந்தே வெளியேறுவதாகும், அல்லது கொள்கைப் பலவீனம் ஆகும் என்று வாதிப்பது முறையாகாது. ஏனெனில், பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட தன்மை சராசரி மனிதர்கள் யாருக்கும் கிடையாது. நம்மில் ஒவ்வொருவருடைய கருத்துகளில், கொள்ளப்பட வேண்டியதும் உண்டு. தள்ளப்பட வேண்டியதும் உண்டு.


அடிப்படை - 3


கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் ஒரு கருத்தை விடுத்து மறு கருத்தை எடுப்பதில் மார்க்கத்தை மறுத்தல் என்பது அறவே கிடையாது. அந்த மாதிரியான விஷயங்களில் அடுத்தவரின் நியாயத்தைப் புரிந்து நடந்துகொள்வது, உண்மையை மறுப்பதாகவோ கொள்கைக் குளறுபடியாகவோ தவறுடன் சமரசம் செய்துகொள்வதாகவோ ஆகாது. மாறாக, அது நாம் கருத்தொருமித்து ஏற்றுக்கொண்ட விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைப்பதும் நாம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளவற்றில் ஒருவர் மற்றவரின் நியாயத்தைப் புரிந்து நடந்துகொள்வதும் ஆகும்.


அடிப்படை - 4


நமது வழிமுறையும் போக்கும் உண்மையை அலசி ஆராய்ந்து சத்தியத்தைக் கண்டறிவதின் மீது ந¤லை நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு கருத்தைச் செயற்கையாக வெளிக்காட்டுவதாகவோ நமது கருத்தே சரி என்று வெளிப்படுத்த முயல்வதாகவோ இருக்கலாகாது. சத்தியம் எங்கிருந்தாலும் அதைக் கண்டறிவதற்காக அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அது என் நாவிலிருந்து வெளிவந்தாலும் சரி, என் எதிராளியின் நாவிலிருந்து வெளியானாலும் சரி.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 820) கூறினார்கள்:  நான் யாரிடம் விவாதம் புரிந்தாலும் அவருடைய நாவின் மூலம் உண்மை வெளிவர வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டி விரும்பிக் கேட்பேன். யார் சொன்னாலும் உண்மை என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதே ஆகும். (ஸிஃபத்துஸ் ஸஃப்வா-இப்னுல் ஜவ்ஸீ)


அடிப்படை - 5


பல்வேறு புரிதல்களுக்கும் கருத்துகளுக்கும் இடமளிக்கின்ற சட்டப் பிரச்சினைகளுக்காக, ஒருவர் மற்றவரை இழிவுபடுத்தவோ அவரைக் குறித்து வதந்தி பரப்பவோ அவதூறு சுமத்தவோ தவறான ஊகங்களை ஊதிவிடவோ கூடாது. அவற்றுக்காக அவர்களை இறைமறுப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று தீர்மானிக்கலாகாது. வழிகெட்டவர்கள், பாவிகள் என்று குறிப்பிடக் கூடாது. ஏனெனில், இவையெல்லாம் மிகவும் பாரதூரமானவை ஆகும்.


அடிப்படை - 6


பிறரின் தவறுகளைத் துருவிக்கொண்டு இருக்கலாகாது. அடுத்தவர் பலவீனம் அடையும் சந்தர்ப்பங்களையும் வீழும் சூழல்களையும் தோண்டித் துருவிப் பார்த்து, அவற்றைப் பரப்பிக்கொண்டிருக்கலாகாது. மாற்றுச் சிந்தனையாளர்கள்மீது பொதுமக்களின் வெறுப்பை உருவாக்கி வளர்த்துவிடக் கூடாது. இது இஸ்லாத்தின் போக்கோ முஸ்லிம்களின் பண்பாடோ அல்ல.



தேனீயைப் போன்று பூக்களுக்கு வலிக்காமல் அவற்றிலிருந்து தேனெடுக்க நீ பழகிக்கொள்


அடிப்படை - 7


பொதுவான ஓர் அடிப்படை விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதால், அந்த அடிப்படையின் தனிப்பட்ட கிளையம்சங்கள் ஒவ்வொன்றிலும் அனைவரும் ஒத்த கருத்தில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அன்று. ஓர் அடிப்படையான விஷயத்தின் கிளை விவகாரம் ஒன்றில் ஒருவர் வேறுபட்ட கருத்தில் இருப்பது அந்த அடிப்படை விஷயத்தைச் சரியானதல்ல என்று கூறுவதாக ஆகாது. பின்வரும் தகவல் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்:

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறைவனைப் பார்த்த விவகாரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டமை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அல்லாஹ்வைப் பார்த்தது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘‘அவன் ஓர் ஒளி; அவனை நான் எங்கனம் காண்பேன்?’’ என்று நபியவர்கள் பதிலளித்த தகவல் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கிடைத்தது. எனவே, ‘‘நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை’’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதே நேரத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இதயத்தால் பார்த்தார்கள்’’ என்கிறார்கள். (தஃப்சீர் அல்குர்துபீ)

பார்த்தார்கள் என்றும் பார்க்கவில்லை என்றும் இருவேறு கருத்துகளை அவ்விருவரும் கூறினாலும், பொதுவான அடிப்படை அம்சத்திலிருந்து அவர்கள் இருவரும் வெளியேறிவிடவில்லை.


அடிப்படை - 8


ஒரு பிரிவினர் பெரும்பான்மையான அடிப்படை விஷயங்களில் ஒத்த கருத்துகளில் இருக்கின்றனர். இந்நிலையில் அடிப்படை விஷயம் அல்லாத சில்லறை விவகாரம் ஒன்றில் அவர்கள் வெவ்வேறு கருத்துகளில் இருக்கின்ற காரணத்தால், அவர்கள் சரியான வழியிலிருந்து வெளியேறிவிட்டனர் என்று தீர்ப்பளிப்பது முறையாகாது. மிகுதியையும் பெரும்பான்மையையும் கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும்.


அடிப்படை - 9


மோதல் முற்றும்போதும் வேறுபாடு வலுக்கும்போதும் நேர்மை தவறாத நடுநிலைப் போக்கு மிகவும் அவசியம். இதற்கு எடுத்துக்காட்டாக சூஃபியிசத்தைக் குறிப்பிடலாம். சூஃபியிசம் குறித்து கருத்து தெரிவிக்கையில் விருப்பு வெறுப்பற்ற நடுநிலைப் போக்கு அவசியம். எல்லை மீறல் கூடாது.

சூஃபிகளின் ஆட்சேபகரமான கருத்துகள் குறித்து பேரறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1349) கருத்து தெரிவிக்கையில், ‘‘சூஃபிகள்மீது சிலர் முழுக்க முழுக்க தவறான எண்ணம் கொண்டுள்ளனர். அத்தகையோர் உண்மையை எட்டாதவர்கள் ஆவர். வேறுசிலர், சூஃபிகள்மீது முழுமையான நல்லெண்ணம் கொண்டுள்ளனர். அத்தகையோர் வரம்பு மீறியவர்கள் ஆவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1328) சூஃபிகளை மூவகையினராகப் பிரித்துள்ளார்கள்:

1. நபிமொழி சார்ந்த சூஃபிகள், நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி சார்ந்த சூஃபிகள் (சூஃபியய்யா அஹ்லில் ஹதீஸ், சூஃபிய்யா அஹ்லிஸ் ஸுன்னா வல்ஜமாஆ). ஜுனைத் அல்பஃக்தாதீ (ரஹ்), ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) சஹ்ல் அத்தஸ்த்துரீ (ரஹ்) உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவர்களின் கருத்துகள் நபிமொழிகளில் காணப்படும். நபிமொழி நூல்களையும் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளனர். இவர்கள்தாம் சூஃபிகளில் மிகச் சிறந்தவர்களும் முன்னோடிகளும் ஆவர்.

2. இறைமையியல் ஆய்வுத் துறை சார்ந்த சூஃபிகள் (சூஃபிய்யா அஹ்லில் கலாம்). ஃகஸ்ஸாலீ (ரஹ்) அவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவ்வகையினர் முந்தையவர்களைவிட தரத்தில் சற்று குறைந்தவர்கள் ஆவர்.

3. அடிப்படைக் கோட்பாட்டு ஆராய்ச்சித் துறை சூஃபிகள் (சூஃபிய்யா அல்ஃபலாசிஃபா). மன்சூர் அல்ஹல்லாஜ், இப்னுல் அரபீ, தில்மிசானீ உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வகையினர்தாம் இஸ்லாத்தின் பிரதான அடிப்படைகள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்துகளை வெளியிட்டவர்கள் ஆவர். (அஸ்ஸஃப்திய்யா-இப்னு தைமிய்யா)

ஹாகிம் (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1014) கூறுகிறார்கள்: சூஃபிகள் எனப்படுவோர் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ஆவர். அவர்களில் நல்லோரும் உண்டு. தீயோரும் உண்டு. (முஸ்தத்ரக் ஹாகிம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வெவ்வேறு நிலைப்பாட்டையும் கருத்தையும் கொண்ட ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாட்டுக்கும் கருத்துக்கும் தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகான வார்த்தை அலங்காரத்தைச் சூட்டுவார்கள். எதிரணியினரின் நிலைப்பாட்டையும் கருத்தையும் முடிந்த அளவிற்குக் கொச்சைப்படுத்துவார்கள். அல்லது தூற்றுவார்கள். ஆனால், யாருக்கு அல்லாஹ் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியுள்ளானோ அவர் தமது ஆற்றலின் மூலம் அந்த வார்த்தை அலங்காரத்திற்கு அப்பாலுள்ள சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்வார். எனவே, நாம் வார்த்தைகளை நம்பி மோசம் போய்விடக் கூடாது.

கவிஞர் இப்னுர் ரூமீ (இறப்பு-கி.பி. 896) கூறினார்:

தேன், தேனீக்களின் அறுவடை என்றால்
அதை நீ புகழ்ந்தவன் ஆகிறாய்.

அதையே, நீ நினைத்தால்
தேனீக்களின் வாந்தி என்று இகழவும் முடியும்.

சத்தியம் சில நேரங்களில்
பிறழ் வார்த்தைப் பிரயோகங்களில் மறைந்திருக்கலாம்.

எனவே, ஒன்றின் எதார்த்தத்தை நாம் அறிய வேண்டுமாயின், அது சத்தியமா, அசத்தியமா என்பதை உள்ளது உள்ளபடியே புரிய வேண்டுமாயின் முதலில் அதன் மீது போர்த்தப்பட்டுள்ள வாசக ஆடையைக் களைய வேண்டும். (அதாவது அது தொடர்பான மிகை மற்றும் தூற்றல் வார்த்தைகளை ஒதுக்கிவிட வேண்டும்.) பிறகு அது தொடர்பான விருப்பு, வெறுப்பை மனதிலிருந்து அழித்துவிட்டு, நேர்மையான கண் கொண்டு சமநிலை தவறாமல் அதைக் கவனிக்க வேண்டும்.

நமது கருத்துக்குச் சார்புடையவர் என்பதால் அவர் சொல்வதெல்லாம் சரி என்ற மனநிலைக்கும், மாற்றுச் சிந்தனையாளர் என்பதால் அவர் சொல்கிற அனைத்தும் தவறு என்ற மனநிலைக்கும் நாம் போய்விடக் கூடாது. ஏனெனில், பகைமைக் கண் கொண்டு பார்க்கும்போது நல்லதுகூட கெட்டதாகவே தோன்றும். நேசமான பார்வையில் பார்த்தால் கெட்டதுகூட நல்லதாகத் தோன்றலாம்.

கவிஞர் ஒருவர் கூறுகிறார்:

திருப்தி கொண்ட பார்வை
குறைகளைப் பாராமல் மூடிக்கொள்ளும்.

அதிருப்தியான பார்வையோ
குறைகளைப் பார்த்துப் பார்த்து வெளிப்படுத்தும்.

எனவே, இரண்டும் இன்றி சமநிலை தவறாத பார்வையோடு அணுகுகின்ற சூழலுக்கு நாம் வர வேண்டும். (மிஃப்த்தாஹு தாரிஸ் சஆதா-இப்னுல் கய்யிம்)


அடிப்படை - 10


ஒரு விஷயம் தொடர்பாக ஓர் அறிஞரோ இமாமோ கூறியுள்ள அனைத்துக் கருத்துகளையும் மொத்தமாகத் திரட்டி அவற்றை ஒருசேரப் பார்த்து அவற்றுக்கிடையே முரண்பாடு வராதவாறு பொருத்தம் காண வேண்டியது அவசியம் ஆகும். அதாவது ஒரு இமாம் சொல்லக்கூடிய ஒரு கருத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு அவர் கொள்கை தடுமாறியவர் என்றோ தவறான சிந்தனைப்போக்குள்ளவர் என்றோ கண்ணை மூடிக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று குற்றம் சாட்டிவிடலாகாது.

அதற்குமுன் அந்த விஷயம் தொடர்பாக அவர் கூறியுள்ள எல்லாக் கருத்துகளையும் மொத்தமாகத் திரட்டி அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லாதவாறு பொருத்தம் காண முயல வேண்டும். அவருடைய நீளமான நூலில் எங்கோ வரும் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் சேர்த்து அவர்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கக் கூடாது.

ஏனெனில், ஒரு சூழலில் அவர் ஒன்றைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் மற்றொரு சூழலில் அதை விரிவாக விளக்கியிருப்பார். சுருக்கமாகச் சொன்னதில் ஏற்பட்ட தவறுக்கான சாத்தியக்கூறு விரிவான விளக்கத்தில் அகன்றுவிடும். அப்படியாயின் அந்த விரிவான விளக்கமே அவரது கருத்து என்று தீர்மானிக்க வேண்டும். அவ்வாறே ஓரிடத்தில் மூடலாகச் சொல்லியிருந்தால் மற்றோர் இடத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருப்பார். வெளிப்படையாகச் சொல்லப்பட்டதையே அவருடைய மூடலான கருத்துக்குப் பொருளாகக் கொள்ள வேண்டும்.

அதைப் போன்றே, ஓரிடத்தில் ஒன்றைப் பொதுவாகவும் பிறிதோர் இடத்தில் அதையே வரையறுத்தும் சொல்லியிருப்பார். இது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகாது. அந்த இடத்தின் சூழல் அப்படிச் சொன்னால் போதும் என்று கருதியிருப்பார். ஆனால், அது தவறான புரிதலுக்கு உள்ளாகி இருக்கும். முடிந்த வரையில் அவரின் கருத்துக்களாலேயே அந்தத் தவறான புரிதலைக் களையும் விதத்தில் அவரின் கருத்துகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். தவறான புரிதலுக்கு உள்ளான வார்த்தைப் பிரயோகத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கக் கூடாது. அது நம்மைத் தவறான முடிவை நோக்கிச் செலுத்திவிடும்.

‘‘மறுமை நாளில், நல்லறம் புரிந்தவர் அதற்கான வெகுமதியையும் தீமை புரிந்தவர் அதற்கான தண்டனையையும் பெற்ற பின்னர் சொர்க்கமும் நரகமும் அழிந்துவிடும்’’ என்று அறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாக அவரது வார்த்தையிலிருந்து நமக்குத் தோன்றினால் - இது வழிகெட்ட ஜஹ்மிய்யா பிரிவினரின் கோட்பாடு என்பதால் - இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ஜஹ்மிய்யா பிரிவைச் சேர்ந்தவர் என்று அவசர கதியில் தீர்ப்பை அள்ளித் தெளித்துவிட முடியுமா? அப்படிச் செய்தால் அது தவறாகும். மாறாக, அவரது கருத்தின் மெய்ப்பொருள்  என்ன என்பதை நோக்கித்தான் நமது சிந்தனை செல்ல வேண்டும்.


அடிப்படை - 11


ஓர் அறிஞரின் கூற்று பல கருத்துகளுக்கு இடமளிக்கும் வகையில் இருந்தால், அவற்றில் மிகச் சிறந்த கருத்தையே அவரது கூற்றுக்கான கருத்தாகக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு முஸ்லிம் சகோதரர் குறித்து நல்லெண்ணம் கொள்ள வேண்டியது சக முஸ்லிம்களின் கடமை ஆகும். எனவே, ஓர் அறிஞரின் கூற்றுக்குப் பல வகைகளில் தவறான கருத்துக்கு இடமிருந்து, ஒரேயொரு வகையில் மட்டும் அதற்குச் சரியான கருத்து வழங்கும் வாய்ப்பு இருந்தால் நாம் அந்த ஒரேயொரு சரியான கருத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அறிஞரின் மீது தப்பெண்ணம் கொள்ள இடமளிக்கலாகாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம் ஒரு சூஃபி அறிஞர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ‘‘ஒருவரை அல்லாஹ் நேசித்துவிட்டால் அவருக்குப் பாவம் தீங்களிக்காது’’ என்று அந்த சூஃபி அறிஞர் கூறினார். இது வழிதவறிய கொள்கைப் பிரிவினர்களாகிய முர்ஜிஆக்களின் தவறான சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கருத்தாகும். இருப்பினும் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் அந்த சூஃபி அறிஞரின் நன்னடத்தையைக் கருதி அவர்மீது தப்பு அர்த்தம் சுமத்துவதைத் தவிர்த்தார்கள். ‘‘ஒருவரை அல்லாஹ் நேசித்துவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு மற்றும் பாவமீட்சிக்கான வழியை அல்லாஹ் வழங்குவான். பின்னர் அந்தப் பாவத்தின் மீது அவர் எப்படி நிலைத்திருக்க முடியும்? (எப்படி அது அவருக்குத் தீங்களிக்கும்) என்பதுதான் அந்த சூஃபி அறிஞர் சொல்லவந்த கருத்து’’ என்று விளக்கம் தந்தார்கள்.

இவ்வாறே ஒருவருடைய கூற்றுக்கு அவர்மீது நல்லெண்ணம் வைத்து சரியான கருத்தை வழங்க வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.


அடிப்படை - 12


நாம் எந்தெந்த விஷயங்கள¤ல் பிறரிடமிருந்து வேறுபடுகிறோமோ அந்தப் பிரச்சினைகளை அவற்றின் அனைத்துப் புறங்களிலிருந்தும் ஆழமாகவும் அகலமாகவும் கவனித்துப் புரிந்துகொள்ள முயல வேண்டும். (நமது கருத்துக்கு ஒத்துப்போகும்) ஒரு பகுதியை மட்டும் கவனித்துவிட்டு மற்ற பகுதிகளைப் புறந்தள்ளிவிடக் கூடாது. நமது கருத்துக்கான நியாயம், சூழல், பின்னணி, சான்று ஆகியவற்றை விரிவாக அவதானிப்பதைப் போன்றே, அடுத்தவரின் கருத்தையும் அணுக வேண்டும்.

அத்துடன் அந்தப் பிரச்சினை தொடர்பாக எங்கு பேசினால் பொருத்தமோ அந்த இடத் தேர்வும் மிகவும் முக்கியம். தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்று அஞ்சப்படும் சராசரியான இடங்களில் அவற்றைப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்க(ளிடம் பேசும்போது அவர்க)ள் எதைப் புரிந்துகொள்வார்களோ அதையே அவர்களிடம் பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பேசி, அதன் மூலம்) அல்லாஹ்வு(டைய கட்டளையு)ம் அவனுடைய தூதரு(டைய வழிகாட்டலு)ம் மறுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா என்ன? (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 127)


அடிப்படை - 13


மார்க்கத்தின் முன்னோடி, இறையச்சம் நிறைந்தவர், பேணுதல் மிக்கவர், போராட்டவாதி என்றெல்லாம் நிரூபிக்கப்பட்ட சான்றோர் பெருமக்கள், அறிஞர்கள், இமாம்கள் ஆகியோரின் சின்னச் சின்ன சறுக்கல்களும் வழுக்கல்களும் அவர்களின் நற்செயல்கள் மற்றும் மாண்புகள் எனும் பெருவௌ¢ளத்தால் வழிந்தோடிப் போய்விட்டன என்பது நமது சிந்தனையில் எப்போதும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

அத்துடன் ஒப்பீட்டு அளவில் அத்தகைய மாமேதைகளின் அறிவு ஞானத்தோடு நமது அறிவின் கொள்திறன் என்ன என்பதையும் நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவசரக் கோலத்தில் மார்க்கத் தீர்ப்புகளை நாம் அள்ளித் தெளித்துவிடக் கூடாது.

இமாம் சுபுகீ (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1370) கூறினார்கள்: கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த இமாம்களுடன் நாம் ஒழுக்கம் தவறாத நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களிடையே நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளில் நாம் மூழ்கிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் சமூகத்தை வழிநடத்திய பேரறிஞர்கள் ஆவர். அவர்களின் கூற்றுகளுக்குப் பல கருத்துகள் இருக்கலாம். அவற்றில் சில புரியப்படாமல்கூட போயிருக்கலாம். எனவே, அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் நாம் அமைதி காப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அவற்றில் உண்மை எதுவோ அதை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். (தபகாத்துஷ் ஷாஃபிஇய்யா அல்குப்ரா)


அடிப்படை - 14


வழிதவறிய இஸ்லாமியக் கொள்கைப் பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கும் புரிதலுக்கும் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவற்றின் ஊடாக எது சரியான வழிமுறையோ அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மட்டும் இன்றைக்கு நாம் அவற்றில் கவனம் செலுத்தினால் போதுமானது. அதிலேயே மூழ்கி நேரத்தைப் போக்க வேண்டியதில்லை. அந்த அளவின் மூலமே நம் சமூகத்தின் மூத்த தலைமுறையின் முன்னோடி அறிஞர்கள் (சலஃப்) வழிதவறிய பிரிவினர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர்.

அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் தற்கால வழிதவறிய பிரிவினர்களுக்குப் பதிலடி தருவதற்குத் தேவையான அறிவும் ஆற்றலும் நமக்குக் கிடைத்துவிடும். நபிவழியையும் நபித்தோழர்களின் வழியையும் சார்ந்து நிற்கும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவினர் ஒவ்வொரு காலப் பகுதியிலும் தத்தமது காலத்தைய அசத்தியவாதிகளை இவ்வாறே அறிவுபூர்வமாக எதிர்கொண்டுவந்துள்ளனர்.

இன்றைய தினம் வழிதவறிய பிரிவுகளில் நவீனமானவை ஏராளம் உள்ளன. இஸ்மாயீலிய்யா, பஹாயிய்யா, காதியானிய்யா, மாசூனிய்யா, மார்க்சியம் உள்ளிட்ட கொள்கைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவை அனைத்தும் இஸ்லாத்தை உள்ளிலிருந்தும் வெளியிலிருந்தும் கருவறுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.

இருப்பில் இல்லாத, வழக்கொழிந்துபோய்விட்ட ஆதிகாலப் பிரிவுகளைவிட இந்த நவீனப் பிரிவுகளே இன்றைய தினம் நாம் எதிர்கொள்வதற்கு மிகவும் அவசியமானவை. இந்த நவீனப் பிரிவுகளுக்கும் ஆதிகாலப் பிரிவுகளுக்கும் இடையிலான ஒற்றுமை அம்சங்களை அறிந்துகொள்ளும் அளவுக்குப் பழைய பிரிவுகளைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால் போதும். அதற்குமேல் தேவையில்லை.

அவ்வாறே பிறழ் கொள்கைப் பிரிவினர்களைத் தத்தம் காலப் பகுதிகளில் நம்முடைய முன்னோடி அறிஞர் பெருமக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்கி¢ற வழிமுறைகளையும் நாம் கவனிக்க வேண்டும். அவற்றில் நமக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் கிடைத்தால் ரொம்ப நல்லது. இல்லையேல், இல்லாதொழிந்துபோய்விட்ட ஆதிகாலப் பிரிவுகளை நாம் இப்போது தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லை. அவ்வாறு செய்வோமாயின், அது களமே இல்லாமல் போராடுவதாக அமைந்துவிடும்.




இஸ்லாமிய ஒருமைப்பாடு நிறைவேறாத கனவல்ல. எதிர்கால நனவுதான்.
அதை நனவாக்கும் பணியில் அயராது பாடுபடுவோம்.


இறுதியாக


இப்போதைக்கு நாம் ஒன்றை மட்டும் உரத்த குரலில் சொல்ல விழைகிறோம்: நாம் கடைப்பிடிக்க வேண்டிய மேற்கண்ட சத்தியங்கள்தான், நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி நடந்தோரின் (அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ) வழிமுறையாகும். நல்லோர்களான முன்னோடி அறிஞர்களின் (சலஃபுஸ் ஸாலிஹீன்) போக்கும் இதுவாகவே அமைந்திருந்தது. ஆதாரபூர்வமான செவிவழிச் சான்றுகளும் அப்பட்டமான அறிவுசார் ஆதாரங்களும் இதையே நிலைநிறுத்துகின்றன.

அறிவு ஞானம் என்பது பாவத்திற்கு அப்பாற்பட்ட அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் கிடைக்கலாம். சான்றுகள் மூலம் நிரூபணமான கூற்றுகளிலிருந்தும் கிடைக்கலாம். உண்மையாளர் எனச் சான்றளிக்கப்பட்ட ஒருவரின் கூற்றும் சான்றாதாரங்களிலிருந்து ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்த முடிவுகளும்கூட அறிவு ஞானத்தைத் தரக்கூடியவைதான். இதையெல்லாம் நாம் கண்மூடித்தனமாக மனம்போன போக்கில் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ் நாடினால் நம் கருத்துகள் மெய்ப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இறைவா! நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக. நீ யார்மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழியே அது. அவர்கள் உனது சினத்திற்கு ஆளானவர்கள் அல்லர். வழிதவறிச் சென்றவர்களும் அல்லர்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

பயங்கரவாதிகள் யார்?


சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் கல்வியாளர் ஒருவரிடம் இஸ்லாம் குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் அதற்கு அளித்த அருமையான பதில்:

முதல் உலகப் போர்
v  சுமார் இருபது மில்லியன் பேரைக் காவு கொண்ட முதலாம் உலகப் போரைத் தொடங்கியவர்கள் யார்? முஸ்லிம்களா?



இரண்டாம் உலகப் போர்
v  இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு உள்ளிட்டவற்றுடன் வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச் சேத்த்தை ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போரைத் தொடங்கியவர்கள் யார்? முஸ்லிம்களா?



v  ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்கள் சுமார் இருபது மில்லியன் பேரைப் படுகொலை செய்தவர்கள் யார்? முஸ்லிம்களா?

v  ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டுகளை வீசி மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் யார்? முஸ்லிம்களா?



அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோஷிமா


v  வட அமெரிக்காவில் 100 மில்லியனுக்கும் அதிகமான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் யார்? முஸ்லிம்களா?


v தென் அமெரிக்காவில் 50 மில்லியனுக்கும் கூடுதலான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் யா? முஸ்லிம்களா?


v  சுமார் 180 மில்லியன் ஆப்ரிக்க கருப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து அவர்களில் 88 சதவீதம் பேர் மரணம் அடைந்தபோது அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அட்லாண்டிக் பெருங்கடலில் வீசியெறிந்தவர்கள் யார்? முஸ்லிம்களா?




இந்த மனிதகுல பேரழிப்புகள் எவற்றிலும் முஸ்லிம்களுக்கு அறவே பங்கில்லை. அனைத்துக்கும் முதலில் பயங்கரவாதம் என்பதன் பொருளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


முஸ்லிம் அல்லாத ஒருவர் ஒரு தவறு செய்தால் அதைக் குற்றம் (கிரைம்) என்று சொல்லும் உலக நாடுகளும் ஊடகங்களும் அதையே ஒரு முஸ்லிம் செய்தால் அதைப் பயங்கரவாதம் (டெர்ரரிசம்) என்கின்றன. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

திங்கள், 16 ஜூலை, 2012

தொலைக்காட்சியைத் தொலையுங்கள்


- சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,



இன்றைக்கு நாம் மின்னணு சாதனங்கள் பலவற்றை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்திவருகிறோம்.முற்காலத்தில் மனித அறிவுக்கு எட்டாதவை அவை. கால மாற்றத்தில் மனித அறிவில் ஏற்பட்ட அபார வளர்ச்சியால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தில் பயன்பாட்டுக்கு வரலாயின. அவை யாவும் மனித சமூகத்தின் நலன் கருதி வழங்கப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடைகள் ஆகும். பேருந்து, தொலைபேசி, குளிர்சாதனப் பெட்டி, மின் அடுப்பு, கணினி உள்ளிட்ட பொருட்களை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.



ஒரு காலத்தில் சில நூறு கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு பல நாட்கள் நெடும் பயணம் செய்ய வேண்டிய சிரமத்தை இன்றைய பேருந்து, இரயில், விமானம் ஆகியவை பெருமளவில் குறைத்துவிட்டன. ஊரில் இருந்து புறப்பட்டுப் போனவர்களிடமிருந்து தகவல் வந்து சேர்வதற்குப் பல நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலையை இன்றைய தொலைபேசிகளும் அலைபேசிகளும் அடியோடு மாற்றிவிட்டன. இப்படியே பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.



இந்த அருட்கொடைகளுக்காக அவற்றைத் தந்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அப்போதுதான் அவற்றில் இருந்து நாம் அனுகூலங்களைப் பெற முடியும். அவை தொடர்ந்து நமக்குப் பயன் தந்துகொண்டும் இருக்கும். இல்லையேல் அவை நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடலாம்.

அத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் காட்சி ஊடகம் எனப்படும் சின்னத்திரையும் வண்ணத்திரையும். அதாவது தொலைக்காட்சியும் சினிமாவும். இவை அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளம் எனலாம். கல்வி, தொழில் நுட்பம், ஆன்மிகம், தகவல் தொடர்பு போன்ற நன்மைகளை இவற்றின் மூலம் நாம் பெற முடிகிறது. அவற்றுடன் நமது அணுகுமுறை எவ்வாறு அமையுமோ அதைப் பொறுத்தே அவை நன்மையா தீமையா என்று முடிவு செய்ய முடியும்.



ஆனால், இது போன்ற நன்மைகளைவிட ஆபாசம், வன்முறை, கொலை, கொள்ளை, விபசாரம் போன்ற தீய செயல்களுக்கு வித்திடும் நிகழ்ச்சிகளில்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் கவனம் செலுத்துகின்றன. மதுவுக்கும் சூதாட்டத்திற்கும் இறைவன் சொல்கின்ற அதே அளவுகோல் - அதாவது கால் பங்கு நன்மை முக்கால் பங்கு தீமை என்பது தொலைக்காட்சிக்குக் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது.

நமது நேரத்தை தொலைக்காட்சி விழுங்கிவிடுகிறது. அறிவை மழுங்கடித்துவிடுகிறது. பண்பாடுகளையும் ஒழுக்க மாண்புகளையும் சிதைத்துவிடுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மிகச் சில நிகழ்ச்சிகள் நீங்கலாக மற்ற நிகழ்ச்சிகள் யாவும் பெரும் சீரழிவை ஏற்படுத்துகின்றன.

தொலைக்காட்சியின் பயன்கள்


தொலைக்காட்சியினால் ஒரு பயனும் கிடையாது என்று அடியோடு மறுப்பதற்கில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல நிகழ்ச்சிகளும் காண முடிகிறது.

• செய்திகளை தெரிந்துகொள்கிறோம். (ஆனால், அதிலும் இயக்கம், கட்சி சார்பு பிரச்சினைகள் உண்டு.)



• டிஸ்கவரி, அனிமல் பிளாண்ட் போன்ற சேனல்களில் இறைவனின் படைப்பாற்றலைக் கண்டு வியக்க நேர்கின்ற நிகழ்ச்சிகள் சில அவ்வப்போது வருகின்றன.

• பெரும்பான்மை சேனல்களில் காலை வேளையில் மிகச் சில பயனுள்ள நிகழ்வுகள் வழங்கப்படுகின்றன.

• முழுக்க முழுக்க பயனுள்ள நிகழ்வுகளை மட்டுமே தயாரித்து வழங்கும் சேனல்களுக்கு நம்மிடம் வறவேற்பே கிடையாது. அப்படியான சேனல் அரிதிலும் அரிது. (சஊதி அரேபியாவின் மக்கா, மதீனா சேனல்களைப் போல.)

தொலைக்காட்சியில் தொலைந்துபோகும் சமூகம்


இன்றைய குடும்பங்கள் தொலைக்காட்சிப் புதைகுழியில் சிக்கிச் சிதைந்துவருகின்றன. சிறியவர் பெரியவர் வேறுபாடின்றி அனைவரும் அதன் முன்னால் தமது பொன்னான நேரத்தைக் காவு கொடுத்துவருகின்றனர். நிகழ்ச்சியின் நடுவில் யார் வந்தாலும் அவர்களைத் தொந்தரவாகவே பார்க்கின்ற மனோபாவம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முக்கியமான நிகழ்ச்சி(?) ஓடிக்கொண்டிருக்கும்போது உறவினர்களோ நண்பர்களோ வந்துவிட்டால் அவர்கள் வேண்டா விருந்தாளியாகவே வரவேற்கப்படுவர். தொலைக்காட்சியை அணைத்துவிடாமல் வந்தவர்களை உட்காரச் சொல்லி அவர்களிடம் கடனுக்காக ஓரிரு வார்த்தைகளைப் பேசிவிட்டு மறுபடியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவர். அடுத்தக்கட்ட விசாரிப்பு, விருந்தோம்பல் எல்லாம் அடுத்தடுத்த சிறிய விளம்பர இடைவேளைகளின்போதுதான்.

காலையில் அவசர அவசரமாக எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, சில நேரங்களில், “சாரி, லேட்டாயிடுச்சு, இன்னைக்கு பகல் சாப்பாடு வெளியில் பாத்துக்கோங்க” என்று சொல்லி புருஷனை அலுவலுக்கு அனுப்பிவிட்டு வேகவேகமாக குக்கரை அடுப்பில் ஏற்றிவிட்டு, டி.வி. சீரியலில் மூழ்கத் தொடங்கும் பெண்கள் இரவுச் சாப்பாட்டிற்கு கணவர் வந்தாலும், “இதோ, இருங்க, இநத நாடகத்தை முடிச்சிட்டு வந்திடுறேன்” என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது எதார்த்தம். அடுப்பில் வேகவைத்த உணவு சமயத்தில் அடிப்பிடித்து கரிந்த வாடை வந்த பிறகுதான் பலருக்கு நினைவே வருகிறது.

தொலைக்காட்சி என்பது நமது நேரத்தை விழுங்கும் இரத்தக் காட்டேறி. நமது நேரத்திற்கு நாமே வைத்துக்கொள்ளும் வெடிகுண்டு என்பதைப் பின்வரும் புள்ளிவிபரத்தின் மூலம் எளிதில் விளங்கலாம்:

ஓர் அமெரிக்கக் குடிமகன் சராசரியாக தினந்தோறும் மூன்றேமுக்கால் மணி நேரம் டி.வி. பார்க்கிறான். ஒருவரின் அறுபத்தைந்து ஆண்டு கால ஆயுளில் சுமார் ஒன்பது ஆண்டுகள் தொலைக்காட்சிக்கு முன்னால் கழிகிறது. இப்படி அவன் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக இருபது லட்சம் விளம்பரங்களைக் காண நேர்கிறது. இதுவே மிதமிஞ்சிய ஷாப்பிங் அடிமைத்தனத்திற்குத் தங்களை ஆட்படுத்தியதாக அவர்களில் 82 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்றால் அது இதுதான்.

ஒரு குழந்தை வாரத்திற்கு 1680 நிமிடங்களை (28 மணி நேரம் - சராசரியாக நாளொன்றுக்கு 4 மணி நேரம்) தொலைக்காட்சியில் கழிக்கிறது. இதனால் பெற்றோருடன் பேச மிகக் குறைந்த நேரத்தைத்தான் (38 நிமிடங்கள் - சராசரியாக நாளொன்றுக்கு 6 நிமிடத்திற்கும் குறைவு) அக்குழந்தை பெறுகிறது.

சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் ஓராண்டுக்கு 900 மணிநேரத்தை (150 பாடநாட்கள் X 6 பாடவேளைகள் = 900 மணிநேரம்) கழிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தொலைக்காட்சிக்கு முன்னால் கழிக்கின்ற நேரமோ ஆண்டுக்கு 1023 மணிநேரம் (சராசரியாக நாளொன்றுக்கு 2 மணிநேரத்திற்கும் கூடுதல் - 365.25X2.8=1022). உயர்நிலை வகுப்பை முடிக்கும் மாணவன் ஒருவன் 16 ஆயிரம் மணிநேரம் முதல் 19 ஆயிரம் மணிநேரம் வரை (சுமார் 2 ஆண்டுகள்) தொலைக்காட்சி பார்த்த அனுபவம் பெற்றவனாக அப்பருவத்தை அடைகிறான். (ஒற்றுமை மாத இதழ், ஜூன் - 2001)

இது அமெரிக்காவின் நிலவரம்தானே என்று நினைக்காதீர்கள். நாமும் அப்படித்தான் இருக்கிறோம். பின்வரும் புள்ளி விபரத்தைப் பாருங்கள்:
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்களே அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். (அதனால்தானோ என்னவோ சன் நெட்வொர்க் நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே வளைத்து வளைத்து சேனல்களைத் தொடங்குகிறது. மற்ற மாநிலங்களைக் கண்டுகொள்வதில்லை.)

தென்னிந்தியர்களிலும் தமிழர்களே முன்னணியில் உள்ளனர். தமிழக மக்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஆறரை எபிசோடுகளைப் பார்க்கின்றனர். இதுவே கேரளத்தில் நான்கு எபிசோடுகளாக உள்ளது. பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் கேரளம் கர்நாடகத்தைவிட தமிழகமே முன்னிலை வகிக்கிறது. அதிலும் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர். (தனியார் நிறுவன புள்ளி விபரம்)

ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் சாரம்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குடும்பம், உறவுகள், மானமரியாதை, வெட்க உணர்வு, இறைபக்தி, நல்லொழுக்கம், மனிதாபிமானம் ஆகிய அடிப்படைகளை அவசியம் அற்றவையாகவும் பிற்போக்குத்தனங்களாகவுமே சித்தரிக்கின்றன. கண்டவனோடு காதல் வயப்படுவதையும் பெற்றோரை எதிர்த்து குடும்ப கௌரவத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு அந்நியனோடு ஓடிப்போவதையும் படிக்கும் பருவத்தில் பாய் ஃபிரண்ட் கேர்ள் ஃபிரண்ட் அவலங்களையும் நியாயப்படுத்துகின்றன.

கட்டுப்பாடுகளற்ற முற்றிலும் அவிழ்த்துவிடப்பட்ட சுதந்திரத்தைப் பிறவிப் பயனாகவும் வாழ்க்கையின் இலட்சியமாகவும் காட்டுகின்றன. இசை, சங்கீதம், ஆண்-பெண் பாலினக் கவர்ச்சி, இரட்டை அர்த்தம் தொனிக்கும் கீழ்த்தரமான பாடல்கள், பாலியல் உணர்ச்சியைக் கிளறும் அருவருப்பான ஆடல்கள், மூடநம்பிக்கைகளை வளர்க்கும் நிகழ்ச்சிகள் போன்றவையே தொலைக்காட்சியின் முழுநேரப் பணிகள் ஆகும்.

நெடுந்தொடர்கள் (மெகா சீரியல்)


நெடுந்தொடர்களின் மையக்கரு பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே அமையும். பெண்மையின் பெருமையை விளக்க அல்ல. அவர்களின் இயல்பான பலவீனங்களைக் கொச்சைப்படுத்தத்தான்.

• பொறாமையின் வடிவமாய் சில பெண்கள்
• கொடுமைக்காரிகளாய் சில பெண்கள்
• பழிக்குப் பழி வாங்கும் அரக்கிகளாய் சில பெண்கள்
• அரிவாளை ஏந்தி கொல்லத் துடிக்கும் தீவிரவாத உருவில் சில பெண்கள்
• கல்யாணமான சம்சாரியை வளைத்துப்போடும் இழிவான முயற்சியில் சில பெண்கள்
• வஞ்சனை, சூது, துரோகம் போன்ற வக்கிர எண்ணங்களின் கோர வடிவமாய் சில பெண்கள்
• எப்போதுமே அழுது வடியும் அசமந்தங்களாய் சில பெண்கள்

இப்படியாக நீளும் நெடுந்தொடர்களே அதிகம். அதிலும் மாமியார்-மருமகள், நாத்தனார் உறவுகள் என்றால் கீரியும் பாம்புமாகத்தான் இருக்க வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தியதில் இந்த நெடுந்தொடர்களுக்குப் பெரும் பங்குண்டு. மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் கொல்லத் திட்டமிடுவார்கள். இதில் நாத்தனார் மாமியாருக்கு உடந்தையாக இருப்பாள்.

ஏன், மாமியாரைப் பெற்ற தாயாக மதிக்கின்ற மருமகள்களும் மருமகளைப் பெற்றெடுத்த பிள்ளையாகக் கருதும் மாமியார்களும் உலகத்தில் இல்லவே இல்லையா? பிறகேன் குடும்பச் சண்டையை மட்டுமே வளைத்து வளைத்துக் காட்ட வேண்டும்? இதைப் பெண்களே மெய்மறந்து பார்ப்பது மகா மட்டமான ரசனை. இவை ‘நெடுந்தொடர்கள்’ அல்ல. ‘கொடுந்தொடர்கள்’. இவற்றை ஒளிபரப்பும் கருவி ‘தொலைக்காட்சிப் பெட்டி’ அல்ல. ‘கொலைக்காட்சிப் பெட்டி’.

தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ‘குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்’ தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு சமூகநல வாரியம் சார்பில் கடந்த 11.07.2009 அன்று சென்னையில் ஒரு பயிலரங்கு நடந்தது. அதில் அப்போதைய சமூகநல வாரியத்தின் ஆணையர் என்.பி. நிர்மலா பேசுகையில், “தொலைக்காட்சியில் நாள் முழுதும் ஒளிபரப்பப்படும் தொடர்களில், சிறிய பிரச்சினைகள் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. இதனால், இயல்பு வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் பெரிதாக ஆக்கப்பட்டு, தற்போது விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரித்துவிட்டன” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்தக் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் கடந்த 28.10.2006 முதல் அமலுக்கு வந்தது. இதுவரை இச்சட்டத்தின் கீழ் 2376 வழக்குகள் தமிழகத்தில் பதிவாகி சமூகநலத்துறையின் விசாரணைக்கு வந்து 139 வழக்குகள் மட்டுமே சமரசமாக முடிந்துள்ளன. 920 வழக்குகள் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன” என்ற புள்ளி விபரத்தையும் கூறினார். (தினமணி நாளிதழ் - 12.07.2009)

இதில் பதிவாகாத வழக்குகள் எவ்வளவோ? பதிவான வழக்குகளில் ஆகக் குறைந்த சதவீதமே சமரசம் ஆகின்றன. மற்றவை பிரிவில்தான் முடிகிறது என்று தெரியவருகிறது. இது தொலைக்காட்சித் தொடர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் சில மட்டுமே.

தொலைக்காட்சி விளம்பரங்கள்


- சோப்பு, பிளேடு போன்றவற்றின் விளம்பரங்களில் பெரும்பாலும் அருவருக்கத் தக்க அரைநிர்வாண கோலமே அடிக்கடி காட்டப்படுகிறது.

- ஜீரணிக்க இயலாத விளம்பரங்களும் வருவதுண்டு. ஒரு சிறுவன் கார் பொம்மையைத் தொலைத்துவிடுவான். அம்மாவிடம் வேறு கார் கேட்பான். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் விருந்தாளி ஒருவர், “நான் வாங்கித் தருகிறேன்” என்பார். சிறுவன், “நீங்கள் ஏன் எனக்கு வாங்கித் தர வேண்டும்? நீங்கள் என்ன எனக்கு அப்பாவா?” என்று கேட்பான். விருந்தாளி, “அப்பா தொலைஞ்சி போயிட்டா?” என்று கேட்பார். சிறுவன் முழிப்பான். விருந்தாளி, “அப்பா தொலைஞ்சி போயிட்டாலும் உனக்குக் கார் நான் வாங்கித் தருவேன்” என்பார். அந்த நேரம் பார்த்து ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி பெயர் வரும்.
இது எவ்வளவு அபத்தமான விளம்பரம் பாருங்கள். “அப்பா தொலைஞ்சிபோயிட்டா” என்றால் அப்பா செத்துப்போயிட்டா என்று பொருள். ஒரு குழந்தையிடம் இதைச் சொல்வது எவ்வளவு பெரிய குரூரம். அப்பாவே கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன் என்ற எண்ணத்தை, இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒரு குழந்தையின் மனதில் விதைப்பது உலக மகா மோசடி இல்லையா?

- விளம்ரங்களால் நுகர்வு வெறி திட்டமிட்டு மக்களிடம் திணிக்கப்படுகிறது. தேவையே இல்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் நோய் இன்றைக்கு மக்களைப் படாதபாடு படுத்திவருகிறது. பல பேரிடம் உங்கள் பொழுதுபோக்கு என்ன என்று கேட்டால், ஷாப்பிங் என்றே சொல்கிறார்கள். அதாவது தேவைக்கு வாங்கியதெல்லாம் அந்தக் காலம். பொழுதைப் போக்குவதற்காகவே கடைகளுக்குப் பொருள் வாங்கப்போவது என்றால் அது நுகர்வு வெறியின்றி வேறென்ன? மிதமிஞ்சிய ஷாப்பிங் அடிமைத்தனத்திற்குத் தங்களை ஆளாக்கியது தொலைக்காட்சி வர்த்தக விளம்பரங்களே என்று அமெரிக்கர்கள் 82 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மற்ற நிகழ்ச்சிகள்


- கேம் ஷோக்கள் (தங்க வேட்டை, ஒரு கோடி வெல்லலாம், ஒரு வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கை, குரோர்பதி, ஜாக்பாட் போன்றவை). இவை செல்வத்தின் மீதான மோகத்தையும் வெறியையும் உருவாக்கவே வழி வகுக்கின்றன. நிகழ்ச்சியின் முடிவில் நேயர்களை எஸ்.எம்.எஸ். அனுப்பச் சொல்லி அவர்களிடமிருந்து காசு கறக்கும் கயவாளித்தனமும் இதில் உண்டு. இதை நாம் கண்டுகொள்வதில்லை.

- சினிமா படங்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள். இவை எல்லாமே கதையைவிட சதைக்கே முக்கியத்துவம் தருபவை. கேவலம், படிக்கும் குழந்தைகளையும் இளைஞர்களையும் அசைவப் பாட்டுகளுக்கு அருவருப்பான முறையில் ஆடவும் பாடவும் வைத்து மதிப்பெண் வழங்குகிறார்கள்.

- நகைச்சுவை நிகழ்ச்சிகள். பெரும்பாலும் உதைப்பது, நையப்புடைப்பது, அடிவாங்குவது, உளறுவது, போதையில் தள்ளாடுவது, நையாண்டி செய்வது, ஏமாறுவது, ஏமாற்றுவது, விரசமாகப் பேசுவது உள்ளிட்டவையே நகைச்சுவை காட்சிகளாகக் காட்டப்படுகின்றன.

- விவாத நிகழ்வுகள், டாக் ஷோ. இவற்றில் பெரும்பாலும் காதல், பாய் ஃபிரண்ட், கேர்ள் ஃபிரண்ட், ஷாப்பிங், அழகு, சினிமா, நகைகள் போன்றவையே விவாதப் பொருள்களாக எடுக்கப்படுகின்றன. மிகச் சில நேரங்கள் தவிர பெரும்பாலும் அந்த விவாதங்கள் பயனற்றவையாகவே முடிந்துவிடுகின்றன. சில நேரங்களில் தவறான வழிகாட்டல்களுடன் அந்த விவாதங்கள் முடிக்கப்படுவதும் உண்டு.

தொலைக்காட்சியின் பாதிப்புகள்


சிறுவர்களிடம் வீட்டை விட்டு ஓடிப்போகும் மனநிலை சமீப காலமாகப் பெருகிவருகிறது. படித்துப் பட்டம் பெற்று பெரும் பெரும் பொறியாளர்களாகவும் கைதேர்ந்த மருத்துவர்களாகவும் நாடாளும் அதிகாரிகளாகவும் சமூகப் பணியாற்ற வேண்டிய வருங்கால தலைமுறை சினிமா போதையால் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திக்குத் தெரியாமல் திண்டாடிவருகிறது.

“வளரிளம் பருவத்தினரிடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத்திரை தொடர்களும் வண்ணத்திரையும்தான் காரணம். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போதல் பெரும்பாலும் நடக்கிறது” என்று தினமணியில் (28.05.2004) வாசகர் கடிதம் ஒன்று வந்திருந்தது. சினிமாவில் காட்டப்படும் அதிஉயர் ரகக் கனவு வாழ்க்கை நமக்கு நனவாகிவிடாதா என்ற விளிம்பு நிலை மக்களின் தேட்டமே அவர்களின் வாழ்க்கை சூனியமாவதற்குக் காரணமாகிவிடுகிறது.

தொலைக்காட்சியின் விபரீதத்தை குமுதம் வாசகி விஜயலட்சுமி தமது சொந்த அனுபவத்தின் மூலம் பின்வருமாறு விளக்குகின்றார்: “சன் டி.வி.யில் ஒளிபரப்பான இந்திரா தொடரை நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்ப்பது வழக்கம். ஒருநாள் என்னுடைய ஒன்றரை வயதுப் பையன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு சமயலறையில் ஆ, ஊ என்று சப்தம் கொடுத்துக்கொண்டு தனது ஐந்து வயது அக்காவை மிரட்டிக்கொண்டு இருந்தான். இதைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். வேறொன்றுமில்லை. முந்தைய நாள் இரவு ‘இந்திரா’ தொடரில் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தோம். அப்போது எங்கள் அருகில் என் பையனும் பொண்ணும் அமர்ந்து அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தொலைக்காட்சியின் விளைவு... அடக் கடவுளே.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் குமார் என்பவரின் மகன், 13 வயதே ஆன ஏழாம் வகுப்பு மாணவன் வினித் தொலைக்காட்சியில் மேஜிக் ஷோ பார்த்தான். வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பிடிக்கச் செய்யும் சாகச நிகழ்ச்சி அது. அவனும் அதைப் போன்றே முயன்று பார்த்தான். விளைவு, தீயில் கருகி மரணமானான்.

சாகசம் என்ற பெயரால் நடத்தப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளின் இடையே, “இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்க வேண்டாம்” என்று போடுகிறார்கள். இது, “புகை பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு” என்ற சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புற விளம்பரத்திற்குச் சமமானதே.

இதனால்தான் அந்தரத்தில் பறக்கின்ற சக்திமானைப் பார்த்து அதைப் போன்றே முயன்று மேலே இருந்து குதித்து கைகால் முறிந்த சிறுவர்கள் பலர். ஜெட்டிக்ஸ் சேனல் பார்த்து சாகசம் செய்ய முயன்று அடிபட்டோரும் உண்டு.
இவையன்றி, சின்னத்திரை மற்றும் வண்ணத்திரையால் கலாசாரப் பாதிப்பு, பண்பாட்டுச் சிதைவு ஆகியவை ஏற்படுகின்றன. காசு பணம், நேரம், மின்சாரம் ஆகியவை பாழாகின்றன. மனித உழைப்பு தேக்கமடைந்து நாட்டின் உற்பத்தி பாதிக்கிறது. (கிரிக்கெட் ஒளிபரப்பு என்றால் கேட்கவே வேண்டியதில்லை.)

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கிறது. கண்பார்வைக் கோளாறு, உடல் பருமன் ஆகியவை ஏற்படுகின்றன. (இரவில் உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்குமுன் தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும் என்ற அறிவிப்பு மிகவும் கவனிக்கத் தக்கது.)

மேலும், உறவு, நட்பு என்ற பல்வேறு மதிப்பு மிக்க தொடர்புகளை இழக்க வேண்டிய அவலமும் நேர்கிறது. பெற்றோருடன் பிள்ளைகளும், பிள்ளைகளுடன் பெற்றோரும் பேசுகின்ற நேரம்கூட தொலைக்காட்சியால் குறைந்துவிடுகிறது. மற்ற உறவுகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

எல்லா விதமான தீமைகளையும் கற்றுத் தரும் செய்முறை பயிற்சிக்கூடமாகவும் இந்தச் சின்னத்திரையும் வண்ணத்திரையும் அமைந்துள்ளன. அல்லாஹ்வின் மகத்தானதொரு அருட்கொடை அவனுக்கு வெறுப்பூட்டும் வழியில் பயன்படுத்தப்படும் மாபாதகமும் நடக்கிறது.

கருவுற்ற தாய்மார்கள் காணும் காட்சியும் செவியுறும் சப்தங்களும் கருவில் உள்ள சிசுவைப் பாதிக்கிறது என்பது மருத்துவ உலகின் அறிவுறுத்தல். எனவே, அபத்தங்களும் ஆபாசமும் அடிதடியும் மலிந்த இந்த நாலாந்தர சினிமா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர்கள் பார்த்தாலோ செவியுற்றாலோ அது அவர்களை மட்டுமல்ல அடுத்த தலைமுறையையும் சேர்த்து பாதிக்கும் என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகள் பலவற்றை நாம் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியுமா? ‘குடும்பப் படம்’ என்ற டைட்டிலுடன் சில படங்கள் வருகின்றன என்றால் பல படங்கள் அந்தத் தரத்தில் இல்லை என்றுதானே பொருள்.

இஸ்லாத்தின் பார்வையில் சினிமாவும் தொலைக்காட்சியும்


இஸ்லாமியப் பார்வையில் சினிமாவும் தொலைக்காட்சியும் தடை செய்யப்பட்டவை என்பதைப் பின்வருமாறு பல கோணங்களில் புரிந்துகொள்ள முடியும்:

1. இஸ்லாமியச் சட்ட ஆய்வாளர்கள் (முஜ்தஹிதூன்) மற்றும் மார்க்கச் சட்ட மேதைகள் (ஃபுகஹா) ஆகியோரின் ஒருமித்த கருத்துப்படி இஸ்லாத்தின் பிரதான நோக்கங்கள் ஐந்து ஆகும். அவை, மார்க்கத்தைப் பாதுகாத்தல், அறிவைப் பாதுகாத்தல், உயிரைப் பாதுகாத்தல், அடுத்த தலைமுறையைப் பாதுகாத்தல், பொருளைப் பாதுகாத்தல் ஆகியன ஆகும்.

திருக்குர்ஆன் வசனமாகட்டும், நபிமொழிகள் ஆகட்டும் அவற்றிலிருந்து பெறப்பட்ட மார்க்கத்தின் மூலாதாரச் சட்டமாகட்டும் அவையனைத்துமே இந்த ஐந்து விஷயங்களைப் பாதுகாப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கும். இஸ்லாம் ஒன்றைக் கட்டளையிட்டாலோ தடுத்தாலோ அதற்கு இந்த ஐந்தில் ஒன்றே நோக்கமாக இருக்க முடியும்.

திருமணம் செய்துகொள், நியாயமாக வணிகம் செய், திருடாதே, பாலியல் ஒழுக்கம் மீறாதே போன்ற கட்டளைகளுக்கும் தடையுத்தரவுகளுக்கும் மேற்கண்ட ஐந்து நோக்கங்களில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவையோதான் காரணமாக இருக்கும்.

அந்த வகையில் இன்றைய சின்னத்திரை வண்ணத்திரை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் பெரும்பாலும் பண்பாட்டுச் சிதைவையும் மரியாதைக் குலைவையும் பாலியல் ஒழுக்க மீறல் பரவலையுமே மையமாகக் கொண்டுள்ளன. எனவே, அவற்றைப் பார்ப்பதும் கேட்பதும் தடைசெய்யப்பட்ட செயல் - ஹராம் ஆகும். ஒருவரின் மானமரியதையும் குடும்ப கௌரவமும் காக்கப்பட வேண்டும் என்பதே இதற்குப் பிரதான காரணம்.

2. “பிறர் தொல்லை அடையக் காரணமாக இருக்கக் கூடாது (லா ளரர). பிறருக்குத் தொல்லை தரவும் கூடாது (வலா ளிரார)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்)

அதாவது சுய இலாபம் கருதிச் செய்யப்படும் ஒரு வேலையில் திட்டமிடாமலேயே பிறருக்குத் தொல்லை நேர்ந்தால் அது ளரர் எனப்படும். அதுவும் கூடாது. தனக்கு இலாபமே இல்லாவிட்டாலும் பிறருக்குத் தொல்லை தருவதையே நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் செயல் ளிரார் எனப்படும். அதுவும் கூடாது.

புகை பிடித்தல், கழிவுநீரை ஆறு, குளம் போன்ற பொது நீர்நிலையில் கலக்கவிடல், ரயில்வே வரிசைகள், ரேஷன் வரிசைகளை மீறுதல் போன்றவற்றை முந்தையதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தச் செயல்களில் சுய இலாபமே பெரும்பாலும் நோக்கமாக இருக்கும். இருப்பினும் அவற்றால் பிறருக்குத் தீங்கு நேர்கிறது. எனவே, அது ளரர் ஆகும்.

ரயிலைக் கவிழ்க்கச் சதி செய்தல், வெடிகுண்டு வைத்தல் போன்றவற்றை இரண்டாவதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவற்றால் சம்பந்தப்பட்டவருக்கு நோக்கம் பிறரை வதைப்பது மட்டுமே, அவை தமக்குப் பாதகமாக முடிந்தாலும் சரி. இதுவே ளிரார் ஆகும். இந்த இரு வகையிலும் பிறருக்குத் தொல்லை தரலாகாது என்பதே மேற்கண்ட நபிமொழியின் கருத்தாகும்.

அந்த வகையில், இன்றைய சின்னத்திரை வண்ணத்திரை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கட்டுப்பாடற்ற நிலையையும் ஒழுக்கக் கேட்டையுமே முன்னிலைப்படுத்துகின்றன. சமூகத்தில் பாலியல் உணர்ச்சிகளைக் கிளப்பிவிடுகின்றன. அதனால் குடும்பத்திலும் சமூகத்திலும் விளையும் தீங்குகள் சொல்லி மாளாது.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தமட்டில் அவன் தனது குடும்பத்தின் சமய நம்பிக்கையையும் ஒழுக்க விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ளவன். எல்லா விதமான தீங்குகளில் இருந்தும் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளவன். எனவே, தீங்குகளுக்கு அச்சாரமிடுகின்ற தொலைக்காட்சியை வாங்குவதும் அதை வீட்டில் கொண்டுவந்து வைப்பதும் இந்த நபிமொழியின்படி தடுக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை இதன் வாயிலாகவும் எளிதில் விளங்கலாம்.

3. இஸ்லாமிய மார்க்கச் சட்ட மூலாதாரவியலில் (உஸூலுல் ஃபிக்ஹ்) ‘சத்துத் தராயிஉ’ என்றொரு அடிப்படைச் சட்டம் உண்டு. ‘சந்து பொந்துகளை’ அடைத்தல் என்று அதற்குத் தமிழாக்கம் தரலாம். “அனுமதிக்கப்பட்ட ஒன்று (ஹலால்), அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றுக்கு (ஹராம்) வழிகோலுமானால் அதுவும் அனுமதி மறுக்கப்பட்டதாகும்” என்பதே அதற்கான விளக்கம் ஆகும். அதாவது ஹராமுக்குப் போய்ச் சேரும் வழியை அடைத்தல் என்பது கருத்தாகும்.

“அல்லாஹ்வையன்றி அவர்கள் (வேறு) யாரை(த் தெய்வங்களாக) அழைக்கின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அவ்வாறு (ஏசினீர்கள்) ஆயின், அவர்கள் அறியாமையால் அத்துமீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்” என்று திருக்குர்ஆன் (6:108) கூறுகிறது. பிற தெய்வங்களை ஏசுவது அடிப்படையில் தவறன்று. ஆயினும், அல்லாஹ் ஏசப்படுவதற்கு அது காரணமாகிறது என்பதால் அதுவும் தடை செய்யப்பட்டது என்பது இந்த வசனத்தின் கருத்தாகும். இந்த வசனமே ‘சத்துத் தராயிஉ’ எனும் அடிப்படைச் சட்டத்திற்கு ஒரு சான்றாகும்.

அந்த வகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல அனுமதிக்கப்பட்டவை என்றே வைத்துக்கொண்டாலும் அவை மோசமான சீர்குலைவுக்கும் பண்பாட்டுச் சிதைவுக்கும் தரம் தாழ்ந்த நடத்தைகளுக்கும் வழிகோலுவதால் தொலைக்காட்சியை வாங்குவதும் அதைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டதாகும்.

4. தொலைக்காட்சியில் வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆடல், பாடல், இசை ஆகியவற்றுடனேயே ஒளிபரப்பாகிறது. இசை என்பது மார்க்கத்தின் பார்வையில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவர். அவர்கள் விபசாரம் புரிவது, (ஆண்கள்) பட்டுத்துணி அணிவது, மது அருந்துவது, இசைக் கருவிகள் இசைப்பது ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவர். (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம்-5590)
அவ்வாறே பாடகிகளின் குரலைக் கேட்பதும் நடனம் ஆடும் பெண்களைப் பார்ப்பதும் தடுக்கப்பட்ட செயல் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் மதுவருந்துவர். அவர்கள் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டிக்கொள்வர். அவர்களின் தலைகளுக்கு மேல் வாத்தியக் கருவிகளின் இசையும் பாடகிகளின் பாடலோசையும் ஒலிக்கும். அத்தகையோரை அல்லாஹ் பூமியில் புதையுறச் செய்வான். அவர்களில் சிலரை அல்லாஹ் குரங்குகளாகவும் பன்றிகளாவும் உருமாற்றுவான். (இப்னுமாஜா-4010)



ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “இறுதிக் காலத்தில் என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றப்படுவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிமொழிவார்கள் அல்லவா?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், அவர்கள் நோன்பும் நோற்பர்; தொழுவர்; ஹஜ்ஜெல்லாம்கூட செய்வர்” என்றார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! பின் ஏன் அவர்களுக்கு இந்த நிலை?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் வாத்தியக் கருவிகளையும் மேளதாளங்களையும் பாடகிகளையும் பயன்படுத்துவார்கள். மதுவருந்தவார்கள். அந்தக் குடி கூத்து கும்மாளத்திலேயே தூங்கச் செல்வார்கள். மறுநாள் காலை வேளையில் உருமாற்றம் செய்யப்பட்டவர்களாக ஆகிவிடுவர்” என்றார்கள். (இப்னு அபித்துன்யா)

மக்கள் பொதுவாக பார்வைகளைத் தாழ்த்த வேண்டும், பெண்கள் தம் அழகை அந்நியர்களுக்கு வெளிக்காட்டாமல் உடலை முழுமையாக மூடி மறைக்கும்படி பர்தா அணிய வேண்டும் என்கின்ற இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் சினிமாப் படங்களும் அறவே ஒத்துப்போகாது. இந்த வகையிலும் சின்னத்திரையும் வண்ணத்திரையும் ஒதுக்கப்பட வேண்டியவை என்பது மேலும் உறுதியாகிறது.

இப்லீசின் அலங்கார ஆயுதம்


“நான் கட்டாயம் பூமியில் மனிதர்களுக்கு (தவறான வழியினை) அழகு வாய்ந்ததாகக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிதவறச் செய்வேன்” (15:39) என்று திருக்குர்ஆனில் ஒரு வசனம் இடம்பெறுகிறது. இது சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஷைத்தான் அல்லாஹ்விடம் போட்ட சபதம் ஆகும். ஆதமின் புதல்வர்களுக்கு அசிங்கமானவற்றை அழகாக்கிக் காட்ட இப்லீஸ் கையிலெடுத்துள்ள சாதனங்களில் மிக  முக்கியமானது தொலைக்காட்சியும் சினிமாவும் என்று சொல்லலாம்.

சினிமாத் துறையின் சர்வதேச உயர் விருதாகிய ஆஸ்கார் விருது பெற்ற ஆன்டனி குயின் (Antony Queen) சினிமா பற்றிச் சொல்லும்போது, “சினிமா என்பது கொச்சைத்தனம் கோலோச்சும் களம்” (cinema is the area of the vulgarity) என்றார். அதுதான் தொலைக்காட்சி வாயிலாக இடைவிடாமல் பரிமாறப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசடைவது பற்றி நாம் அதிகம் கவலைப்படுகிறோம். நம் வீட்டுக்குமுன் யாராவது குப்பையைக் கொட்டினாலோ டயரைக் கொளுத்தினாலோ கழிவுநீரை ஊற்றினாலோ மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளிக்கிறோம். ஆனால், மனதை மாசுபடுத்தும் சூழலைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நாம் தயாரில்லை. மனதை மாசுபடுத்துவதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் உண்டு.

புறச்சூழல் மாசுபட்டால் அதை அகற்ற மாற்று வழியுண்டு. ஆனால், ஒரு சமுதாயத்தின் மனம் மாசுபட்டால் அந்தச் சமுதாயம் மெல்லக் கொல்லும் நஞ்சை உட்கொண்டதாகப் பொருள். படிப்படியாக அதன் அழிவு நெருங்கிவரும். அதன் நாகரீகம், பண்பாடு, மனிதாபிமானம், நாணம் எல்லாமே காலப்போக்கில் காணாமல் போய்விடும்.

எனவே, கால் பங்கு நன்மை முக்கால் பங்கு தீமை எனும் நிலையில் உள்ள தொலைக்காட்சியை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் அதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும். இதையே இஸ்லாம் நம்மிடம் எதிர்பார்க்கிறது.



நாம் குடியிருக்கும் வீடு அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடை. அது அமைதியும் அருளும் தவழும் இடமாக இருக்க வேண்டும். அதில் அல்லாஹ்வுக்குப் பிடிக்காத சூழலை உருவாக்குவது நமது ஈமானைப் பலவீனப்படுத்திவிடும்.

சனி, 26 நவம்பர், 2011

எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது நிலவட்டுமாக.



ஸூரத்துல் பகரா (பசு மாடு) 31-32 PART 1




2:31 وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ

2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

2:32 قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ

2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.








திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...