புதன், 3 ஏப்ரல், 2013


வகுப்பறையே வாழ்க்கையாக...
சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி, M.A., M.Phil.,

தமிழகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் பேராசிரியராகப் பணி புரிந்து தொண்ணூறுகளில் சில ஆண்டுகள் அதன் முதல்வராகவும் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி பல்லாயிரக் கணக்கான மார்க்க அறிஞர்களை உருவாக்கிச் சாதனை புரிந்த முன்மாதிரி ஆலிம் பெருந்தகை ஒருவரின் ஆசிரியப் பணி குறித்த கட்டுரை இது.

அன்னார் இன்றைய பிரபலமான மார்க்க அறிஞர்கள் பலரின் ஆசிரியர் என்பது மட்டுமல்ல. இன்றைய மார்க்க அறிஞர்கள் அனைவரும் அவர்களின் மாணவர்கள் அல்லது மாணவர்களின் மாணவர்கள் அல்லது மாணவர்களின் மாணவர்களின் மாணவர்கள்... ஆவர். அன்னாரைப் பற்றிய அறிமுகம் நமக்கும் வேண்டும். மார்க்க அறிஞர்கள் பற்றிய பதிவு நம்மிடம் அறவே இல்லை. எதிர்காலப் பதிவுக்கு ஒரு சோற்று பதமாக அமையலாம். அடிப்படையில் இதுவொரு நூலுக்கான மதிப்பாய்வுரை ஆகும்.


மௌலானா, கமாலுத்தீன் ஃபாஸில் பாகவி ஹள்ரத் பெருந்தகை, ரஹ்மத் பதிப்பகத்தின் ஸஹீஹ் முஸ்லிம் வெளியீட்டு விழாவில் நடுவில் நின்று நூலை வெளியிட்டுச் சிறப்பிக்கிறார்கள்.



திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த பேரறிஞர், வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் கமாலுத்தீன் ஃபாஸில் பாகவி அவர்களின் வாழ்க்கை வரலாறு “வாழ்க்கை ஒரு வகுப்பறை“ எனும் பெயரில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.

இதைத் தொகுத்து வெளியிடும் பயனுள்ள பணியை “லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கமம்“ (லிபாஸ்) செய்துள்ளது. முன்னோரின் நடைமுறை அடுத்த தலைமுறையினருக்குப் பாடம் எனும் அடிப்படையில், இந்நூலை யார் படித்தாலும் அவருக்கு இதில் ஒரு பாடம் இல்லாமலில்லை. அதிலும் குறிப்பாக ஆசிரியர் மற்றும் மாணவர் சமுதாயத்திற்கு இந்நூல் ஒரு வழிகாட்டி என்றே சொல்லலாம்.

கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் தமது வாழ்நாளில் அரை நூற்றாண்டுக் காலத்தைப் போதனைப் பணிக்காகவே செலவிட்டுள்ளார்கள். ஆரம்பம் முதல் கடைசிவரை அந்தப் பணி நீங்கலாக வேறெதையும் அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நல்ல ஆசிரியர் எனும் அடைமொழிக்கு கமாலுத்தீன் ஹஜ்ரத் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை இந்த நூலை வாசிக்கும் எவரும் எளிதில் உணரலாம்.

நல்ல ஆசிரியர் என்று யாரைச் சொல்லலாம்? அவரிடம் இருக்க வேண்டிய அருங்குணங்கள் யாவை? என்பது மிக முக்கியமான கேள்வி.

முதலாவதாக, மாணவர்கள் நலனுக்காகப் பாடுபடுபவர் யாரோ அவரே நல்ல ஆசிரியர். வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியிலும் மாணவர்களின் நலன் சார்ந்த பிரக்ஞையும் அதற்காகப் போராடும் பண்பும் மிகவும் அவசியம். தாம் எடுக்கும் எந்தவொரு முடிவும் மாணவர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் என்பதை விழிப்புடன் அவதானித்து, அவர்களின் உயர்வுக்குச் சாதகமான முடிவுகளை மட்டுமே எடுக்கும் திறனாய்வுச் சிந்தனை வேண்டும். இயல்பிலேயே தன்னலமற்றவராகவும் மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்குபவராகவும் இருக்க வேண்டும்.

இரண்டாவது, மாணவர்களை மதிக்கும் பண்பு வேண்டும். நல்ல ஆசிரியர் எப்போதுமே தம்முடைய மாணவர்களை மதிப்பார். மாணவர்களிடம் இருக்கும் திறமைகளையும் செயலூக்கங்களையும் மனம் திறந்து பாராட்டுவார். அதன் மூலம் மாணவர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாகத் திகழ்வார்.

மூன்றாவது, ஒரு நல்ல ஆசிரியர் தாம் தொடர்ந்து கற்பவராக நீடிக்க வேண்டும். பொதுவாக, தம்மைச் சுற்றி நடைபெறும் துறைகளில் ஓரளவு அறிவு ஞானம் பெறுவதற்கு முனைய வேண்டும். தமது துறை சார்ந்த நூல்களில் புதிய வரவுகளையும் சேர்த்து வாசித்து காலத்துக்கேற்ற வகையில் தம்மைப் புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டும்.

நான்காவது, மிகவும் அரிதாக மாணவர்களுடன் பிரச்சினை ஏற்படும்போது அதைக் கனிவோடு அணுகி, மாணவர்கள் தரப்பு நியாயங்களையும் விருப்பு வெறுப்பின்றி உள்வாங்கிக்கொண்டு, சமயோசிதமான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்ட வேண்டும். எந்த வகையிலும் மாணவர்களை மட்டம் தட்டவோ உதாசீனம் செய்யவோ கூடாது.

எல்லாவற்றையும்விட, மாணவர்கள் கல்வியைத் திறம்படக் கற்பதற்கு தேவையான உத்திகளையும் அந்த ஆசிரியர் பின்பற்ற வேண்டும். திறம்படக் கற்றல் (Mastery Learning) என்பது கற்பித்தல் தொடர்பான ஒரு கோட்பாடு ஆகும். மாணவர்கள் கற்றலுக்கு எந்த அளவு ஊக்குவிக்கப்பட்டனர் என்பதைப் பொறுத்தும், கல்வி கற்கும் காலங்களில் சிக்கல் ஏற்படும்போது அந்தச் சிக்கல் தீர எவ்வளவு தூரம் வழிகாட்டப்பட்டனர் என்பதைப் பொறுத்துமே இந்தக் கோட்பாட்டின் வெற்றி தோல்வி அமையும்.

நல்லாசிரியருக்கான இந்த அருங்குணங்கள் அனைத்திலும் கமாலுத்தீன் ஹஜ்ரத் தனி முத்திரைப் பதித்தவர்கள் என்பதை இந்தத் திரட்டு ஓரளவுக்கு உணர்த்தி நிற்கிறது.

வகுப்பெடுப்பதையே தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டுச் செயல்பட்டவர்கள் கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் என்று இந்த நூலில் பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதனால்தான் பாகியாத்திலிருந்து வெளியேறும் கட்டம் வந்தபோது ஹஜ்ரத் அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமது எண்ணம் ஈடேறவில்லை என்பதை நினைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள் (பக்கம் 61) எனும் தகவல் நமது கண்களைக் குளமாக்குகிறது.

ஒன்று மட்டும் நமக்குப் புரியவே இல்லை. வடநாட்டு மத்ரசாக்களில் மிகவும் வயது முதிர்ந்த மூதறிஞர்கள் முக்கியமான ஒன்றிரண்டு பாடங்களை மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே அந்தந்த மத்ரசா நிர்வாகம் வயது முதிர்ந்த காலத்தில் பணி ஓய்வு பெறும் வயதுக்குப் பின்பும்கூட அவர்களைப் பெருமையோடு பணியில் வைத்து உரிய மரியாதை அளித்து வருகிறது. அனுபவ அறிவு நிரம்பப் பெற்றுள்ளார்கள் என்பதுதான் இதற்குக் காரணம். போதனைப் பணிக்குப் படிப்பறிவுடன் பட்டறிவும் அவசியம். அத்தகைய மூதறிஞர்களிடம் பாடம் படிக்கும் வாய்ப்புக்காவே நமது தமிழகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் சென்று படிக்கின்றனர் என்று கேள்விப்படுகிறோம்.

அதே தரமிக்கவர்கள்தான் கமாலுத்தீன் ஹஜ்ரத்தும். அப்படியிருக்கையில் வடநாட்டுப் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் பாகியாத் நிர்வாகம் கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களை, அவர்களது விருப்பத்திற்கு மாறாகப் பணி ஓய்வு பெறவைத்தது ஏன்? அதற்கு யார் அல்லது எது காரணம்? என்பது யாருக்கும் புரியவில்லை.

இது அவர்களுடைய மாணவர்களிடம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழக ஆலிம் சமூகத்திடமும் மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அந்த மனக் காயம் இன்றளவும் ஆறவில்லை என்பதுதான் எதார்த்தம். தமிழகத்தின் தாய்க் கல்லூரியாக மதிக்கப்படுகின்ற பாகியாத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அருகிவருவதுகூட இதன் பக்கவிளைவாகவே படுகிறது.

கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் ஆளுமை, அறிவு, எளிமை உள்ளிட்டவற்றை உணர்ந்துகொள்வதற்கு இந்நூலில் தகவல்கள் உள்ளன. “மானிடராய் பிறப்பதரிது“ என்பதைப் போன்று மானிடராய் வாழ்வதும் அரிதாகிப்போன இக்காலத்தில், உன்னதமான ஒரு தகுதியை அடைந்த பிறகும் மனிதராக - எளிமையாக வாழ்ந்து காட்டியது நமக்கெல்லாம் படிப்பினையாகும்.

1991ஆம் ஆண்டில் அண்ணல் அஃலா ஹஜ்ரத் நினைவு விழாவில் பங்கு கொள்ள பாகியாத் சென்றிருந்தேன். அப்போது நான் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன். நான் பாகியாத்தில் தங்கியிருந்த அந்த ஓரிரு நாட்களில் அப்போது முதல்வர் பொறுப்பு வகித்துவந்த கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் ஈர நெஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பாகியாத்தில் தொடக்க நிலை வகுப்பு மாணவர் ஒருவர் அன்றைய தினம் ஃபஜ்ர் தொழுகைக்கு ஆப்சண்ட். அதனால் காலை உணவுக்கான டோக்கன் அவருக்குச் சட்டப்படி மறுக்கப்பட்டது. ஆனாலும் அந்த மாணவர் ஒரு டோக்கன் கொடுத்து காலை உணவு உண்டுவிட்டார் என்று கமாலுத்தீன் ஹஜ்ரத்திடம் புகார் வந்தது.

சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து கமாலுத்தீன் ஹஜ்ரத் விசாரணை செய்தார்கள். ஃபஜ்ர் தொழுகையில் கலந்துகொள்ளத் தவறியதற்காக டோக்கனை இழந்த உனக்கு இந்த டோக்கன் எவ்வாறு கிடைத்த்து? என்று கேட்டார்கள். அந்த மாணவர், “பாடநூலில் பொறிக்கப்பட்டிருந்த மதரசாவின் முத்திரையைப் பிரித்தெடுத்து அதற்குத் தகுந்தவாறு அட்டையை வெட்டி அதில் ஒட்டி டோக்கன் தயார் செய்தேன் என்று தாம் செய்த குற்றத்தை ஏற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். (மதரசா முத்திரை பதிக்கப்பட்ட அட்டைதான் டோக்கனாக அன்று நடைமுறையில் இருந்த்து.)

இது போன்ற குறும்புத்தனம் எவருக்கும் எரிச்சலை வரவழைக்கும். அந்த வகையில் அந்த மாணவரை ஹஜ்ரத் அவர்கள் கண்டிக்கத் தவறவில்லை. அதே நேரத்தில் அவர் விஷயத்தில் கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாகவும் இருந்தது. அவரது பசியுணர்வை நினைத்து அவர்மீது கழிவிரக்கம் கொண்ட ஹஜ்ரத் அவர்கள், போலியாக டோக்கன் தயாரிக்க அவர் மூளையில் உதித்த சிந்தனையை நினைத்து வியப்புத் தெரிவித்தார்கள். மற்ற மாணவர்களிடமும் அதை வியப்போடு சொல்லிக்காட்ட அவர்கள் தயங்கவில்லை.

உள்ளபடியே ஈர நெஞ்சமும் பரந்த மனப்பாங்கும் திறமையைப் போற்றும் அருங்குணமும் உள்ளவருக்கு மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில் கமாலுத்தீன் ஹஜ்ரத் மனிதத் தன்மையின் சிகரமாகத் திகழ்ந்தார்கள்.

விரல் விட்டு எண்ணிவிடுகின்ற அளவுக்குச் சில தடவை மட்டுமே சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற என் போன்றவர்களிடமே இது போன்ற தகவல் இருக்கும்போது பல காலம் மண்டியிட்டுப் பயிலும் அரிய வாய்ப்புப் பெற்ற அவர்களின் நேரடி மாணவர்களிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கத்தான் வேண்டும். அவையும் சேர்த்து இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தால் ஹஜ்ரத் அவர்களின் ஆளுமை இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் உணரப்பட வாய்ப்புண்டு.

ஹஜ்ரத் அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல் வைத்திருப்பவர்கள் அவற்றை இங்கே தாராளமாகப் பின்னூட்டமிடலாம். இதுவொரு நிறைவான வரலாற்றுப் பதிவாக அமைய உங்கள் பங்களிப்பை நல்குங்கள். நிறைகுறைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். அது எதிர்காலக் கூர்மைப்படுத்தலுக்கு வகை செய்யும்.

செவ்வாய், 5 மார்ச், 2013


வளமான வாழ்வுக்கு முப்பது வழிகள்

2. கடந்த காலத்தைக் கிளறாதே!


அரபியில்: டாக்டர் ஆயிழ் அல்கர்னீ

தமிழில்: சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி


கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டிருப்பதும் அதன் கனத்த சிந்தனைகளைச் சுமந்து திரிவதும் கடந்த கால வேதனைகளை எண்ணியெண்ணிக் கவலையுறுவதும் புத்திசாலித்தனம் அல்ல. அது ஒரு மனச்சிதைவு நிலை. நமது மனத்திண்மையை அது அழித்துவிடும். நமது நிகழ்கால வாழ்க்கையை அது நிர்மூலமாக்கிவிடும்.

அறிவாளிகள், கடந்த காலத்தின் பதிவேடுகளைச் சுருட்டியே வைத்திருப்பர். அவற்றை விரித்துவைத்துப் புலம்பிக்கொண்டிருக்கமாட்டார்கள். அவற்றை மறதிச் சுரங்கத்தில் போட்டுப் பூட்டிவைத்திருப்பார்கள். கண்டுகொள்ளாமைச் சிறையில் தள்ளி பலமான கயிற்றால் அவற்றைப் பிணைத்துவைத்திருப்பார்கள். ஒருபோதும் அவற்றை வெளியில் விடமாட்டார்கள்.

காரணம், அவை நடந்து முடிந்தவை. கவலை, கடந்த காலத்தை மறுபடியும் கொண்டுவரப் போவதில்லை. துக்கமும் வருத்தமும், கடந்த காலக் கீறலைச் சரிசெய்துவிடப் போவதில்லை. கலக்கம், கடந்த காலத்திற்கு மறுபடியும் உயிர் கொடுத்துவிடப் போவதில்லை.

கடந்த காலம் என்பது இல்லாமல் போய்விட்ட ஒன்று. கடந்த காலச் சிறையில் நீ குடியிருக்காதே. இல்லாமல் போய்விட்ட நிழலின் கீழ் நின்று நீ இளைப்பாற முடியாது. கடந்த காலம் என்பது ஒரு பிரமை. அதிலிருந்து உன்னை நீ காத்துக்கொள்.

நதி, அது பிறந்த மலையுச்சிக்கு எப்படி திரும்பிச் செல்லும்? கதிரவன் கிழக்கு நோக்கியே மீண்டுசெல்வது எங்ஙனம்? பிறந்த குழந்தை மறுபடியும் தாயின் கருவறைக்கு மீள முடியுமா? கறந்த பால்தான் மடுவேறுமா? வடித்த கண்ணீர் மறுபடியும் கண்ணேறுமா?

கடந்த காலத்தின் சுழலில் சிக்கிச் சுழன்றுவருவதும் அதை முன்னிட்டு தொடர்ந்து கலக்கமுறுவதும் அதன் நெருப்பில் எரிந்து உருகுவதும் அதன் வாசல்களில் வீழ்ந்துகிடப்பதும் கவலைக்கிடமான ஆபத்து ஆகும்.

உனது வாசிப்பும் சிந்தனையும் கடந்த காலத்தின் கோப்புகளிலேயே நிலைகொள்ளுமானால் அது உன் நிகழ்காலத்தை நாசமாக்கிவிடும். உன் தற்போதைய உழைப்பை அது சிதைத்துவிடும். பொன்னான உனது நேரத்தை அது நசித்துவிடும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் முந்தைய சமூகங்கள் பற்றியும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் கூறுகின்றான். ஆனால், “அவர்கள் வாழ்ந்து மறைந்த சமுதாயத்தார் ஆவர்” (2:134) என்றும் குறிப்பிட்டுவிடுகின்றான். அதாவது எல்லாம் நடந்து முடிந்தாகிவிட்டது.

இனி இறந்துபோன கடந்த காலத்தை வைத்துப் பிரேதப் பரிசோதனை நடத்திக்கொண்டிருப்பதில் பலனில்லை. வரலாற்றின் சக்கரத்தைத் திருப்பிச் சுழலவிடுவதில் யாருக்கு என்ன பயன்?

எப்போதும் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டிருப்பது, அரைத்த மாவையே அரைப்பதற்குச் சமம். மர அறுப்புத் தூளைக் குவித்துவைத்து மறுபடியும் அறுத்துக்கொண்டிருப்பதற்கு நிகரான வெட்டி வேலை.

கடந்த காலத்தை நினைத்து யாரேனும் அழுதுகொண்டே இருந்தால், “புதைக்கப்பட்ட பிணங்களை புதைகுழிகளிலிருந்து தோண்டி எடுக்காதே” என்று பழங்காலத்தில் சொல்வது வழக்கம்.

மிருகமொழி தெரிந்த ஒருவர் சொன்ன செய்தி: மக்கள் கழுதையிடம், “நீ ஏன் அசைபோடுவதில்லை” என்று கேட்டனர். அதற்குக் கழுதை, “ஏற்கெனவே மென்று விழுங்கப்பட்ட உணவுக்கூழை வெளியே கொண்டுவந்து மறுபடியும் மென்று விழுங்குவது எனக்குப் பிடிக்கவில்லை” என்றது.

நம்மைப் பீடித்துள்ள மிகப் பெரிய அவலம் எது தெரியுமா? நமது நிகழ்காலத்தின் விஷயத்தில் நாம் செயலிழந்து நின்றுவிட்டு, கடந்த காலத்திலேயே கவனம் செலுத்திவருவதுதான்.

அழகான அரண்மனைகளை அப்படியே வீணாக விட்டுவைத்திருக்கிறோம். ஆனால், சிதைந்துபோய்விட்ட சிதிலங்களை எண்ணி உருகிக்கொண்டிருக்கிறோம்.

கடந்துபோன ஒன்றை மீளக் கொண்டுவருவதற்கு ஒட்டுமொத்த உலகமே ஒன்றுதிரண்டு வந்தாலும் அது ஆகப்போவதில்லை. அது இயலாத காரியம்.

மக்கள் பின்னோக்கியே பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள். முகத்தைப் பின்புறமாகத் திருப்பியே வைத்திருப்பது இயல்பு அல்லவே. காற்று முன்னோக்கியே வீசுகிறது. தண்ணீர் முன்னோக்கியே பாய்கிறது. பயண வாகனம் முன்னோக்கியே செல்கிறது.

எனவே, வாழ்க்கையின் இயல்பான போக்குக்கு நாம் மட்டும் ஏன் மாறுபட வேண்டும்?

வியாழன், 7 பிப்ரவரி, 2013

பொதுக் கருத்தை நோக்கி...


                                                     - சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,



(ஷஹீத் ஹசன் அல்பன்னா (ரஹ்) அவர்கள் (இறப்பு - கி.பி. 1949) தொகுத்த இருபது அடிப்படைகளை (உஸூலுல் இஷ்ரீன்) விரிவாக விளக்கும் நூல் ஃபஹ்முல் இஸ்லாம் ஃபீ ழிலாலில் உஸூலில் இஷ்ரீன் ஆகும். இருபது அடிப்படைகளின் ஒளியில் இஸ்லாம் பற்றிய புரிதல் என்பது இதன் பொருள். அஷ்ஷைக் ஜுமுஆ அமீன் அப்துல் அஸீஸ் அவர்கள் தொகுத்துள்ள அந்த நூலின் முகவுரையின் தமிழ் பெயர்ப்பே இந்தக் கட்டுரை (சிறு மாற்றங்களுடன்.)



இன்றைக்கு இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லிம்களுக்குச் செய்ய முடியாத பல காரியங்களை நாமே நமக்கிடையில் செய்துவருகின்றோம். அவர்கள் நமக்கு எதிராக எட்ட இயலாத இலக்குகள் பலவற்றை அவர்களுக்காக நாமே நம் கரங்களால் இலகுவாக்கிவருகிறோம்.

இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனையைவிட, பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேலின் சிந்தனையைவிட, வட ஆப்ரிக்கா விஷயத்தில் ஃபிரான்ஸின் சிந்தனையைவிட, தென் சூடான் விஷயத்தில் சிலுவைக்கார கிறித்தவர்களின் சிந்தனையைவிட நம்மில் ஒருவரின் சிந்தனைதான் மற்றவருக்கு மிகவும் அபாயகரமானதாகவும் பேராபத்தாகவும் தோன்றுகிறது.






நம்மில் ஒருவரின் கருத்தை மற்றவர் முறியடிப்பதற்காக வும் அவரைத் தாக்கிப் பரப் புரை செய்வதற்காகவும் செலவழிக்கப்பட்ட சமூகத் தின் செல்வமும் உழைப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. அவற் றை ஆப்ரிக்காவில் இஸ் லாம் பற்றிய நற்செய்தி ஊழியத்திற்கோ, பெஷா வரில் முஸ்லிம் பிள்ளைக ளின் கல்வி முன்னேற்றத் திற்கோ, உலகெங்கும் இஸ் லாத்திற்காகக் களமாடிவரும் முஸ்லிம் போராளிகளின் அவசியத் தேவைக்கோ, குறைந்தபட்சம் இழந்த மண்ணை மீட்கப் போராடும் பாலஸ் தீனப் போராளிச் சிறுவர்களுக்குத் தேவையான கற்களுக்கோ செலவழிக்கப் பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதற்கெல்லாம் ஏது நமக்கு நேரம்? இவையா நம் பிரச்சினைகள்? நம்மில் ஒருவருக்கு மற்றவரின் சிந்தனைப்போக்குதானே பெரும் அபாயமாகவும் பிரச்சினையாகவும் தோன்றுகிறது. அல்லாஹ்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

இன்றைக்கு நாம் எந்தெந்த விஷயங்களுக்காக முட்டி மோதிக்கொள்கிறோமோ அவை நமது சமூகத்தின் சிதறலுக்கும் சிதைவுக்குமே வழிவகுத்துள்ளது. சமுதாயக் கட்டமைப்பின் அடித்தளத்தை வேரோடு பெயர்த்தெறிந்துள்ளது. இது முற்றிலும் மழித்துவிடக்கூடியதாகும்; முடியை அல்ல, மார்க்கத்தை. (ஜாமிஉத் திர்மிதீ - 3432-3434)

நமது உயிரினும் மேலான இஸ்லாம் விஷயத்தில் நாம் எப்போது அல்லாஹ்வை அஞ்சப்போகிறோம்? அல்லாஹ்வுக்காக நாம் எப்போது ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளப்போகிறோம்? நம்முடைய பிரச்சினைகளை மார்க்க ரீதியாக எடைபோட்டுப் பார்ப்பதற்கு முற்காலச் சான்றோர்களின் (சலஃபுஸ் ஸாலிஹீன்) துலாக்கோலை எப்போது நாம் பயன்படுத்தப்போகிறோம்?

நமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைப் பற்றி நாம் பேச அல்லது விவாதிக்க முற்படும்போது பின்வரும் அடிப்படையான விஷயங்களில் நாம் ஒருமித்த கருத்திற்கு முதலில் வர வேண்டும். மார்க்கத்தின் மூல ஆதாரங்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ள இந்த அடிப்படைகள்தான் நம் கருத்து வேறுபாடுகளை அகற்றவோ குறைக்கவோ முடியும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்:





அடிப்படை - 1


ஆதரவாளர்களைத் திரட்டும் வழியில் அல்லது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வழியில் ஒரு கருத்தை வெறித்தனமாகப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு கருத்தின் மீது வெறித்தனமாக இருப்பதற்கும் உண்மையை உறுதியுடன் பின்பற்றுவதற்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஒரு கருத்தில் வெறித்தனமாக இருப்பது, மாற்றுக் கருத்தாளர்களை வழிகெட்டவர்கள், கொள்கை தடுமாறியவர்கள் என்று குறை கூறுவதற்கும் அழைப்பாளர்களைத் தவறாக விமர்சிப்பதற்கும் காயப்படுத்துவதற்கும் ஒருவரைத் தூண்டும். இறுதியில், மாற்றுக் கருத்தாளர்களைப் பற்றிக் கோள் மூட்டுதல், புறம் பேசுதல், அவதூறு பரப்புதல் ஆகிய இழிசெயல்களில் இறங்கவும் அவர் தயங்கமாட்டார்.

அதே நேரத்தில் உண்மையை உறுதியுடன் பின்பற்றுதல் என்பது, சம்பந்தப்பட்டவரை சங்கைக்குரிய பண்பாளராக உருமாற்றும். ஒழுக்கம் தவறாத வார்த்தைகளையும் அழகிய அறிவுரைகளையும் வழங்கக்கூடிய அறிவார்ந்த அழைப்பாளராகவும் அழகான முறையில் வாதிடுபவராகவும் அவரை வார்க்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, மோதல் வரும்போது எல்லா விஷயத்திலும் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்ப வேண்டும் என்ற உள்ளுணர்வை அவருக்கு ஊட்டும்.


அடிப்படை - 2


ஒரு தனிமனிதரோ கூட்டமைப்போ, (பல கருத்துள்ள விஷயங்களில்) தாம் கூறுவதுதான் அப்பழுக்கற்றது; தமது கருத்தே சரியானது; பிற கருத்துகள் யாவும் அசத்தியமானவை என்று வாதிடுவது சரியல்ல. கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் இறுதிக் கருத்து வெளியிடும் உரிமை தமக்கே உண்டு; அந்தக் கருத்திலிருந்து வெளியேறுவது  இஸ்லாத்திலிருந்தே வெளியேறுவதாகும், அல்லது கொள்கைப் பலவீனம் ஆகும் என்று வாதிப்பது முறையாகாது. ஏனெனில், பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட தன்மை சராசரி மனிதர்கள் யாருக்கும் கிடையாது. நம்மில் ஒவ்வொருவருடைய கருத்துகளில், கொள்ளப்பட வேண்டியதும் உண்டு. தள்ளப்பட வேண்டியதும் உண்டு.


அடிப்படை - 3


கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் ஒரு கருத்தை விடுத்து மறு கருத்தை எடுப்பதில் மார்க்கத்தை மறுத்தல் என்பது அறவே கிடையாது. அந்த மாதிரியான விஷயங்களில் அடுத்தவரின் நியாயத்தைப் புரிந்து நடந்துகொள்வது, உண்மையை மறுப்பதாகவோ கொள்கைக் குளறுபடியாகவோ தவறுடன் சமரசம் செய்துகொள்வதாகவோ ஆகாது. மாறாக, அது நாம் கருத்தொருமித்து ஏற்றுக்கொண்ட விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைப்பதும் நாம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளவற்றில் ஒருவர் மற்றவரின் நியாயத்தைப் புரிந்து நடந்துகொள்வதும் ஆகும்.


அடிப்படை - 4


நமது வழிமுறையும் போக்கும் உண்மையை அலசி ஆராய்ந்து சத்தியத்தைக் கண்டறிவதின் மீது ந¤லை நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு கருத்தைச் செயற்கையாக வெளிக்காட்டுவதாகவோ நமது கருத்தே சரி என்று வெளிப்படுத்த முயல்வதாகவோ இருக்கலாகாது. சத்தியம் எங்கிருந்தாலும் அதைக் கண்டறிவதற்காக அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அது என் நாவிலிருந்து வெளிவந்தாலும் சரி, என் எதிராளியின் நாவிலிருந்து வெளியானாலும் சரி.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 820) கூறினார்கள்:  நான் யாரிடம் விவாதம் புரிந்தாலும் அவருடைய நாவின் மூலம் உண்மை வெளிவர வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டி விரும்பிக் கேட்பேன். யார் சொன்னாலும் உண்மை என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதே ஆகும். (ஸிஃபத்துஸ் ஸஃப்வா-இப்னுல் ஜவ்ஸீ)


அடிப்படை - 5


பல்வேறு புரிதல்களுக்கும் கருத்துகளுக்கும் இடமளிக்கின்ற சட்டப் பிரச்சினைகளுக்காக, ஒருவர் மற்றவரை இழிவுபடுத்தவோ அவரைக் குறித்து வதந்தி பரப்பவோ அவதூறு சுமத்தவோ தவறான ஊகங்களை ஊதிவிடவோ கூடாது. அவற்றுக்காக அவர்களை இறைமறுப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று தீர்மானிக்கலாகாது. வழிகெட்டவர்கள், பாவிகள் என்று குறிப்பிடக் கூடாது. ஏனெனில், இவையெல்லாம் மிகவும் பாரதூரமானவை ஆகும்.


அடிப்படை - 6


பிறரின் தவறுகளைத் துருவிக்கொண்டு இருக்கலாகாது. அடுத்தவர் பலவீனம் அடையும் சந்தர்ப்பங்களையும் வீழும் சூழல்களையும் தோண்டித் துருவிப் பார்த்து, அவற்றைப் பரப்பிக்கொண்டிருக்கலாகாது. மாற்றுச் சிந்தனையாளர்கள்மீது பொதுமக்களின் வெறுப்பை உருவாக்கி வளர்த்துவிடக் கூடாது. இது இஸ்லாத்தின் போக்கோ முஸ்லிம்களின் பண்பாடோ அல்ல.



தேனீயைப் போன்று பூக்களுக்கு வலிக்காமல் அவற்றிலிருந்து தேனெடுக்க நீ பழகிக்கொள்


அடிப்படை - 7


பொதுவான ஓர் அடிப்படை விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதால், அந்த அடிப்படையின் தனிப்பட்ட கிளையம்சங்கள் ஒவ்வொன்றிலும் அனைவரும் ஒத்த கருத்தில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அன்று. ஓர் அடிப்படையான விஷயத்தின் கிளை விவகாரம் ஒன்றில் ஒருவர் வேறுபட்ட கருத்தில் இருப்பது அந்த அடிப்படை விஷயத்தைச் சரியானதல்ல என்று கூறுவதாக ஆகாது. பின்வரும் தகவல் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்:

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறைவனைப் பார்த்த விவகாரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டமை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அல்லாஹ்வைப் பார்த்தது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘‘அவன் ஓர் ஒளி; அவனை நான் எங்கனம் காண்பேன்?’’ என்று நபியவர்கள் பதிலளித்த தகவல் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கிடைத்தது. எனவே, ‘‘நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை’’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதே நேரத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இதயத்தால் பார்த்தார்கள்’’ என்கிறார்கள். (தஃப்சீர் அல்குர்துபீ)

பார்த்தார்கள் என்றும் பார்க்கவில்லை என்றும் இருவேறு கருத்துகளை அவ்விருவரும் கூறினாலும், பொதுவான அடிப்படை அம்சத்திலிருந்து அவர்கள் இருவரும் வெளியேறிவிடவில்லை.


அடிப்படை - 8


ஒரு பிரிவினர் பெரும்பான்மையான அடிப்படை விஷயங்களில் ஒத்த கருத்துகளில் இருக்கின்றனர். இந்நிலையில் அடிப்படை விஷயம் அல்லாத சில்லறை விவகாரம் ஒன்றில் அவர்கள் வெவ்வேறு கருத்துகளில் இருக்கின்ற காரணத்தால், அவர்கள் சரியான வழியிலிருந்து வெளியேறிவிட்டனர் என்று தீர்ப்பளிப்பது முறையாகாது. மிகுதியையும் பெரும்பான்மையையும் கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும்.


அடிப்படை - 9


மோதல் முற்றும்போதும் வேறுபாடு வலுக்கும்போதும் நேர்மை தவறாத நடுநிலைப் போக்கு மிகவும் அவசியம். இதற்கு எடுத்துக்காட்டாக சூஃபியிசத்தைக் குறிப்பிடலாம். சூஃபியிசம் குறித்து கருத்து தெரிவிக்கையில் விருப்பு வெறுப்பற்ற நடுநிலைப் போக்கு அவசியம். எல்லை மீறல் கூடாது.

சூஃபிகளின் ஆட்சேபகரமான கருத்துகள் குறித்து பேரறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1349) கருத்து தெரிவிக்கையில், ‘‘சூஃபிகள்மீது சிலர் முழுக்க முழுக்க தவறான எண்ணம் கொண்டுள்ளனர். அத்தகையோர் உண்மையை எட்டாதவர்கள் ஆவர். வேறுசிலர், சூஃபிகள்மீது முழுமையான நல்லெண்ணம் கொண்டுள்ளனர். அத்தகையோர் வரம்பு மீறியவர்கள் ஆவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1328) சூஃபிகளை மூவகையினராகப் பிரித்துள்ளார்கள்:

1. நபிமொழி சார்ந்த சூஃபிகள், நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி சார்ந்த சூஃபிகள் (சூஃபியய்யா அஹ்லில் ஹதீஸ், சூஃபிய்யா அஹ்லிஸ் ஸுன்னா வல்ஜமாஆ). ஜுனைத் அல்பஃக்தாதீ (ரஹ்), ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) சஹ்ல் அத்தஸ்த்துரீ (ரஹ்) உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவர்களின் கருத்துகள் நபிமொழிகளில் காணப்படும். நபிமொழி நூல்களையும் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளனர். இவர்கள்தாம் சூஃபிகளில் மிகச் சிறந்தவர்களும் முன்னோடிகளும் ஆவர்.

2. இறைமையியல் ஆய்வுத் துறை சார்ந்த சூஃபிகள் (சூஃபிய்யா அஹ்லில் கலாம்). ஃகஸ்ஸாலீ (ரஹ்) அவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவ்வகையினர் முந்தையவர்களைவிட தரத்தில் சற்று குறைந்தவர்கள் ஆவர்.

3. அடிப்படைக் கோட்பாட்டு ஆராய்ச்சித் துறை சூஃபிகள் (சூஃபிய்யா அல்ஃபலாசிஃபா). மன்சூர் அல்ஹல்லாஜ், இப்னுல் அரபீ, தில்மிசானீ உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வகையினர்தாம் இஸ்லாத்தின் பிரதான அடிப்படைகள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்துகளை வெளியிட்டவர்கள் ஆவர். (அஸ்ஸஃப்திய்யா-இப்னு தைமிய்யா)

ஹாகிம் (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1014) கூறுகிறார்கள்: சூஃபிகள் எனப்படுவோர் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ஆவர். அவர்களில் நல்லோரும் உண்டு. தீயோரும் உண்டு. (முஸ்தத்ரக் ஹாகிம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வெவ்வேறு நிலைப்பாட்டையும் கருத்தையும் கொண்ட ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாட்டுக்கும் கருத்துக்கும் தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகான வார்த்தை அலங்காரத்தைச் சூட்டுவார்கள். எதிரணியினரின் நிலைப்பாட்டையும் கருத்தையும் முடிந்த அளவிற்குக் கொச்சைப்படுத்துவார்கள். அல்லது தூற்றுவார்கள். ஆனால், யாருக்கு அல்லாஹ் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியுள்ளானோ அவர் தமது ஆற்றலின் மூலம் அந்த வார்த்தை அலங்காரத்திற்கு அப்பாலுள்ள சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்வார். எனவே, நாம் வார்த்தைகளை நம்பி மோசம் போய்விடக் கூடாது.

கவிஞர் இப்னுர் ரூமீ (இறப்பு-கி.பி. 896) கூறினார்:

தேன், தேனீக்களின் அறுவடை என்றால்
அதை நீ புகழ்ந்தவன் ஆகிறாய்.

அதையே, நீ நினைத்தால்
தேனீக்களின் வாந்தி என்று இகழவும் முடியும்.

சத்தியம் சில நேரங்களில்
பிறழ் வார்த்தைப் பிரயோகங்களில் மறைந்திருக்கலாம்.

எனவே, ஒன்றின் எதார்த்தத்தை நாம் அறிய வேண்டுமாயின், அது சத்தியமா, அசத்தியமா என்பதை உள்ளது உள்ளபடியே புரிய வேண்டுமாயின் முதலில் அதன் மீது போர்த்தப்பட்டுள்ள வாசக ஆடையைக் களைய வேண்டும். (அதாவது அது தொடர்பான மிகை மற்றும் தூற்றல் வார்த்தைகளை ஒதுக்கிவிட வேண்டும்.) பிறகு அது தொடர்பான விருப்பு, வெறுப்பை மனதிலிருந்து அழித்துவிட்டு, நேர்மையான கண் கொண்டு சமநிலை தவறாமல் அதைக் கவனிக்க வேண்டும்.

நமது கருத்துக்குச் சார்புடையவர் என்பதால் அவர் சொல்வதெல்லாம் சரி என்ற மனநிலைக்கும், மாற்றுச் சிந்தனையாளர் என்பதால் அவர் சொல்கிற அனைத்தும் தவறு என்ற மனநிலைக்கும் நாம் போய்விடக் கூடாது. ஏனெனில், பகைமைக் கண் கொண்டு பார்க்கும்போது நல்லதுகூட கெட்டதாகவே தோன்றும். நேசமான பார்வையில் பார்த்தால் கெட்டதுகூட நல்லதாகத் தோன்றலாம்.

கவிஞர் ஒருவர் கூறுகிறார்:

திருப்தி கொண்ட பார்வை
குறைகளைப் பாராமல் மூடிக்கொள்ளும்.

அதிருப்தியான பார்வையோ
குறைகளைப் பார்த்துப் பார்த்து வெளிப்படுத்தும்.

எனவே, இரண்டும் இன்றி சமநிலை தவறாத பார்வையோடு அணுகுகின்ற சூழலுக்கு நாம் வர வேண்டும். (மிஃப்த்தாஹு தாரிஸ் சஆதா-இப்னுல் கய்யிம்)


அடிப்படை - 10


ஒரு விஷயம் தொடர்பாக ஓர் அறிஞரோ இமாமோ கூறியுள்ள அனைத்துக் கருத்துகளையும் மொத்தமாகத் திரட்டி அவற்றை ஒருசேரப் பார்த்து அவற்றுக்கிடையே முரண்பாடு வராதவாறு பொருத்தம் காண வேண்டியது அவசியம் ஆகும். அதாவது ஒரு இமாம் சொல்லக்கூடிய ஒரு கருத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு அவர் கொள்கை தடுமாறியவர் என்றோ தவறான சிந்தனைப்போக்குள்ளவர் என்றோ கண்ணை மூடிக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று குற்றம் சாட்டிவிடலாகாது.

அதற்குமுன் அந்த விஷயம் தொடர்பாக அவர் கூறியுள்ள எல்லாக் கருத்துகளையும் மொத்தமாகத் திரட்டி அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லாதவாறு பொருத்தம் காண முயல வேண்டும். அவருடைய நீளமான நூலில் எங்கோ வரும் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் சேர்த்து அவர்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கக் கூடாது.

ஏனெனில், ஒரு சூழலில் அவர் ஒன்றைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் மற்றொரு சூழலில் அதை விரிவாக விளக்கியிருப்பார். சுருக்கமாகச் சொன்னதில் ஏற்பட்ட தவறுக்கான சாத்தியக்கூறு விரிவான விளக்கத்தில் அகன்றுவிடும். அப்படியாயின் அந்த விரிவான விளக்கமே அவரது கருத்து என்று தீர்மானிக்க வேண்டும். அவ்வாறே ஓரிடத்தில் மூடலாகச் சொல்லியிருந்தால் மற்றோர் இடத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருப்பார். வெளிப்படையாகச் சொல்லப்பட்டதையே அவருடைய மூடலான கருத்துக்குப் பொருளாகக் கொள்ள வேண்டும்.

அதைப் போன்றே, ஓரிடத்தில் ஒன்றைப் பொதுவாகவும் பிறிதோர் இடத்தில் அதையே வரையறுத்தும் சொல்லியிருப்பார். இது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகாது. அந்த இடத்தின் சூழல் அப்படிச் சொன்னால் போதும் என்று கருதியிருப்பார். ஆனால், அது தவறான புரிதலுக்கு உள்ளாகி இருக்கும். முடிந்த வரையில் அவரின் கருத்துக்களாலேயே அந்தத் தவறான புரிதலைக் களையும் விதத்தில் அவரின் கருத்துகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். தவறான புரிதலுக்கு உள்ளான வார்த்தைப் பிரயோகத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கக் கூடாது. அது நம்மைத் தவறான முடிவை நோக்கிச் செலுத்திவிடும்.

‘‘மறுமை நாளில், நல்லறம் புரிந்தவர் அதற்கான வெகுமதியையும் தீமை புரிந்தவர் அதற்கான தண்டனையையும் பெற்ற பின்னர் சொர்க்கமும் நரகமும் அழிந்துவிடும்’’ என்று அறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாக அவரது வார்த்தையிலிருந்து நமக்குத் தோன்றினால் - இது வழிகெட்ட ஜஹ்மிய்யா பிரிவினரின் கோட்பாடு என்பதால் - இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ஜஹ்மிய்யா பிரிவைச் சேர்ந்தவர் என்று அவசர கதியில் தீர்ப்பை அள்ளித் தெளித்துவிட முடியுமா? அப்படிச் செய்தால் அது தவறாகும். மாறாக, அவரது கருத்தின் மெய்ப்பொருள்  என்ன என்பதை நோக்கித்தான் நமது சிந்தனை செல்ல வேண்டும்.


அடிப்படை - 11


ஓர் அறிஞரின் கூற்று பல கருத்துகளுக்கு இடமளிக்கும் வகையில் இருந்தால், அவற்றில் மிகச் சிறந்த கருத்தையே அவரது கூற்றுக்கான கருத்தாகக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு முஸ்லிம் சகோதரர் குறித்து நல்லெண்ணம் கொள்ள வேண்டியது சக முஸ்லிம்களின் கடமை ஆகும். எனவே, ஓர் அறிஞரின் கூற்றுக்குப் பல வகைகளில் தவறான கருத்துக்கு இடமிருந்து, ஒரேயொரு வகையில் மட்டும் அதற்குச் சரியான கருத்து வழங்கும் வாய்ப்பு இருந்தால் நாம் அந்த ஒரேயொரு சரியான கருத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அறிஞரின் மீது தப்பெண்ணம் கொள்ள இடமளிக்கலாகாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம் ஒரு சூஃபி அறிஞர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ‘‘ஒருவரை அல்லாஹ் நேசித்துவிட்டால் அவருக்குப் பாவம் தீங்களிக்காது’’ என்று அந்த சூஃபி அறிஞர் கூறினார். இது வழிதவறிய கொள்கைப் பிரிவினர்களாகிய ‘முர்ஜிஆ’க்களின் தவறான சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கருத்தாகும். இருப்பினும் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் அந்த சூஃபி அறிஞரின் நன்னடத்தையைக் கருதி அவர்மீது தப்பு அர்த்தம் சுமத்துவதைத் தவிர்த்தார்கள். ‘‘ஒருவரை அல்லாஹ் நேசித்துவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு மற்றும் பாவமீட்சிக்கான வழியை அல்லாஹ் வழங்குவான். பின்னர் அந்தப் பாவத்தின் மீது அவர் எப்படி நிலைத்திருக்க முடியும்? (எப்படி அது அவருக்குத் தீங்களிக்கும்) என்பதுதான் அந்த சூஃபி அறிஞர் சொல்லவந்த கருத்து’’ என்று விளக்கம் தந்தார்கள்.

இவ்வாறே ஒருவருடைய கூற்றுக்கு அவர்மீது நல்லெண்ணம் வைத்து சரியான கருத்தை வழங்க வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.


அடிப்படை - 12


நாம் எந்தெந்த விஷயங்கள¤ல் பிறரிடமிருந்து வேறுபடுகிறோமோ அந்தப் பிரச்சினைகளை அவற்றின் அனைத்துப் புறங்களிலிருந்தும் ஆழமாகவும் அகலமாகவும் கவனித்துப் புரிந்துகொள்ள முயல வேண்டும். (நமது கருத்துக்கு ஒத்துப்போகும்) ஒரு பகுதியை மட்டும் கவனித்துவிட்டு மற்ற பகுதிகளைப் புறந்தள்ளிவிடக் கூடாது. நமது கருத்துக்கான நியாயம், சூழல், பின்னணி, சான்று ஆகியவற்றை விரிவாக அவதானிப்பதைப் போன்றே, அடுத்தவரின் கருத்தையும் அணுக வேண்டும்.

அத்துடன் அந்தப் பிரச்சினை தொடர்பாக எங்கு பேசினால் பொருத்தமோ அந்த இடத் தேர்வும் மிகவும் முக்கியம். தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்று அஞ்சப்படும் சராசரியான இடங்களில் அவற்றைப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்க(ளிடம் பேசும்போது அவர்க)ள் எதைப் புரிந்துகொள்வார்களோ அதையே அவர்களிடம் பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பேசி, அதன் மூலம்) அல்லாஹ்வு(டைய கட்டளையு)ம் அவனுடைய தூதரு(டைய வழிகாட்டலு)ம் மறுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா என்ன? (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 127)


அடிப்படை - 13


மார்க்கத்தின் முன்னோடி, இறையச்சம் நிறைந்தவர், பேணுதல் மிக்கவர், போராட்டவாதி என்றெல்லாம் நிரூபிக்கப்பட்ட சான்றோர் பெருமக்கள், அறிஞர்கள், இமாம்கள் ஆகியோரின் சின்னச் சின்ன சறுக்கல்களும் வழுக்கல்களும் அவர்களின் நற்செயல்கள் மற்றும் மாண்புகள் எனும் பெருவௌ¢ளத்தால் வழிந்தோடிப் போய்விட்டன என்பது நமது சிந்தனையில் எப்போதும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

அத்துடன் ஒப்பீட்டு அளவில் அத்தகைய மாமேதைகளின் அறிவு ஞானத்தோடு நமது அறிவின் கொள்திறன் என்ன என்பதையும் நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவசரக் கோலத்தில் மார்க்கத் தீர்ப்புகளை நாம் அள்ளித் தெளித்துவிடக் கூடாது.

இமாம் சுபுகீ (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1370) கூறினார்கள்: கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த இமாம்களுடன் நாம் ஒழுக்கம் தவறாத நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களிடையே நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளில் நாம் மூழ்கிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் சமூகத்தை வழிநடத்திய பேரறிஞர்கள் ஆவர். அவர்களின் கூற்றுகளுக்குப் பல கருத்துகள் இருக்கலாம். அவற்றில் சில புரியப்படாமல்கூட போயிருக்கலாம். எனவே, அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் நாம் அமைதி காப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அவற்றில் உண்மை எதுவோ அதை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். (தபகாத்துஷ் ஷாஃபிஇய்யா அல்குப்ரா)


அடிப்படை - 14


வழிதவறிய இஸ்லாமியக் கொள்கைப் பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கும் புரிதலுக்கும் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவற்றின் ஊடாக எது சரியான வழிமுறையோ அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மட்டும் இன்றைக்கு நாம் அவற்றில் கவனம் செலுத்தினால் போதுமானது. அதிலேயே மூழ்கி நேரத்தைப் போக்க வேண்டியதில்லை. அந்த அளவின் மூலமே நம் சமூகத்தின் மூத்த தலைமுறையின் முன்னோடி அறிஞர்கள் (சலஃப்) வழிதவறிய பிரிவினர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர்.

அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் தற்கால வழிதவறிய பிரிவினர்களுக்குப் பதிலடி தருவதற்குத் தேவையான அறிவும் ஆற்றலும் நமக்குக் கிடைத்துவிடும். நபிவழியையும் நபித்தோழர்களின் வழியையும் சார்ந்து நிற்கும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவினர் ஒவ்வொரு காலப் பகுதியிலும் தத்தமது காலத்தைய அசத்தியவாதிகளை இவ்வாறே அறிவுபூர்வமாக எதிர்கொண்டுவந்துள்ளனர்.

இன்றைய தினம் வழிதவறிய பிரிவுகளில் நவீனமானவை ஏராளம் உள்ளன. இஸ்மாயீலிய்யா, பஹாயிய்யா, காதியானிய்யா, மாசூனிய்யா, மார்க்சியம் உள்ளிட்ட கொள்கைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவை அனைத்தும் இஸ்லாத்தை உள்ளிலிருந்தும் வெளியிலிருந்தும் கருவறுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.

இருப்பில் இல்லாத, வழக்கொழிந்துபோய்விட்ட ஆதிகாலப் பிரிவுகளைவிட இந்த நவீனப் பிரிவுகளே இன்றைய தினம் நாம் எதிர்கொள்வதற்கு மிகவும் அவசியமானவை. இந்த நவீனப் பிரிவுகளுக்கும் ஆதிகாலப் பிரிவுகளுக்கும் இடையிலான ஒற்றுமை அம்சங்களை அறிந்துகொள்ளும் அளவுக்குப் பழைய பிரிவுகளைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால் போதும். அதற்குமேல் தேவையில்லை.

அவ்வாறே பிறழ் கொள்கைப் பிரிவினர்களைத் தத்தம் காலப் பகுதிகளில் நம்முடைய முன்னோடி அறிஞர் பெருமக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்கி¢ற வழிமுறைகளையும் நாம் கவனிக்க வேண்டும். அவற்றில் நமக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் கிடைத்தால் ரொம்ப நல்லது. இல்லையேல், இல்லாதொழிந்துபோய்விட்ட ஆதிகாலப் பிரிவுகளை நாம் இப்போது தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லை. அவ்வாறு செய்வோமாயின், அது களமே இல்லாமல் போராடுவதாக அமைந்துவிடும்.




இஸ்லாமிய ஒருமைப்பாடு நிறைவேறாத கனவல்ல. எதிர்கால நனவுதான்.
அதை நனவாக்கும் பணியில் அயராது பாடுபடுவோம்.


இறுதியாக


இப்போதைக்கு நாம் ஒன்றை மட்டும் உரத்த குரலில் சொல்ல விழைகிறோம்: நாம் கடைப்பிடிக்க வேண்டிய மேற்கண்ட சத்தியங்கள்தான், நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி நடந்தோரின் (அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ) வழிமுறையாகும். நல்லோர்களான முன்னோடி அறிஞர்களின் (சலஃபுஸ் ஸாலிஹீன்) போக்கும் இதுவாகவே அமைந்திருந்தது. ஆதாரபூர்வமான செவிவழிச் சான்றுகளும் அப்பட்டமான அறிவுசார் ஆதாரங்களும் இதையே நிலைநிறுத்துகின்றன.

அறிவு ஞானம் என்பது பாவத்திற்கு அப்பாற்பட்ட அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் கிடைக்கலாம். சான்றுகள் மூலம் நிரூபணமான கூற்றுகளிலிருந்தும் கிடைக்கலாம். உண்மையாளர் எனச் சான்றளிக்கப்பட்ட ஒருவரின் கூற்றும் சான்றாதாரங்களிலிருந்து ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்த முடிவுகளும்கூட அறிவு ஞானத்தைத் தரக்கூடியவைதான். இதையெல்லாம் நாம் கண்மூடித்தனமாக மனம்போன போக்கில் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ் நாடினால் நம் கருத்துகள் மெய்ப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இறைவா! நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக. நீ யார்மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழியே அது. அவர்கள் உனது சினத்திற்கு ஆளானவர்கள் அல்லர். வழிதவறிச் சென்றவர்களும் அல்லர்.

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...