வியாழன், 7 ஜூலை, 2011

மேலப்பாளையம் முஸ்லிம்கள்


- சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,



இந்த நாட்டில் முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை முஸ்லிம் கள் புரிந்துகொள்வதற்கு சகோதரி பே. சாந்தியின் ``மேலப்பாளையம் முஸ் லிம்கள்’’ எனும் நேரடிக் கள ஆய்வு நூல் ஒரு சோற்றுப்பதம் போல் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் தமது இலக்கை நிர்ணயித்துக்கொள்ளவும் சரியான பாதை நோக் கிய பயணத்திற்கான திட்டமிடல்களில் கவனம் செலுத்தவும் இந்நூலை ஆழ மாக வாசித்து உள்வாங்குவதும் உள்வாங்கியதை அப்படியே அடுத்த தலை முறைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் காலத்தின் கட்டாயம்.

அதிலும் சமூகத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், குறிப்பாகச் சமூகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மார்க்க அறிஞர்கள் ஆகியோர் இந் நூலை வாசிக்கத் தவறினால் அவர்களின் சமூகப் பணியில் அவர்களால் நிறைவை எட்ட இயலாது என்பதே எனது தாழ்மையான கருத்து.

திருநெல்வேலி பாளையங்கோட்டை யாதுமாகி பதிப்பகத்தார் இந்நூலை வெளியிட்டுள்ளனர். ``பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி’’ என்று முதலாளிய அறிஞர் ஜான்சன் கூறினார்.

அதற்கேற்ப, தேசபக்திக் கோஷத்தைக் கையிலெடுத்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சிறுபான்மை சமூகத்தாரை, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைத் தேசத்திற்கு விரோதிகள் என்று கட்டமைப்பதற்குப் படாதபாடு பட்டுவந்தனர்.

`தமிழகம் மட்டும் உடைப்பதற்குக் கடினமான ஒரு கொட்டையாக இருந்துவருகிறது’ என்று கடந்த எழுபதுகள்வரை அங்கலாய்த்துக்கொண்டிருந்த ஆர்.எஸ். எஸ். இயக்கம், எண்பதுகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழகத்தில் வேர் பிடிக் கத் துவங்கிற்று.

அதன் பக்கவிளைவாக, ``முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கு தொண்ணூறுகளில் இருந்து பரவலாக ஊடகங்களால் கட்டமைக்கப் பட்டுவந்தன; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம்கள்மீது அவ்வாறு கட்டமைக்கப்பட்ட மாயையை நூலாசிரியர் பே. சாந்தி தமது நேரடிக் களப்பணி ஆய்வு மூலம் சுக்குநூறாக்கியுள்ளார்’’ எனும் பதிப்பகத்தாரின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.

நூலைப் பற்றியும் அதன் உள்ளீட்டைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு நூலாசிரி யர் இந்த ஆய்வை மேற்கொள்ளவும் அதை வெளியிடவும் நேர்ந்ததற்கான சூழலை நாம் புரிந்துகொள்வது நல்லது. அதை ஆசிரியரே இப்படிக் கூறுகிறார்:

``மேலப்பாளையம் முஸ்லிம் மக்கள் குறித்து நான் எழுத நேர்ந்த சூழலைக் குறிப்பிட்டாக வேண்டும்.

தென்மாவட்டங்களில் சாதிய, மத ரீதியிலான முரண்களைக் குறித்த பல்கலைக்கழக மானியக் குழு உதவியிலான ஓர் ஆய்வுத் திட்டத்தின் ஆய்வு உதவியாளராக மேலப்பாளையத்தினுள் நுழைந்தேன்.

களத்திற்குப் போவதற்கு முன்பு திட்ட இயக்குனர் முதலான என்னுடைய ஆசிரியர்கள் எனது பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை தெரிவித்தனர்.

மேலப்பாளையம் குறித்த ஊடகங்களின் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த நியாயமான கவலை அது.

மேலப்பாளையத்தினுள் சென்று களப்பணியில் ஈடுபடும்போதுதான் அவ்வூர் மக்களைக் குறித்து அறிந்துகொண்டதுடன், அம்மக்களுக்கு அரசு நிர்வாகமும் ஊடகங்களும் இழைத்துள்ள அநீதியை அறிய முடிந்தது.

காவல்துறையின் அத்துமீறல்கள் இளைய தலைமுறையினரைச் சீரழித்துக் கொண்டிருந்ததை நேரடியாகக் கண்டறிய முடிந்தது.

இக்கொடுமைகளுக்கான தீர்வைக் கொடுக்க முடியாவிட்டாலும், இக்கொடுமை கள் குறித்த தகவல்கள் வெளியுலகை எட்டி, இம்மக்களின் பரிதாபமான நிலை மையைப் புரிந்துகொண்டு, மேலப்பாளையம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் கட்டமைத்துள்ள மாயை சிறிது விலகினாலும் அதுவே இந்நூலின் (மூலம் எனக்குக் கிடைக்கும்) பெரிய வெற்றியாக அமையும்.’’

இங்கு நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நூலாசிரியர் இந்த ஆய்வை மேற்கொண்ட பின்னர் (2001) ஐந்து ஆண்டுகள் கழித்தே (2006) இந்நூலை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வை நூல் வடிவில் வெளியிடுவதற்கு முன்னர் இதை அரசின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அவரின் திட்டம். இருப்பினும் உரிய இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்னர் தமது ஆய்வு இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிடலாம் என்று அஞ்சியே தமது முடிவை மாற்றிக்கொண்டு முதலில் நூலாக வெளியிட்டுள்ளார்.

இதை நூல் வடிவில் வெளியிட வேண்டிய நிலைக்குத் தம்மை நெட்டித் தள்ளிய சூழலை நூலாசிரியரே இப்படி விளக்குகிறார்:

``இந்நூலினை வெளியிட்டே தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்ததற்கும் ஒரு காரணம் உண்டு. மாணவர்களுக்கு இடையில் ஊடகங்கள் தொடர்பாக நான் வகுப்பெடுக்கச் செல்வது வழக்கம். ஒரு வகுப்பில் மாணவர் ஒருவர், ``நம் நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் இந்துக்கள்தானே; முஸ்லிம்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவங்கதானே; அவங்க நம்ம நாட்டைப் பாழாக்கிட்டிருக்காங்க; அதை நாம எவ்வளவு நாள்தான் பொறுத்துக்க முடியும்’’னு கோபமாகக் கேட்டார்.

நான் நிதானமாக அந்த மாணவரின் எண்ணத்தைத் தவறு என்று புரியவைத்ததும், மாணவர்கள் என்னிடம் சொன்னது, ``டீச்சர்! எங்கக்கிட்ட யாருமே இந்தக் கோணத்தில் சொல்லலை; செய்திகளை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் சொல்லித் தரலை டீச்சர்’’ என்பதுதான். அந்த நேரம் எனக்குள் ஒரு பெரிய குற்றவுணர்வு. நானும்தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு களப்பணி செய்து கண்டறிந்த உண்மைகளை முழுமையாக மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவில்லை. அந்த உறுத்தல் என்னைக் குடைந்தெடுத்துக்கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்நூலின் உடனடியான வெளியீட்டிற்குக் காரணம்.’’

இந்நூல் இரு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதற்பகுதி, ``மேலப்பாளைய மக்கள் குறித்த இனவரைவியல்’’ எனும் தலைப்பில் மேலப்பாளையத்தின் தொன்மை, அவ்வூருக்கு இஸ்லாம் வந்த விதம், தொழில், மொழி, ஆடை, சடங்கு சம்பிரதாயங்கள், பிற சமூகத்தாருடனான சுமூக உறவு, கல்வி, ஆண்கள் மற்றும் பெண்களின் நிலை, பொருளாதாரம், குடித்தன முறை, கொள்கைப் பிரிவுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக அலசுகிறது.

நமக்குத் தெரிந்தவரை பெரும்பாலும் அவை உண்மைத் தகவல்களே. கல்வி, பொருளாதாரம், உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் போதிய விழிப்புணர்வு அங்கு இல்லை என்று நூலாசிரியர் குறிப்பிடுவது, பொதுவாக முஸ்லிம் சமூகத் தலைவர்களும், குறிப்பாக மேலப்பாளையம் சார்ந்த அறிவுஜீவிகளும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

நூலின் இரண்டாம் பகுதி, ``மேலப்பாளைய முஸ்லிம் மக்களின் இன அடையாளத் தேடலின் துவக்கம்’’ எனும் தலைப்பில் தொடங்குகிறது. 1992 டிசம்பர் 6ல் நடந்த பாபர் மசூதித் தகர்ப்பையும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் அதில் நூலாசிரியர் பேசுகிறார்.

``பாபர் மசூதி இடிக்கப்பட்ட விபரம் முஸ்லிம் மக்கள் மனதில் ரணத்தையும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது; அப்போது அவர்களிடம் ஏற்பட்ட இந்த ஆவேசம் பாபர் மசூதியைக் காக்கத் தவறிய அரசின் மீதான இயல்பான எதிர்ப்புணர்வாகத்தான் வெளிப்பட்டதே தவிர, மும்பைப் பகுதிகளில் நடந்ததைப் போன்று இந்து முஸ்லிம் கலவரமாக வெடிக்கவில்லை’’ என்ற வரிகள் அவரது நேர்மையையும் நம்பகத்தன்மையையும் பறைசாற்றுகின்றன.

இந்த இரண்டாம் பகுதியில், மேலப்பாளையம் மக்கள்மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட அராஜகங்களை வரிசைப்படுத்தியுள்ளார். காவல்துறையின் அத்துமீறலில் பாதிக்கப்பட்ட சுமார் முப்பது பேரிடம் தாம் நேரடியாகக் கேட்ட தகவல்களைத் திரட்டிக் கொடுத்துள்ளார்.

அவர்களில் ஷாஆலம் தங்கள் (வயது 19) த/பெ. காஜா என்பவர் எம்முடைய உறவினர். அவரின் வாக்குமூலம் நூலின் 60ஆம் பக்கத்தில் இடம்பெறுகிறது. இஃதன்றி, அப்துல்லாஹ் (வயது 24) (58ஆம் பக்கம்), அப்துல் ரகுமான் (வயது 24) (62ஆம் பக்கம்), மைதீன் பாத்திமாள் (வயது 48) சித்திக், அபுதாகிரின் தாய் (66ஆம் பக்கம்) ஆகியோரின் வாக்குமூலங்கள் காவல்துறையின் கயமைத்தனத் தையும் அவர்களிடம் ஊறிப்போயிருந்த மதவெறிப் போக்கையும் நன்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.

இது குறித்து இந்நூலுக்கு முன்னுரை வரைந்துள்ள மனித உரிமைப் போராளியும் சிறுபான்மைச் சமூக ஆர்வலருமான பேராசிரியர் அ. மார்க்ஸ் இப்படிக் குறிப்பிடுகிறார்:

``மனித மாண்புகள் சிறிதும் அற்ற காவல்துறை அதிகாரிகளுக்குச் சொத்து சம்பாதிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக முஸ்லிம் உடல்கள்மீதான சித்திர வதைகள் அமைந்தன.

முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காகத் தாம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும், கடும் சித்திவதைக்குள்ளாக்கப்படு வதும், மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதும் நாமும் இந்த நாட்டுக் குடிமக்களில் ஒருவர்தானா என்கிற ஐயத்தையும் அதனூடாக மனக் காயத்தையும் சோகத் தையும் ஒவ்வொரு மேலப்பாளைய முஸ்லிமின் உள்ளத்திலும் ஏற்படுத்தின.

இந்நூலை வாசிக்கும் யாரும் இதை உணர இயலும். திருக்குர்ஆனை அவமதித் தல், `துலுக்கப் பயலே’ என விளித்துக் கைது செய்யப்படுதல், இந்துக் கடவுள ரின் முன் விழுந்து வணங்க நிர்ப்பந்தித்தல் போன்ற அத்துமீறல்களை அறியும் போது இது மேலப்பாளையம்தானா, இல்லை, குவான்டனாமோ, அபுகரிப் சிறை முகாம்களா என்கிற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

ஊர், வீடு என்பவையெல்லாம் பாதுகாப்பின் குறியீடுகளாக அமைவதற்குப் பதிலாக அவையே ஆபத்தின் ஊற்றுக்கண்களாக மாறும் கொடுமை முஸ்லிம் களின் மனதை எப்படிப் பாதித்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை’’.

பேராசிரியர் அ. மார்க்ஸ் தமது முன்னுரையின் இறுதிப் பாராவில் இப்படி ஒரு கவன ஈர்ப்புக் கோரிக்கையை வைக்கிறார்:

``பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாக்குமூலங்களின் ஊடாக மனித உரிமை மீறல் கள் புரிந்த காவல்துறை அதிகாரிகளின் பெயர்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

நேர்மையான காவல்துறை அதிகாரி ஒருவரின் பெயரையும் அவர்கள் சொல்லத் தயங்கவில்லை. இதை வாசிக்க நேர்கிற நீதி வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள், (பொதுநல அடிப்படையில்) இவ்வாய்வை நீதி கோரும் மனுவாக ஏற்றுக்கொண்டு விசாரணை ஒன்றுக்கு ஆணையிட்டு மனித உரிமை மீறல்கள் புரிந்த காவலர்களைத் தண்டிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதிய இழப்பீடுகள் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.

மனித உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். மேலப்பாளையம், கோட்டைமேடு (கோவை) போன்ற (முஸ்லிம் கள் நிறைந்த) பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் காவலர்களாக இருப்பதற்கும் வழிகாண வேண்டும்’’.

மனித உரிமைப் போராளி பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்வைத்துள்ள இந்தக் கருத்தையே நாமும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வழிமொழிகிறோம்.

எது எதற்கெல்லாமோ போராட்டம் நடத்துகின்ற முஸ்லிம் இயக்கங்கள் இதை முன்னிட்டுப் போராட்டம் நடத்தத் தவறியது அவர்களின் சமூகப் பார்வையில் இன்னும் பழுது இருப்பதையே காட்டுகிறது.

இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மனித உரிமைக்கெதிரான காவல்துறைக் கொடுமைகள் யாவும் கல்வி சார்ந்த ஆய்வு ஒன்றின் தரவுகளாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமை இயக்கத்தின் சமூகப் பணி எனும் அடிப்படையில் அவை பதிவு செய்யப்படவில்லை. அப்படியிருந்தாலாவது அவற்றில் மிகைப்படுத்தல்கள் உள்ளன என்று தள்ளிவிடலாம். ஆனால், அதற்கு வழியே இல்லை. இதுவே இந்நூலின் உண்மைத் தன்மைக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது.

இந்நூல் குறிப்பாக மேலப்பாளையம் முஸ்லிம்களின் கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைப் பற்றி ஆழமான முறையில் ஆய்வு செய்தாலும், குறிப்பிட்ட சில நடைமுறைகள், வழக்காறுகள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இது மேலப்பாளையம் முஸ்லிம்களின் நிலை மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் நிலையும் இதுதான் என்றே சொல்லலாம்.

சமூகப் பணி செய்வதாகக் கூறுகின்ற முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இந்நூலை வைத்துத் தம் இயக்கத் தூண்களுக்கும் தொண்டர்களுக்கும் வகுப்பெடுக்கவும், இது போன்ற பொதுநலன் கருதும் நூல்கள் பற்றிய புரிதல்களைப் பரவலாக்கவும், முடிந்தால் இந்நூலுக்கு மைய, மாநில அரசுகளின் கவன ஈர்ப்பைப் பெற்றுத் தரவும் முயற்சிக்குமானால் அது முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் உருப்படியான சேவைகளில் ஒன்றாக அமையும்.

வகைதொகை தெரியாமல் பணம் வருகிறது என்பதற்காக மலிவு விலையில் ஓர் எழுத்து வியாபாரியைப் பிடித்து, சொந்த வரலாறு என்ற பெயரில் அட்டை முதல் அட்டைவரை முகம் சுளிக்கவைக்கும் அளவிற்குத் துதிபாடல்களையும் பொருளற்ற வேடிக்கை விநோதங்களையும் எழுதச் செய்து மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்கின்ற பணக்காரப் பிதாமகர்கள், சகோதரி பே. சாந்தி போன்ற களஆய்வாளர்களைப் பயன்படுத்தித் தமது ஊரின் மறுபக்கத்தை உலகறியச் செய்யவும் அதன் வழி தம் சொந்த சமூகம் உய்யவும் முயற்சி மேற்கொண்டால் நல்லது.

புத்தகத்தின் அட்டையில், `முஸ்லீம்கள்’ என்பதற்குப் பதிலாக `முஸ்லிம்கள்’ என்றே இடம்பெற்றிருக்க வேண்டும். இது தவிர புத்தகத்தில் மிகச் சில இடங்களில் காணப்படுகின்ற ஒன்றிரண்டு அச்சுப் பிழைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சகோதரி பே.சாந்தியின் இந்த முயற்சி ஒட்டுமொத்த முஸ்லிம் களின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நூல் இது. அதிலும் குறிப் பாக, மேலப்பாளையம், கோட்டைமேடு என்று மட்டுமில்லாமல், அண்மைக் காலங்களில் காவிக்கறை படிந்த காவல்துறையின் மறைமுக அச்சுறுத்த லுக்கு ஆளாகிவருகின்ற தென்காசி, முத்துப்பேட்டை, மதுக்கூர் போன்ற முஸ்லிம் ஊர்களும் பாடம் படித்துக்கொள்வதற்கு இந்நூலில் நிறைய தகவல்கள் உள்ளன.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் நூலின் பெயர் என்ன எங்கு கிடைக்கும் பதியவும்

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் நூலின் பெயர் என்ன எங்கு கிடைக்கும் பதியவும்

yousufsiddheeq சொன்னது…

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை யாதுமாகி பதிப்பகத்தில் கிடைக்கும்.

Sathak Maslahi சொன்னது…

அவசியம் வாசித்தறிய வேண்டிய
அருமையான நூல்.

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...