வியாழன், 22 ஆகஸ்ட், 2013

உறக்கம் - ஓர் இஸ்லாமியப் பார்வைமௌலவி, சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,

உறக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படையான ஆயுட்காலத் தேவையாகும். உறக்கம், இறைவனின் அருட்கொடை மட்டுமன்றி, அது மனிதன்மீது இறைவனுக்குள்ள பேராற்றலை உணர்த்தக்கூடிய சான்றாகவும் உள்ளது. உறக்கம் உயிர்களை ஆட்கொண்டதும் அது உயிர்களின் இயக்கம், உணர்வு ஆகியவற்றைத் துண்டித்துவிடுகிறது. உயிரியலில் உறக்கத்தை ‘’தன்னுணர்வற்ற நிலை’’ என்பர். உறங்குபவர் எதார்த்த உலகிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டவராக இருக்கிறார். கிட்டத்தட்ட, வாழ்வும் இறப்புமற்ற ஒரு நிலை அது. இந்த நிலையை உயிர்களின் நலன் கருதி இறைவனே வலுக்கட்டாயமாக ஏற்படுத்துகிறான்.
உறக்கம் என்பது மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தவிர்க்க முடியாத ஓர் ஆயுள்காலத் தேவையாகும். உறக்கமின்றி எந்தவோர் உயிரும் ஒரு குறுகிய கால அளவுக்கு மட்டுமே உயிர்வாழ முடியும். உயிர்களின் இயல்புக்கு மாற்றமான வழிமுறைகள் மூலம் விழித்தே இருக்கும்படி ஓர் உயிர் நிர்பந்திக்கப்பட்டால் அது உயிரிழக்க நேரிடும்.பொதுவாக பகல் பொழுது வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்புக்காகவும் இரவு நேரம் ஓய்வுக்காகவும் இறைவனால் வகுக்கப்பட்டுள்ளது. ‘’(மனிதர்களே!) நீங்கள் பகலில் இறைவனின் அருட்கொடையைத் தேடுவதற்காகவும் இரவில் அமைதி பெறுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் உங்களுக்காக அல்லாஹ் இரவையும் பகலையும் ஏற்படுத்தியுள்ளான். இது அவனது கருணையில் அடங்கும் (28:73) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

உறக்கம் ஓர் இறைச்சான்று

தூக்கம் என்பது இறைவனின் அருட்கொடை மட்டுமல்ல, அது மனிதன்மீது இறைவன் ஆற்றல்மிக்கவன் என்பதை உணர்த்தக்கூடிய சான்றாகவும் உள்ளது. இது குறித்து அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகையில், ‘’நாம் உங்கள் உறக்கத்தை (உங்களுக்குரிய) ஓய்வா(ன பொழுதா)க ஆக்கியுள்ளோம்’’ (7:89) என்கிறான்.

உறக்கம் உயிர்களை ஆட்கொண்டதும் உயிர்களின் இயக்கம், உணர்வு ஆகியவற்றை அது துண்டித்துவிடுகிறது. உயிரியலில் உறக்கத்தை ‘’தன்னுணர்வற்ற நிலை’’ (Unconscious State) என்பர். உறங்குபவர் எதார்த்த உலகிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டவராக இருக்கிறார். யாரேனும் ஒருவர் கொல்ல வந்தாலும், அருகில் சப்தம் கேட்டாலும் விழிக்காத வரையில் உறக்கத்தில் இருப்பவருக்கு எதுவும் தெரியாது. மயக்கத்தில் இருப்பவர் உணர்விழந்த நிலையில் இருப்பதைப் போன்றே அவரும் இருப்பார். கிட்டத்தட்ட, வாழ்வும் இறப்புமற்ற ஒரு நிலை அது. இந்த நிலையை உயிர்களின் நலன் கருதி இறைவனே வலுக்கட்டாயமாக ஏற்படுத்துகிறான்.

பகலில் வாழ்க்கைப் பிரச்சினைகளில் உழன்று உழைத்துக் களைப்படைவதால் செலவாகிப்போன தேக ஆற்றலைப் புதுப்பித்துக் கொடுக்கவும் களைத்துப்போன நரம்பு மண்டலத்திற்கும் உடலுக்கும் ஓய்வு தரவும் உறக்கம் பொறுப்பெடுத்துக்கொள்கிறது. இதில் உயிர்களின் விருப்புக்கோ தேர்வுக்கோ அறவே இடமில்லை.

உறங்கவே கூடாது என்று திட்டமிட்டுக்கொண்டு ஒருவர் இருந்தாலும் அவரை உறக்கம் விடாது. ஓய்வு கேட்டுக் கெஞ்சும் உடல் மற்றும் நரம்புகளின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு, முழுக்க முழுக்க இறையாற்றலால் நடந்து முடிகின்ற ஓர் அற்புதம்தான் உறக்கம்.

உறக்கத்தில் இருப்பவர், உறங்கும்போது தாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உணர முடியாதவாறும், தம் கட்டுப்பாட்டில் இல்லாதவராகவுமே இருக்கிறார். விழித்தெழுந்த பின்பும்கூட உறக்கத்தில் தாம் இருந்த நிலையை அறியாதவராகவே அவர் இருக்கிறார். இதுவும் உயிரினங்களின் உலகில் ஒரு புரியாத புதிர்தான்.

உயிரினங்களின் தொடர்ச்சியான இயக்கம்

ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் ஆறு முதல் எட்டு மணி நேரம்வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். அப்படி உறங்கி எழும்போதுதான் விழித்திருக்கும் பதினாறு அல்லது பதினெட்டு மணி நேரமும் உற்சாகமாக இயங்க முடியும். மனமும் உடலும் திறமையுடன் செயல்படும். உறக்கத்தில் ஏற்படும் கோளாறு நமது வினைத்திறனில் பெரும் பாதிப்பபை உண்டாக்கும்.

மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது, தீய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது, கோபம் மற்றும் ஆத்திரத்தைக் குறைப்பது ஆகியவற்றில் உறக்கத்தின் பங்கு இன்றியமையாதது. சரியாக உறங்காதவர்களிடம் இந்த ஒழுங்குகளை எதிர்பார்க்க முடியாது. அவர்களின் கண்களே அவர்களின் பேயறைந்த நிலையைக் காட்டிக்கொடுத்துவிடும்.

உறங்கும்போது இயங்காத உறுப்புகள்

நமது உடலில் இருவகை தசைகள் உண்டு.
1. கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் (Voluntary Muscles)
2. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் (Involuntary Muscles).

கை, கால்கள், முகம், தோள்பட்டை, மார்பு, முதுகு போன்றவற்றிலுள்ள கடினமான தசைகள் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் ஆகும். இவற்றை நாம் நினைக்கும்போது அசைப்பதற்கான விருப்பாற்றல் நம்மிடம் இருக்கும். இவை நாம் நடக்க, நகர, ஓட, உருள, புரள, கண்ணசைக்க, முகபாவணை காட்டப் பயன்படும் தசைகள் ஆகும். ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும் பெண்களில் உடலில் சுமார் 36 சதவீதமும் இவ்வகை தசைகள் உள்ளன. உறக்கத்தின்போது இவ்வகை தசைகள் தாற்காலிகமாகச் செயல் இழந்துவிடுகின்றன.

கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் என்பவை, இரைப்பை, இருதயம், உணவுக் குழாய், காற்றுக் குழாய், வயிற்றிலுள்ள உள்ளுறுப்புகள், சிறுநீர்ப் பை, இரத்தக் குழாய்கள், உடலுறுப்புகளுக்குள்ளே உள்ள மெல்லிய தசைகள் ஆகியன ஆகும். இவை நமது விருப்பாற்றலுக்கு உட்படாதவை.  இவை நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் செயல் இழப்பதில்லை. அவை தம் செயல்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும்.

உறக்கத்தின் வாயிலாக நாம் தன்னுணர்வற்ற நிலைக்குப் போனாலும் இவ்வகை தசைகள் நமக்குள்ளே தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்ற அம்சம் கண்டிப்பாக இறைவனின் அத்தாட்சியைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

உறங்க வேண்டிய நேரத்தில் உறங்குதல்

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பகலெல்லாம் நோன்பு நோற்றுக்கொண்டும் இரவெல்லாம் நின்று வணங்கிக்கொண்டும் இருக்கின்றார் என்று நபிகளாரிடம் புகார் வந்தது. அவரை அழைத்து அவரின் செயல்பாடுகளை விசாரித்தறிந்த நபியவர்கள் அவருக்கு அளித்த பின்வரும் அறிவுரை கவனத்திற்குரியது:

நிச்சயமாக உனது உடலுக்கு நீ செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன. உனது கண்ணுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளும் உள்ளன. (ஸஹீஹுல் புகாரீ-1975)

ஒருவர் தமது குடும்பத்திற்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் மட்டும் கடமைப்பட்டவரல்லர். அவர் தமது சுயத்திற்கும் கடமைப்பட்டவரே. தமது சொந்த நலனில் உரிய கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்ளாதவர் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் இழப்பை ஏற்படுத்தவே செய்வார்.

எனவே, நாம் நமக்கிருக்கும் பல்வேறு கடமைகளுக்கு இடையே சமச்சீரான நிலையைப் பேணுவோராகவே இருக்க வேண்டும். உறக்கத்தைத் தவிர்ப்பது அல்லது உரிய அளவைவிடக் குறைப்பது என்பது ஒரு வகையில் நமக்கு நாமே செய்துகொள்கிற தீங்காகும்.

இரவில் காலாகாலத்தில் உறங்குதல்

மோசமான மனிதர்களின் தீய நடவடிக்கைகளை வர்ணித்துக்கொண்டுவரும் திருமறை குர்ஆன், இராக்கதை பேசுவதையும் குறிப்பிடுகிறது (பார்க்க: 23:67). இரவில் தேவையின்றி விழித்துக்கொண்டிருப்பது தவறாகும். அது இறையருளைத் தவிர்ப்பதற்குச் சமம். அதிலும் கேளிக்கை, அரட்டை, பயனற்ற உரையாடல், தொலைக்காட்சி பார்த்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு இரவை வீணாக்குவது மிகப் பெரும் குற்றமாகும். ஏனெனில், அது இறைவனின் அருட்கொடையை எட்டி உதைப்பதற்குச் இணையானது. இதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கலாம்.நபி (ஸல்) அவர்கள் இரவில் இஷா தொழுகைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுத்துவந்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ-568)

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள், ‘’இஷா தொழுகைக்குப் பின்னர் இராக்கதை பேசுதல் வெறுக்கத் தக்கது’’ எனும் தலைப்பில் ஒரு பாடத்தை அமைத்து அதில் மேற்கண்ட ஹதீஸை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

யாரேனும் இராக்கதை பேசிக்கொண்டிருந்ததாக கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் புகார் வந்தால், அதற்குத் தண்டனையாக அவருக்கு அடி கொடுப்பார்கள். ‘’இரவில் கதை பேசிக்கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் உறங்குகிறாயா?’’ என்று கடிந்துகொள்வார்கள். (ஃபத்ஹுல் பாரீ)

இந்தக் கண்டனமானது இரவுநேர வழிபாடு, படிப்பு, மார்க்க ரீதியான உரையாடல், குடும்பத்துடனான அனுமதிக்கப்பட்ட பேச்சு ஆகிவற்றுக்குப் பொருந்தாது.

பகல் உறக்கமும் இரவு வணக்கமும்

இரவு என்பது ஓய்வுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நேரம்தான். எனினும், பின்னிரவு நேர வழிபாடு (தஹஜ்ஜுத்) என்பது மிகவும் உன்னதமானது. உலகமே மெய்மறந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது இறைவனை நினைத்து வழிபாட்டில் இன்பம் காணுவதை இறைவன் மிகவும் விரும்புகிறான்.‘’அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும். அவர்கள் தம் இறைவனை ஆர்வத்துடனும் அச்சத்துடனும் அழைத்து(ப் பிரார்த்தனை செய்து வழிபட்டு)க் கொண்டிருப்பார்கள்’’ (32:16) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

‘’வீணான விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் அவற்றில் காணும் இன்பத்தைவிட இரவுநேர வணக்கசாலிகள் தம் வழிபாடுகளில் காணும் இன்பம் அலாதியானது. இரவு மட்டும் இல்லையேல் உலகத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை’’ என அபூசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

உறக்கத்திற்கான இரவு நேரத்தின் ஒரு பகுதியை வழிபாட்டுக்காக ஒதுக்கும்போது, அதை ஈடு செய்யும் வித்ததில் நண்பகலில் சிறிது உறங்கிக்கொள்ள மார்க்கம் வழிகாட்டுகிறது. ‘’நண்பகலில் சற்று நேரம் உறக்கத்தில் (கைலூலா) ஈடுபடுங்கள். ஏனெனில், ஷைத்தான் அந்த உறக்கத்தில் ஈடுபடுவதில்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தப்ரானீ)

பகலின் இந்தச் சிற்றுறக்கமானது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. தேவையை முன்னிட்டு இரவில் உற்சாகத்தோடும் முகமலர்ச்சியோடும் விழித்திருப்பதற்கு வழி செய்கிறது. இதனால் இரவு நேரத்தில் வழிபாடு, படிப்பு, ஆய்வு ஆகிய நற்செயல்களில் இன்பத்துடன் ஈடுபடுவதற்கு ஆற்றல் கிடைக்கிறது. ‘’இரவுநேர தொழுகையாளிகளுக்குப் நண்பகல் நேரச் சிற்றுறக்கமானது நோன்பாளிக்கு சஹ்ர் உணவு போன்றதாகும்’’ என கதீப் அஷ்ஷர்பீனீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பகல் நேர உறக்கம் உடல்நலனுக்குத் தீங்கானது என்றும் அது சோம்பேறித்தனத்தையும் குறிக்கோளற்ற வாழ்க்கைப் பயணத்தையும் உருவாக்கும் என்றும் பலரும் நம்புகிறார்கள்.

பொதுவாக பகல் உறக்கம் குழந்தைகள், உடல்நலம் குன்றியோர், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கானது; உடல்நலத்தோடும் இளமையோடும் இருப்போருக்கு அது தேவையில்லை என்பது வேறு சிலரின் எண்ணம். அதனால்தான் பலருக்கு இது கெட்ட பழக்கமாகத் தெரிகிறது. ஆனால், இது தவறான நம்பிக்கை. பகல் நேரச் சிற்றுறக்கத்தின் காரணமாக மூளையின் செயல்பாடு அதிகரித்து அறிவுத் திறன் வளர்கிறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கான ஆய்வை பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைகழக (University of California, Berkeley) விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். தொடக்கத்தில் இவர்கள் 39 பேரிடம் ஆய்வை மேற்கொண்டனர். இரவு நேரத்தில் அவர்களை நன்றாக தூங்கச் செய்துவிட்டு காலையில் நீண்ட நேரம் படிக்கவைத்தனர். அதே வேளையில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடங்களுக்குச் சிறிய அளவில் தூங்க வைத்தனர்.

இவர்கள் இரு தரப்பினரின் செயல்திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில், பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைச் செயல்பாட்டுத்திறன் அதிக அளவில் இருந்தது தெரியவந்தது. இந்த சோதனை தொடர்ந்து ஒன்றுக்குப் பலமுறை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு முறையும் இந்த முடிவே கிடைத்தது. இது தொடர்பான ஆய்வறிக்கை கலிஃபோர்னியாவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.

அவ்வாறே நாசா நடத்திய ஓர் ஆய்வின் முடிவு, நாற்பது நிமிடங்கள் கொள்ளும் பகல் நேரக் குட்டித் தூக்கம் ஒருவது செயல்திறனை 34 சதவீதமும் விழிப்புணர்வை 34 சதவீதமும் அதிகரிப்பதாகக் கூறுகிறது.

உறக்கத்தின் ஒழுக்கங்கள்

Ø    இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்லுதல்
Ø    அங்கத் தூய்மையுடன் (உளு) உறங்கச் செல்லுல்
Ø    வலப்புறம் சாய்ந்து உறங்குதல்
Ø    தூய்மையான இடத்தில் உறங்குதல். உணவு உண்கின்ற இடத்திலேயே படுத்துறங்கலாகாது. உறங்குவதற்கெனத் தனியிடம் வைத்துக்கொள்ள வேண்டும். இடப்பற்றாக்குறை உள்ளவர்கள் உணவு உண்டபின் அந்த இடத்தை நன்றாகத் தூய்மைப்படுத்திய பின்னரே அங்கு படுத்துறங்க வேண்டும்.
Ø    பாதுகாப்பற்ற இடத்தில் படுத்துறங்குவதைத் தவிர்க்க வேண்டும். ‘’சுற்றுச் சுவர் இல்லாத மேல்தளத்தில் படுத்துறங்குபவரின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது’’ என்று நபியவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
Ø    உறக்கத்திற்கு முன்பும் பின்பும் ஓத வேண்டிய திக்ருகளை ஓதிக்கொள்வது.

குப்புறப் படுத்தல்

படுக்கும்போது வலப்புறமாகச் சாய்ந்து படுப்பது நல்லது. மல்லாந்து படுக்கலாம். இடப்புறமாகச் சாய்ந்தும் படுக்கலாம். ஆனால், முகம் குப்புறப் படுப்பது தவிர்க்கப்பட வேண்டிய முறையாகும்.

நபித்தோழர் அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருமுறை நான் வயிறு தரையில் படும் வகையில் (முகம் குப்புற) படுத்துக் கிடந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் என்னைக் காலால் லேசாகத் தட்டிவிட்டு, ‘’அபூதர்! இது நரகவாசிகளின் படுக்கை முறை’’ என்றார்கள். (இப்னுமாஜா-3714)

மற்றோர் அறிவிப்பில், ‘’இது அல்லாஹ்வுக்கு வெறுப்பூட்டுகின்ற படுக்கை முறை’’ என்று நபியவர்கள் கூறியதாகப் பதிவாகியுள்ளது. (அல்அதபுல் முஃப்ரத்)

நரகவாசிகள் குறித்து அல்லாஹ் குறிப்பிடும்போது, ‘’அந்த (மறுமை) நாளில் நரத்தில் அவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்படும்போது, நரகத்தின் தீண்டலைச் சுவையுங்கள் என்று கூறப்படும்’’ (54:48) எனக் கூறுகின்றான்.

முகங்குப்புறப் படுத்தல் என்பது வெறுக்கத் தக்க, இறைவனுக்குப் பிடிக்காத ஒரு படுக்கை முறை என்பது இந்தத் தகவல்களிலிருந்து தெரியவருகிறது. எனவே, அத்தியாவசியத் தேவை இருந்தால் ஒழிய இவ்வாறு படுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், சான்றுகளின் அடிப்படையில் அது விரும்பத் தகாத செயலாகவே அமைந்துள்ளது.

இருப்பினும், வயிற்று வலி, நெஞ்சு வலி போன்ற உபாதைகளால் சிரமம் ஏற்படும்போது வேறு வழியேதும் இல்லாத நிலையில் குப்புறப் படுத்தால் வலி குறையலாம் என்றால் அது தவறாகாது என அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்) அவரகள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்கள்.

உறக்கத்தின்போது செய்ய வேண்டிய பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கையில் இருக்கும்போது தமது கன்னத்திற்குக் கீழே கையை வைத்து, ‘’அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’’ (இறைவா! உன் பெயராலேயே நான் உறங்குகிறேன். (உன் பெயராலேயே) விழித்தெழுவும் செய்கிறேன்) என்பார்கள்.விழித்தெழும்போது, ‘’அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே நம்மை உறக்கத்தின் மூலம் இறக்கச் செய்துவிட்டு பின்னர் விழிப்பின் மூலம் நமக்கு உயிரளித்தான். இறந்தபின் மறுபடியும் நம்மை உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் வசமே உள்ளது) என்பார்கள். (ஸஹீஹுல் புகாரீ-6312)

இஃதன்றி, உறங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் சில உண்டு. அவற்றையும் நாம் செய்து பழகிக்கொள்ள வேண்டும். இதனால், தினந்தோறும் நாம் உறங்குகின்ற அந்தச் சமயம்கூட நமக்குப் பயனுள்ளதாக மாறும்.


எல்லாம் வல்ல இறைவன் நமக்கு இரவில் நிம்மதியான உறக்கத்தை வழங்குவானாக. பகலில் இம்மைக்காகவும் மறுமைக்காகவும் உற்சாகத்துடன் உழைப்பதற்கு அருள் பாலிப்பானாக.
கருத்துரையிடுக

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...