வெள்ளி, 28 ஜூன், 2013

முன்மாதிரி முஸ்லிம்கள்-2

துஃபைல் பின் அம்ர் அத்தவ்சீ (ரலி)
அரபியில்: டாக்டர், அப்துர் ரஹ்மான் ரஉஃபத் அல்பாஷா
தமிழில்: சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
இறைவா! துஃபைல் பின் அம்ருக்கு நீ ஒரு சான்றை வழங்குவாயாக. அது அவர் நாடும் நன்மைக்கு உறுதுணையாக அவருக்கு அமைய வேண்டும். (நபிகளார் செய்த பிரார்த்தனை)
துஃபைல் பின் அம்ர் அத்தவ்சீ (ரலி) அவர்கள் அறியாமைக்காலத்தில் தவ்ஸ் கோத்திரத்தின் தலைவராக விளங்கினார். மதிப்புக்குரிய அரபு உயர்குடி மக்களில் ஒருவராகவும் விரல்விட்டு எண்ணப்படும் மனிதநேயப் பண்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

அவர் வீட்டு அடுப்பில் எப்போது உலை கொதித்துக்கொண்டிருக்கும். வந்து தட்டுவோருக்காக அவர் வீட்டுவாசல் எப்போதும் திறந்துவைக்கப்பட்டிருக்கும். பசித்த வயிற்றுக்கு அவர் உணவளிப்பார். பயத்தில் இருப்போரின் பயத்தை அகற்றி நம்பிக்கையூட்டுவார். அடைக்கலம் கோருவோருக்கு அடைக்கலம் வழங்குவார்.

இதெல்லாம் போக அவர் ஓர் இலக்கியவாதி. நுண்ணறிவு மிக்க புலவர். நுட்பமான இயல்பும் மென்மையான உணர்வும் கொண்ட கவிஞர். உரையாடலின் இனிமையையும் கசப்பையும் நன்கு புரிந்தவர். உரையாடலின்போது அவரது வார்த்தை மனதை மயக்கும் வசிய ஆற்றல் பெற்றவை.

மக்காவில் துஃபைல் பின் அம்ர்

துஃபைல் பின் அம்ர், திஹாமா பகுதியிலுள்ள தம் சமூகத்தாரின் குடியிருப்புகளிலிருந்து புறப்பட்டு மக்கா நோக்கி வந்தார். மக்காவில் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கும் குறைஷ் இறைமறுப்பாளர்களுக்கும் இடையே மோதல் சக்கரம் சுழன்றுகொண்டிருந்த்து. ஒவ்வொருவரும் தமக்குரிய ஆதரவாளர்களைத் திரட்டவும் தம் கட்சிக்குத் தொண்டர்களைக் கவரவும் முயன்றுகொண்டிருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கையையும் சத்தியத்தையும் பலமான ஆயுதங்களாகக் கொண்டு இறைவனை நோக்கி வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துப் பரப்புரை செய்துகொண்டிருந்தார்கள். குறைஷ் இறைமறுப்பாளர்களோ எல்லா விதமான ஆயுத பலத்துடனும் நபியவர்களின் அழைப்புப் பணியை எதிர்த்து மல்லுக்கு நின்றனர். அனைத்துக் கைங்கர்யங்கள் மூலமும் மக்களை நபியவர்களிடம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

முன்திட்டமிடல் எதுவுமின்றி ஏதேச்சையாக மக்காவுக்கு வந்த துஃபைல் பின் அம்ர், இந்தக் காட்சிகளைக் கண்டபோது தாமும் இந்தப் போராட்ட வலைக்குள் அகப்பட்டுக்கொண்டோம் என்று உணர்ந்தார். ஆனால், மக்காவுக்கு வரும்போது இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கும் எண்ணமெல்லாம் அவருக்குச் சிறிதளவும் இல்லை. சொல்லப்போனால், முன்னதாக அவரது இதயத்தில் குறைஷியரைப் பற்றியோ முஹம்மத் (ஸல்) அவர்களின் நடவடிக்கை பற்றியோ சலனம்கூட ஏற்படவில்லை.

இங்குதான் அந்தப் போராட்டத்துடன் துஃபைல் பின் அம்ருக்கு ஒரு மறக்க முடியாத வரலாறு உருவானது. அதுவொரு வினோதமான வரலாறும்கூட. அதை அவரது வாய்மொழியிலேயே கேட்போம்:

துஃபைலிடம் மக்காவாசிகள்

நான் மக்கா வந்துசேர்ந்தேன். மக்காவில் குறைஷ் தலைவர்களும் பிரமுகர்களும் என்னைப் பார்த்தார்களோ இல்லையோ, உடனே ஓடோடிவந்து எனக்கு அழகிய முறையில் வரவேற்பு அளித்தார்கள். அவர்களிடையே மிகவும் கண்ணியமானதோர் இல்லத்தில் எனக்குத் தங்கும் வசதி செய்துகொடுத்தார்கள்.

பின்னர் என்னிடம் வந்து ஒன்றுகூடிய அந்தத் தலைவர்களும் பிரமுகர்களும் என்னைப் பின்வருமாறு எச்சரித்தனர்:

“துஃபைலே! நீர் எங்கள் ஊருக்கு வருகை தந்துள்ளீர். எங்கள் ஊரில் தன்னை நபியென்று கருதிக்கொண்டிருக்கும் இந்த மனிதர் (முஹம்மத்), எங்களின் மரபுகளையெல்லாம் கெடுத்துச் சுட்டிச்சுவராக்கிவிட்டார். எங்களின் ஒருமைப்பாட்டை உடைத்துவிட்டார். எங்களுடைய சமூகக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டார். எங்களுக்கு நேர்ந்த இந்த அவலம் உமக்கும் உம் சமூகத்தில் உமது தலைமைக்கும் நேர்ந்துவிடுமோ என்பதே எங்கள் அச்சம்.

எனவே, அந்த மனிதரிடம் பேச்சுக்கொடுக்காதீர். அவர் சொல்லும் செய்தி எதற்கும் கண்டிப்பாகக் காது கொடுத்துவிடாதீர். அவரது சொல் மதியை மயக்கும் ஆற்றல் பெற்றவை. அதைக் கேட்டால் தந்தையும் தனயனுமே தகராறு செய்துகொள்வர். உடன்பிறந்த அண்ணன் தம்பிகளே அடித்துக்கொள்வர். அவரது வார்த்தையின் வசீகரம் கணவன் மனைவியைக்கூட எதிரெதிர் துருவங்களாக்கிவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்“.

முஹம்மதை நெருங்குவதில்லை

அல்லாஹ்வின் மீதாணையாக, குறைஷியர் இவ்வாறு முஹம்மத் பற்றிய வினோதமான தகவல்களை என்னிடம் தொடர்ந்து எடுத்துச்சொல்லிக்கொண்டிருந்தனர். அவருடைய நூதனமான நவடிக்கைகள் மூலம் எனக்கும் என் சமூகத்திற்கும் ஆபத்து நேரும் என அச்சமூட்டிக்கொண்டிருந்தனர். இறுதியில், அவரிடம் நான் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. அவர் கூறும் எதற்கும் காது கொடுக்கப்போவதில்லை. ஏன், அவர் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்துகொண்டேன்.

காலை நேரத்தில் பள்ளிவாசலுக்கு வந்தேன். கஅபாவை தவாஃப் சுற்ற வேண்டும், அங்குள்ள சிலைகளைத் தொட்டுத் தடவி அருளாசி பெற வேண்டும் என்பது எனது நோக்கம். இதுதான் கஅபாவுக்கு நாங்கள் கொடுக்கும் கௌரவம். இதுதான் எங்களின் ஹஜ். இந்த நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தபோது என்னிரு காதுகளிலும் பஞ்சைத் திணித்துக்கொண்டேன். முஹம்மத் எடுத்துரைக்கும் எதுவும் காற்றுவாக்கில்கூட என் காதைத் தீண்டிவிடக் கூடாது என்கிற அச்சமே இதற்குக் காரணம்.

இருப்பினும் நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்த மாத்திரத்தில் பார்த்தேன். முஹம்மத் கஅபாவுக்கு அருகில் தொழுதுகொண்டும் வழிபாடு செய்துகொண்டும் இருந்தார். அந்தத் தொழுகையும் வழிபாடும் எங்களுக்கு விநோதமாகத் தெரிந்தது. எனவே, அந்தக் காட்சி என்னை மேற்கொண்டு நகரவிடாமல் அங்கேயே கட்டிப்போட்டது. அவரின் வழிபாட்டு முறை எனக்குள் ஏதோ சலனத்தை ஏற்படுத்தியது. என்னை அறியாமலேயே என் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அவரை நோக்கி  நெருங்கியது. இறுதியில், யார் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேனோ அவருக்கு அருகிலேயே நான் போய்ச்சேர்ந்தேன். அவருடைய வார்த்தைகளில் சிலவற்றை என் காதில் விழவைத்தே தீருவது என்பதில் அல்லாஹ்வும் தீர்மானமாக இருந்தான். தேனினும் இனிய அந்த வார்த்தைகள் என் செவியில் வந்து விழுந்தன.

உள்ளத்தைப் பறிகொடுத்த துஃபைல்

அப்போது நான் எனக்குள்ளேயே இப்படிப் பேசிக்கொண்டேன்: ‘’தாயற்றுப் போனவனே! துஃபைலே! நீயொரு புலவன். புலமை மிக்கவன். நல்லதும் அல்லதும் உனக்கு அத்துப்படி. இந்த ஆள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதில் உனக்கென்ன தயக்கம்? அவர் சொல்வது நல்லதெனில் ஏற்றுக்கொள். அல்லதெனில் விட்டுவிட வேண்டியதுதானே’’.

இப்படி எனக்குள்ளேயே பேசிக்கொண்ட நான், சிறிது நேரம் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது முஹம்மத் தமது இல்லத்திற்குத் திரும்பலானார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். அவர் தமது இல்லத்தில் நுழைந்ததும் நானும் உள்ளே நுழைந்தேன். பின்னர் அவரிடம் இப்படிச் சொன்னேன்:

‘’முஹம்மதே! உம் சமுதாயத்தார் உம்மைப் பற்றி என்னிடம் இன்னின்னவாறெல்லாம் கூறினர். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உமது நிலைப்பாட்டைக் குறித்து எனக்கு அச்சமூட்டிக்கொண்டே இருந்தனர். எனவே, நீர் கூறும் எதையும் காது கொடுத்துக் கேட்கக் கூடாது என்ற முடிவில் என்னிரு காதுகளில் பஞ்சைத் திணித்துக்கொண்டேன். ஆனால், அவற்றில் சிலவற்றை என் காதுகளில் அல்லாஹ் வலிந்து விழவைத்தான். உமது கூற்று அழகாக இருந்த்து. எனவே, உமது நிலைப்பாட்டை என்னிடம் எடுத்துரைப்பீராக’’.

இவ்வாறு நான் கூறியதும் முஹம்மத் தமது நிலைப்பாட்டை என்னிடம் எடுத்துரைத்தார். அல்இக்லாஸ் (112), அல்ஃபலக் (113) ஆகிய அத்தியாயங்களை எனக்கு ஓதிக்காட்டினார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களின் கூற்றைவிட மிக அழகான நேர்மையான ஒரு கூற்றை இதுவரை நான் செவியுற்றதில்லை. அப்போதே நான் எனது கரத்தை அவர்களிடம் நீட்டி, ‘’அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்’’ என்று ஓரிறை உறுதிமொழி கூறி இஸ்லாத்தைத் தழுவினேன்.

பின்னர் மக்காவிலேயே சிறிது காலம் தங்கி இஸ்லாத்தின் கட்டளைகளைக் கற்றறிந்தேன். திருக்குர்ஆனில் என்னால் முடிந்ததை மனனமிட்டேன். என்னுடைய சமுதாயத்தாரிடம் திரும்பிச் செல்லலாம் என்று நான் முடிவு செய்தபோது நபியவர்களிடம் சென்று, ‘’அல்லாஹ்வின் தூதரே! என் சமூகத்தில் நான் ஒரு முக்கியப் புள்ளி. என் பேச்சுக்கு மறுபேச்சு யாரும் பேசமாட்டார்கள். எனவே, நான் அவர்களிடம் சென்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் எனக்கு ஒரு சான்றை வழங்க வேண்டும். அது எனது அழைப்புப் பணியில் எனக்கு உறுதுணையாக அமைய வேண்டும்’’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘’இறைவா! துஃபைலுக்கு நீ ஒரு சான்றை வழங்குவாயாக’’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

கைத்தடியில் பிறந்திட்ட ஒளி

பின்னர் என் சமுதாயத்தாரிடம் நான் புறப்பட்டுச் சென்றேன். என் சமுதாயத்தாரின் குடியிருப்புகளுக்கு மேல் உயரமான பகுதி ஒன்றில் நான் இருந்தபோது எனது நெற்றியில் ஓர் ஒளி, வெளிச்சம் உமிழ்ந்தது. அது பார்ப்பதற்கு விளக்கைப் போன்று இருந்தது. அப்போது நான், ‘’இறைவா! இந்த ஒளி என் முகத்தில் வேண்டாம். ஏனெனில், என் சமுதாயத்தாரின் சமயத்தை நான் துறந்துவிட்ட காரணத்தால் கடவுள் என் முகத்தில் தந்த தண்டனை என்று இதை அவர்கள் கருதிவிடுவார்களோ என்ற அச்சம் எனக்கு உள்ளது’’ என்று வேண்டினேன்.

உடனே அந்த ஒளி நான் வைத்திருந்த கைத்தடியின் உச்சிப் பகுதிக்கு இடம் மாறியது. மக்கள் அந்த ஒளியை எனது கைத்தடியில் காணலாயினர். அது மாடத்தில் தொங்கவிடப்பட்ட விளக்கைப் போன்று காட்சியளித்தது. நான் நின்றிருந்த அந்த உயரமான பள்ளத்தாக்கிலிருந்து கீழே இறங்கினேன்.

குடும்பத்தில் நடந்த அழைப்புப் பணி

கீழே வந்ததும் வயது முதிர்ந்த என் தந்தை என்னிடம் வந்தார். நான் அவரிடம், ‘’தள்ளி நில்லுங்கள்; எனக்கு உங்களிடமோ, உங்களுக்கு என்னிடமோ (சமயம் சார்ந்த) எந்தத் தொடர்பும் கிடையாது’’ என்றேன். அதற்கவர், ஏன் மகனே? என்று கேட்டார். ‘’நான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளேன்; முஹம்மத் (ஸல்) அவர்களின் சமயத்தைப் பின்பற்றுகிறேன்’’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘’அப்படியாயின் உன் சமயம்தான் என் சமயம் மகனே’’ என்று கூறினார். ‘’அப்படியாயின் நீங்கள் போய் உடல் குளித்து உடை துவைத்து தூய்மையோடு வாருங்கள்; எனக்கு வழங்கப்பெற்ற போதனைகளை உங்களுக்கு நான் வழங்குகிறேன்’’ என்று கூறினேன். அவர் சென்று உடல் குளித்து உடை துவைத்து தூய்மையோடு வந்தார். அவரிடம் நான் இஸ்லாம் பற்றி எடுத்துரைத்தேன். அவர் மனமாற இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் என் மனைவி என்னிடம் வந்தாள். நான் அவளிடம், ‘’தள்ளி நில்; எனக்கு உன்னிடமோ, உனக்கு என்னிடமோ (சமயம் சார்ந்த) எந்தத் தொடர்பும் கிடையாது’’ என்றேன். அதற்கவள், ‘’என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்; ஏன்?’’ என்று கேட்டாள். ‘’உனக்கும் எனக்கும் இடையே இஸ்லாம் பிரிவினையை ஏற்படுத்திவிட்டது; நான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளேன்; முஹம்மத் (ஸல்) அவர்களின் சமயத்தைப் பின்பற்றுகிறேன்’’ என்று பதிலளித்தேன். அதற்கு அவள், ‘’அப்படியாயின் இனி உங்கள் சமயமே என் சமயம்’’ என்று கூறினாள். ‘’அப்படியாயின் நீ துஷ்ஷரா நீர்நிலைக்குப் போய் உடல் குளித்துவிட்டு தூய்மையாக வா’’ என்றேன். – துஷ்ஷரா என்பது தவ்ஸ் குலத்தார் வழிபடும் சிலையாகும். அதற்கு அருகில் ஒரு நீர்நிலை உண்டு. மலையிலிருந்து அருவியாக விழும் நீர் அதில் வந்து சேரும்.

அப்போது என் மனைவி, ‘’என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்; (மதமாற்றம் காரணமாக) நம் குழந்தைகள்மீது துஷ்ஷரா தெய்வ குற்றம் இறங்கிவிடும் என்று உங்களுக்குப் பயமா?’’ என்று கேட்டாள். அதற்கு நான், ‘’என்ன, துஷ்ஷரா தெய்வமா? உனக்கும் அதற்கும் சேர்த்து கேடே நிலவும். நான் அதற்காக அங்கே போகச் சொல்லவில்லை. மாறாக, ஊருக்கு ஒதுக்குப்புறமாக தொலைவில் இருக்கும் அந்த இடத்திற்குப் போய் அந்நிய ஆடவரின் பார்வையில் படாமல் உடல் குளித்துவிட்டு வா என்ற பொருளில்தான் அவ்வாறு சொன்னேன். அந்தச் செவிட்டுக் கல் (துஷ்ஷரா சிலை) உன்னை ஒன்றும் செய்துவிடாது. அதற்கு நான் பொறுப்பு. பயப்படாமல் போய் வா’’ என்றேன். அவள் போய் உடல் குளித்துவிட்டு தூய்மையோடு வந்தாள். அவளிடம் நான் இஸ்லாம் பற்றி எடுத்துரைத்தேன். அவளும் மனமாற இஸ்லாத்தைத் தழுவினாள்.

பின்னர் தவ்ஸ் குலத்தாருக்குப் பொதுவாக அழைப்பு விடுத்தேன். அவர்களுக்குத் தயக்கம் இருந்ததால் காலதாமதம் செய்தனர். அவர்களில் அபூஹுரைரா என்பார் மட்டுமே விரைந்து வந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

மறுபடியும் மக்காவில் துஃபைல் (ரலி)

நான் மறுபடியும் மக்காவுக்குப் புறப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என்னுடன் அபூஹுரைராவும் வந்திருந்தார். என்னிடம் நபியவர்கள், ‘’துஃபைல்! போன செய்தி என்னவானது?’’ என்று கேட்டார்கள். நான், ‘’மூடிபோட்ட உள்ளங்களும் கடுமையான நிராகரிப்பாகவுமே உள்ளது. தவ்ஸ் குலத்தில் பாவங்களும் குற்றங்களும் தலைவிரித்தாடுகின்றன’’ என்றேன்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுத் தொழுதார்கள். பின்னர் வானத்தை நோக்கித் தம் கைகளை உயர்த்தினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபியவர்களை அந்த நிலையில் பார்த்தபோது, எங்கே அவர்கள் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்து அதனால் என் சமுதாயத்தார் அழிவுக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் ஏற்பட்டது. உடனே நான், ‘’ஐயோ என் சமுதாயமே’’ என்று வாய்விட்டுக் கூறிவிட்டேன். ஆனால், நான் அஞ்சியபடி எதுவும் நடக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘’இறைவா! தவ்ஸ் குலத்தாருக்கு நீ நல்வழி காட்டுவாயாக’’ என்று மூன்று முறை கூறினார்கள். பின்பு துஃபைல் (ரலி) அவர்களிடம் திரும்பிய நபியவர்கள், ‘’துஃபைல்! நீர் சென்று மறுபடியும் உம் சமுதாயத்தாரிடம் மென்மையாக இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைத்து அழைப்புப் பணி செய்வீராக’’ என்றார்கள்.

துஃபைல் (ரலி) கூறுகிறார்: நான் சென்று தவ்ஸ் குலத்தார் வசித்த பகுதியில் இஸ்லாமிய அழைப்புப் பணி மேற்கொண்டுவந்தேன். இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அப்பால் பத்ர், உஹுத், கன்தக் (அகழ்) ஆகிய அறப்போர்கள் நடந்து முடிந்திருந்தன.

அப்போது நான் மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என்னுடன் தவ்ஸ் குலத்தில் எண்பது குடும்பங்களும் வந்திருந்தன. அவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்துவந்தனர். எங்களால் நபியவர்கள் மனமகிழ்ந்தார்கள். கைபர் போரில் கிடைத்த போர்ச்செல்வங்களைப் பங்கிடும்போது மற்ற முஸ்லிம்களுடன் சேர்த்து எங்களுக்கும் பங்கு வழங்கினார்கள்.

நாங்கள், ‘’அல்லாஹ்வின் தூதரே! இனி நீங்கள் பங்கெடுக்கும் ஓவ்வோர் அறப்போரிலும் எங்களை உம்முடைய வலப் பக்கப் படையணியாக ஆக்கிக்கொள்ளுங்கள். எங்களுக்கான அடையாளக்கொடி மப்ரூர் (ஒப்புக்கொள்ளப்பட்டது) என்று அமைத்துக் கொடுங்கள்’’ என்று கூறினோம்.

தீயில் கருகிய துல்கஃப்பைன் சிலை

தொடர்ந்து நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்துவந்தேன். அடுத்து இறைவனின் உதவியால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டார்கள். அப்போது நான், ‘’அல்லாஹ்வின் தூதரே! என்னை துல்கஃப்பைன் சிலையிடம் அனுப்புங்கள்; அம்ர் பின் ஹமமா என்பாருக்குச் சொந்தமான அந்தச் சிலையை நான் தீயிட்டுக் கொளுத்திவிட்டு வருகிறேன்’’ என்று அனுமதி கோரினேன்.

நபியவர்களின் அனுமதி கிடைத்ததும் என் சமூகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பிரிவுடன் நான் அந்தச் சிலையிடம் சென்றேன். அதைக் கொளுத்த முயலும்போது அதனைச் சுற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் திரண்டுவிட்டனர். எனது செய்கையால் எனக்குத் தெய்வ குற்றம் ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தார்கள். துல்கஃப்பைன் சிலைக்கு நான் தீங்கு செய்ததால் அது என்னைச் சும்மா விடாது; நான் பேரிடிக்குப் பலியாகப்போகிறேன்’’ என்று கருதிக் காத்திருந்தனர்.

இருப்பினும், நான் அந்தச் சிலையை நோக்கி முன்னேறினேன். அதன் பக்தர்களின் கண்ணெதிரிலேயே அதன் நெஞ்சில் தீ மூட்டினேன். அப்போது எனக்கு ஒரு கவிதையும் தோன்றியது.

துல்கஃப்பைன சிலையே!
நான் உந்தன் பக்தன் அல்லன்.

நீ பிறப்பதற்கு முன்பே
நாங்கள் பிறந்துவிட்டோம்.

இதோ பார்!
உந்தன் நெஞ்சில்
நான் தீ மூட்டியுள்ளேன்.

அந்தச் சிலை தீயில் கருகத் தொடங்கியது. இன்னும் முழுவதுமாக அது எரிந்து முடியவில்லை. அதற்குள் அந்தத் தீயில் அந்தச் சிலையுடன் என்னுடைய தவ்ஸ் குலத்தாரிடம் ஒட்டியிருந்த இணைவைப்புக் கொள்கையும் (ஷிர்க்) சேர்ந்து எரிந்து சாம்பலானது. என் சமூகத்தில் ஒருவர்கூட மிச்சமின்றி அனைவரும் இஸ்லாத்தை ஏற்று நல்ல முஸ்லிம்களாக வாழ்ந்தனர்.

நபிகளாருக்குப்பின் துஃபைல் (ரலி)

இதன் பிறகு நபியவர்கள் இந்த உலகைப் பிரிந்து செல்லும்வரை அவர்களுடனேயே துஃபைல் (ரலி) அவர்கள் தங்கிவிட்டார்கள். நபிகளாருக்குப் பின் ஆட்சித் தலைமை, தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தபோது துஃபைல் (ரலி) அவர்கள் தமது உடல், பொருள், ஆவி, பிள்ளைகள் என அனைத்தையும் ஆட்சித் தலைமையின் (கலீஃபா) ஆணைக்குக் கட்டுப்பட்டு அர்ப்பணிக்கத் தயாரானார்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த புதிதில் இஸ்லாத்திற்கு எதிராகத் தேசத் துரோகத்திற்கு வழிவகுத்த மதமாற்றக் கலகப் போர் (ஹுரூபுர் ரித்தா) மூண்டது. அப்போது மகா பொய்யன் முசைலிமாவை எதிர்த்துப் போரிடக் கிளம்பிய இஸ்லாமியப் படையின் முதல் அணியில் துஃபைல் (ரலி) அவர்களும் அவருடைய புதல்வர் அம்ர் பின் துஃபைல் (ரலி) அவர்களும் யமாமாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

யமாமாவுக்குப் போகும் வழியில் துஃபைல் (ரலி) அவர்கள் ஒரு கனவு கண்டார். தம் தோழர்களிடம், ‘’நான் ஒரு கனவு கண்டேன். அதற்கு எனக்கு விளக்கம் அளியுங்கள்’’ என்று கேட்டார். தோழர்கள், ‘’கனவில் என்ன கண்டீர்?’’ என வினவினர். துஃபைல் (ரலி) அவர்கள், ‘’எனது தலை மழிக்கப்பட்டிருந்தது. என் வாயிலிருந்து ஒரு பறவை வெளியேறியது. ஒரு பெண் என்னைத் தன் வயிற்றில் நுழைத்துக்கொண்டாள். என் மகன் அம்ர் என்னை வேகமாகப் பின்தொடர்ந்து வருகிறார். ஆனால், எனக்கும் அவருக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்படுகிறது. இதுவே நான் கண்ட கனவு’’ என்றார். தோழர்கள், ‘’நல்ல கனவுதான்’’ என்றனர். ஆனால், அவர்கள் விளக்கம் கூறவில்லை.

‘’அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நான் கண்ட விளக்கம் இதுதான்’’ எனச் சொன்ன துஃபைல் (ரலி) அவர்கள் பின்வருமாறு விவரிக்கலானார்: எனது தலை மழிப்பு என்பது என் தலை வெட்டப்படப்போகிறது என்பதற்கான அறிகுறி. என் வாயிலிருந்து வெளியேறிய பறவை எனது உயிர் ஆகும். என்னைத் தன் வயிற்றுக்குள் நுழைத்துக்கொண்ட பெண் இந்த பூமிதான். எனக்காகப் பூமி தோண்டப்பட்டு அதனுள் நான் புதைக்கப்படப்போகிறேன். அநேகமாக நான் (இப்போரில்) கொல்லப்பட்டு வீரமரணம் அடைவேன் என எதிர்பார்க்கிறேன். என்னை என் புதல்வர் வேகமாகப் பின்தொடர்ந்தது, இறைவன் அருளால் எனக்கு விரைவில் கிடைக்கப்போகும் வீரமரணம் எனும் பாக்கியத்தை என் புதல்வரும் தேடிக்கொண்டு விரைந்து வருவார். ஆனால், அது அவருக்கு இப்போது கிடைக்காது. பின்னால் கிடைக்கும்.

தந்தையைப் போன்ற தனயன்

யமாமா போர்க் களத்தில் துஃபைல் (ரலி) அவர்களின் போராட்டம் மிகவும் மகத்தானதாக அமைந்தது. இறுதியில் அந்தக் களத்திலேயே அவர் உயிர்த் தியாகியாக வீழ்ந்தார். அன்னாரின் புதல்வர் அம்ர் (ரலி) அவர்களோ தமது போராட்டத்தை விடாமல் தொடர்ந்தார். இறுதியில் கடும் காயங்களால் பாதிப்பு அடைந்த்தோடு தமது வலக் கையை மணிக்கட்டுவரை இழந்தார். யமாமா நிலத்தில் தம் தந்தையை மட்டுமன்றி தமது கையையும் விட்டுவிட்டே மதீனா திரும்பினார்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது உமர் (ரலி) அவர்களைச் சந்திக்க ஒருமுறை அமர் பின் துஃபைல் (ரலி) அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்களுக்காக உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் மக்கள் அமர்ந்திருந்தனர். கலீஃபா மக்களை உணவு உண்ண வருமாறு அழைத்தார். மக்களெல்லாம் உணவு உட்கொள்ளச் சென்றபோது அம்ர் பின் துஃபைல் (ரலி) அவர்கள் மட்டும் உணவு உண்ணச் செல்லாமல் விலகி நின்றுகொண்டார்.

அவரிடம் உமர் (ரலி) அவர்கள், ‘’ஏன் சாப்பிட வராமல் தள்ளி நிற்கின்றீர்? கை இல்லையே என்கின்ற தயக்கமா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘’ஆம்; கலீஃபா அவர்களே’’ என்று பதிலளித்தார். உமர் (ரலி) அவர்கள், ‘’அல்லாஹ்வின் மீதாணையாக! துண்டிக்கப்பட்ட உமது கரத்தை நீர் இதில் இட்டுப் புரட்டாத வரையில் நான் இந்த உணவைச் சுவைப்பதாக இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! வாழும் காலத்திலேயே தம்மில் ஒரு பகுதியை – அதாவது கையை – சொர்க்கத்திற்கு அனுப்பிவைத்த பாக்கியம் இங்கு உம்மைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது’’ என்று கூறினார்கள்.

அம்ர் பின் துஃபைல் (ரலி) அவர்களுக்குத் தம் தந்தையைப் பிரிந்த்திலிருந்தே தம் தந்தை கூறியதைப் போன்று வீரமரணம் பற்றிய கனவு தொடர்ந்து வந்துகொண்டே இருந்த்து. ஹிஜ்ரீ 15ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க யர்மூக் யுத்தம் நடைபெற்றபோது அதில் மிகவும் உத்வேகத்தோடு முன்னணியாளர்களுடன் கலந்துகொண் அம்ர் (ரலி) அவர்கள், இழந்த கை பற்றிய கவலை எதுவுமின்றி உக்கிரமான போராட்டத்தில் சூறாவளியாய் சுழன்றடித்தார். இறுதியில் அவர் தந்தை விரும்பியபடியே அந்தப் போரில் வீரமரணம் அடையும் பாக்கியம் பெற்றார்.
துஃபைல் பின் அம்ர் அத்தவ்சீ (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக. அவர் ஓர் உயிர்த்தியாகி மட்டுமல்ல, ஓர் உயிர்த்தியாகியின் தந்தையும்கூட

கருத்துகள் இல்லை:

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...