வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மத்ரசாக்கள் மறுவுயிர்ப்பு - போர்க்கால நடவடிக்கை தேவை


சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.
இஸ்லாம் நமது உயிரினும் மேலானது. இஸ்லாத்தைப் போதிக் கும் கேந்திரங்கள் மத்ரசாக்கள் அல்லது அரபிக் கல்லூரிகள் ஆகும். முஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்திலிருந்து அகற்றுவ தற்கு மேலைநாடுகள் முனைந்தபோது அதை முறியடிப்பதற்காக, 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை தோற்றுவிக்கப்பட்டன. ஏறத் தாழ இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழறிந்த முஸ் லிம்க ளின் சமயப் பற்றைக் காத்துவருவதுடன், தேவையான மார்க்க அறிவையும் விழிப்பையும் வழங்குவதில் மத்ரசாக்களின் பணி இன்றியமையாதது. அத்தகைய மத்ரசாக்களுக்கு இப்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஆபத்து கடந்த சில ஆண்டுகளா கவே உணரப்பட்டுவருகிறது. ஆலிம்கள் மட்டத்தில் மட்டுமே உண ரப்பட்டுவரும் அந்த அபாயத்தைப் பொதுமக்கள் தளத்திற்குக் கொண்டுவரும் ஆக்கம் இது. அந்த அபாயம் என்ன? அதனால் முஸ்லிம் சமூகம் சந்திக்கப்போகும் இழப்பு என்ன? அதற்கான தீர்வு என்னஅதில் நம்முடைய பங்களிப்பு என்ன?
தமிழ்நாட்டில் அரபிக் கல்லூரிகளின் தோற்றம் கடந்த 18ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியிலிருந்து தொடங்குகிறது. அன்றிலிருந்து இன்றுவரை சிறியதும் பெரியதுமாகப் நூற்றுக்கும் மேற்பட்ட அரபிக் கல்லூரிகள் தமிழக முஸ்லிம்களிடையே மார்க்கச் சேவையாற்றிவருகின்றன. முஸ்லிம் சமூகத்தை, இஸ்லாத்திலிருந்து தொடர்பறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள் சர்வதேச அளவில் வியூகம் அமைத்துச் செயல்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே இந்த அரபிக் கல்லூரிகள்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழறிந்த முஸ்லிம்களின் சமயப் பற்றைக் காப்பாற்றி, அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவையும் விழிப்பையும் வழங்கிவருவது இந்த மத்ரசாக்கள்தான். இன்றைக்கு ஒரு சாமானிய தமிழ் முஸ்லிமுக்குக் கிடைக்கும் இஸ்லாம் குறித்த எந்தவொரு தகவலுக்கும் - அது உரை வடிவத்தில் இருந்தாலும் எழுத்து வடிவத்தில் இருந்தாலும் அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக அது வேறு வடிவமே கண்டிருந்தாலும் - அதற்கு மத்ராசாக்களே அடிப்படைக் காரணம்.

கால ஓட்டத்தில் முஸ்லிம்கள் பல கூறுகளாகப் பிரிந்து, இன்றைக்குப் பல்வேறு அமைப்புகளாகவும் இயக்கங்களாகவும் சிதறியிருந்தாலும் அவர்களை வழிநடத்தும் முன்னோடிகள் ஒவ்வொருவரும் மத்ரசாக்களின் வளாகங்களிலேயே உருவாக்கப்பட்டிருப்பார்கள்.
பொன்விழாக்கள்-வெள்ளிவிழாக்கள்

மார்க்கம் போதிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்த மத்ரசாக்கள் பல்லாண்டுகளாக அந்தச் சேவையில் நீடித்து நின்று அண்மைக் காலமாக வெள்ளிவிழாக்களும் பொன்விழாக்களும் நூற்றாண்டு விழாக்களும் கொண்டாடிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.
கடந்த ஆண்டு மேலப்பாளையம் அலிய்யா அரபிக் கல்லூரி ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவும் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி நூற்றாண்டு விழாவும் கொண்டாடின. முன்னதாக வேறுசில மத்ரசாக்களிலும் இதுபோன்ற விழாக்கள் நடைபெற்றுள்ளன.
நடப்பு ஆண்டில் மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி, பொதக்குடி அந்நூருல் முஹம்மதிய்யு அரபிக் கல்லூரி, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி மற்றும் வேலூர் ஜாமிஆ பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி ஆகியவை முறையே பொன்விழா, நூற்றாண்டு விழா, நூற்று ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாடவிருக்கின்றன.
சாதனையை மறைக்கும் வேதனை

இதுவொரு மகிழ்ச்சிக்குரிய செய்தியும் மகத்தான சாதனையும் ஆகும். என்றாலும், இன்றைக்கு மத்ரசாக்களின் நிலை பொதுவாக மகிழும் நிலையில் இல்லை என்பதே எதார்த்தம்.

மத்ரசாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் வேதனைப்பட வைக்கிறது. ஒரு காலத்தில் உறைவிட வசதி, நான்கு மாணவர்களுக்கு ஓர் அறை என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்த மத்ரசாக்களில் இன்றைக்கு ஒரு மாணவருக்கு நான்கு அறை என்று மாறியிருக்கிறது.
உணவு வசதி, உடை வசதி, மருத்துவ வசதி, ஊக்கத் தொகை, உபகாரச் சம்பளம் உள்ளிட்ட எல்லா வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டும்கூட மாணவர்கள் எண்ணிக்கை படு மந்தமாக உள்ளது.
பட்டவகுப்பு வரை நடந்துகொண்டிருந்த பல மத்ரசாக்களில், இடையில் சில வகுப்புகளே இல்லாத அளவுக்கு மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருக்கின்ற வகுப்புகளில்கூட ஓர் இலக்க எண்ணுக்குள்ளேயே மாணவர் எண்ணிக்கை சுருங்கிவருகிறது. குர்ஆனைப் பார்த்து ஓதும் வகுப்பு (நாஜிரா வகுப்பு) என்ற ஒன்று அரபிக் கல்லூரிகளில் முன்பெல்லாம் இருந்ததில்லை. அந்தந்த ஊர்களிலுள்ள மக்தப் மத்ரசாக்களிலேயே அந்தப் பாடம் நடைபெற்றுவந்தது.
ஆனால், இன்றைக்குச் சில மத்ரசாக்கள் நாஜிரா வகுப்பில் பயிலும் மாணவர்களை வைத்துக்கொண்டு குர்ஆன் மனனப் பிரிவாகக் கணக்குக் காட்டிக் கொண்டிருப்பதாகவும் ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையை அதை வைத்துச் சரிக்கட்டிவருவதாகவும் அறிகிறோம். கசப்பாயினும் தீர்வை எட்டுவதற்காக உண்மையைச் சொல்லத்தானே வேண்டும்?
தரமான ஆலிம்களை உருவாக்கித் தந்த பாரம்பரியமான மத்ரசாக்கள் சில - மிகுந்த வேதனையுடன் சொல்கிறேன் - இன்றைக்கு மூட வேண்டிய அபாயகரமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சில மத்ரசாக்கள் மூடப்பட்டேவிட்டன.
பெரும் பெரும் அறிஞர்கள் அமர்ந்து பாடம் போதித்த அந்தப் பாட அறைகளும் நாடறிந்த அறிஞர் பெருமக்கள் பலரை உருவாக்கித்தந்த அந்தத் தங்கும் விடுதிகளும் வளாகங்களும் இன்றைக்குப் புல் முளைத்து புதர் மண்டிக் கிடப்பதாகவும் அவற்றில் தேள்களும் பாம்புகளும் சகல வசதிகளோடும் குடியிருந்துவருவதாகவும் கேள்விப்படுகிறோம்.
மார்க்கம் படித்த நாம் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும்போது நம் கண்முன்னேயே மார்க்கக் கல்வி இப்படி அப்பட்டமாகப் பறித்தெடுக்கப்பட்டிருப்பது, உயிருடன் நமது தோலை உரித்தெடுக்கிற வேதனையையும் துன்பத்தையும் நமக்குக் கொடுப்பதாக உள்ளது.
முஸ்லிம்கள் குவியலாக வசிக்கும் தமிழக ஊர்களுக்குச் சென்று மத்ரசாக்களுக்கு மாணவர் பிடிக்கும் பழக்கம் (அவலம்?) கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டும்கூட, சில மத்ரசாக்களில் தமிழக மாணவர்களே சேராத நிலையில், மத்ரசா நடக்கிறது என்று காட்டுவதற்காக வெளிமாநில மாணவர்களை மட்டுமே வைத்து மத்ரசாவை நடத்த வேண்டிய நிலை சில மத்ரசாக்களில் நிலவுகிறது.
மறுபுறம் இரு கல்விமுறை இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் மாணவர் எண்ணிக்கை தேவைக்குமேல் நிரம்பி வழிகிறது. உதாரணமாக, இருபது இடங்களுக்கு இருநூறு பேர் போட்டியிடுகிறார்கள். போட்டித் தேர்வு வைத்து, முதல் இருபது மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். எஞ்சிய மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. சில மத்ரசாக்கள் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
ஆயினும், இத்தகைய மத்ரசாக்கள் சிலவற்றிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களிடம் மார்க்க சேவை மனப்பான்மை மிகவும் குறைவாக இருப்பதாகவே அறிய முடிகிறது. அவர்களில் சிலர் வட்டிமுறை வங்கிகளில்கூட வேலை பார்க்கத் தயங்குவதில்லை என்ற தகவல் மிகுந்த மனஉளைச்சலைத் தருகிறது.
நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்த மிகப் பெரும் சோகம் இது. அனுதினமும் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கும் பேரபாயமாக இது நம்மை ரணப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?
பாரம்பரியமான மத்ரசாக்களைப் பட்டுப்போக விடலாமா? அப்படி விட்டோமானால், அவற்றை நிறுவிய புண்ணியவான்கள், அவற்றுக்காகத் தம் சொத்துக்களை அறக்கொடையாக (வக்ஃப்) தந்துதவிய மேன்மக்கள் ஆகியோரின் ஆன்மா நம்மை சும்மா விடுமா?
உலக வரலாற்றில் ஆலிம்களின் பங்கு

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் மத்ரசாக்களின் தேவை என்றென்றும் மிகவும் இன்றியமையாததாகும். முஸ்லிம் சமூகம் எந்தவொரு காலக்கட்டத்திலும் நெருக்கடியைச் சந்தித்தபோது - அது கருத்தியல் நெருக்கடியாயினும் ஆயுதவியல் நெருக்கடியாயினும் - அப்போதெல்லாம் சமூகத்தைக் கரம் பிடித்துக் காப்பாற்றியது ஆலிம்கள்தான். அவர்களை உருவாக்கித் தந்தது மத்ரசாக்கள்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. நபிகளாரின் காலம் தொட்டு நமது சமகாலம்வரை இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

இமாம் அபூஹனீஃபா (ரஹ்), இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இமாம் புகாரீ (ரஹ்), இமாதுத்தீன் ஸன்கீ (ரஹ்), ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹ்), இஸ்ஸு பின் அப்திஸ் ஸலாம் (ரஹ்), இப்னு தைமிய்யா (ரஹ்), ஷாஹ் வலிய்யுல்லாஹ் (ரஹ்), உமர் முக்தார் (ரஹ்), ஷைக் அஹ்மத் சர்ஹந்தீ (ரஹ்), பதீஉஸ் ஸமான் சயீத் அந்நூர்சீ (ரஹ்), ஹசன் அல்பன்னா (ரஹ்), செய்யித் குதுப் (ரஹ்), ஜஸ்டிஸ் அப்துல் காதிர் அவ்தா (ரஹ்), ஷைக் அஹ்மத் யாசீன் (ரஹ்), இந்திய விடுதலைப் போரில் களம் கண்ட ஆலிம்கள், ஷைக் அலிமியான் (ரஹ்) ஆகிய அனைவரும் தத்தமது காலத்தில் இஸ்லாமிய எழுச்சிக்குப் பாடுபட்டவர்கள். அந்தப் போராட்டத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டவர்கள். உயிரைக்கூட துறக்கத் தயங்காதவர்கள். இவர்கள் யாவரும் மத்ரசாக்களின் முன்னாள் மாணவர்கள்தாம்.

இஸ்லாமிய மறுமலர்ச்சி மார்க்க அறிஞர்களின் கைகளில்தான் இருக்கின்றது என்பதால்தான் இஸ்லாத்தின் எதிரிகள் ஆலிம்களை அழிப்பதிலும் மத்ரசாக்களைத் தகர்ப்பதிலும் ஈடுபாடு காட்டினர்.

சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் ஆலிம்களையே குறிவைத்தது. கம்யூனிசம் தகர்த்துத் தரைமட்டமாக்கிய பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள், ஷரீஅத் நீதிமன்றங்கள் எண்ணிலடங்காதவை. கழுவிலேற்றிய ஆலிம்களின் எண்ணிக்கையும் கொஞ்ச நஞ்சமல்ல.

ஷைக் ஹசன் அல்பன்னா (ரஹ்) அவர்கள் மர்மமான முறையில் எகிப்தில் கொல்லப்பட்டபோது அமெரிக்காவின் அரசமட்டத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டதைத் தாம் நேரில் கண்டதாகவும் ஒரு தனிமனிதரின் இறப்பையொட்டி ஒரு வல்லரசு மகிழ்ச்சி தெரிவிக்க வேண்டியது ஏன் என்கிற வினாவே, ஹசனுல் பன்னா குறித்த பிரமிப்பைத் தனக்குள் ஏற்படுத்தியதாகவும் செய்யித் குதுப் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் பிறகே இக்வான் அமைப்புக்குள் செய்யித் குதுப் (ரஹ்) அவர்களின் பிரவேசம் நிகழ்கிறது.

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனிய எழுச்சிக்கு ஆலிம்கள் வேரும் விழுதுமாக இருக்கின்ற காரணத்தால் பள்ளிவாசல் இமாம்களையே இஸ்ரேல் குறிவைத்தது. இன்றைக்கும் சியோனிச யூத பயங்கரவாதிகளின் ஹிட்லிஸ்டில் ஷைக் யூசுஃப் அல்கர்ளாவியின் பெயர் உள்ளது.

இந்திய விடுதலைப் போர் காலக்கட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து விழிப்புணர்வூட்டிய ஆலிம்களின் சடலங்கள் சாலையோர மரங்களில் தோரணங்களாக தொங்கவிடப்பட்டிருந்தன.

இதே அடிப்படையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்ரசாக்கள் பயங்கரவாதத்தின் பாசறைகள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தை இந்துத்துவ ஃபாசிஸ்ட்கள் முன்வைத்து மத்ரசாவிலிருந்து முஸ்லிம்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சி மேற்கொண்டனர்.

கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right of children to Free and Compulsory Education Act 2009), ஆறு வயது முதல் பதினான்கு வயது வரையுள்ள இந்தியச் சிறார்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்குவதைக் கட்டாயம் ஆக்குகிறது. இந்தச் சட்டம், முஸ்லிம் சிறார்களுக்கான குர்ஆன் மத்ரசாக்களை குறிவைத்து ஏற்படுத்தப்பட்ட ஆபத்தோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

முன்னதாக, பள்ளிக்கூட வகுப்பு நேரத்தை காலை 9.30 மணி என்றிருந்ததைத் திருத்தி 8.00 மணி என்றும் 8.30 மணி என்றும் மாற்றியமைத்ததிலும் இந்தச் சந்தேகம் பலமாக எழுந்தது. அதன் அடுத்த கட்ட நகர்வாகவே இந்தக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பார்க்கப்படுகிறது.

இவையெல்லாம் ஆலிம்களுடனான தொடர்பிலிருந்து சமூகத்தைக் கட்டறுக்கும் அபாயகரமான முயற்சிகள் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. எனவே, மார்க்கம் போதிக்கும் மத்ரசாக்களின் புணரமைப்பு, ஒரு போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு காலக்கட்டம் இது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனால், நம் தமிழகச் சூழலில் மத்ரசாக்களின் நிலை புற்றுநோய்க்குப் பலியாகக் கிடக்கும் நோயாளியைப் போன்று வருந்தத் தக்க நிலையை நோக்கி நாளுக்குநாள் சரிந்துவருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்காக நாம் என்ன செய்யலாம் என்பதைக் குறித்து அவசரமாக யோசித்தாக வேண்டும்.

யோசனைகள்

1.       மத்ரசாக்களின் இன்றைய நிலை குறித்து நிர்வாக மட்டத்திலான விழிப்புணர்வு

ஒவ்வொரு மாவட்டமாக மத்ரசா நிர்வாகிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் சந்தித்து இந்தக் கவலையைப் பரிமாற வேண்டும். குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிராக மேலைநாடுகள் மேற்கொண்ட சதித்திட்டங்களை அந்தச் சந்திப்பினூடாக அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

முன்னதாக ஆலிம்கள் மற்றும் ஆலிம்களின் மீது அக்கறை கொண்ட சமுதாயப் பிரமுகர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த குழுதான் மாவட்டம்தோறும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தப் பணியை ஆற்ற வேண்டும்.

இந்தப் பாரம்பரிய மதரசாக்கள் புணரமைப்பு எனும் இலட்சியத்திற்காக, ‘மஜ்லிசுல் மதாரிஸுக்கு (தமிழக மத்ரசாக்கள் கூட்டமைப்பு) வெளியே உள்ள தகுதியும் திறமையும் வாய்ந்த ஆலிம்களின் உழைப்பையும் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ள திறந்த மனதுடன் முன்வர வேண்டும்.

2.       மக்தப் மத்ரசா பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வு

மக்தப் மத்ரசாக்களின் உயிரோட்டம் நிறைந்த இயக்கம்தான், ஒரு காலத்தில் அரபிக் கல்லூரிகளின் மாணவர் எண்ணிக்கைக்கு ஊட்டச்சத்தாகத் திகழ்ந்தது. இன்றைக்கு வணிகநலன் கொண்ட கல்விமீதான மோகத்தால் மக்தப் மத்ரசாக்கள் களையிழந்து காணப்படுகின்றன. பல இடங்களில் தூர்ந்தும்வருகின்றன.

மத்ஹப்களைக் கண்மூடித்தனமாக மறுத்து நையாண்டி செய்யும் வன்மமான போக்கு, தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் தலைவிரித்தாடியபோது ஹைஅத்துஷ் ஷரீஆ’ (ஷரீஅத் பேரவை) எனும் அமைப்பு தகுதிமிக்க ஆலிம்களின் வழிகாட்டல்படி ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்து உண்மை நிலையைப் பரப்புரை செய்ததும் அதனால் சமூகத்தில் குறிப்பிட்டதொரு தாக்கம் நிகழ்ந்ததும் நினைவிருக்கலாம்.

அதே அமைப்பில் மக்தப் மத்ரசாக்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்எனும் பதாகையை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வுச் சுற்றுப் பயணம் செய்து மக்தப் மத்ரசாக்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டியது அவசியம். அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவிக்கரம் நீட்ட வேண்டியது சமூகத்தின் பொறுப்பு.

3.       ஆலிம்களின் பொருளாதாரம் முன்னேற்றம் குறித்த அக்கறையும் பரிசீலனையும்

அரபி மத்ரசாக்களில் மாணவர் எண்ணிக்கை குறைவுக்கு ஆலிம்களின் பொருளாதாரப் பின்னடைவு ஒரு முக்கியமான காரணமாகும். மார்க்கக் கல்வி பயின்றால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக வேண்டியது வரும் என்பதாலேயே முன்னர் பெருமளவில் மத்ரசாக்களுக்குத் தம் பிள்ளைகளை அனுப்பிவைத்த பெற்றோர்கூட இன்றைக்குத் தம் பேரப்பிள்ளைகளை மத்ரசாக்களுக்கு அனுப்ப வேண்டாம், நன்கு படிக்கவையுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள்.

எதார்த்தமும் அப்படித்தான் இருக்கிறது. அரசாங்கம் நடத்தும் பல்கலைக்கழகங்களிலேயேகூட வருமானம் வராத படிப்புகளுக்கு மாணவர்களிடம் மவுசு இருக்கிறதா என்ன? அதனால், அந்தப் படிப்புகளையே பல்கலைக்கழகங்கள் அடியோடு தூக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்றதை நாம் பார்க்கத்தானே செய்தோம்?

எனவே, மார்க்கம் படித்த ஆலிம்களுக்கு, அவர்களின் மரியாதை, சேவை ஆகியவற்றின் தரமறிந்து, சமூகம் நல்ல வருவாய்க்கு வழிசெய்வது காலத்தின் கட்டாயம். இது நகர்ப்புறத்தில் மட்டுமன்றி கிராமங்களையும் உள்ளடக்கி, தமிழகம் தழுவிய அளவில் பரவலாக நடைபெற வேண்டும்.

ஆலிம்களின் மீதான கண்ணியமான பார்வைக்கும் சமூக மரியாதைக்கும் இதுவும் ஓரளவு வழிவகுக்கும். எனவே, காலத்திற்கேற்ற நியாயமான ஊதியத்தை ஆலிம்களுக்கு வழங்கிவிட்டு தரமான சேவையை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதே நியாயம்.

அவ்வாறு செய்யும்போதுதான் சமூக சீர்த்திருத்தப் பணிகளில் தரமான சேவையை அவர்கள் வழங்குவதற்கு இயற்கை அவர்களுக்குத் தடையற்ற ஒத்துழைப்பை வழங்கும். இல்லையேல் வாழ்க்கைத் தேவைக்கான போதாமை காரணமாக மனத்தடை ஏற்பட்டு, அதனால் அவர்களின் சிந்தனையும் கவனமும் சிதறி சேவையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தம்முடைய பள்ளிவாசல் இமாம் படும் அவலங்களையும் நெருக்கடிகளையும் நேரில் பார்க்கும் ஒரு சமூகம், தம் பிள்ளைகளை மார்க்கக் கல்வியை நோக்கி மத்ரசாவுக்கு அனுப்பிவைப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

தொடர்ந்து இப்படியே போய்க்கொண்டிருந்தால் மார்க்கக் கல்வியின் பாரம்பரியம் அறுந்துபோகாதா? மார்க்கக் கல்வியைச் சமூகம் இழந்ததன் அவலத்தைத்தான் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டும் கேள்விப்பட்டுக்கொண்டும் இருக்கிறோமே?

முஸ்லிம் பிள்ளைகள் பிறமதத்தாரோடு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் அவலம் முன்பெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் எங்கோ எப்போதோ என்றுதான் இருந்திருக்கும். அனால், இன்றைக்கு அந்த அவலம் வலைபின்னல் போன்று நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதைவிட பெரிய அவலம் வேறென்ன இருக்க முடியும்? இந்த அவலங்கள் எல்லாம் தொடரத்தான் வேண்டுமா?

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்தில் ஏற்பட்ட மதமாற்ற அவலத்தைத் தடுத்து நிறுத்த ஒரு அபூபக்ர் கிளம்பியதைப் போல், பாரம்பரியத்தை இழக்கும் பேரபாயத்திலிருந்து மத்ரசாக்களைக் காப்பாற்ற அபூபக்ர்களாக நாம் எப்போது புறப்படப்போகிறோம்?

4.       மத்ரசா பாடத்திட்டம் எதிர்பார்க்கும் நியாயமான மாற்றங்கள்

இங்கு முக்கியமான இன்னொரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். மத்ரசாக்கள் புணரமைப்பில் மற்றவர்களின் பங்களிப்பைவிட மத்ரசாக்களின் பங்களிப்பே முதன்மையானதாகும். பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலுவாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கருத்தை அரபி மத்ரசாக்கள் ஒரேயடியாக உதாசீனம் செய்துவிட முடியாது.

பாடத்திட்ட மாற்றம் என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். போதிக்கப்பட வேண்டிய இஸ்லாமிய கலைகளைத் தூக்கிவிட்டு அந்த இடங்களில் தொழிற்கல்வியையும் வணிக நோக்கம் கொண்ட உலகியல் பாடங்களையும் வைக்க வேண்டும் என்பதல்ல இந்தக் கருத்தின் நோக்கம். இதுதான் நோக்கம் என்றால் அதை நாம் ஒருபோதும் ஏற்க இயலாது.

திருக்குர்ஆன் விளக்கவுரை (தஃப்சீர்), நபிகளாரின் பொன்மொழிகள் (ஹதீஸ்), இஸ்லாமியச் சட்டம் (ஃபிக்ஹ்), அவற்றின் மூலாதாரங்கள் (உஸூல்), இஸ்லாமியக் கொள்கை (அகாஇத்), இஸ்லாமிய வரலாறு (தாரீக்) உள்ளிட்ட கலைகளை அகற்றிவிட்டு அரபிக் கல்லூரி என்ற பெயரில் வேறு எவற்றைப் போதிப்பது?

இவற்றையும் இவை போன்ற அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் தற்போது நடப்பில் இருந்துகொண்டிருக்கும் மற்றக் கலைகளையும் அகற்றுவதல்ல நாம் முன்வைக்கும் பாடத்திட்ட மாற்றம் என்பது.

போதிக்கப்படக்கூடிய கலைகளில் நடப்பிலுள்ள நூல்களுடன் நவீன காலத்து நூல்களின் மேற்கோள்களும் இணைத்துத் தரப்பட வேண்டும் என்பதே பாடத்திட்ட மாற்றம் குறித்த நமது கோரிக்கையின் நோக்கம்.

இதற்கு நியாயமான காரணம் உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஐரோப்பிய தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகத்தின் போக்கில் பல்வேறு நவீனங்கள் நிகழ்ந்தன.

குறிப்பாக இஸ்லாமியப் பிரதேசங்களில் ஐரோப்பிய காலனியாதிக்கம் பெரும் பெரும் பிரளயங்களை உருவாக்கின. அவற்றால் பல்வேறு வேதனைகளும் சாதனைகளும் உலகத்தில் தோன்றின. அவற்றின் தாக்கம் முஸ்லிம்களிடமும் ஏற்படவே செய்தது. இன்றுவரை அந்தத் தாக்கம் தொடர்ந்துகொண்டும் இருக்கிறது.

அந்தக் காலக்கட்டத்தில் நடந்த பிரச்சினைகளின் சாதக பாதகங்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புப் பெற்ற இஸ்லாமியப் பேரறிஞர்களால் எழுதப்பெற்ற தஃப்சீர்கள், ஹதீஸ் விளக்கவுரைகள், இஸ்லாமிய வரலாறு, தஅவா தொடர்புடைய ஆக்கங்கள் போன்றவற்றைப் பார்க்கும்போது, மார்க்கத்துடன் இன்றைய உலகத்தின் எதார்த்தமும் சேர்ந்து புரியவரும்.

சமகாலப் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தைத் தீர்வாக முன்வைக்கும் நேரடியான பல வாய்ப்புகளை அந்த நூல்களிலிருந்து நாம் பெற முடியும். இஃதன்றி, பொருளியல், அரசியல், சமூகவியல், அறிவியல், மனித உரிமைகள் போன்ற நவீன இயல்களை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கற்றுத்தரும் நூல்களும் பாடத்தி¢ட்டத்தில் இடம்பெற வேண்டும். இதுதான் பாடத்திட்ட மாற்றம் என்பதற்கு நாம் கொள்ளும் பொருளாகும்.

அது மட்டுமன்றி, போதனைமுறையில் காலத்துக்கேற்ற நவீன முறைகள் கையாளப்பட வேண்டும். உதாரணமாக, குழு கலந்தாய்வு (Case Study) முறையில் வகுப்புகள் ஏற்பாடு செய்வது, ஒளியும் ஒலியும் இணைந்த முறையில் (Power Point Presentation) பாடங்கள் நடத்துவது, மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து உரிய துறையில் அவரவர்களுக்குத் தனிப்பட்ட பயிற்சிகள் அளிப்பது, இஸ்லாமிய அடிப்படையிலான ஆளுமைத்திறன் வளர்ப்பு (Personality Development) பயிற்சி அளிப்பது, ஆய்வு மனப்பான்மையை வளர்ப்பது போன்றவையும் இணைக்கப்பட வேண்டும்.

இவை யாவும் பெரும்பாலும் அரபிக் கல்லூரி பேராசிரியப் பெருமக்களால் மாணவர்களுக்கு அவ்வப்போது அறிவுரையாகச் சொல்லப்படுகின்ற தகவல்கள்தான். அவற்றில் சிறிதளவு உப்பைப் போல் நவீனத்தைக் கலந்து தருகிறபோது அது மாணவர்களிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் ஆசைப்படும் விளைவுகளை அவர்களிடம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இதையெல்லாம் நன்கு யோசித்து அலசி ஆராய்ந்து, தேவைப்பட்டால் பொதுவான புத்திஜீவிகளையும் சேர்த்துக்கொண்டு அவர்களின் யோசனைகளையும் பெற்று இது குறித்த விழிப்புணர்வைப் பிரமுகர்கள் மூலம் சமூகத்தில் நாம் உருவாக்க வேண்டும். இது அவசரத் தேவை.

5.       பட்டமளிப்பு விழாக்களில் மத்ரசாக்களின் அவசியம் உணர்த்தப்பட வேண்டும்

அரபிக் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும் காலம் என்பதால், பட்டமளிப்பு விழாக்களின் சிறப்புரைகள் மத்ரசாக்களின் மறுவுயிர்ப்புஎனும் கருப்பொருளைத் தாங்கியவையாக அமைக்கப்பட வேண்டும். இது பிரச்சினையை அதன் தளத்தில் வைத்தே பொதுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதுடன் உணர்வுபூர்வமான மாற்றத்தை அவர்களிடம் உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

6.       மத்ரசாக்களின் மறுவுயிர்ப்பில் இயக்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு

தேவையற்ற விஷயங்களையெல்லாம் பொதுத்தளத்தில் வைத்து விவாதித்துக்கொண்டிருக்கும் இயக்கங்களும் சமூகமும், தயவு செய்து நமது மார்க்கப்பற்றின் உயிர்ப்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கிற மத்ரசாக்களின் புணர்நிர்மாணம் தொடர்பான விஷயத்தைப் பொதுமக்களிடையே விவாதப் பொருளாக ஆக்கினால் புண்ணியம்.

இது குறித்த ஆய்வுகள் பரவலாக நடந்து அவற்றில் கண்டறியப்படும் முடிவுகள் நம்மைச் சரியான திசை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும். இதுவே நமது எதிர்பார்ப்பு.

நாம் முன்வைத்திருக்கும் இந்த யோசனைகள் முழுமையானவை என்று சொல்வதற்கில்லை. இந்தக் கருத்தை ஒட்டியோ வெட்டியோ வாசகர்கள் கருத்துத் தெரிவிக்கலாம். மாற்றுக் கருத்து இருந்தால் மனதார வரவேற்கிறோம்.

நம்முடைய கருத்துகள் ஒன்றுக்கொன்று மாறுபடலாம். ஆனால், நமது கவனம் இலக்கை நோக்கி மட்டுமே குவிய வேண்டும். மத்ரசாக்களின் மறுவுயிர்ப்பே நமது இலக்கு.

இறுதியாக


இறுதியில் ஒரேயோர் இறைவசனத்தை மட்டும் உங்களுக்கு மறுபடியும் நினைவூட்டுகிறோம்: இறைநம்பிக்கை கொண்டோரே! உங்கள் (பாதுகாப்பிற்கான) முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கையிலெடுங்கள். பின்னர், அணியணியாகப் புறப்படுங்கள். அல்லது அனைவரும் (ஒன்றுசேர்ந்து) ஒரே அணியாகப் புறப்படுங்கள். (அல்குர்ஆன், 4:71)

2 கருத்துகள்:

ஹசன் ராஜா சொன்னது…

நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது)

நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்;

பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
4:71 alquran

ஹசன் ராஜா சொன்னது…

நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்;

பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.AlQuran 4:71

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...