வியாழன், 7 பிப்ரவரி, 2013

பொதுக் கருத்தை நோக்கி...


                                                     - சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,(ஷஹீத் ஹசன் அல்பன்னா (ரஹ்) அவர்கள் (இறப்பு - கி.பி. 1949) தொகுத்த இருபது அடிப்படைகளை (உஸூலுல் இஷ்ரீன்) விரிவாக விளக்கும் நூல் ஃபஹ்முல் இஸ்லாம் ஃபீ ழிலாலில் உஸூலில் இஷ்ரீன் ஆகும். இருபது அடிப்படைகளின் ஒளியில் இஸ்லாம் பற்றிய புரிதல் என்பது இதன் பொருள். அஷ்ஷைக் ஜுமுஆ அமீன் அப்துல் அஸீஸ் அவர்கள் தொகுத்துள்ள அந்த நூலின் முகவுரையின் தமிழ் பெயர்ப்பே இந்தக் கட்டுரை (சிறு மாற்றங்களுடன்.)இன்றைக்கு இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லிம்களுக்குச் செய்ய முடியாத பல காரியங்களை நாமே நமக்கிடையில் செய்துவருகின்றோம். அவர்கள் நமக்கு எதிராக எட்ட இயலாத இலக்குகள் பலவற்றை அவர்களுக்காக நாமே நம் கரங்களால் இலகுவாக்கிவருகிறோம்.

இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனையைவிட, பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேலின் சிந்தனையைவிட, வட ஆப்ரிக்கா விஷயத்தில் ஃபிரான்ஸின் சிந்தனையைவிட, தென் சூடான் விஷயத்தில் சிலுவைக்கார கிறித்தவர்களின் சிந்தனையைவிட நம்மில் ஒருவரின் சிந்தனைதான் மற்றவருக்கு மிகவும் அபாயகரமானதாகவும் பேராபத்தாகவும் தோன்றுகிறது.


நம்மில் ஒருவரின் கருத்தை மற்றவர் முறியடிப்பதற்காக வும் அவரைத் தாக்கிப் பரப் புரை செய்வதற்காகவும் செலவழிக்கப்பட்ட சமூகத் தின் செல்வமும் உழைப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. அவற் றை ஆப்ரிக்காவில் இஸ் லாம் பற்றிய நற்செய்தி ஊழியத்திற்கோ, பெஷா வரில் முஸ்லிம் பிள்ளைக ளின் கல்வி முன்னேற்றத் திற்கோ, உலகெங்கும் இஸ் லாத்திற்காகக் களமாடிவரும் முஸ்லிம் போராளிகளின் அவசியத் தேவைக்கோ, குறைந்தபட்சம் இழந்த மண்ணை மீட்கப் போராடும் பாலஸ் தீனப் போராளிச் சிறுவர்களுக்குத் தேவையான கற்களுக்கோ செலவழிக்கப் பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதற்கெல்லாம் ஏது நமக்கு நேரம்? இவையா நம் பிரச்சினைகள்? நம்மில் ஒருவருக்கு மற்றவரின் சிந்தனைப்போக்குதானே பெரும் அபாயமாகவும் பிரச்சினையாகவும் தோன்றுகிறது. அல்லாஹ்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

இன்றைக்கு நாம் எந்தெந்த விஷயங்களுக்காக முட்டி மோதிக்கொள்கிறோமோ அவை நமது சமூகத்தின் சிதறலுக்கும் சிதைவுக்குமே வழிவகுத்துள்ளது. சமுதாயக் கட்டமைப்பின் அடித்தளத்தை வேரோடு பெயர்த்தெறிந்துள்ளது. இது முற்றிலும் மழித்துவிடக்கூடியதாகும்; முடியை அல்ல, மார்க்கத்தை. (ஜாமிஉத் திர்மிதீ - 3432-3434)

நமது உயிரினும் மேலான இஸ்லாம் விஷயத்தில் நாம் எப்போது அல்லாஹ்வை அஞ்சப்போகிறோம்? அல்லாஹ்வுக்காக நாம் எப்போது ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளப்போகிறோம்? நம்முடைய பிரச்சினைகளை மார்க்க ரீதியாக எடைபோட்டுப் பார்ப்பதற்கு முற்காலச் சான்றோர்களின் (சலஃபுஸ் ஸாலிஹீன்) துலாக்கோலை எப்போது நாம் பயன்படுத்தப்போகிறோம்?

நமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைப் பற்றி நாம் பேச அல்லது விவாதிக்க முற்படும்போது பின்வரும் அடிப்படையான விஷயங்களில் நாம் ஒருமித்த கருத்திற்கு முதலில் வர வேண்டும். மார்க்கத்தின் மூல ஆதாரங்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ள இந்த அடிப்படைகள்தான் நம் கருத்து வேறுபாடுகளை அகற்றவோ குறைக்கவோ முடியும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்:

அடிப்படை - 1


ஆதரவாளர்களைத் திரட்டும் வழியில் அல்லது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வழியில் ஒரு கருத்தை வெறித்தனமாகப் பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு கருத்தின் மீது வெறித்தனமாக இருப்பதற்கும் உண்மையை உறுதியுடன் பின்பற்றுவதற்கும் இடையே வித்தியாசம் உண்டு. ஒரு கருத்தில் வெறித்தனமாக இருப்பது, மாற்றுக் கருத்தாளர்களை வழிகெட்டவர்கள், கொள்கை தடுமாறியவர்கள் என்று குறை கூறுவதற்கும் அழைப்பாளர்களைத் தவறாக விமர்சிப்பதற்கும் காயப்படுத்துவதற்கும் ஒருவரைத் தூண்டும். இறுதியில், மாற்றுக் கருத்தாளர்களைப் பற்றிக் கோள் மூட்டுதல், புறம் பேசுதல், அவதூறு பரப்புதல் ஆகிய இழிசெயல்களில் இறங்கவும் அவர் தயங்கமாட்டார்.

அதே நேரத்தில் உண்மையை உறுதியுடன் பின்பற்றுதல் என்பது, சம்பந்தப்பட்டவரை சங்கைக்குரிய பண்பாளராக உருமாற்றும். ஒழுக்கம் தவறாத வார்த்தைகளையும் அழகிய அறிவுரைகளையும் வழங்கக்கூடிய அறிவார்ந்த அழைப்பாளராகவும் அழகான முறையில் வாதிடுபவராகவும் அவரை வார்க்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, மோதல் வரும்போது எல்லா விஷயத்திலும் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்ப வேண்டும் என்ற உள்ளுணர்வை அவருக்கு ஊட்டும்.


அடிப்படை - 2


ஒரு தனிமனிதரோ கூட்டமைப்போ, (பல கருத்துள்ள விஷயங்களில்) தாம் கூறுவதுதான் அப்பழுக்கற்றது; தமது கருத்தே சரியானது; பிற கருத்துகள் யாவும் அசத்தியமானவை என்று வாதிடுவது சரியல்ல. கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் இறுதிக் கருத்து வெளியிடும் உரிமை தமக்கே உண்டு; அந்தக் கருத்திலிருந்து வெளியேறுவது  இஸ்லாத்திலிருந்தே வெளியேறுவதாகும், அல்லது கொள்கைப் பலவீனம் ஆகும் என்று வாதிப்பது முறையாகாது. ஏனெனில், பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட தன்மை சராசரி மனிதர்கள் யாருக்கும் கிடையாது. நம்மில் ஒவ்வொருவருடைய கருத்துகளில், கொள்ளப்பட வேண்டியதும் உண்டு. தள்ளப்பட வேண்டியதும் உண்டு.


அடிப்படை - 3


கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் ஒரு கருத்தை விடுத்து மறு கருத்தை எடுப்பதில் மார்க்கத்தை மறுத்தல் என்பது அறவே கிடையாது. அந்த மாதிரியான விஷயங்களில் அடுத்தவரின் நியாயத்தைப் புரிந்து நடந்துகொள்வது, உண்மையை மறுப்பதாகவோ கொள்கைக் குளறுபடியாகவோ தவறுடன் சமரசம் செய்துகொள்வதாகவோ ஆகாது. மாறாக, அது நாம் கருத்தொருமித்து ஏற்றுக்கொண்ட விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைப்பதும் நாம் கருத்து வேறுபாடு கொண்டுள்ளவற்றில் ஒருவர் மற்றவரின் நியாயத்தைப் புரிந்து நடந்துகொள்வதும் ஆகும்.


அடிப்படை - 4


நமது வழிமுறையும் போக்கும் உண்மையை அலசி ஆராய்ந்து சத்தியத்தைக் கண்டறிவதின் மீது ந¤லை நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு கருத்தைச் செயற்கையாக வெளிக்காட்டுவதாகவோ நமது கருத்தே சரி என்று வெளிப்படுத்த முயல்வதாகவோ இருக்கலாகாது. சத்தியம் எங்கிருந்தாலும் அதைக் கண்டறிவதற்காக அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அது என் நாவிலிருந்து வெளிவந்தாலும் சரி, என் எதிராளியின் நாவிலிருந்து வெளியானாலும் சரி.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 820) கூறினார்கள்:  நான் யாரிடம் விவாதம் புரிந்தாலும் அவருடைய நாவின் மூலம் உண்மை வெளிவர வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டி விரும்பிக் கேட்பேன். யார் சொன்னாலும் உண்மை என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதே ஆகும். (ஸிஃபத்துஸ் ஸஃப்வா-இப்னுல் ஜவ்ஸீ)


அடிப்படை - 5


பல்வேறு புரிதல்களுக்கும் கருத்துகளுக்கும் இடமளிக்கின்ற சட்டப் பிரச்சினைகளுக்காக, ஒருவர் மற்றவரை இழிவுபடுத்தவோ அவரைக் குறித்து வதந்தி பரப்பவோ அவதூறு சுமத்தவோ தவறான ஊகங்களை ஊதிவிடவோ கூடாது. அவற்றுக்காக அவர்களை இறைமறுப்பாளர்கள் (காஃபிர்கள்) என்று தீர்மானிக்கலாகாது. வழிகெட்டவர்கள், பாவிகள் என்று குறிப்பிடக் கூடாது. ஏனெனில், இவையெல்லாம் மிகவும் பாரதூரமானவை ஆகும்.


அடிப்படை - 6


பிறரின் தவறுகளைத் துருவிக்கொண்டு இருக்கலாகாது. அடுத்தவர் பலவீனம் அடையும் சந்தர்ப்பங்களையும் வீழும் சூழல்களையும் தோண்டித் துருவிப் பார்த்து, அவற்றைப் பரப்பிக்கொண்டிருக்கலாகாது. மாற்றுச் சிந்தனையாளர்கள்மீது பொதுமக்களின் வெறுப்பை உருவாக்கி வளர்த்துவிடக் கூடாது. இது இஸ்லாத்தின் போக்கோ முஸ்லிம்களின் பண்பாடோ அல்ல.தேனீயைப் போன்று பூக்களுக்கு வலிக்காமல் அவற்றிலிருந்து தேனெடுக்க நீ பழகிக்கொள்


அடிப்படை - 7


பொதுவான ஓர் அடிப்படை விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதால், அந்த அடிப்படையின் தனிப்பட்ட கிளையம்சங்கள் ஒவ்வொன்றிலும் அனைவரும் ஒத்த கருத்தில்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அன்று. ஓர் அடிப்படையான விஷயத்தின் கிளை விவகாரம் ஒன்றில் ஒருவர் வேறுபட்ட கருத்தில் இருப்பது அந்த அடிப்படை விஷயத்தைச் சரியானதல்ல என்று கூறுவதாக ஆகாது. பின்வரும் தகவல் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்:

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறைவனைப் பார்த்த விவகாரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டமை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அல்லாஹ்வைப் பார்த்தது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘‘அவன் ஓர் ஒளி; அவனை நான் எங்கனம் காண்பேன்?’’ என்று நபியவர்கள் பதிலளித்த தகவல் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கிடைத்தது. எனவே, ‘‘நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை’’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதே நேரத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இதயத்தால் பார்த்தார்கள்’’ என்கிறார்கள். (தஃப்சீர் அல்குர்துபீ)

பார்த்தார்கள் என்றும் பார்க்கவில்லை என்றும் இருவேறு கருத்துகளை அவ்விருவரும் கூறினாலும், பொதுவான அடிப்படை அம்சத்திலிருந்து அவர்கள் இருவரும் வெளியேறிவிடவில்லை.


அடிப்படை - 8


ஒரு பிரிவினர் பெரும்பான்மையான அடிப்படை விஷயங்களில் ஒத்த கருத்துகளில் இருக்கின்றனர். இந்நிலையில் அடிப்படை விஷயம் அல்லாத சில்லறை விவகாரம் ஒன்றில் அவர்கள் வெவ்வேறு கருத்துகளில் இருக்கின்ற காரணத்தால், அவர்கள் சரியான வழியிலிருந்து வெளியேறிவிட்டனர் என்று தீர்ப்பளிப்பது முறையாகாது. மிகுதியையும் பெரும்பான்மையையும் கருத்தில் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும்.


அடிப்படை - 9


மோதல் முற்றும்போதும் வேறுபாடு வலுக்கும்போதும் நேர்மை தவறாத நடுநிலைப் போக்கு மிகவும் அவசியம். இதற்கு எடுத்துக்காட்டாக சூஃபியிசத்தைக் குறிப்பிடலாம். சூஃபியிசம் குறித்து கருத்து தெரிவிக்கையில் விருப்பு வெறுப்பற்ற நடுநிலைப் போக்கு அவசியம். எல்லை மீறல் கூடாது.

சூஃபிகளின் ஆட்சேபகரமான கருத்துகள் குறித்து பேரறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1349) கருத்து தெரிவிக்கையில், ‘‘சூஃபிகள்மீது சிலர் முழுக்க முழுக்க தவறான எண்ணம் கொண்டுள்ளனர். அத்தகையோர் உண்மையை எட்டாதவர்கள் ஆவர். வேறுசிலர், சூஃபிகள்மீது முழுமையான நல்லெண்ணம் கொண்டுள்ளனர். அத்தகையோர் வரம்பு மீறியவர்கள் ஆவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1328) சூஃபிகளை மூவகையினராகப் பிரித்துள்ளார்கள்:

1. நபிமொழி சார்ந்த சூஃபிகள், நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி சார்ந்த சூஃபிகள் (சூஃபியய்யா அஹ்லில் ஹதீஸ், சூஃபிய்யா அஹ்லிஸ் ஸுன்னா வல்ஜமாஆ). ஜுனைத் அல்பஃக்தாதீ (ரஹ்), ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) சஹ்ல் அத்தஸ்த்துரீ (ரஹ்) உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவர்களின் கருத்துகள் நபிமொழிகளில் காணப்படும். நபிமொழி நூல்களையும் அவர்கள் தொகுத்துத் தந்துள்ளனர். இவர்கள்தாம் சூஃபிகளில் மிகச் சிறந்தவர்களும் முன்னோடிகளும் ஆவர்.

2. இறைமையியல் ஆய்வுத் துறை சார்ந்த சூஃபிகள் (சூஃபிய்யா அஹ்லில் கலாம்). ஃகஸ்ஸாலீ (ரஹ்) அவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவ்வகையினர் முந்தையவர்களைவிட தரத்தில் சற்று குறைந்தவர்கள் ஆவர்.

3. அடிப்படைக் கோட்பாட்டு ஆராய்ச்சித் துறை சூஃபிகள் (சூஃபிய்யா அல்ஃபலாசிஃபா). மன்சூர் அல்ஹல்லாஜ், இப்னுல் அரபீ, தில்மிசானீ உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வகையினர்தாம் இஸ்லாத்தின் பிரதான அடிப்படைகள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்துகளை வெளியிட்டவர்கள் ஆவர். (அஸ்ஸஃப்திய்யா-இப்னு தைமிய்யா)

ஹாகிம் (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1014) கூறுகிறார்கள்: சூஃபிகள் எனப்படுவோர் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ஆவர். அவர்களில் நல்லோரும் உண்டு. தீயோரும் உண்டு. (முஸ்தத்ரக் ஹாகிம்)

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வெவ்வேறு நிலைப்பாட்டையும் கருத்தையும் கொண்ட ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாட்டுக்கும் கருத்துக்கும் தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகான வார்த்தை அலங்காரத்தைச் சூட்டுவார்கள். எதிரணியினரின் நிலைப்பாட்டையும் கருத்தையும் முடிந்த அளவிற்குக் கொச்சைப்படுத்துவார்கள். அல்லது தூற்றுவார்கள். ஆனால், யாருக்கு அல்லாஹ் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியுள்ளானோ அவர் தமது ஆற்றலின் மூலம் அந்த வார்த்தை அலங்காரத்திற்கு அப்பாலுள்ள சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்வார். எனவே, நாம் வார்த்தைகளை நம்பி மோசம் போய்விடக் கூடாது.

கவிஞர் இப்னுர் ரூமீ (இறப்பு-கி.பி. 896) கூறினார்:

தேன், தேனீக்களின் அறுவடை என்றால்
அதை நீ புகழ்ந்தவன் ஆகிறாய்.

அதையே, நீ நினைத்தால்
தேனீக்களின் வாந்தி என்று இகழவும் முடியும்.

சத்தியம் சில நேரங்களில்
பிறழ் வார்த்தைப் பிரயோகங்களில் மறைந்திருக்கலாம்.

எனவே, ஒன்றின் எதார்த்தத்தை நாம் அறிய வேண்டுமாயின், அது சத்தியமா, அசத்தியமா என்பதை உள்ளது உள்ளபடியே புரிய வேண்டுமாயின் முதலில் அதன் மீது போர்த்தப்பட்டுள்ள வாசக ஆடையைக் களைய வேண்டும். (அதாவது அது தொடர்பான மிகை மற்றும் தூற்றல் வார்த்தைகளை ஒதுக்கிவிட வேண்டும்.) பிறகு அது தொடர்பான விருப்பு, வெறுப்பை மனதிலிருந்து அழித்துவிட்டு, நேர்மையான கண் கொண்டு சமநிலை தவறாமல் அதைக் கவனிக்க வேண்டும்.

நமது கருத்துக்குச் சார்புடையவர் என்பதால் அவர் சொல்வதெல்லாம் சரி என்ற மனநிலைக்கும், மாற்றுச் சிந்தனையாளர் என்பதால் அவர் சொல்கிற அனைத்தும் தவறு என்ற மனநிலைக்கும் நாம் போய்விடக் கூடாது. ஏனெனில், பகைமைக் கண் கொண்டு பார்க்கும்போது நல்லதுகூட கெட்டதாகவே தோன்றும். நேசமான பார்வையில் பார்த்தால் கெட்டதுகூட நல்லதாகத் தோன்றலாம்.

கவிஞர் ஒருவர் கூறுகிறார்:

திருப்தி கொண்ட பார்வை
குறைகளைப் பாராமல் மூடிக்கொள்ளும்.

அதிருப்தியான பார்வையோ
குறைகளைப் பார்த்துப் பார்த்து வெளிப்படுத்தும்.

எனவே, இரண்டும் இன்றி சமநிலை தவறாத பார்வையோடு அணுகுகின்ற சூழலுக்கு நாம் வர வேண்டும். (மிஃப்த்தாஹு தாரிஸ் சஆதா-இப்னுல் கய்யிம்)


அடிப்படை - 10


ஒரு விஷயம் தொடர்பாக ஓர் அறிஞரோ இமாமோ கூறியுள்ள அனைத்துக் கருத்துகளையும் மொத்தமாகத் திரட்டி அவற்றை ஒருசேரப் பார்த்து அவற்றுக்கிடையே முரண்பாடு வராதவாறு பொருத்தம் காண வேண்டியது அவசியம் ஆகும். அதாவது ஒரு இமாம் சொல்லக்கூடிய ஒரு கருத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு அவர் கொள்கை தடுமாறியவர் என்றோ தவறான சிந்தனைப்போக்குள்ளவர் என்றோ கண்ணை மூடிக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று குற்றம் சாட்டிவிடலாகாது.

அதற்குமுன் அந்த விஷயம் தொடர்பாக அவர் கூறியுள்ள எல்லாக் கருத்துகளையும் மொத்தமாகத் திரட்டி அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லாதவாறு பொருத்தம் காண முயல வேண்டும். அவருடைய நீளமான நூலில் எங்கோ வரும் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் சேர்த்து அவர்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கக் கூடாது.

ஏனெனில், ஒரு சூழலில் அவர் ஒன்றைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் மற்றொரு சூழலில் அதை விரிவாக விளக்கியிருப்பார். சுருக்கமாகச் சொன்னதில் ஏற்பட்ட தவறுக்கான சாத்தியக்கூறு விரிவான விளக்கத்தில் அகன்றுவிடும். அப்படியாயின் அந்த விரிவான விளக்கமே அவரது கருத்து என்று தீர்மானிக்க வேண்டும். அவ்வாறே ஓரிடத்தில் மூடலாகச் சொல்லியிருந்தால் மற்றோர் இடத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருப்பார். வெளிப்படையாகச் சொல்லப்பட்டதையே அவருடைய மூடலான கருத்துக்குப் பொருளாகக் கொள்ள வேண்டும்.

அதைப் போன்றே, ஓரிடத்தில் ஒன்றைப் பொதுவாகவும் பிறிதோர் இடத்தில் அதையே வரையறுத்தும் சொல்லியிருப்பார். இது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகாது. அந்த இடத்தின் சூழல் அப்படிச் சொன்னால் போதும் என்று கருதியிருப்பார். ஆனால், அது தவறான புரிதலுக்கு உள்ளாகி இருக்கும். முடிந்த வரையில் அவரின் கருத்துக்களாலேயே அந்தத் தவறான புரிதலைக் களையும் விதத்தில் அவரின் கருத்துகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். தவறான புரிதலுக்கு உள்ளான வார்த்தைப் பிரயோகத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கக் கூடாது. அது நம்மைத் தவறான முடிவை நோக்கிச் செலுத்திவிடும்.

‘‘மறுமை நாளில், நல்லறம் புரிந்தவர் அதற்கான வெகுமதியையும் தீமை புரிந்தவர் அதற்கான தண்டனையையும் பெற்ற பின்னர் சொர்க்கமும் நரகமும் அழிந்துவிடும்’’ என்று அறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாக அவரது வார்த்தையிலிருந்து நமக்குத் தோன்றினால் - இது வழிகெட்ட ஜஹ்மிய்யா பிரிவினரின் கோட்பாடு என்பதால் - இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ஜஹ்மிய்யா பிரிவைச் சேர்ந்தவர் என்று அவசர கதியில் தீர்ப்பை அள்ளித் தெளித்துவிட முடியுமா? அப்படிச் செய்தால் அது தவறாகும். மாறாக, அவரது கருத்தின் மெய்ப்பொருள்  என்ன என்பதை நோக்கித்தான் நமது சிந்தனை செல்ல வேண்டும்.


அடிப்படை - 11


ஓர் அறிஞரின் கூற்று பல கருத்துகளுக்கு இடமளிக்கும் வகையில் இருந்தால், அவற்றில் மிகச் சிறந்த கருத்தையே அவரது கூற்றுக்கான கருத்தாகக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு முஸ்லிம் சகோதரர் குறித்து நல்லெண்ணம் கொள்ள வேண்டியது சக முஸ்லிம்களின் கடமை ஆகும். எனவே, ஓர் அறிஞரின் கூற்றுக்குப் பல வகைகளில் தவறான கருத்துக்கு இடமிருந்து, ஒரேயொரு வகையில் மட்டும் அதற்குச் சரியான கருத்து வழங்கும் வாய்ப்பு இருந்தால் நாம் அந்த ஒரேயொரு சரியான கருத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அறிஞரின் மீது தப்பெண்ணம் கொள்ள இடமளிக்கலாகாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம் ஒரு சூஃபி அறிஞர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ‘‘ஒருவரை அல்லாஹ் நேசித்துவிட்டால் அவருக்குப் பாவம் தீங்களிக்காது’’ என்று அந்த சூஃபி அறிஞர் கூறினார். இது வழிதவறிய கொள்கைப் பிரிவினர்களாகிய முர்ஜிஆக்களின் தவறான சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கருத்தாகும். இருப்பினும் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் அந்த சூஃபி அறிஞரின் நன்னடத்தையைக் கருதி அவர்மீது தப்பு அர்த்தம் சுமத்துவதைத் தவிர்த்தார்கள். ‘‘ஒருவரை அல்லாஹ் நேசித்துவிட்டால் அவருக்குப் பாவமன்னிப்பு மற்றும் பாவமீட்சிக்கான வழியை அல்லாஹ் வழங்குவான். பின்னர் அந்தப் பாவத்தின் மீது அவர் எப்படி நிலைத்திருக்க முடியும்? (எப்படி அது அவருக்குத் தீங்களிக்கும்) என்பதுதான் அந்த சூஃபி அறிஞர் சொல்லவந்த கருத்து’’ என்று விளக்கம் தந்தார்கள்.

இவ்வாறே ஒருவருடைய கூற்றுக்கு அவர்மீது நல்லெண்ணம் வைத்து சரியான கருத்தை வழங்க வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.


அடிப்படை - 12


நாம் எந்தெந்த விஷயங்கள¤ல் பிறரிடமிருந்து வேறுபடுகிறோமோ அந்தப் பிரச்சினைகளை அவற்றின் அனைத்துப் புறங்களிலிருந்தும் ஆழமாகவும் அகலமாகவும் கவனித்துப் புரிந்துகொள்ள முயல வேண்டும். (நமது கருத்துக்கு ஒத்துப்போகும்) ஒரு பகுதியை மட்டும் கவனித்துவிட்டு மற்ற பகுதிகளைப் புறந்தள்ளிவிடக் கூடாது. நமது கருத்துக்கான நியாயம், சூழல், பின்னணி, சான்று ஆகியவற்றை விரிவாக அவதானிப்பதைப் போன்றே, அடுத்தவரின் கருத்தையும் அணுக வேண்டும்.

அத்துடன் அந்தப் பிரச்சினை தொடர்பாக எங்கு பேசினால் பொருத்தமோ அந்த இடத் தேர்வும் மிகவும் முக்கியம். தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்று அஞ்சப்படும் சராசரியான இடங்களில் அவற்றைப் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்க(ளிடம் பேசும்போது அவர்க)ள் எதைப் புரிந்துகொள்வார்களோ அதையே அவர்களிடம் பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பேசி, அதன் மூலம்) அல்லாஹ்வு(டைய கட்டளையு)ம் அவனுடைய தூதரு(டைய வழிகாட்டலு)ம் மறுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களா என்ன? (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் - 127)


அடிப்படை - 13


மார்க்கத்தின் முன்னோடி, இறையச்சம் நிறைந்தவர், பேணுதல் மிக்கவர், போராட்டவாதி என்றெல்லாம் நிரூபிக்கப்பட்ட சான்றோர் பெருமக்கள், அறிஞர்கள், இமாம்கள் ஆகியோரின் சின்னச் சின்ன சறுக்கல்களும் வழுக்கல்களும் அவர்களின் நற்செயல்கள் மற்றும் மாண்புகள் எனும் பெருவௌ¢ளத்தால் வழிந்தோடிப் போய்விட்டன என்பது நமது சிந்தனையில் எப்போதும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

அத்துடன் ஒப்பீட்டு அளவில் அத்தகைய மாமேதைகளின் அறிவு ஞானத்தோடு நமது அறிவின் கொள்திறன் என்ன என்பதையும் நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவசரக் கோலத்தில் மார்க்கத் தீர்ப்புகளை நாம் அள்ளித் தெளித்துவிடக் கூடாது.

இமாம் சுபுகீ (ரஹ்) அவர்கள் (இறப்பு-கி.பி. 1370) கூறினார்கள்: கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த இமாம்களுடன் நாம் ஒழுக்கம் தவறாத நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களிடையே நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளில் நாம் மூழ்கிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் சமூகத்தை வழிநடத்திய பேரறிஞர்கள் ஆவர். அவர்களின் கூற்றுகளுக்குப் பல கருத்துகள் இருக்கலாம். அவற்றில் சில புரியப்படாமல்கூட போயிருக்கலாம். எனவே, அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் நாம் அமைதி காப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அவற்றில் உண்மை எதுவோ அதை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். (தபகாத்துஷ் ஷாஃபிஇய்யா அல்குப்ரா)


அடிப்படை - 14


வழிதவறிய இஸ்லாமியக் கொள்கைப் பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கும் புரிதலுக்கும் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவற்றின் ஊடாக எது சரியான வழிமுறையோ அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மட்டும் இன்றைக்கு நாம் அவற்றில் கவனம் செலுத்தினால் போதுமானது. அதிலேயே மூழ்கி நேரத்தைப் போக்க வேண்டியதில்லை. அந்த அளவின் மூலமே நம் சமூகத்தின் மூத்த தலைமுறையின் முன்னோடி அறிஞர்கள் (சலஃப்) வழிதவறிய பிரிவினர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர்.

அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் தற்கால வழிதவறிய பிரிவினர்களுக்குப் பதிலடி தருவதற்குத் தேவையான அறிவும் ஆற்றலும் நமக்குக் கிடைத்துவிடும். நபிவழியையும் நபித்தோழர்களின் வழியையும் சார்ந்து நிற்கும் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவினர் ஒவ்வொரு காலப் பகுதியிலும் தத்தமது காலத்தைய அசத்தியவாதிகளை இவ்வாறே அறிவுபூர்வமாக எதிர்கொண்டுவந்துள்ளனர்.

இன்றைய தினம் வழிதவறிய பிரிவுகளில் நவீனமானவை ஏராளம் உள்ளன. இஸ்மாயீலிய்யா, பஹாயிய்யா, காதியானிய்யா, மாசூனிய்யா, மார்க்சியம் உள்ளிட்ட கொள்கைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவை அனைத்தும் இஸ்லாத்தை உள்ளிலிருந்தும் வெளியிலிருந்தும் கருவறுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.

இருப்பில் இல்லாத, வழக்கொழிந்துபோய்விட்ட ஆதிகாலப் பிரிவுகளைவிட இந்த நவீனப் பிரிவுகளே இன்றைய தினம் நாம் எதிர்கொள்வதற்கு மிகவும் அவசியமானவை. இந்த நவீனப் பிரிவுகளுக்கும் ஆதிகாலப் பிரிவுகளுக்கும் இடையிலான ஒற்றுமை அம்சங்களை அறிந்துகொள்ளும் அளவுக்குப் பழைய பிரிவுகளைப் பற்றி நாம் தெரிந்துகொண்டால் போதும். அதற்குமேல் தேவையில்லை.

அவ்வாறே பிறழ் கொள்கைப் பிரிவினர்களைத் தத்தம் காலப் பகுதிகளில் நம்முடைய முன்னோடி அறிஞர் பெருமக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்கி¢ற வழிமுறைகளையும் நாம் கவனிக்க வேண்டும். அவற்றில் நமக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் கிடைத்தால் ரொம்ப நல்லது. இல்லையேல், இல்லாதொழிந்துபோய்விட்ட ஆதிகாலப் பிரிவுகளை நாம் இப்போது தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு எந்தத் தேவையும் இல்லை. அவ்வாறு செய்வோமாயின், அது களமே இல்லாமல் போராடுவதாக அமைந்துவிடும்.
இஸ்லாமிய ஒருமைப்பாடு நிறைவேறாத கனவல்ல. எதிர்கால நனவுதான்.
அதை நனவாக்கும் பணியில் அயராது பாடுபடுவோம்.


இறுதியாக


இப்போதைக்கு நாம் ஒன்றை மட்டும் உரத்த குரலில் சொல்ல விழைகிறோம்: நாம் கடைப்பிடிக்க வேண்டிய மேற்கண்ட சத்தியங்கள்தான், நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி நடந்தோரின் (அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ) வழிமுறையாகும். நல்லோர்களான முன்னோடி அறிஞர்களின் (சலஃபுஸ் ஸாலிஹீன்) போக்கும் இதுவாகவே அமைந்திருந்தது. ஆதாரபூர்வமான செவிவழிச் சான்றுகளும் அப்பட்டமான அறிவுசார் ஆதாரங்களும் இதையே நிலைநிறுத்துகின்றன.

அறிவு ஞானம் என்பது பாவத்திற்கு அப்பாற்பட்ட அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் கிடைக்கலாம். சான்றுகள் மூலம் நிரூபணமான கூற்றுகளிலிருந்தும் கிடைக்கலாம். உண்மையாளர் எனச் சான்றளிக்கப்பட்ட ஒருவரின் கூற்றும் சான்றாதாரங்களிலிருந்து ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்த முடிவுகளும்கூட அறிவு ஞானத்தைத் தரக்கூடியவைதான். இதையெல்லாம் நாம் கண்மூடித்தனமாக மனம்போன போக்கில் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ் நாடினால் நம் கருத்துகள் மெய்ப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இறைவா! நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக. நீ யார்மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழியே அது. அவர்கள் உனது சினத்திற்கு ஆளானவர்கள் அல்லர். வழிதவறிச் சென்றவர்களும் அல்லர்.
கருத்துரையிடுக

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...