செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

அரபிமொழியும் முஸ்லிம் சமூகமும்
மௌலவி, சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
மொழிபெயர்ப்பாளர், ரஹ்மத் பதிப்பகம், சென்னை


ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் தேதி சர்வதேச அரபிமொழி தினம் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 டிசம்பர் 18 அன்றுதான் முதலாவது சர்வதேச அரபிமொழி தினம் அனுசரிக்கப்பட்டது.




கடந்த 1973ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் ஐ.நா.வின் அதிகாரபூர்வமான ஆறாவது அலுவல் மொழியாக (Official language) அரபிமொழி அங்கீகரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அந்த நாளே சர்வதேச அரபிமொழி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

ஒரே ஆண்-பெண்ணிலிருந்து படைக்கப்பெற்ற மனித சமூகம் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்த தனக்கிடையே வெவ்வேறு மொழிகள் பேசுவது வியப்புக்குரிய ஒன்றாகும். அதனால்தான் அதைத் திருக்குர்ஆன் ஓரிறைக் கொள்கைக்குச் சான்றாக முன்வைக்கிறது.

‘’அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் நீங்கள் பேசும் மொழிகளும் உங்களின் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அல்லாஹ்வின் சான்றுகளில் அடங்கும்’’ (30:22) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மொழிகள் என்ற வகையில் அனைத்திற்கும் அல்லாஹ்வே மூலகர்த்தா. ஆயினும், அரபிமொழிக்கு அவன் சற்று கூடுதல் கவுரவம் அளித்துள்ளான்.
பொதுக் கோணத்தில் அரபிமொழி ஒரு பார்வை

இந்தப் பூமியில் உயிரோடு இருக்கும் புராதன மொழிகளில் ஒன்று அரபிமொழி. இதன் வயது பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் கடந்த 1600 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் பயன்பாட்டில் இருந்துவரும் மொழி.

பழம்பெரும் செமிட்டிக் இன மொழிகளில் (Semitic languages) இன்றளவும் எழுத்திலும் பேச்சிலும் உயர் இலக்கியச் செழுமையோடு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் மொழி. இணையத்தில் அதிகம் புழக்கத்திலுள்ள ஏழு மொழிகளில் அரபியும் ஒன்று. ஃபிரஞ்சு, ருஷ்யன் ஆகிய மொழிகளைக் காட்டிலும் வேகமாகப் பரவியும் வளர்ச்சி கண்டும் வருகின்ற மொழியாக அரபி இருந்துவருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வமான ஆறு மொழிகளில் அரபிமொழி ஒன்று. ஆரம்பத்தில் ஐந்து மொழிகள் மட்டுமே ஐ.நா.வின் அலுவல் மொழிகள். அவை ஆங்கிலம், சைனீஸ், ஃபிரெஞ்சு, ருஷ்யன், ஸ்பானிஷ் ஆகியனவாகும்.

கச்சா எண்ணெய் வளம், இஸ்லாம் பற்றிய மதிப்பச்சம், கேந்திர முக்கியத்துவம் போன்ற காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் முக்கியத்துவம் உணரப்பட்டபோது, மொராக்கோ, சஊதி அரேபியா ஆகிய நாடுகளின் ஐம்பது ஆண்டு கால கோரிக்கைகளுக்குக்குப் பின்னர் 1973 டிசம்பர் 18ஆம் நாள் ஐ.நா.சபையின் ஆறாவது அலுவல் மொழியாக அரபி அங்கீகாரம் பெற்றது.

சர்வதேச மொழியான அரபி, 28 நாடுகளில் ஆட்சிமொழியாக உள்ளது. தேசம், இனம், சமயம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பால் உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமானோர் அரபிமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்டுள்ளனர். (2013 ஜனவரி நிலவரப்படி உலக மக்கள்தொகை 709 கோடி பேரில் சுமார் 43 கோடி பேர் அரபி மொழி பேசுகின்றனர்.)

பல நூற்றாண்டுகளாக உலகைக் கட்டியாண்ட ஒரு சமூகத்தை – அதாவது அதன் சமயத்தை, கலாச்சாரத்தை, கலைகளை, அறிவியலை, சிந்தனைப்போக்கை - அறிவதற்கு உதவும் மொழி அரபிமொழி. இன்றைய மேலைநாட்டின் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை முன்னேற்றத்திற்கும் மூலகாரணமாய் இருந்த மொழி.

முஸ்லிம்கள் அறிவியலிலும் ஆராய்ச்சியிலும் கொடி கட்டிப் பறந்தபோது, முஸ்லிம் ஸ்பெயினுக்கு வந்து இஸ்லாமிய அறிஞர்களிடம் கல்வி கற்றுவிட்டுச் சென்ற மேலைநாட்டு அறிஞர்கள், தங்களின் ஆராய்ச்சியைச் சமர்ப்பிக்கும்போது, நாம் இன்று அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதுபோல் அவர்கள் அடைப்புக்குறிக்குள் அரபி வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஹுலாகுகான் எனும் தாத்தாரிய மன்னனால் மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகள் பேரழிவையும் பெருநாசத்தையும் சந்தித்தது. முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பிய அறிவு ஞானக் கருவூலங்களும் கலாச்சாரச் சின்னங்களும் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டன.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கல்வி, கலை மற்றும் அறிவியலின் தலைமைக் கேந்திரமாக விளங்கிய பஃக்தாத் நகரம் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாயிற்று. பஃக்தாதின் பெருமைமிகு நூலகங்களில் இருந்த அரபு நூல்கள் திஜ்லா நதியில் தூக்கி வீசப்பட்டன. அது இராணுவம் ஆற்றைக் கடந்துசெல்வதற்கான பாலம் போன்று அமைந்ததாக வரலாறு உண்டு.

முஸ்லிம் உலகம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் முந்தைய காலத்தைப் போன்று ஆராய்ச்சிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரவில்லை. சட்டத்துறை ஆராய்ச்சியையும் அறவே நிறுத்திவிட்டனர். தாத்தாரிய படையெடுப்பில் இழந்த அறிவுச் செல்வத்தை மீட்டெடுக்கும் முயற்சியை அப்போதைய முஸ்லிம்கள் மும்முரமாக முன்னெடுக்கவில்லை. அதனால் இஸ்லாத்தின் வளர்ச்சியில் சற்று தேக்கம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில்தான் ஐரோப்பா இஸ்லாமியக் கருவூலங்கள்மீது கவனம் செலுத்தித் தன்னை வளப்படுத்திக்கொண்டது. சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தேக்கம் அடைந்த அரபிமொழி மறுபடியும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மீள்எழுச்சி பெற்றது. அப்போது சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் பல அரபிமொழி அச்சகங்களே உருவாயின.

ஒரு காலத்தில் தேசங்களை மட்டுமன்றி மனித மனங்களையும் சேர்த்து வெற்றிகொண்ட மொழி அரபிமொழி. இப்போதும் வெற்றியைத் தக்கவைத்துள்ள மொழி. இனிமேலும் வெல்லப்போகிற மொழி. ஆங்கிலம் தற்போது உலகை வென்ற மொழியாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து அது கிரீடத்தைச் சுமந்திருக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இஸ்லாமியப் பார்வையில் அரபிமொழி

பல்வேறு மொழிகளுக்கு இடையே இறுதிக் கால மனித சமூகத்தின் வழிகாட்டலுக்காக இறைவனே தேர்வு செய்த மொழி அரபிமொழி. ‘’நிச்சயமாக இந்த அறிவுரையை (குர்ஆனை) நாமே அருளினோம். நிச்சயமாக இதனை நாமே பாதுகாப்போம்’’ (15:9) என்ற இறைவசனத்தின்படி திருக்குர்ஆனுடன் சேர்த்து உலகம் உள்ளளவும் பாதுகாப்பாக இருக்கப்போகின்ற மொழி.

இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் உலகின் பல பகுதிகளில் அரபிமொழி பரவியது. இஸ்லாம் போன இடமெல்லாம் அரபிமொழியும் போனது. ஆதிகால அரபு மக்களின் தொடர்பால் நம் சென்னைக்கு அருகில் பழவேற்காட்டில் இன்றும் அரபியரின் வழிவந்த குடும்பங்கள் இருப்பதாகவும் அவர்களின் மொழிவழக்கில் அரபிமொழியின் தாக்கம் இன்றளவும் இருந்துவருவதாகவும் தகவல் உண்டு.

அரபியின் தாக்கம் பெற்ற மொழிகள்: துருக்கிஷ், ஃபார்சீ, குர்து, உருது, மலாய், அல்பேனியா, இந்தோனேசியா, தமிழ் மற்றும் சில ஐரோப்பிய மொழிகள். மேலும், அரபுத் தமிழ் போன்ற அரபி வரிவடிவம் கொண்ட மொழிகளும் இந்தத் தாக்கத்தின் விளைவால் பிறந்தவையே ஆகும்.

முஸ்லிம்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த மொழி அரபிமொழி. சமயம் மற்றும் வழிபாட்டு மொழி அரபியே. அதான், இகாமா, தொழுகை, ஜுமுஆ உரை என எல்லாமும் உலகத்தின் எல்லா மூலையிலும் அரபியில்தான் நடந்தாக வேண்டும். கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய ஐவேளை தொழுகைகளுக்கு அரபிமொழி இன்றியமையாதது. சில வார்த்தைகளையேனும் பிழையின்றி மொழியாமல் தொழுகையை நிறைவேற்ற இயலாது.

கோயில்களில் தமிழ்மொழியில் வழிபாட்டு உரிமை வேண்டும் என்று கோரி தமிழ் இந்துக்கள் அவ்வுரிமையைப் பெற்றுள்ளனர். இஸ்லாத்தில் அது முடியாது. இஸ்லாமிய உலகின் சர்வதேச அரசியல் தலைமை (கிலாஃபத்) வீழ்த்தப்பட்ட பின்னர், மேற்குலக ஏவலாளி முஸ்தபா கமால் பாஷாவால் மதச்சார்பற்ற அரசு துருக்கியில் அமைக்கப்பட்டபோது அதான், தொழுகை உள்ளிட்ட மேற்கண்ட அனைத்தும் அரபிமொழியில் அல்லாமல் உள்ளூர் மொழியில் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல் உண்டு. ஆனால், அது தொடர்ந்து நிலைக்கவில்லை.

சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு இடையே அறுக்க முடியாத பலமான உறவை ஏற்படுத்தக்கூடிய மொழி அரபிமொழி. ஏற்கெனவே, கொள்கைச் சகோதரத்துவம் முஸ்லிம்களிடம் இருக்கிறது. அத்துடன் தொடர்புமொழியும் அரபியாக அமையும்போது அந்தப் பிணைப்பின் இறுக்கத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை. ஆனால், ஆங்கிலம் பேசும் ஓர் இந்தியனை, ஓர் அமெரிக்கனோ ஐரோப்பியனோ தனக்கு நெருக்கமானவனாக - சகோதரனாக எண்ணுவதில்லை.
அரபுமொழிக்கெதிரான மேற்குலகின் சூழ்ச்சி

இன்றைக்கு அரபிமொழியைக் கொண்டாடுவதற்கு சர்வதேச நாளை அனுசரிக்கின்ற மேற்குலகம், ஒரு காலத்தில் இஸ்லாம் மீதும் அதன் மூலாதாரங்கள்மீதும் அதனையொட்டி அரபிமொழியின் மீதும் தீராப் பகை கொண்டிருந்தது. முஸ்லிம்களின் மூலமொழியை, அவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைச் சிதைக்காமல் நமக்கு நிம்மதியில்லை என்பதில் மேற்குலகம் தளர்வற்ற உறுதியில் இருந்நது.

கி.பி. 1890களில் ஒருநாள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் கிளாட்ஸ்டோன் (Gladstone, 1809-1898 A.D.) உரையாற்றும்போது பின்வருமாறு பேசினார்:

மத்தியக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள நமது காலனி நாடுகளில் நாம் அமைதியை எதிர்பார்க்கிறோம். ஆனால், அது முடியவில்லை. நாம் அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டுமானால் மூன்று விஷயங்களை அங்கு நாம் ஒழித்துக்கட்டியாக வேண்டும்:

1. ஜுமுஆ தொழுகையை ஒழித்துக்கட்ட வேண்டும்.



இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘’உண்மையில் இதுவொரு விசித்திரமான விஷயம். முஸ்லிம்கள் தொழுகை அறிவிப்பை (அதான்) கேட்ட மாத்திரத்தில் தொழுகைக்காக ஒன்றுகூடிவிடுகின்றனர். அவர்களை யாரும் தனித்தனியாக அழைப்பதில்லை. நாமும்தான் அலுவல் ரீதியாக உத்தரவு போட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். வரத் தவறினால் அபராதம்கூட விதிக்கிறோம். தண்டனையும் தருகிறோம். ஆனாலும்கூட நமது உத்தரவைப் பெரும்பாலோர் மதிப்பதில்லை’’ என்று தெரிவித்தார்.

2. முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்து குர்ஆனைப் பறிக்க வேண்டும்.

இது தொடர்பாக கிளாட்ஸ்டோன் தொடர்ந்து பேசுகையில், திருக்குர்ஆன் பிரதியொன்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, ‘’இது முஸ்லிம்களிடையே நீடித்திருக்கும்வரை நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒன்று இதை நாம் ஒழித்துக்கட்ட வேண்டும். அல்லது முஸ்லிம்கள் இதைப் பொருட்படுத்தாத நிலையை உருவாக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.



பின்னர் எப்படி இந்தக் குர்ஆனை முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்து அகற்றலாம் என்று அவையோரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது ஒருவர் எழுந்து கிளாட்ஸ்டோன் கையிலிருந்த குர்ஆனைப் பறித்துக் கிழிக்கப்போனார். உடனே கிளாட்ஸ்டோன், ‘’நான் உம்மிடம் இதனை எதிர்ப்பார்க்கவில்லை. முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்தும் நடத்தைகளிலிருந்தும் இந்தக் குர்ஆன் கிழித்தெறியப்பட வேண்டும் என்பதே என் நோக்கம்’’ என்றார்.

3. கஅபாவைத் தகர்க்கும் முயற்சியை நாம் விட்டுவிடக் கூடாது.



இது தொடர்பாக கிளாட்ஸ்டோன் தொடர்ந்து உரையாற்றுகையில், கஅபாவைச் சுட்டிக்காட்டி, ‘’நாம் கஅபாவைத் தகர்த்தாக வேண்டும். அது ஜுமுஆ தொழுகை விவகாரத்தைவிட மோசமானது. ஏனெனில், கஅபாவுக்கு உலக நாடுகளிலிருந்தும் முஸ்லிம் தேசங்களிலிருந்தும் அதிகமானோர் தனிப்பட்ட யாருடைய அழைப்புமின்றி வந்து குவிகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

மேற்கண்ட முதலாவது திட்டத்தின்படியே மேற்குலகம், முஸ்லிம் நாடுகளிலுள்ள தமது கைப்பாவை ஆட்சியாளர்களை ஏவிவிட்டு, அவர்கள்மூலம் இளைஞர்கள் பள்ளிவாசலுக்கு ஐங்காலத் தொழுகைகளுக்கும் ஜுமுஆ தொழுகைக்கும் செல்லவும் இஸ்லாமியக் கடமைகளைக் கடைப்பிடிக்கவும் தடைவிதிக்க வழி செய்தனர். அவ்வாறே பள்ளிவாசல் இமாம்களும் சீர்திருத்தப் பிரச்சாரகர்களும் இஸ்லாம் பற்றி எழுச்சியுரை நிகழ்த்தவும் இஸ்லாத்திற்கெதிரான அரசாங்க நடவடிக்கைகளின் மீது விமர்சனம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டனர். இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக, துருக்கியின் முஸ்தஃபா கமால் பாஷாவையும் துனீசியாவின் ஹபீப் பூர்கிபாவையும் கூறலாம். துருக்கியில் முஸ்தஃபாவின் தலைமையில் மதச்சார்பற்ற அரசு அமைக்கப்பட்ட பின், அவர் குர்ஆன் பாடசாலைகளை இழுத்து மூடினார். வாரவிடுமுறை நாள், வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றலானது. குர்ஆனாக இருந்த அரசியல் அமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற மனிதச் சட்டங்களாக மாறியது. பதீஉஸ் ஸமான் சயீத் அந்நூர்சீ போன்ற இஸ்லாமிய இலட்சியவாதிகள் வீட்டுச்சிறைக்குள் முடக்கப்பட்டனர். 1971ஆம் ஆண்டு ரமளான் மாதத்தின் பட்டப்பகலில் ஹபீப் பூர்கிபாவும் அவரது அமைச்சரவை சகாக்களும் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து உணவருந்திக் காட்டி, ''நோன்பு நோற்பதெல்லாம் வெட்டி வேலை; நாட்டின் உற்பத்தியைப் பாழ்படுத்துகிற செயல்; எனவே, நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு மக்கள் நோன்பைக் கைவிட்டுவிட்டு உழைப்பில் கவனம் செலுத்துங்கள்'' என்று கூறினார்.

இரண்டாம் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, நீண்ட நெடிய திட்டங்களைத் தீட்டி கடுமையாக உழைத்து தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குப் பிறகு திருக்குர்ஆனிலிருந்து முஸ்லிம்களைத் தூரமாக்கும் பணியைச் சாதித்துக் காட்டியது மேற்குலகம். குர்ஆனின் புரிதலைத் தடுக்க அரபிமொழியிலிருந்தும் அதைக் கற்பதிலிருந்தும் முஸ்லிம்களை அவர்கள் தூரமாக்கினர். குர்ஆனை ஓதவும் அதை மனனமிடவும் முட்டுக்கட்டை போட்டனர். எனவே, முஸ்லிம் பொதுமக்கள் குர்ஆனிலிருந்து அதிக தூரம் விலகினர். அதைப் பட்டுத்துணியில் மடித்துவைத்துப் பாதுகாக்கவும் இறந்தவர்களின் நன்மைக்காக மட்டுமே ஓதவும் தலைப்பட்டனர்.

முஸ்லிம் இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்ப அவர்களைச் சில துறைகளில் அளவுக்கதிகமாக ஊதிப்பெருக்கி ஊக்குவித்தனர். அதில் ஒன்றாக விளையாட்டுத்துறையைச் சொல்லலாம். அரபு நாடுகளில் இன்றைக்குக் கால்பந்து விளையாட்டுக்கு இளைஞர்களிடம் மவுசு அதிகம். கால்பந்து வீரர்களுக்கு அளவுக்கு மீறிய ஒளிவட்டமும் பரிவட்டமும் கட்டப்பட்டன. நினைத்துப் பார்க்க முடியாத பரிசுகள், பணங்காசுகள், விருதுகள் என்றெல்லாம் ஏற்படுத்தினார்கள்.

இஸ்லாம் விரும்பாத திரைப்படங்களைத் தரும் நடிகர்களை ஊக்குவித்தனர். மதுக்கடைகளும் பார்களும் சூதாட்ட விடுதிகளும் தாராளமாகத் திறக்கப்பட்டன. இந்தத் துறைகளில் ஈடுபட்டால்தான் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற பிம்பத்தை உருவாக்கினர். இவை யாவும் முஸ்லிம்களைக் குர்ஆனிலிருந்தும் அரபிமொழியிலிருந்தும் திசைதிருப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சிலவாகும்.

மூன்றாம் திட்டத்தின்படி, மேற்குலகக் காலனியாதிக்கத்தில் இருக்கும் முஸ்லிம் நாடுகளிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதில் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தனர். அவ்வாறே, தன்னை நபியென்று வாதிடுகின்ற தனிமனிதர்களை அந்த நாட்டு முஸ்லிம்களிடையே மேற்குலகம் உருவாக்கிவிட்டது.

இன்றைக்கும் அகன்ற பாரதக் கனவில் இருக்கும் இந்தியாவின் இந்துத்துவவாதிகளைப் போன்று அகன்ற இஸ்ரேல் கனவில் இருக்கும் சியோனிஸ யூதர்கள் கஅபாவைத் தகர்ப்போம் எனத் தொடர்ந்து மீசை முறுக்கிவருவது குறிப்பிடத் தக்கதாகும்.

ஆக, மேற்கத்திய கல்விமுறையில் கூடுதல் ஈடுபாடு கொண்டதாலும் மேற்குலகின் பண்பாட்டுப் படையெடுப்பினாலும் ஆண்டாண்டு காலமாக குர்ஆனோடும் அரபிமொழியோடும் அழுத்தமான தொடர்பில் இருந்த  முஸ்லிம்கள் இன்று அவற்றிலிருந்து வெகுதூரம் அன்னியமாகி உள்ளனர்.

அல்ஜீரியா ஃபிரான்ஸின் காலனி நாடு. பிரான்ஸின் காலனியாதிக்கத்தில் அல்ஜீரியா வந்து நூறாண்டுகள் ஆனபோது அல்ஜீரிய காலனியாதிக்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உரையாற்றிய ஃபிரெஞ்சு ஆட்சியாளர், ‘’அல்ஜீரிய முஸ்லிம்கள் குர்ஆனை ஓதிக்கொண்டும் அரபிமொழி பேசிக்கொண்டும் இருக்கின்ற வரையில் நாம் அவர்களை வெற்றி கொள்ள இயலாது. எனவே, அல்ஜீரியர்களிடமிருந்து குர்ஆனையும் அவர்களின் நாவிலிருந்து அரபிமொழியையும் கண்டிப்பாக நாம் பறிக்க வேண்டும’’ என்று கூறினார். (நூல்: தம்மிரூ அல்இஸ்லாம வ அபீதூ அஹ்லஹு)

உலகம் முழுவதும் மதச்சார்பற்ற கல்விமுறை நடைமுறைக்கு வந்ததற்கு, இஸ்லாம், குர்ஆன், அரபிமொழி ஆகியவற்றுக்கெதிரான மேற்குலகத்தின் சதிப் பின்னணியே காரணமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் கிறித்தவ ஊழியம் செய்யவந்த மிஷினரிகளின் பொறுப்பாளர் நற்செய்தி ஊழியர் தாக்லே கூறினார்: மேற்கத்திய பாணியிலான மதச்சார்பற்ற கல்விக்கூடங்களை உருவாக்குவதில் நாம் அதிகம் முனைப்பு காட்ட வேண்டும். ஏனெனில், மேற்கத்திய பள்ளிக்கூட நூற்களைப் பயிலும்போதுதான் குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை ஆட்டம் காணுகிறது. (நூல்: அத்தப்ஷீரு வல்இஸ்த்திஉமார்)

நமது இந்திய நாடு சன்னம் சன்னமாக பிரிட்டிஷ் அரசின் கையில் வீழ்ந்துகொண்டிருந்த நேரம். ஒரு கட்டத்தில் முழு இந்தியாவும் பிரிட்டிஷ் வசம் வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தபோது இந்தியாவை ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக சுப்ரீம் கவுன்சில் ஆஃப் இந்தியா எனும் பெயரில் ஒரு கமிட்டியை 1834ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நியமித்தது. அதன் முக்கியமான உறுப்பினராக லார்டு மெக்காலே இருந்தார். அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பிரபல உறுப்பினரும் பிரிட்டிஷ் அரசில் பல உயர்பதவிகளை வகித்தவரும் ஆவார். அவர் நான்காண்டுகள் நமது இந்தியாவைச் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்துவிட்டு 02-02-1835 தேதியிட்டு பிரிட்டிஷ் அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அந்த அறிக்கையில் காணப்படுவதாவது:

‘’இந்தியாவின் நீள அகலங்களில் முழுவதுமாக நான் பயணம் செய்தேன். இந்தியா முழுக்க ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ என்னால் காண முடியவில்லை. அப்படி ஒரு வளமான நாடு இந்தியா. இந்திய மக்கள் மதிப்புமிக்க பாரம்பரியத்தையும் உயர்தன்மைகளையும் கொண்டிருக்கிறார்கள்.

ஆதாலால் இந்நாட்டிற்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களின் காலாச்சாரப் பாரம்பரியத்தை உடைக்காவிட்டால் இந்தியாவை நாம் வெல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே, இந்நாட்டு கல்விமுறையை முற்றிலும் வேறாக மாற்றியமைக்க வழிமொழிகிறேன். அதன் மூலம் ஆங்கிலமும் மேலைக் கலாச்சாரமுமே உயர்ந்தது என்று இந்தியர்களை நாம் நம்பவைக்க முடியும். அப்படி அவர்கள் நம்பிவிட்டால் இந்தியா நமது ஆட்சிக்கு வந்துவிடும்.’’
அரபிமொழி அறியாமையால் அனாச்சாரங்கள்
இஸ்லாம் என்பது அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிறைவான மார்க்கம். அதில் கூடுதல் குறைவுகளுக்கு அறவே இடமில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய தேவையும் ஏற்படாது. இருப்பினும் இஸ்லாம் விரும்பாத எத்தனையோ சிந்தனைகளும் செயல்களும் இஸ்லாத்தின் பெயராலேயே முஸ்லிம்களிடம் மலிந்துகிடக்கின்றன. இதற்குக் காரணம், முஸ்லிம்களிடமுள்ள அரபிமொழி குறித்த அறியாமைதான்.

மார்க்கத்தில் நவீன அனுஷ்டானங்கள் (பித்அத்) எவ்வாறு நுழைந்தன என்பது தொடர்பாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘’மக்கள் கருத்து வேறுபாடுகளிலும் அறியாமையிலும் வீழ்ந்து கிடப்பதற்குக் காரணம், அவர்கள் அரபிமொழியைக் கைவிட்டுவிட்டு கிரேக்க மொழியின்பால் மையல்கொண்டதுதான்’’ என்றர்கள். (நூல்: சியரு அஅலாமிந் நுபலா)

அவ்வாறே ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடும்போது, ‘’அரபிமொழி குறித்த அறியாமைதான் மக்களை அலைக்கழித்துவிட்டது. எனவே, அவர்கள் முறைதவறி மார்க்கத்திற்கு விளக்கம் அளிக்கின்றனர்’’ என்று கூறுகிறார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பது இஸ்லாத்தின் அழுத்தமான நிலைப்பாடு. இதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் சான்றுகள் ஏராளம் உண்டு. ஆயினும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் அல்லர். அவருக்குப் பின்னரும் இறைத்தூதர் வரவியலும் என்று ஒரு குழு வாதிடுகிறது. அவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு குர்ஆன் வசனத்தையே சான்றாகக் காட்டுகின்றனர்.

அப்படியாயின் குர்ஆனுக்கு, குர்ஆனே விரும்பாத பொருளைத் தருகின்றனர் என்பதுதானே பொருள். அதை நம்பி முஸ்லிம்களில் ஒரு கூட்டம் அவர்களுக்குப் பின்னால் செல்கிறது. இதற்குக் காரணம் சத்தியமாக அரபிமொழி பற்றிய அறியாமையன்றி வேறென்ன?
இஸ்லாம் பற்றிய புரிதலுக்கு மொழிபெயர்ப்புகள் போதுமா?

இன்றைக்கு இஸ்லாத்தைப் பற்றிப் பேசுகின்ற பலர், அரபு மூலத்திலிருந்து விஷயங்களை எடுத்தாளாமல் வேற்றுமொழி நூல்களிலிருந்து எடுத்தாண்டு பேசியும் எழுதியும் வருவதைப் பார்க்கலாம். பிறமொழிகளில் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டிய அவசியம் உண்டுதான். ஆனால், இஸ்லாத்தைப் பற்றிப் பேசவும் விளக்கமளிக்கவும் வகுப்பெடுக்கவும் விவாதம் செய்யவும் முனையும்போது அரபிமொழித் தொடர்பும் அறிவும் மிகவும் அவசியம்.



மூலமொழியுடனான தொடர்பு இல்லாமல் குர்ஆனையோ ஹதீஸையோ முழுமையாகப் புரிவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவே. உதாரணமாக, ‘’அவர்களுக்கு நன்முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமையாகும்’’ (2:233) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அதாவது ஒருவர் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். அப்போது அத்தம்பதியருக்கு பால்குடி வயதில் ஒரு குழந்தை உள்ளது. இப்போது மணவிலக்குச் செய்த பின்னரும் பால்குடிப் பருவம் முடியும்வரை அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் தேவையான உணவு, உடை, உறையுள் செலவுக்குத் தந்தையே பொறுப்பு என்று இந்த வசனம் கூறுகிறது.

இந்த வசனத்தின் மூலத்தில் தந்தை என்று குறிப்பிடுவதற்கு அல்மவ்லூது லஹுஎனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. இதற்கு, ‘’யாருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர்’’ என்பது சொற்பொருளாகும். பொதுவாக தந்தைக்கு அரபியில் வாலித் அல்லது அபு எனும் சொற்களே அதிகம் பயன்பாட்டில் இருக்கும். இந்தச் சுருக்கமான சொற்களை விட்டுவிட்டு மேற்கண்ட சொற்றொடரை அல்லாஹ் தேர்வு செய்துள்ளான்.

இதற்கான காரணத்தை அறிஞர்கள் கூறுகையில், ‘’குழந்தைகள் தந்தைக்குரியவர்கள். தந்தையின் பெயரோடு இணைத்தே பிள்ளைகள் அழைக்கப்படுகின்றனர். தந்தையின் குடும்பப் பாரம்பரியத்தோடுதான் பிள்ளைகள் தொடர்புபடுத்தப்படுவார்கள்’’ என்று கூறுகின்றனர். (தஃப்சீர் ரூஹுல் மஆனீ, தஃப்சீர் அல்மனார்)

இந்த விளக்கத்துடன் இந்த வசனத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் இன்று நமக்குக் கிடைக்கின்ற திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் மட்டும் போதாது. ஏனெனில், அவற்றில்  மேற்கண்ட சொற்றொடருக்கு தந்தை என்றுதான் பொதுவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை மட்டும் படிக்கின்ற ஒருவர் இந்தச் சட்ட பின்புலத்துடன் இந்த வசனத்தைப் புரிந்துகொள்ள இயலாது. எனவேதான் குர்ஆனையும் ஹதீஸையும் மார்க்கத்தின் இதர ஞானங்களையும் மூலமொழித் தொடர்போடு அணுக வேண்டும்.

அரபிமொழியின் தொடர்பின்றி வெறும் மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்கத்தைச் சரியாகப் புரிந்துவிட இயலாது. அதற்காக மொழிபெயர்ப்புகளை அடியோடு மறுதலிக்க முடியாது. இருப்பினும், மொழிபெயர்ப்புகள் நம்மை தவறுக்கு இட்டுச்செல்ல வாய்ப்புகள் உண்டு. இதற்கு எனது அனுபவத்தையே உதாரணமாகச் சொல்லலாம்:

ஒருமுறை ஜுமுஆ உரைக்காக பெண்ணியம் தொடர்பாகக் குறிப்புகள் திரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது இஸ்லாம் சார்ந்த ஒரு தமிழ் கட்டுரை தொகுப்பு நூல் எனக்குக் கிடைத்தது. அதில் நூலாசிரியர் ஃபெமினிசத்தின் வரம்புமீறல்களைச் சுட்டிக்காட்டி, அது தொடர்பாக இஸ்லாமிய கோணம் என்ன என்பதை விவரித்திருந்தார்.

தேவையிருந்தால் அன்றி பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லலாகாது என்பதே இஸ்லாமியப் பண்பாடு என்று குறிப்பிட்டு, அதற்கு திருக்குர்ஆனின் 33:33ஆம் வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தார். அதற்குச் சான்றாக ஒரு ஹதீஸைக் கொண்டுவந்திருந்தார். அந்த ஹதீஸ், அவரது கருத்தை வலியுறுத்துவதற்கு மிகப் பொருத்தமானதாக இருந்த்து. ‘’பெண்களே நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே இருந்துகொள்ளுங்கள். அதுதான் உங்களுடைய அறப்போர் (ஜிஹாத்)’’ என்பதே அந்த ஹதீஸ். இதற்கு ஆதார நூல் எதுவும் அந்த நூலில் குறிப்பிடப்படவில்லை.

இந்த ஹதீஸை இதற்குமுன் நான் படித்ததுமில்லை. பார்த்ததுமில்லை. கேள்விப்பட்டதுமில்லை. ஒரு புதுத் தகவல் கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம். மறுபுறம் இதற்கான மூலவாசகம் கிடைத்தால் நல்லது என்று தோன்றியது. கூடுதல் விளக்கமோ, தகவலோ கிடைக்கலாம் என்பதற்காக அந்த ஹதீஸின் மூலவார்த்தையைத் தேடினேன்.

இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடும் ஒருவர், வெறும் தமிழ், ஆங்கில நூல்களை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்கத்தைப் பேசுவது முறையாகாது. பொதுத் தகவலுக்கு வேண்டுமானால் அரபு அல்லாத நூற்களை நம்பியிருக்கலாம். ஆனால், குர்ஆன், ஹதீஸ் உள்ளிட்ட இஸ்லாமியத் தகவலுக்கு அரபு மூலத்தை நாடுவதே உசிதம் என்பதால் தேடினேன். அப்போது என் கண்ணில் பட்டது இந்த ஹதீஸ்:

قالت عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم: عليكن بالبيت، فإنه جهادكن (مسند 
أحمد – 23257)

இந்த ஹதீஸுக்குத்தான் மேற்கண்டவாறு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நபிமொழிக்கு அரபிமொழியில் யாராவது விளக்கம் எழுதி இருக்கமாட்டார்களா என்று தேடினேன். முஸ்னது அஹ்மத் ஹதீஸ் திரட்டுக்கு நம்மிடம் அரபி விளக்கவுரை கிடையாது. இருப்பினும் ஹதீஸ் சி.டி. மூலம் நான் மேற்கொண்ட தேடலில் இந்த ஹதீஸுக்கு விளக்கமாக வேறுசில ஹதீஸ்கள் கிடைத்தன. அந்த ஹதீஸ்கள் பின்வருமாறு:

استأذنت عائشة النبي صلى الله عليه وسلم في الجهاد، فقال: جهاكن الحج (صحيح البخاري2875)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறப்போர் (ஜிஹாத்) செய்வதற்கு நபியவர்களிடம் அனுமதி கோரினார்கள். அப்போது நபியவர்கள், உங்கள் அறப்போர் ஹஜ் ஆகும்’’ என்றார்கள். (ஸஹீஹுல் புகாரீ-2875)

قالت عائشة لرسول الله! ألا نخرج فنجاهد معك؟ فإني لا أرى عملا في القرآن أفضل من الجهاد، قال: لا، ولكن أحسن الجهاد وأجمله حج البيت (النسائي - 2581)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘’அறப்போரைவிடச் சிறந்த நற்செயல் எதையும் நான் குர்ஆனில் காணவில்லை. எனவே, (பெண்களாகிய) நாங்களும் உங்களுடன் அறப்போர் (ஜிஹாத்) புரிய புறப்பட்டு வரலாமா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘’புறப்பட்டுவர வேண்டாம்; மாறாக, (உங்களுக்கு) அழகான அறப்போர் (ஜிஹாத்), இறையில்லத்தை ஹஜ் செய்வது (ஹஜ்ஜுல் பைத்)தான்’’ என்றார்கள். (சுனனுந் நஸாயீ-2581)

இந்த ஹதீஸ்களின் வழிகாட்டலில் பார்க்கும்போது, ‘’நீங்கள் இறையில்லத்தை-அதாவது கஅபாவை (அல்பைத்) பற்றிக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் ஜிஹாத் ஆகும்’’ என்பதே நான் பார்த்த அந்த ஹதீஸுக்குச் சரியான பொருள். அதில் இடம்பெற்ற அல்பைத் எனும் சொல்லுக்கு அந்த நூலாசிரியர் வீடு என்று பொருள் கொடுத்துவிட்டார். ஆனால், உண்மையில் அதற்கு இறையில்லம் கஅபா என்பதே பொருள். அரபியில் பொதுவாக பைத் என்றால் இல்லத்தைக் குறிக்கும். ஆனால், அல்பைத் எனும்போது அது குறிப்பாக கஅபாவைக் குறிக்கும். இதற்கு குர்ஆனிலும் சான்றுகள் உண்டு.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் வாசித்த அந்த நூல், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பு நூல்தான். அதில் ஆங்கில மாத இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருந்தன. அப்படிப் பார்த்தால், ஒரு ஹதீஸ் ஆங்கிலத்திலேயே தவறாக மொழிபெயர்க்கப்பட்டு, அந்தத் தவறுடனேயே அது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பயணித்து வந்துள்ளது. எனது தேடலின் முடிவில் எனக்குக் கிடைத்த வெளிச்சம் இது.

நான் மட்டும் தமிழ்மொழிபெயர்ப்பைப் பார்த்து அப்படியே சொல்லியிருந்தால், நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பொய் பேசிய குற்றவாளி ஆயிருப்பேன்.

இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்க அரபிமொழி அறிவும் பரிச்சியமும் நமக்கு இன்றியமையாததாகும்.
அரபுமொழி ஏன் படிக்க வேண்டும்?

1. அரபிமொழி இஸ்லாமிய மூலாதாரங்களின் மொழியாகும். ஒரு முஸ்லிம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனையும் ஹதீஸையும் படிப்பதும் புரிந்துகொள்வதும் அவசியம். அத்துடன் அது மறுமையில் சொர்க்கவாசிகள் பேசும் மொழியும்கூட.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குள் நுழையும்போது ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் அறுபது முழ உயரத்தில், இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்களின் அழகுத் தோற்றத்தில், இறைத்தூதர் ஈசா (அலை) அவர்களின் 33 வயதுப் பருவத்தில், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மொழி பேசுவோராக நுழைவார்கள். (நூல்: இப்னு அபித்துன்யா)

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அரபிமொழியானது இஸ்லாமிய மார்க்கத்தின் ஓர் அங்கம். அரபிமொழியை அறிவது முக்கியமான கடமை. ஏனெனில், குர்ஆனையும் நபிவழியையும் புரிந்துகொள்வது கடமையாகும். அரபிமொழி அறிவின்றி அவற்றைப் புரிய இயலாது. ஒரு கடமை நிறைவேறுவதற்கு எது அவசியமோ அதுவும் கடமையே. (நூல்: இக்த்திழாஉஸ் ஸிராத்தில் முஸ்த்தகீம்)

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அரபிமொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். அது மனிதம் வளர்க்கும். (நூல்: அல்ஜாமிஉ லி அக்லாகிர் ராவீ அ ஆதாபிஸ் ஸாமிஇ)

ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம், அரபிமொழி பயிலும் ஒரு கூட்டத்தாரைக் குறித்து விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘’அவர்கள் செய்யும் செயல் மிகவும் நல்லது. அவர்கள் தம் நபியின் மொழியை அல்லவா கற்கிறார்கள்?’’ என்றார்கள். (நூல்: இக்த்திழாஉஸ் ஸிராத்தில் முஸ்த்தகீம்)

தெற்கு சூடானில் அரபிமொழியைப் பயிலும் பிறசமயத்தவர் யாராயினும் அவர் நேரடியாகவே இஸ்லாத்தைத் தழுவுகிறார் (அலூக்கா அரபி இணையதளம்). இதனால்தான் அரபிமொழிமீது மேற்குலகத்திற்கு காழ்ப்பு ஏற்படுகிறது போலும்.



2. இஸ்லாம் பற்றிய சரியான புரிதலுக்கு அரபி மொழியறிவு அவசியம். குறிப்பாக மார்க்கம் பேசுகின்ற யாரும் அரபிமொழி அறிவின்றி மூலநூலுடனான தொடர்பு இல்லாமல் பேசுவது குறித்து ஒன்றுக்குப் பலமுறை யோசிக்க வேண்டும்.

இமாம் ஷாத்திபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மார்க்கச் சட்டம் (ஷரீஆ) குறித்து ஆய்வு செய்பவரும் அது குறித்துப் பேசுபவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில்,  அரபிமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராக இருந்தால் அன்றி, அல்லது அரபிமொழியறிவைத் தீர்க்கமாகப் பெற்றிருந்தால் அன்றி ஷரீஆ குறித்து எதையும் அவர் பேச வேண்டாம். (நூல்: அல்இஉத்திஸாம்)



3. சர்வதேச சொந்தம் கிடைக்கும். சர்வதேச சமூகம் அமையும். அதனால்தான் உலகம் முழுவதும் அதான், இகாமா, தொழுகை, ஜுமுஆ குத்பா எல்லாம் அரபுமொழியில் நிகழ்த்தப்படுகின்றன.

ஷைக் ரஷீத் ரிழா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இஸ்லாத்தை ஒருவர் தழுவும்போது அவர் தம்மை உலக முஸ்லிம்களின் சகோதரராகவும் தமது சமுதாயத்தை இஸ்லாமிய சமுதாயமாகவுமே உணர்கின்றார். மாறாக, அரபு சமூகம் என்றோ பாரசீக சமூகம் என்றோ கிப்தீ சமூகம் என்றோ துருக்கி சமூகம் என்றோ கருதுவதில்லை. மொழி சார்ந்த ஒருமைப்பாடின்றி இஸ்லாமிய சமூக ஒருமைப்பாடு சாத்தியமாகாது என்பது தெளிவு. சர்வதேச முஸ்லிம்களை ஒரே மாலையில் கோக்கும் மொழியாக அவர்களின் சமய மொழியைத் தவிர – அதாவது அரபிமொழியைத் தவிர வேறெதுவும் கிடையாது. (நூல்: தஃப்சீர் அல்மனார்)
அரபிமொழி கற்க என்ன செய்யலாம்?



ஷைக் முஹம்மத் அல்ஃகஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘’இன்றைய முஸ்லிம்களின் நிலை மிகவும் விநோதமானது. உலகில் பொருள் புரியாமல் வெறுமனே வாசிப்புக்காக மட்டும் கற்கப்படுகின்ற மொழி ஒன்று இருக்கிறதென்றால் அது அரபிமொழி மட்டும்தான். வேறெந்த மொழியும் இந்த நோக்கத்திற்காக மட்டும் பயிலப்படுவதில்லை.’’

எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை. ஒரு குழந்தை ஆங்கிலமோ தமிழோ, ஃபிரெஞ்சோ பயில்கிறது என்றால், பொருள் புரியாமல் வெறும் வாசிப்புக்காக மட்டுமே பயில்வது கிடையாது. வாசிக்கும்போதே அதன் பொருளும் அதற்குப் புரிந்துவிடுகிறது. ஆனால், முஸ்லிம்கள் பயிலும் அரபிமொழி மட்டுமே இதிலிருந்து விதிவிலக்காக நிற்கிறது. அறுபது ஆண்டுக் காலமாக ஒருவர் குர்ஆனை ஓதிவந்தாலும் அதன் பொருள் அவருக்குத் தெரிவதில்லை.


ஷைக் ரஷீத் ரிழா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘’இஸ்லாமிய மார்க்கத்திற்கு திருக்குர்ஆனே அல்லாஹ்வின் தீர்க்கமான சான்று. அதைச் சரியான முறையில் புரியாமல் இஸ்லாம் நிலைபெற இயலாது. அரபிமொழி உயிரோடு இல்லாமல் இஸ்லாத்தைப் புரிவது சாத்தியமில்லை. இதனாலேயே அரபிமொழியைப் பாதுகாப்பதும் அதைப் பரவலாக்குவதும் கடமையென இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அறிவும் இஸ்லாமிய மார்க்கமும் அரபிமொழியின் உயிர்ப்பின் மூலமே வலிமையின் சிகரத்தில் இருந்துவந்தன.’’

இஸ்ரேலிய அரசு தனது நாட்டில் எபிரேய மொழியைப் பயிற்றுமொழியாகக் கடைப்பிடிக்கிறது. ஆனால், எபிரேய மொழி செத்துப்போய் மூவாயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும், செத்துப்போன அந்த மொழிக்கு உயிர் கொடுப்பதற்காகத் தொடர்ந்து இயங்கி அதில் வெற்றியும் கண்டனர்.

இப்போது அந்த மொழியைப் பயிற்றுமொழியாக வைத்து அந்த மொழி அழியாமல் காத்துவருகின்றனர். ஒரு மொழி அழிந்தால் அந்த இனத்தின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் என எல்லாமே அழிந்துபோகும். எனவே, தமது இனத்தின் இருத்தலை மொழியின் இருத்தலைக் கொண்டு தக்கவைத்துள்ளனர். (அலூக்கா அரபி இணையதளம்)

செத்துப்போய் ஆண்டுகள் பல கழிந்த ஒரு மொழியையே திரும்ப உயிர்ப்பிக்க முடியும் என்றால், அரபிமொழி இன்றைக்கும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மொழிதான். உலகில் 28 நாடுகளின் ஆட்சிமொழியும்கூட. 422 மில்லியனுக்கும் அதிகமானோரின் பேச்சுமொழி. எனவே, சிறிதளவு முயன்றாலும் அரபிமொழியை நம்மால் கற்க இயலும். அது சாத்தியமில்லாத ஒன்றல்ல.

அதற்காக நாம் செய்ய வேண்டியவை:



- சர்ச்களுக்கு அருகில் பள்ளிக்கூடங்கள் போன்று பள்ளிவாசல்களுக்கு அருகில் குறைந்த அளவு ஆரம்பப் பள்ளியேனும் உருவாக்கப்பட்டு அங்குள்ள பாடத்திட்டத்துடன் அரபிமொழியும் சேர்த்து போதிக்கப்பட வேண்டும். இதில் ஆலிம்களும் ஜமாஅத் பொறுப்பாளர்களும் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும்.



- இவையன்றி, ஏற்கெனவே நடப்பில் இருந்துவரும் பள்ளிக்கூடங்களில் அரபிமொழியும் சேர்த்து போதிக்கப்பட வேண்டும். குறிப்பாக பள்ளிக்கூடம் நடத்தும் முஸ்லிம்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

- பத்தாவது, பன்னிரண்டாவது போன்ற வகுப்புகளில் இரண்டாவது மொழியாக அரபியைத் தேர்வு செய்யும் விழிப்புணர்வை பிள்ளைகளிடம் முன்னெடுக்க வேண்டும். இதிலும் ஆலிம்களும் ஜமாஅத் பொறுப்பாளர்களும் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும்.

- இளங்கலை கல்லூரிப் படிப்பில் அரபிமொழி உள்ள முஸ்லிம் கல்லூரியில் சேர வேண்டும். குறைந்தபட்சம் முஸ்லிம்கள் நடத்தும் அனைத்துக் கல்லூரிகளிலும் அரபிமொழியை இரண்டாம் மொழியாகத் தேர்வு செய்யும் வசதி கண்டிப்பாக இடம்பெறச் செய்ய வேண்டும். கல்வியாளர்களிடமும் கல்வி நிறுவன அதிபர்களிடமும் இந்த செய்தி போய்ச் சேர வேண்டும். எதிர்காலம் அரபுக்கு மிகச் சாதகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொண்டால் இது இலகுவாகிவிடும்.

இந்தியாவில், குறிப்பாக நமது தமிழகத்தில் மேலைநாடுகளுக்கு இணையான உயர் மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் கிடைப்பதால் அரேபிய நாடுகளிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. சென்னையில் மியாட், அப்போல்லோ, காவேரி, ஃபோர்டிஸ் மலர், அகர்வால் உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு அரபு மக்கள் வருகை தருகின்றனர்.

அவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்குமிடையே மொழிப் பிரச்சினை இருப்பதால், விமான நிலைய வரவேற்பு முதல் மறுபடி வழியனுப்பும்வரை அவர்களுக்கு உடனிருந்து சேவை செய்யவும் வழிகாட்டவும் அரபி-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை உள்ளவர்களுக்குப் பிரகாசமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. அந்த வகையில் நம் நாட்டிலேயே வருவாய் வாய்ப்புள்ள மொழியாகவும் அரபிமொழி கோலோச்சுகிறது.


எனவே, இஸ்லாத்தின் மூலாதாரங்களின் மொழியான அரபிமொழியை அறிவோம். சர்வதேச முஸ்லிம்களோடு எல்லை கடந்து உறவுப் பாலம் எழுப்பி உணர்வுபூர்வமாகச் சங்கமிப்போம்.

இந்த ஆக்கத்தை அப்படியே உரையாகச் செவியுற பின்வரும் முகவரியைச் சொடுக்குங்கள்:

http://youtu.be/JU8c8qcFbJQ

கருத்துகள் இல்லை:

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...