முன்மாதிரி முஸ்லிம்கள்
- 4
உமைர் பின்
வஹ்ப் (ரலி)
அரபியில்: டாக்டர், அப்துர் ரஹ்மான் ரஉஃபத் அல்பாஷா
தமிழில்:
சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A.,
M.Phil.,
உமைர்
பின் வஹ்ப் (ரலி) அவர்கள், நான் பெற்றெடுத்த பிள்ளைகளைவிட எனக்கு மிகவும்
பிடித்தமானவராக மாறிவிட்டார். (உமர் - ரலி)
பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு
எதிராகக் களம் கண்டு படுதோல்வியுற்று, உயிர் தப்பி மக்காவுக்கு ஓடிவந்த
குறைஷியரில் உமைர் பின் வஹ்பும் ஒருவர். போருக்குப் போனபோது தந்தையும் மகனுமாகச்
சேர்ந்து போனவர்கள், உயிர் பிழைத்து ஓடிவரும்போது அவரின் புதல்வர் வஹ்ப்
முஸ்லிம்களின் கையில் கைதியாகப் பிடிபட்டுவிட, உமைர் மட்டும் ஒற்றையாக ஓடிவந்துவிட்டார்.
உமைருக்கு உள்ளூர ஓர் அச்சம். எங்கே தான் செய்த
குற்றங்களுக்காக முஸ்லிம்கள் தன் பிள்ளையைப் பழிதீர்த்துவிடுவார்களோ, அவனைக் கடுமையாகத்
தண்டித்துவிடுவார்களோ என்பதே அந்த அச்சம். ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
மக்காவில் இருக்கும்போது அன்னாருக்கும் அன்னாரின் தோழர்களுக்கும் உமைர் இழைத்த
இன்னல்களும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
ஸஃப்வானைச் சந்தித்த உமைர்
ஒருநாள் முற்பகல் நேரத்தில் உமைர், கஅபாவை தவாஃப்
சுற்றுவதற்காகவும் அங்கிருந்த சிலைகளிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காகவும் வந்தார்.
அப்போது கஅபாவின் அரைவட்டச் சுவருக்கு (ஹிஜ்ரு இஸ்மாயீல்) அருகில் ஸஃப்வான் பின்
உமய்யா அமர்ந்திருந்தார்.
உமைர், ஸஃப்வானுக்கு அருகில் வந்து, ‘’குறைஷிக் குலத் தலைவரே! உமக்குக் காலை வந்தனம்!’’ என்று முகமன் கூறினார்.
இதைக் கேட்ட ஸஃப்வான், ‘’அபூவஹ்ப்! உமக்கும் காலை வந்தனம்; அருகில் வந்து அமரும்; சற்று நேரம் பேசிக்கொண்டிருக்கலாம்; மனம்விட்டுப் பேசும்போதுதான் கவலைகளால்
கனத்துப்போன பொழுதுகளைத் தள்ள முடிகிறது’’ என்றார்.
பின்னர் ஸஃப்வானும் உமைரும் நேருக்குநேர் அமர்ந்து
பத்ர் போர் பற்றியும் அதில் ஏற்பட்ட தாங்கமுடியாத சோகம் பற்றியும் இழப்புகள்
பற்றியும் உரையாடலாயினர்.
தம் ஆட்களில் யாரெல்லாம் முஸ்லிம்களிடம் கைதிகளாகச்
சிக்கிக்கொண்டவர்கள் என்று கணக்கெடுத்தனர். முஸ்லிம்களின் வாட்களுக்குப் பலியாகி
பத்ர் பாழுங்கிணற்றில் வீசியெறியப்பட்ட குறைஷிய பிரமுகர்களை நினைத்து வேதனையை
வெளிப்படுத்தினர்.
அப்போது ஸஃப்வான் சரியான தருணம் பார்த்து, ‘’அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தப் பெரிய மனிதர்களெல்லாம்
போய்ச் சேர்ந்தபின் வாழ்வில் நமக்கேது நன்மை’’ என்று பெருமூச்செறிந்தார். உமைர், ‘’அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் சொன்னது முற்றிலும் உண்மை’’ என்று சொல்லிவிட்டுச் சிறிது
நேரம் அமைதியாயிருந்தார்.
பின்னர், ‘’கஅபாவின் இறைவன் மீதாணையாக! நான் அடைக்க வேண்டிய கடன்கள் சில உள்ளன. அவற்றுக்கான
பொருள்வசதி என்னிடம் இல்லை. என்னை நம்பி ஒரு குடும்பம் உள்ளது. அவர்கள் எனக்குப்
பிறகு நாதியற்றுப்போய்விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். இந்தப்
பிரச்சினைகளெல்லாம் இல்லையாயின், முஹம்மதிடம் சென்று அவரைக் கொல்வேன். அவரது
விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன். அவரின் தீமைக்கு முடிவு கட்டுவேன்’’ என்றும் உமைர் கூறினார்.
பின்னர் தொடர்ந்து அவரே மெல்லிய குரலில், ‘’என் மகன் வஹ்ப், யஸ்ரிபில்
முஸ்லிம்களிடம் கைதியாகச் சிக்கியிருப்பதில் நமக்கொரு லாபம் உள்ளது. நான்
யஸ்ரிபுக்குச் சென்றால், யாருக்கும் அது குறித்துச் சந்தேகங்கள் எழ வாய்ப்பில்லை’’ என்றும் கூறினார்.
சதித்திட்டம் தீட்டிய ஸஃப்வானும்
உமைரும்
உமைரின் இந்த வார்த்தைகள் ஸஃப்வானுக்கு மிகப்பெரும்
வரப்பிரசாதமாகத் தெரிந்தது. இப்படியொரு அரிய வாய்ப்பைத் தவறவிட ஸஃப்வானுக்கு
மனமில்லை. எனவே, அவர் உமைரிடம், ‘’உமைரே! உமது மொத்த கடனுக்கும் நான் பொறுப்பு. எவ்வளவு
தொகையானாலும் அடைத்துவிடுகின்றேன். இனி உமது குடும்பத்தை என் குடும்பத்தோடு
சேர்த்துப் பராமரித்துக்கொள்கிறேன். உயிருள்ளவரை அவர்களை நான் காப்பாற்றுகிறேன். நம்மிரு
குடும்பங்களின் வளமான வாழ்வுக்குத் தேவையான வசதிகள் யாவும் என்னிடம் கொட்டிக்
கிடக்கின்றன’’
என்று கூறினார்.
அதற்கு உமைர், ‘’அவ்வாறாயின், நாம் பேசிக்கொண்ட இந்தச் செய்தி நமக்குள்
மட்டுமே இரகசியமாக இருக்கட்டும். யாரிடமும் இதைத் தெரிவித்துவிட வேண்டாம்’’ என்றார். ஸஃப்வான், ‘’சரி; அப்படியே செய்கிறேன்’’ என்று ஏற்றுக்கொண்டார்.
மதீனா பயணத்தின் முன்னேற்பாடு
பின்னர் உமைர், புனித கஅபா அமைந்துள்ள மஸ்ஜிதுல்
ஹராம் பள்ளிவாசலிலிருந்து எழுந்தார். அவரது உள்ளத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு
எதிரான காழ்ப்புத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தமது திட்டத்தைச் செயல்படுத்தத்
தேவையான முன்னேற்பாடுகளில் மும்முரமாக இறங்கலானார்.
மதீனாவை நோக்கிய தமது பயணம் குறித்து முஸ்லிம்களுக்குச்
சந்தேகம் ஏதும் எழலாம் என்ற அச்சம் அவருக்கு வரவில்லை. ஏனெனில், அப்போது பத்ர்
போர்க்கைதிகளின் உறவுக்கார குறைஷியர்கள் தம் கைதிகளுக்காகப் பிணைத்தொகை செலுத்தி,
அவர்களை மீட்டுச் செல்லும் பின்னணியில் மதீனாவுக்கு வேகவேகமாக வருவதும் போவதுமாக
இருந்துவந்தனர்.
உமைர் தமது வாளை நன்கு கூர்தீட்டி நஞ்சு தடவித்
தருமாறு கேட்டார். பின்னர் தமது வாகனப் பிராணியைக் கொண்டுவரச் சொன்னார். அவ்வாறே
வாகனம் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. நஞ்சு தடவிய அந்த வாளை எடுத்துக்கொண்டு வாகனத்தின்
மீது ஏறினார்.
மதீனாவில் உமைர் பின் வஹ்ப்
உள்ளம் முழுக்க வெறுப்பும் வஞ்சகமும் நிறைந்திருக்க
உமைர் மதீனாவை நோக்கி வாகனத்தைச் செலுத்தினார். மதீனா போய்ச் சேர்ந்தபின்
நபியவர்களை மனதில் வைத்து பள்ளிவாசலை நோக்கிப் போனார். பள்ளிவாசலின் தலைவாசலுக்கு
அருகில் வந்ததும் தமது ஒட்டகத்தைத் தரையில் படுக்கவைத்து அதிலிருந்து
இறங்கிக்கொண்டார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்கள் சிலருடன் மஸ்ஜிதுன்
நபவீ பள்ளிவாசலின் தலைவாசலுக்கு அருகில் அமர்ந்து, பத்ர் போர் பற்றியும் அதன்
பின்விளைவாக எதிரணியில் கொல்லப்பட்ட மற்றும் சிறைபிடிக்கப்பட்ட குறைஷிய
பிரமுகர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.
முஹாஜிர்கள் மற்றும் அன்ஸார்கள் ஆகிய இரு தரப்பிலும்
இருந்த வீராதிவீரர்களின் சாகசச் செயல்களைத் திரும்பத் திரும்ப நினைவுகூர்ந்தவாறு
இருந்தனர்.
தம் அணியினருக்கு அல்லாஹ் வழங்கிச் சிறப்பித்த
வெற்றியையும் எதிரணிக்கு அல்லாஹ் ஏற்படுத்திய உயிர்ச்சேதம், இழப்பு, தோல்வி
ஆகியவற்றையும் நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்ந்த வண்ணம் இருந்தனர்.
உமைரைக் கண்டு உஷாரான உமர் (ரலி)
இந்நிலையில் திடீரென்று உமர் (ரலி) அவர்கள்
திரும்பிப் பார்க்க, அங்கே உமைர் பின் வஹ்ப் தமது வாகனத்திலிருந்து இறங்கி, வாளைத்
தொங்கவிட்டுக்கொண்டு மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலை நோக்கி நடந்துகொண்டிருந்ததைக்
கண்டார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் பதறியடித்து எழுந்து, ‘’இதோ! இந்த நாய்தான் அல்லாஹ்வின்
எதிரியாகிய உமைர் பின் வஹ்ப். அல்லாஹ்வின் மீதாணையாக! இவன் ஒரு சதிச் சிந்தனையோடுதான்
இங்கு வந்துள்ளான். முன்னதாக, மக்காவில் நமக்கெதிராக எதிரிகளை ஒன்றுதிரட்டியவனும்
இவன்தான். பத்ர் போர் நடைபெறுவதற்குச் சற்று முன்புவரை நமக்கெதிராக
மக்காவாசிகளுக்கு உளவு வேலை பார்த்தவனும்கூட’’ என்று சொன்னார்கள்.
முன்பொரு முறை நபியவர்களை நோக்கி உருவிய வாளோடு
சென்றவர்தானே உமர் (ரலி) அவர்கள். அதனால் உமைரின் திட்டத்தை உமர் (ரலி) அவர்களால்
துல்லியமாக மதிப்பிட முடிந்தது. பாம்பின் கால் பாம்பறியாதா என்ன?
பின்னர், உமர் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த
தோழர்களை நோக்கி, ‘’நீங்கள்
அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களைச் சுற்றிப்
பாதுகாப்பு வளையமிட்டுக்கொள்ளுங்கள். அழுக்குச் சிந்தனையுள்ள இந்தச்
சூழ்ச்சிக்காரன் நபி (ஸல்) அவர்களை நம்பவைத்துக் கழுத்தறுத்துவிடப்போகிறான்; எச்சரிக்கையாயிருங்கள்’’ என்று சொன்னார்கள்.
பின்னர் நபியவர்களிடம் விரைந்து சென்ற உமர் (ரலி)
அவர்கள், ‘’அல்லாஹ்வின் தூதரே! இதோ அல்லாஹ்வின் எதிரி உமைர்
பின் வஹ்ப், வாளோடு புறப்பட்டு வந்துள்ளான். அவனைப் பார்த்தால், ஒரு நல்ல
நோக்கத்திற்கு வந்தவனாக எனக்குப் படவில்லை’’ என்றார்கள். அதற்கு நபியவர்கள், ‘’அவரை என்னிடம் வரச்சொல்லுங்கள்
உமரே’’ என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், உமைரிடம் சென்று அவரது வாளுறையை
அவரின் கழுத்தில் சுற்றி, நெஞ்சுச் சட்டையைப் பிடித்து நபியவர்களிடம் அவரை
இழுத்துக் கொண்டுவந்தார்கள்.
நபியின் அருகில் கொலைவெறியர்
ஒரு கைதியின் தோற்றத்தில் உமைரைக் கண்ட நபி (ஸல்)
அவர்கள், ‘’அவரை விட்டுவிடுங்கள்
உமரே’’ என்றார்கள். உமர் (ரலி)
அவர்கள் தமது பிடியைத் தளர்த்தி அவரை விடுவித்தார்கள். பின்னர் நபியவர்கள், ‘’சற்று தள்ளி நில்லுங்கள் உமரே’’ என்றார்கள். உமர் (ரலி) அவர்கள்
உமைரின் அருகிலிருந்து சற்று தள்ளி நின்றார்கள்.
பின்னர், நபி (ஸல்) அவர்கள் உமைர் பின் வஹ்பை நோக்கி,
‘’உமைரே! அருகில் வாரும்’’ என்றார்கள். அருகில் வந்த உமைர்,
‘’உமக்குக் காலை வந்தனங்கள்’’ என்றார். அறியாமைக் காலத்தில்
அரபுகள் முகமன் தெரிவிக்கும் முறை இது.
அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘’உமைரே! நீர் தெரிவித்த முகமனைவிடச்
சிறந்த முகமன் முறையை அல்லாஹ் எங்களுக்கு வழங்கிக் கௌரவப்படுத்தியுள்ளான். ’சாந்தி நிலவட்டும் (அஸ்ஸலாம்)’ என்பதையே அவன் எங்களுக்குக்
கௌரவமாக ஆக்கியுள்ளான். அது சொர்க்கவாசிகளின் முகமனும்கூட’’ என்றார்கள்.
உமைர், ‘’(முஹம்மதே!) நீர் ஒன்றும் எங்கள் முகமனுக்கு பரிச்சயம் அல்லாதவர் இல்லை.
நேற்றுவரைக்கும் அது உமக்குப் பரிச்சயமானதுதான்’’ என்றார். அவரிடம் நபியவர்கள், ‘’உமைரே! என்ன நோக்கத்திற்காக
வந்துள்ளீர்?’’
என்று கேட்டார்கள்.
உமைர், ‘’உங்கள் வசம் சிக்கியிருக்கும் இந்தக் கைதியை – அதாவது என்
மகனை மீட்டுச் செல்லும் நம்பிக்கையில் வந்துள்ளேன். எனவே, என் மகன் விஷயத்தில்
எனக்கு உபகாரம் செய்யுங்கள்’’ என்றார்.
‘’அப்படியானால், உமது கழுத்தில் தொங்குகின்ற இந்த வாள்
எதற்காக?’’ என்று நபியவர்கள் கேட்டார்கள்.
அதற்கு உமைர், ‘’அல்லாஹ்
அந்த வாட்களுக்கு இழிவைத் தரட்டும். அவை எங்களுக்கு பத்ர் போரின்போது எள்ளளவாவது
பயன் தந்தனவா என்ன?’’
என்று ஆதங்கத்துடன் கூறினார்.
நபியவர்கள் உமைரிடம், ‘’உமைரே! உண்மையைச் சொல்லும்; எதற்காக இங்கு வந்தீர்?’’ என்று கேட்டார்கள். உமைர், ‘’என் மகனை மீட்டுச்செல்லவே வந்தேன்; வேறெதற்காகவும் வரவில்லை’’ என்று அடித்துச் சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘’இல்லை; (நீர் பொய் சொல்கிறீர்.) நீரும்
ஸஃப்வான் பின் உமய்யாவும் கஅபா அருகில் ‘ஹிஜ்ர்’ பகுதியில் அமர்ந்து, பத்ரின் பாழுங்கிணற்றில்
வீசியெறிப்பட்ட குறைஷிய பிரமுகர்களின் சடலங்களைப் பற்றி ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தீர்கள்.
முடிவாக நீர், ‘நான்
மட்டும் கடன்காரனாகவும் குடும்பஸ்தனாகவும் இல்லையெனில், நானே முஹம்மதிடம் சென்று
அவரைக் கொல்வேன்’ என்றீர்.
உடனே, நீர் என்னைக் கொல்ல வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் உமது கடனுக்கும்
குடும்பத்திற்கும் ஸஃப்வான் பின் உமய்யா பொறுப்பேற்றுக்கொண்டார். ஆயினும், உமது
திட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட்டான்’’ என்றார்கள்.
நல்ல பாம்பு நல்ல மனிதரானது
இதைக் கேட்ட உமைர் ஒருகனம் திகைத்துப்போனார். சற்று
நேரம்கூட கழிந்திருக்காது. அதற்குள் உமைர் நபியவர்களைப் பார்த்து, ‘’நிச்சயமாக நீர் அல்லாஹ்வின்
தூதர்தான் என்று நான் உறுதிமொழிகிறேன்’’ என்றார். மேலும், அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்:
‘’அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடம் கொண்டுவந்துகொண்டிருந்த விண்ணுலகச்
செய்திகளை நாங்கள் ஏற்க மறுத்துவந்தோம். உமக்கு வந்த வேதஅறிவிப்புகளையும் நாங்கள்
மறுத்தோம். ஆனால், ஸஃப்வான் பின் உமய்யாவுடன் நான் பேசிக்கொண்டிருந்த அந்த இரகசியம்,
என்னையும் அவரையும் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தத் தகவலை உமக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் தந்திருக்க
வாய்ப்பில்லை என்று இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இஸ்லாமிய நல்வழியை
நான் பெற வேண்டும் எனும் நோக்கில் என்னை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்த அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்’’.
பின்னர், ‘’லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவனில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்) என்று
உறுதிமொழிந்து இஸ்லாத்தைத் தழுவினார்.
நபியவர்கள் தம் தோழர்களிடம், ‘’உங்கள் சகோதரர் உமைருக்கு மார்க்க
அறிவைப் புகட்டுங்கள். குர்ஆனைக் கற்றுக்கொடுங்கள். அவருடைய கைதியை – அதாவது
அவருடைய மகனை விடுவியுங்கள்’’ என்றார்கள்.
உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத்
தழுவியதில் முஸ்லிம்களுக்கு ஆனந்தம் என்றால் அப்படியொரு ஆனந்தம். எந்த
அளவிற்கெனில், ‘’அல்லாஹ்வின்
தூதருக்கெதிராகப் புறப்பட்டு வரும்போது உமைர் பின் வஹ்ப், ஒரு பன்றியைவிட மிகவும்
கேவலமாக எனக்குத் தெரிந்தார். ஆனால், இன்றோ அவர், நான் பெற்றெடுத்த பிள்ளைகளைவிட
எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார்’’ என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அதையடுத்து உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்கள், இஸ்லாமிய
போதனைகளால் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக்கொள்வதிலும் இதயத்தில் இஸ்லாமிய ஒளியை
இட்டு நிரப்புவதிலும் முனைப்பு காட்டினார். அவரது வாழ்வில் அந்தக் காலம் ஒரு
பொற்காலம் எனச் சொல்லும் அளவுக்கு தன்னிறைவானதொரு வாழ்க்கை வாழ்ந்ததில் அவருக்கு
மக்காவோ மக்காவாசிகளோ நினைவுக்கு வரவில்லை.
எதிர்பார்த்து ஏமாந்த ஸஃப்வான்
அதே நேரத்தில் ஸஃப்வான் பின் உமய்யாவோ மக்காவில்
என்னென்னவெல்லாமோ மனக்கோட்டை கட்டியிருந்தார். குறைஷியர்கள் ஒன்றுகூடும் ஒவ்வொரு கூட்டத்திற்கும்
சென்று, ‘’உங்களுக்கெல்லாம் ஒரு
நற்செய்தி. வெகு விரைவில் உங்கள் காதுகளுக்கு மகத்தானதொரு தகவல் வரவிருக்கிறது.
பத்ர் போரில் நமக்கேற்பட்ட மனக்காயங்களுக்கு மருந்திட்டு மறக்கவைக்கும் அளவுக்கு
முக்கியத்துவம் வாய்ந்த தகவல் அது’’ என்று கூறிக்கொண்டிருந்தார்.
அந்தத் தகவல் எப்போது வரும் என்று வழிமேல்
விழிவைத்துக் காத்திருந்தார். அவர் காத்திருந்து காத்திருந்து காலம் போனதுதான்
மிச்சம். எனவே, அவரது உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கவலைக் குடிகொள்ளத்
தொடங்கியது.
ஒரு கட்டத்தில் அவர் நெருப்பில் புரளும் புழுவாகத்
துடித்தார். மக்காவுக்கு வருகின்ற பயணக் குழுக்களில் ஒவ்வொருவரிடமும் சென்று உமைர்
பின் வஹ்ப் (ரலி) அவர்களைப் பற்றி விசாரிக்கலானார். ஆனால், யாரிடமிருந்தும்
அவருக்கு மனநிறைவான பதில் கிடைக்கவில்லை.
இறுதியில் ஒரு பயணி வந்து, ‘’நிச்சயமாக உமைர் இஸ்லாத்தைத்
தழுவிவிட்டார்’’ எனக்
கூறினார். அவரைப் பொறுத்தமட்டில் அதிர்ச்சிகரமான இத்தகவல், அவர் தலையில் பேரிடியாக
விழுந்தது. ஏனெனில், உமைர் இருந்த இருப்பைப் பார்த்து, இந்த உலகமே இஸ்லாத்தைத்
தழுவினாலும் உமைர் இஸ்லாத்தைத் தழுவவேமாட்டார் என்று நம்பிக்கொண்டிருந்தவர் அவர்.
ஆனால், உமைர் பின் வஹ்ப் (ரலி) அவர்களோ, மார்க்க
அறிவைத் தேடுவதிலும் திருக்குர்ஆனில் தமக்கு முடிந்த அளவை மனனம் செய்வதிலும்
இடையறாமல் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
மக்காவில் புதுமனிதராய் உமைர்
(ரலி)
இந்நிலையில் உமைர் (ரலி) அவர்கள் ஒருநாள் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்:
‘’அல்லாஹ்வின் தூதரே! என் ஆயுளில் ஒரு கணிசமான காலம், அல்லாஹ்வின் ஒளியை ஊதி
அணைக்கும் முயற்சியிலும் இஸ்லாமியர்களுக்குக் கடுமையாகத் துன்பம் விளைவிக்கும்
முனைப்பிலும் கழிந்துவிட்டது. ஆனால், இப்போது எனக்கொரு விருப்பம்.
நான் மக்கா சென்று குறைஷியருக்கு அல்லாஹ்வைப்
பற்றியும் அவனுடைய தூதர் பற்றியும் பரப்புரை செய்வதற்கு என்னை நீங்கள் அனுமதிக்க
வேண்டும். அவர்கள் என் கருத்தை ஏற்றால் நல்லது. இல்லையேல், முன்னதாக
நபித்தோழர்களுக்கு நான் கொடுத்த துன்பத்தைப் போன்று குறைஷியருக்குச் சமய ரீதியில்
தொல்லை கொடுப்பேன்.’’
இவ்வாறு கூறிய உமைர் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். உடனே மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்ற உமைர்
(ரலி) அவர்கள், ஸஃப்வான் பின் உமய்யாவிடம் சென்றார்கள்.
சென்றவர், ‘’ஸஃப்வானே! நீர் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும் குறைஷிய
அறிவுஜீவிகளில் ஒருவராகவும் திகழ்கின்றீர். நீங்கள் பக்தி சிரத்தையோடு
கடைப்பிடித்துவரும் சிலைவழிபாடும் சிலைக்கான பலியிடலும் உங்கள் அறிவுக்குச்
சரியெனப்படுகிறதா? அது உண்மையில் மார்க்கமாக இருக்கும் என்று நீங்கள்
கருதுகிறீர்களா?’’
என்றெல்லாம் கேட்டார்கள்.
பின்னர், ‘’நான், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும்,
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவாகள் என்றும் உறுதிமொழிகிறேன்’’ எனக் கூறினார்கள்.
பின்னர் உமைர் (ரலி) அவர்கள் மக்காவில் அல்லாஹ்வை
நோக்கி வருமாறு மக்களுக்குப் பரப்புரை செய்தார்கள். அவரது கையால் ஒரு பெரும்
கூட்டமே இஸ்லாத்தைத் தழுவியது.
அல்லாஹ், நபித்தோழர் உமைர் பின் வஹ்ப் (ரலி)
அவர்களுக்கு வெகுவாக வெகுமதி அளிப்பானாக. அவரது அடக்கத்தலத்தை ஒளிமயமாக்குவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக