திங்கள், 9 அக்டோபர், 2017

முன்மாதிரி முஸ்லிம்கள் - 5


பராஉ பின் மாலிக் அல்அன்ஸாரீ (ரலி)


அரபியில்: டாக்டர், அப்துர் ரஹ்மான் ரஉஃபத் அல்பாஷா
தமிழில்: சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,
இஸ்லாமிய இராணுவத்தின் எந்தவொரு படைக்கும் பராஉ (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்க வேண்டாம். தமது துடுத்தனமான துணிச்சல் காரணமாக தமது படையை அவர் மாய்த்துவிடலாம் என்று நான் அஞ்சுகிறேன். (ஆட்சித் தலைவர் உமர் (ரலி) அவர்கள் ஆளுநர்களுக்கு அனுப்பிய அரசாணை)
அவர் பரட்டைத் தலையோடும் புழுதி படிந்த மேனியோடும் இருந்தார். மெல்லிய தேகம். எலும்பும் தோலுமான ஓர் உருவம். அவரை ஏறெடுத்துப் பார்ப்பதானால், பார்ப்பவரின் கண்கள் சங்கடப்படும். உடனே பார்வை அவரைவிட்டு வேறு பக்கம் திரும்பிவிடும். அந்த அளவிற்குத்தான் அவரது புறத்தோற்றம் இருந்தது.
ஆயினும், அவர், தன்னந்தனியாக தாம் மட்டுமே ஈடுபட்ட எதிரிகளுடனான களமோதலில் நூறு பேரை வீழ்த்தியுள்ளார். போர்க்களத்தின் ஒட்டுமொத்த மோதலில் மற்ற போராளிகளுடன் இணைந்து அவர் வீழ்த்திய எதிரிகளின் எண்ணிக்கையோ எண்ணிடலங்காதது.

அவரது துணிவும் தைரியமும் துடுக்குத்தனமானது. பின்விளைவுகளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத அசாத்தியமான துணிச்சல்காரர் அவர். அதனாலேயே, ‘’இஸ்லாமிய இராணுவத்தின் எந்தவொரு படைக்கும் அவரைத் தளபதியாக நியமிக்க வேண்டாம்; ஏனெனில், அவர் தமது துடுக்குத்தனமான துணிச்சலின் காரணத்தால் தம் வசமுள்ள படையினரை மாய்த்துவிடக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்’’ என இஸ்லாமியப் பிரதேசங்களின் ஆளுநர்களுக்கு ஆட்சித் தலைவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் ஆணை பிறப்பித்துக் கடிதம் எழுதினார்கள்.

அவர்தான் பராஉ பின் மாலிக் அல்அன்ஸாரீ (ரலி) ஆவார்கள். அவர் நபி (ஸல்) அவர்களின் பணியாளரான அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். அவரது வீரதீரச் செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்வதானால், அதற்கு இந்தக் கட்டுரை இடம் தராது. அவ்வளவு நீண்ட நெடிய வரலாறு அவற்றுக்கு உண்டு. இருப்பினும் அவரது அசாத்திய துணிச்சலுக்கு, ஒரு சோற்றுப் பதம் போல் பின்வரும் வரலாற்றுக் குறிப்பைக் காணலாம்.

மதம் மாறித் துரோகம் இழைத்தோர்

அவரின் வீரதீர வரலாறு, நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்த ஆரம்பத் தருணங்களிலிருந்தே தொடங்குகிறது. அப்போது பல்வேறு அரபுக் குலங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தன. ஒரு காலத்தில் அவர்கள் அனைவரும் அதே அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாக வந்தவர்கள்தான்.  ஆனால், இப்போதோ, மக்கா, மதீனா, தாயிஃப் ஆகிய ஊர்வாசிகளையும் மற்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாருடைய உள்ளங்களை அல்லாஹ் இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்தியிருந்தானோ அத்தகைய சிற்சில குழுக்களையும் தவிர வேறு யாரும் இஸ்லாத்தில் நிலைக்கவில்லை. அந்த அளவுக்கு மதமாற்றத் துரோகம் பரவலாக இருந்தது.

கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் பேரழிவு தரும் இந்தக் கண்மூடித்தனமான அதர்மத்திற்கு எதிராக மலை போன்று திடமான முடிவை எடுத்தார்கள். முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிலிருந்து பதினொரு படைகளைத் தயார் செய்தார்கள். ஒவ்வொரு படையின் தளபதிக்கும் ஒரு கொடி வீதம் பதினொரு கொடிகளைக் கட்டிக்கொடுத்தார்கள். பின்னர்  அந்தப் படையினரை அரேபிய தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தார்கள். இஸ்லாத்திலிருந்து வெளியேறியோரை நல்வழிக்கு மீட்க வேண்டும் என்பதும் துரோகம் புரிந்தவர்களை ஆயுத முனையில் வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுமே இதற்குக் காரணம்.

அவ்வாறு மதம் மாறித் துரோகம் இழைத்தவர்களில் பனூ ஹனீஃபா குலத்தாரும் அடங்குவர். அவர்கள், தன்னை நபியென்று வாதிட்ட மகா பொய்யன் முசைலிமாவின் ஆட்களாவர். உள்ளதிலேயே அவர்கள்தான் அதிகமான ஆட்பலமும் இராணுவ வலிமையும் பெற்றிருந்தனர். முசைலிமாவுக்கு ஆதரவாக அவனுடைய சமூகத்திலிருந்தும் நட்புறவு ஒப்பந்தக்காரர்களிலிருந்தும் நாற்பதாயிரம் பேர் ஒன்றுதிரண்டனர். அவர்கள் அனைவரும் கடுமையான போர்வீரர்களாக இருந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர், முசைலிமாவுக்குப் பின்னால் அணிவகுத்தது இனவெறியின் அடிப்படையில்தானே தவிர, அவன்மீதான நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், அவர்களில் சிலர், ÔÔநிச்சயமாக முசைலிமா மாபெரும் பொய்யன்; முஹம்மத் தான் உண்மையாளர் என்று நான் உறுதிபடக் கூறுகிறேன். ஆயினும், முளர் குலத்து உண்மையாளரை (முஹம்மதை)விட ரபீஆ குலத்துப் பொய்யனையே (அதாவது எங்கள் குலத்து முசைலிமாவையே) எங்களுக்கு மிகவும் பிடிக்கும்ÕÕ என்று கூறினர்.

தொடக்கத்தில் தோல்வியைச் சந்தித்த முஸ்லிம்கள்

முசைலிமாவை ஒடுக்குவதற்காக நபித்தோழர் இக்ரிமா பின் அபீஜஹ்ல் (ரலி) அவர்கள் தலைமையில் முதன்முதலில் ஒரு படை புறப்பட்டுச் சென்றது. ஆனால், அந்தப் படையை முசைலிமா தோற்கடித்து, புறமுதுகிட்டு ஓடச்செய்தான். எனவே, கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் நபித்தோழர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தலைமையில் இரண்டாவது படையை அனுப்பிவைத்தார்கள். அந்தப் படையில் முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிலுள்ள முக்கியமான நபித்தோழர்களை இடம்பெறச் செய்திருந்தார்கள். அந்த நபித்தோழர்களின் முன்னணியில் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களும் துணிச்சல் மிக்க மற்ற முஸ்லிம்கள் சிலரும் இடம்பெற்றிருந்தனர்.

நஜ்த் பகுதியிலுள்ள யமாமா எனும் ஊரில் இரு படைகளும் மோதின. மோதல் தொடங்கி சற்று நேரம்தான் ஆகியிருக்கும். அதற்குள் முசைலிமாவுடைய படையின் கை ஓங்கியது. முஸ்லிம் படையினர் நிலைகுலைந்துபோயினர். தமக்குரிய இடங்களிலிருந்து பின்வாங்கலாயினர். இறுதியில் முசைலிமாவின் ஆட்கள் முஸ்லிம் இராணுவத் தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களின் முகாமைச் சூழ்ந்துகொண்டு அதை அடியோடு பெயர்த்தெடுத்தனர். அதில் தங்கியிருந்த காலித் (ரலி) அவர்களின் துணைவியாரைக் கொல்லப்போகின்ற அளவுக்கு நிலைமை கைமீறிப்போனது. ஆயினும், அவர்களில் ஒருவரே அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு வழங்கியதால் நல்வாய்ப்பாக அவர் தப்பித்தார்.

அப்போதுதான் முஸ்லிம்கள் திடீரென நிகழ்ந்துவிட்ட இந்தப் பேரபாயத்தை உணர்ந்தனர். முசைலிமாவுக்கு முன்னால், தாம் வீழ்ந்துவிட்டால் அதற்குப்பின் இஸ்லாம் நிலைப்பதற்கு வழியே இல்லை என்றும் பின்னர் அரேபிய தீபகற்பத்தில் இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை வழிபடுவதற்கு ஆளே இருக்காது என்றும் புரிந்துகொண்டனர்.

தோல்வியைத் தவிர்க்க மாற்று வியூகம்

உடனே தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் தம் படையை நோக்கிக் காற்றின் வேகத்தில் விரைந்து வந்தார்கள். அதனை வேறு விதமாக மறுஒழுங்கமைப்பு செய்தார்கள். படையில் இடம்பெற்ற முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளைத் தனித்தனியாகப் பிரித்தார்கள். அவ்வாறே கிராமப் புறத்தாரை இந்த இரு குழுவினரிடமிருந்தும் தனியாக்கினார்கள். ஒவ்வொரு குலத்தாரையும் அந்தந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரின் தலைமையில் ஒரு கொடிக்குக்கீழ் ஒன்றுபடுத்தினார்கள். போர்க்களத்தில் ஒவ்வொரு சாராருக்கும் என்னென்ன சோதனைகள் ஏற்படுகின்றன? முஸ்லிம்கள் எங்கிருந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்? என்றெல்லாம் உடனடியாகத் தெரிய வேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும்.

வீரதீரங்களுக்குப் பெயர்போன மதமாற்றப் போர்

பின்னர் அவ்விரு பிரிவினரிடையே உக்கிரமான போர் நடந்தது. போர்க்கள வரலாற்றில் அதற்குமுன் அப்படியொரு போரை முஸ்லிம்கள் சந்தித்ததில்லை. முசைலிமாவின் சமூகத்தார் அமளிகளும் ஓலங்களும் நிறைந்த அந்தக் களங்களில் மலைகளைப் போன்று உறுதியாக நிலைத்திருந்தார்கள். அவர்களிடையே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்துகிற நிலையில் அவர்கள் இல்லை. இந்தப் போரைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் தம்முடைய அதிஅற்புதமான சாகசங்களையும் வீரதீரங்களையும் வெளிப்படுத்தினார்கள். அவை யாவும் ஒன்றுதிரட்டப்பட்டால் அதுவே எழுச்சி மிகுந்த போர்க் காவியமாக இருந்திருக்கும்.

இதோ ஸாபித் பின் கைஸ் (ரலி) என்றொரு நபித்தோழர். யமாமா போர்க்களத்தில் அன்ஸாரிகளின் கொடியைச் சுமந்திருந்தார். அவர் தமக்குத் தாமே வாசனைத் திரவியம் பூசி, பிரேத ஆடையும் (கஃபன்) அணிந்துகொண்டார். தமக்கான அடக்கத்தலத்தைத் தாமே தோண்டி, அதனுள் தமது கணைக்காலின் பாதியளவுக்கு இறங்கி நின்றார். அந்த இடத்திலிருந்து கொஞ்சமும் நகராமல் உறுதியாக நின்றுகொண்டு தமது சமூகத்தின் கொடியைக் காக்க தீரத்துடன் களமாடிக்கொண்டிருந்தார். இறுதியில் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி அவர் வெட்டிய அதே குழியில் விழுந்து உயிர் நீத்தார்.

அவ்வாறே ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) என்றொரு நபித்தோழர். அவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் சகோதரர். அவர் உரத்த குரலில் முஸ்லிம்களை நோக்கி, மக்களே! உங்களின் கடைவாய்ப் பற்களைக் இறுக்கமாகக் கடித்துக்கொள்ளுங்கள். எதிரிகள்மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டே முன்னேறிச் செல்லுங்கள். மக்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குமேல் நான் ஒரு வார்த்தைகூடப் பேசப்போவதில்லை. ஒன்று முசைலிமா வீழ்த்தப்பட வேண்டும். அல்லது நான் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும். அப்போது அவனிடம் எனது சான்றைச் சமர்ப்பித்துக்கொள்வேன் என்று அறிவிப்புக் கொடுத்தார். பின்னர் எதிரிகளை நோக்கி மறுபடியும் சென்று தமது போராட்டத்தைத் தீவிரமாகத் தொடர்ந்தார். இறுதியில் அவரும் கொல்லப்பட்டு உயிர் நீத்தார்.

அதைப் போன்றே சாலிம் (ரலி) என்றொரு நபித்தோழர். அபூஹுதைஃபா (ரலி) அவர்களால் விடுதலையளிக்கப்பட்ட முன்னாள் அடியாக இருந்தவர். இவர் முஹாஜிர்களின் கொடியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் தளர்ந்துபோகலாம் அல்லது நிலைகுலைந்துவிடலாம் என்று அவருடைய சமுதாயத்தார் அஞ்சினர். எனவே, அவர்கள் சாலிம் (ரலி) அவர்களிடம், சாலிம் அவர்களே! உமக்கு முன்புறத்திலிருந்தே நாங்கள் எதிரிகளின் தாக்குதலுக்குப் பலியாகிவிடுவோம் என நாங்கள் அஞ்சுகிறோம் என்று கூறினர்.

அதற்கு அவர், எனக்கு முன்புறத்திலிருந்து நீங்கள் தாக்குதலுக்கு ஆளானீர்களாயின் குர்ஆனைச் சுமந்திருப்பவர்களில் நானே மிக மோசமானவன் ஆகிவிடுவேன் என்று கூறினார். பின்னர் அல்லாஹ்வின் விரோதிகள்மீது தைரியமாகத் தொடர்ந்து சராமாரியாகத் தாக்குதல் நடத்தினார். இறுதியில் அவரும் தாக்குதலுக்குப் பலியாகி வீரமரணம் எய்தினார்.

இப்படி எத்தனை எத்தனையோ வீரதீரங்களும் சாகசங்களும் வரலாற்றுப் பதிவில் நிறைந்து காணப்படுகின்றன. இருப்பினும், இந்த அனைவரின் வீரதீரங்களும் சாகசங்களும் மாவீரர் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் வீரதீரங்களுக்கு முன்னால் மிகவும் சாதாரணமானவையே. பின்வரும் நிகழ்ச்சி இதற்குச் சான்றாகும்:

அதிரடி வீரர் பராஉ (ரலி)

யமாமா போர்க்களம் நன்றாகச் சூடேறிக் கொதிப்படைந்திருந்தது. இதைக் கண்ட தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களை நோக்கி, ‘’அன்ஸாரி இளைஞரே! எதிரிகளிடையே ஊடுறுவிச் சென்று ஏதேனும் செய்வீராக’’ என்றார்கள். உடனே பராஉ (ரலி) அவர்கள் தம் சமூகத்தாரை நோக்கித் திரும்பி, ‘’அன்ஸாரிப் பெருமக்களே! நீங்கள் யாரும் மதீனா திரும்புவது குறித்துக் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டாம். இனிமேல் உங்களுக்கு மதீனா கிடையாது. உங்களுக்கு இருப்பதெல்லாம் ஏக இறைவன் அல்லாஹ்வும் பின்னர் சொர்க்கமும்தான்...’’ என்று கூறினார்.

பின்னர் பராஉ (ரலி) அவர்கள், கொடூராமான தாக்குதலில் ஈடுபட்டிருந்த இணைவைப்பாளர்கள்மீது எதிர் தாக்குதல் தொடுத்தார்கள். அன்னாருடன் அன்ஸாரிகளும் தாக்குதலில் இணைந்துகொண்டனர். எதிரிகளின் அணிகளைக் கிழித்துக்கொண்டு அவர்களிடையே ஊடுறுவிய பராஉ (ரலி) அவர்கள், அல்லாஹ்வுடைய பகைவர்களின் பிடரிகளில் வாளைச் செலுத்தினார்கள். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் முசைலிமாவும் அவனுடைய ஆட்களும் நிலைகுலைந்தனர்.

எனவே, அவர்கள் ஓடிப்போய் ஒரு தோட்டத்தில் தஞ்சமடைந்தனர். அந்தத் தோட்டம் வரலாற்றின் பக்கங்களில் Ôமரணத் தோட்டம்Õ (ஹதீகத்துல் மவ்த்) என்று அறியப்படுகிறது. ஏனெனில், அன்றைய தினம் அத்தோட்டத்தில் முசைலிமாவின் படை கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை முன்னிட்டே அதற்கு இப்பெயர் வழங்கப்படலாயிற்று.

மரணத் தோட்டத்தில் மரணத்திற்கு அஞ்சாதவர்

இந்த மரணத் தோட்டம், நாலாபுறங்களிலும் பரந்து விரிந்தது. அதற்கு உயரமான சுற்றுச்சுவர்களும் இருந்தன. எனவே, தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கிய முசைலிமாவும் அவனுடைய படையினரும் ஆயிரக்கணக்கில் அதனுள் நுழைந்து அதன் வாசல்கள் அனைத்தையும் தாழிட்டுக்கொண்டனர். அதன் உயரமான சுவர்களின் உதவியால் பாதுகாப்பாக இருந்துகொண்டு, உள்ளுக்குள்ளிருந்தே முஸ்லிம்கள்மீது அம்பு மழை பொழிந்து தள்ளினர். அம்புகள் ஒவ்வொன்றும் முஸ்லிம்களைத் துளைத்தெடுக்க ஆரம்பித்தன.

இப்படியொரு எதிர்பாராத தாக்குதலால் முஸ்லிம்கள் திணறிப்போனார்கள். அப்போதுதான் துணிச்சல் மிக்க அதிரடி வீரர் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்கள் எதிரிகளை முறியடிக்க யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய வியூகத்தோடு முன்னால் வந்தார்கள். வந்தவர் தமது வியூகத்தை தம் சமூகத்தாரிடம் இப்படி விளக்கினார்:

‘’என் சமூகத்தாரே! நான் ஒரு கேடயத்தில் அமர்ந்துகொள்கிறேன். அந்தக் கேடயத்தை அப்படியே ஈட்டிகள் கொண்டு மேலே தூக்குங்கள். பின்னர் என்னை அந்தத் தோட்டத்தினுள் சரியாக அதன் வாசலுக்கருகே தூக்கி எறிந்துவிடுங்கள். ஒன்று நான் உயிர்த் தியாகியாக வீரமரணம் அடைய வேண்டும். அல்லது உங்களுக்காகத் தோட்டத்தின் வாசல் கதவை நான் திறந்துவிட வேண்டும்’’ என்று கூறினார்.

பின்னர் பராஉ (ரலி) அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஒரு கேடயத்தில் அமர்ந்தார்கள். அன்னார் உடல் மெலிந்தவராகவும் ஒல்லியான தேகம் கொண்டவராகவும் இருந்தார். பல ஈட்டிகள் சேர்ந்து கேடயத்தில் வீற்றிருந்த அவரை மேலே தூக்கி, மரணத் தோட்டத்திற்குள் முசைலிமாவின் படையினருக்கு நடுவே வீசியெறிந்தன. அவர் முசைலிமாவின் படையினர்மீது பேரிடியாக இறங்கினார்.

 மரணத் தோட்டத்தின் வாசலுக்கு முன்னால் நின்றுகொண்டு அவர்கள்மீது விடாமல் தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்தார். அவர்களின் பிடரிகளில் வாளைச் செலுத்தினார். இறுதியில் அவர்களில் பத்துப் பேரைக் கொன்று, வாசல் கதவைத் திறந்து விட்டார். அப்போது அவரது உடலில் அம்பெய்யப்பட்டும் வாளால் தாக்கப்பட்டும் எண்பதுக்கும் அதிகமான காயங்கள் இருந்தன.

வாசல் கதவு திறக்கப்பட்டதும் முஸ்லிம் வீரர்கள் தோட்டத்திற்குள் அதன் வாசல்கள் வழியாகவும் சுவரேறிக் குறித்தும் திடுதிப்பென நுழைந்தனர். உள்ளே உயரமான சுவர்களின் உபயத்தால் பாதுகாப்பு கருதித் தஞ்சமடைந்திருந்த மதம் மாறிய கலகக்காரர்களின் பிடரிகளில் வாட்களைச் செலுத்தினர். இறுதியாக அவர்களில் சுமார் இருபதாயிரம் பேரைக் கொன்றனர். முசைலிமாவையும் விட்டுவிடாமல் அவனையும் தேடிக் கண்டுபிடித்து அடித்து வீழ்த்தினார்கள்.

எல்லாம் முடிந்ததும் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்காக அவர்களது முகாமுக்குத் தூக்கிவரப்பட்டார்கள். அவருக்கருகில் தளபதி காலித் பின் அல்வலீத் (ரலி) ஒருமாத காலம் தங்கியிருந்து அவரது காயங்களுக்கு மருந்திட்டுச் சிகிச்சை செய்தார்கள். இறுதியில் அன்னாருக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்தான். அன்னாரின் கைங்கர்யத்தாலேயே முஸ்லிம் படையினருக்கு இந்தப் போரில் வெற்றி கைவசமானது.

அடைந்தால் வெற்றி; அன்றேல் வீரமரணம்

மரணத் தோட்டத்தில் அன்றைய தினம் தமக்குக் கைகூடாமல் போன வீரமரணத்தை பராஉ (ரலி) அவர்கள் ஆசையோடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். தமது பெருங்கனவு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலும் தம்முடைய நபியோடு போய்ச்சேர வேண்டும் என்ற அவாவிலும் ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு போர்க்களங்களில் அன்னார் பங்கெடுக்கலானார்கள். இறுதியில் பாரசீக நாட்டில் துஸ்த்தர்’ (shushtar, ஈரான்) நகரம் வெற்றிக்கொள்ளப்பட்ட தினம் வந்தது.

அப்போது பாரசீகர்கள் உயரமான பளிங்குக் கோட்டை ஒன்றினுள் பாதுகாப்பாகப் பதுங்கியிருந்தனர். அவர்களை இஸ்லாமிய இராணுவம், மணிக்கட்டைச் சுற்றிவளைக்கும் கைகாப்பு போன்று சுற்றிவளைத்து முற்றுகையிட்டது. முற்றுகை ஒரு முடிவுக்கு வராமல் நாட்கணக்கில் இழுத்துக்கொண்டே சென்றதால் பாரசீகர்கள் கடுமையான சோதனைகளுக்கும் அவதிகளுக்கும் ஆளாயினர். எனவே, முஸ்லிம்களை அங்கிருந்து விரட்ட ஒரு வியூகம் வகுத்தனர்.

அவர்கள் கோட்டைச் சுவர்களுக்கு மேலிருந்து முஸ்லிம்கள் பக்கமாக இரும்புக் கொக்கிகள் மாட்டப்பட்ட சங்கிலிகளை விடலாயினர். அந்தக் கொக்கிகள் பழுக்கக் காய்ச்சப்பட்டு நெருப்புக் கங்கைப் போன்று கனன்றுகொண்டிருக்கும். அவை முஸ்லிம்கள்மீது படும்போது அவர்களின் உடலைத் துளைத்து அதில் மாட்டிக்கொள்ளும். உடனே கொக்கிகளில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களைப் பாரசீகர்கள் தம்பால் தூக்குவார்கள். அப்போது அந்த முஸ்லிம்களின் உடல், ஒன்று உயிரை இழந்திருக்கும். அல்லது உயிர் ஊசலாடும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும்.

அத்தகைய இரும்புக் கொக்கிகளில் ஒன்று, பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் உடலில் மாட்ட, அவர்கள் அப்படியே தூக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார்கள். இதை பராஉ (ரலி) அவர்கள் பார்த்ததுதான் தாமதம், உடனே கோட்டைச் சுவற்றின் மீது பாய்ந்தேறித் தம் சகோதரர் மாட்டியிருந்த சங்கிலியைப் பலமாகப் பிடித்திழுத்து, அவரது உடலில் மாட்டியிருந்த பழுத்த கொக்கியை அகற்றுவதற்குப் போராடினார்.

அந்த முயற்சியில் அவரது கை கரிந்துபோய் புகைய ஆரம்பித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாத பராஉ (ரலி) அவர்கள் பெரும் பாடுபட்டுத் தம் சகோதரரை அதிலிருந்து விடுவித்துக் காப்பாற்றினார்கள். அதன் பின்னரே கோட்டைச் சுவற்றிலிருந்து அன்னார் கீழே இறங்கினார்கள். அப்போது அன்னாரின் கைகள் சதையை இழந்து வெறும் எலும்பாக மாறியிருந்தன.

ஜீவ மரணப் போராட்டமாக மாறிப்போயிருந்த இந்த துஸ்த்தர்போர்க்களத்தில் வைத்தே தமக்கு வீரமரணத்திற்கான பேறு கிடைக்க வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் அவர் இரு கரமேந்திப் பிரார்த்தித்தார். அன்னாரின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்தான். எனவே, அல்லாஹ்வைத் தரிசிக்கப் போகிறோம் என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கில் அவர் இறுதிவரை அந்தக் களத்தில் நின்று கடுமையாகப் போராடி வீரமரணமடைந்து உயிர்த் தியாகியானார்.


நபித்தோழர் பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் முகத்தை அல்லாஹ் சொர்க்கத்தில் மலரச் செய்வானாக! நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுடனான சகவாசத்தால் அவருக்குக் கண்குளிர்ச்சியைத் தருவானாக! அவரைத் தானும் தன்னை அவரும் உவந்துகொள்ளும் பேற்றை அல்லாஹ் வழங்குவானாக!

கருத்துகள் இல்லை:

திருமணம் என்றால் என்ன? திருமணம் ஏன்?

- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., திருமணம் என்றால் என்ன? திருமணம் என்பதைச் சுட்ட Ôநிகாஹ்Õ எனும் சொல் அரபிமொழியில் பெ...